Ad

ஞாயிறு, 14 மார்ச், 2021

தஞ்சாவூர்: ஒரே பள்ளியைச் சேர்ந்த 56 மாணவிகளுக்கு கொரோனா - கண்காணிப்பில் 24 கிராமங்கள்

கொரோனா தொற்று சில மாதங்களாக குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. தஞ்சாவூர் அருகே ஒரே பள்ளியை சேர்ந்த 56 மாணவிகள், ஒரு ஆசிரியர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர் மற்றும் பொதுமக்களிடையே அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பரவிய பள்ளி

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை பகுதியில் அரசு உதவி பெறும் மகளிர் மேல்நிலைப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 9 முதல் 12-ம் வகுப்பு வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

இந்நிலையில் பள்ளியில் பயிலும் மாணவி ஒருவருக்கு சில நாட்களுக்கு முன் உடல் நிலை குறைபாடு ஏற்பட, அந்த மாணவி கொரோனா பரிசோதனை செய்து கொண்டார். இதையடுத்து அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய பள்ளி நிர்வாகம் முடிவு செய்தது.

கொரோனா கட்டுப்படுத்த கிருமி நாசினி தெளித்தல்

அதன்படி கடந்த 11-ம் தேதி பள்ளியில் பயிலும் 460 மாணவிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அடுத்த இரண்டு நாட்களுக்கு பிறகு வந்த பரிசோதனை முடிவில் 20 மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பின்னர் உடனடியாக தொற்று ஏற்பட்ட மாணவிகள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.

இதையடுத்து 12-ம் தேதி மேலும் 619 மாணவிகளுக்கும், 35 ஆசிரியைகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இன்று அதன் முடிவுகள் வந்ததில் 36 மாணவிகளுக்கும்,ஆசிரியை ஒருவரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஒரே பள்ளியை சேர்ந்த மொத்தம் 56 மாணவிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட செய்தி தெரிய வர பெற்றோர்கள்,அப்பகுதி பொதுமக்களுக்கும் என பலரும் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கோரோனா பாதிப்பு

இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், கொரோனா மேலும் பரவாமல் தடுக்கவும் பள்ளியில் உள்ள அனைத்த வகுப்பறைகளையும் கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தனர். அத்துடன் பள்ளிக்கு இரண்டு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து தஞ்சாவூர் கலெக்டர் கோவிந்தராவ் பள்ளியில் ஆய்வு மேற்கொண்டார்.மேலும் கொரோனா பரவல் குறித்து ஆசிரியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். பின்னர் இது குறித்து கலெக்டர் கோவிந்தராவ் கூறுகையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மாணவிகள் தஞ்சைமற்றும் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்ட மாணவிகள் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளனர். மாணவிகளுடன் தொடர்பிலிருந்த உறவினர்கள் மற்றும் அவரது பெற்றோர்களுக்கும் சோதனை செய்யப்பட்டு வருகிறது.

கலெக்டர் கோவிந்தராவ் ஆய்வு

கிட்டதட்ட மாணவிகளுடன் காண்டாக்டில் இருந்த 24 கிராமங்களை சேர்ந்தவர்கள் பரிசோதனை மேற்கொள்ள சிறப்பு குழுக்கள் அமைக்கப் பட்டிருப்பதுடன், அப்பகுதி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டும் வருகிறது. கொரோனா எப்படி பரவியது என விசாரணை மேற்கொள்ள தாசில்தார் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் பள்ளி நிர்வாகம் அலட்சியமாக செயல்பட்டிருப்பது தெரியவந்தால் அப்பள்ளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.



source https://www.vikatan.com/health/news/56-students-of-government-aided-girls-affected-by-corona

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக