Ad

புதன், 3 மார்ச், 2021

4 தொகுதிகளுக்கு விருப்ப மனு - மதுரை அ.தி.மு.க நிர்வாகிகளை டென்ஷனாக்கிய செல்லூர் ராஜு

மதுரை மாநகர அ.தி.மு.க செயலாளரும் அமைச்சருமான செல்லூர் ராஜூ, தன் கட்டுப்பாட்டிலுள்ள நான்கு தொகுதிகளிலும் போட்டியிட விருப்ப மனு செய்துள்ளதால், எந்த தொகுதியை வலியுறுத்தி கேட்பது என்பது தெரியாமல் கட்சி நிர்வாகிகளும், கூட்டணிக் கட்சியினரும் குழப்பம் அடைந்துள்ளனர்.

எல்.முருகனுடன் செல்லூர் ராஜூ

தற்போது மதுரை மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று அமைச்சராக இருக்கும் செல்லூர் ராஜூ, வருகின்ற தேர்தலில் மேற்கு தொகுதிக்கு மட்டுமில்லாமல் மதுரை, தெற்கு, வடக்கு, மத்தி என 4 தொகுதிகளுக்கும் விருப்ப மனு செய்துள்ளார்.

சிட்டிங் தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்ற நம்பிக்கை இல்லாததால் வேறு தொகுதிகளிலும் முயற்சி செய்து பார்க்கலாம் என்ற எண்ணத்தில் நான்கு தொகுதியிலும் துண்டு போட்டு வைத்திருக்கிறாராம் அமைச்சர். ``இருக்கிற காலத்தில் தொகுதிக்கு நன்றாக வேலைகள் செய்திருந்தால் இந்த பதற்றம் வந்திருக்காது. இப்ப இவர் இப்படி நாலு தொகுதியையும் எதிர்பார்ப்பதால், கட்சியிலுள்ள மற்ற நிர்வாகிகள் நாங்க எந்த தொகுதியை கேக்குறது. அப்படியே இவர் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும் அங்கு சீட் எதிர்பார்த்த நிர்வாகிகள் இவருக்கு வேலை செய்ய மாட்டாங்க." என்று கடுப்பில் உள்ளனர் மதுரை அ.தி.மு.க-வினர்.

செல்லூர் ராஜூ

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய செல்லூர் ராஜூ, "அ.தி.மு.க ஜனநாயக முறைப்படி நடக்கும் கட்சி. யார் வேண்டுமானாலும் விருப்ப மனு தாக்கல் செய்யலாம். விருப்பம் உள்ளவர்கள் விருப்ப மனு பெற்றுகொள்ளலாம்.

நான் மதுரை வடக்கு,தெற்கு,மேற்கு,மத்திய ஆகிய நான்கு தொகுதிக்கு விருப்ப மனு தாக்கல் செய்து இருக்கிறேன். தலைமை எந்த தொகுதி வழங்கினாலும் நிற்பேன்.

மு.க.ஸ்டாலின் முதல்வர் என்று கூட்டணி கட்சிகள் மட்டும்தான் கூறுகின்றனர். மக்கள் யாரும் சொல்லவில்லை. எடப்பாடி பழனிச்சாமியை மீண்டும் முதல்வராக்க வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர்

செல்லூர் ராஜூ

தி.மு.க என்ற தீய சக்தியை வேரோடு அழிக்கவேண்டும். தி.மு.க எத்தனை பேருடன் கூட்டணி வைத்தாலும் அவர்கள் வெற்றி பெறப் போவதில்லை." என்றார்.

செல்லூர் ராஜூவின் நான்கு தொகுதி விருப்ப மனு விவகாரம் கட்சிக்குள் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/politics/sellur-raju-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக