Ad

சனி, 20 மார்ச், 2021

20 வருட பழைய கார்களை அழிக்கவேண்டும்... புது கார் வாங்கினால் சலுகைகள் என்னென்ன?!

இந்தியா முழுவதும் 20 ஆண்டு கால பழைய வாகனங்கள் மொத்தம் 51 லட்சமும், 15 ஆண்டுகாலப் பழைய வாகனங்கள் 34 லட்சமும் ஓடிக் கொண்டிருக்கின்றனவாம். 15 ஆண்டுகளையும் தாண்டி, முறையான தகுதிச் சான்றிதழின்றி 17 லட்சம் மீடியம் மற்றும் கனரக வாகனங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றனவாம். இதனால் 'இனிமேல் பழைய வாகனங்களே சாலைகளில் ஓடக் கூடாது’ என்று சுற்றுச்சூழல் விஷயத்தில் அதிரடியாக முடிவெடுத்துவிட்டது மத்திய அரசு

''பழைய வாகனங்களை அழிப்பதன் மூலம்தான் மாசுக் குறைபாட்டைச் சரி செய்ய முடியும். உதிரிபாகங்களின் விலை குறையும். புது வாகன உற்பத்தி பெருகும். எலெக்ட்ரிக் வாகன அதிகரிப்பு, மறுசுழற்சி, உற்பத்தி – இப்படி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு பெருகும்!’’ என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, பழைய வாகன அழிப்புக் கொள்கைக்கான வரி விதிப்பை அறிமுகப்படுத்தி விட்டார்.

நிதின் கட்காரி

ஏற்கெனவே வாகன அழிப்புக் கொள்கையில் கூடுதல் ஃபிட்னெஸ் வரி, பசுமை வரி, சோதனை வரி, சாலை வரி என்று எல்லாவற்றையுமே எக்ஸ்ட்ராவாக ஏற்றி அறிவிப்பு வெளியிட்டிருந்தார்கள். ‘‘இந்த வருஷத்தில்தான் 1 லட்ச ரூபாய்க்கு 14 வருஷ பழைய இண்டிகா வாங்கினேன். அடுத்த வருஷம் ரென்யூவல் பண்ணணும். எவ்வளவு வரி போடப் போறாங்க… இல்லைன்னா அந்த காரை நான் குப்பையில்தான் போடணுமா?’’ என்று ஏகப்பட்ட கேள்விகள் மக்களுக்கு எழுந்துகொண்டே இருக்கின்றன.

இந்த சூழலில்தான் பல விஷயங்களைத் தெளிவுபடுத்தியிருக்கிறது மத்திய அரசு.

* 20 ஆண்டுகள் பழைய இரு சக்கர வாகனங்களுக்கான மறுபதிவுக் கட்டணம் 1,000 ரூபாயாக உயரும். இதற்கு முன்பு 300 ரூபாய்தான் வசூலிக்கப்பட்டு வந்தது. 20 ஆண்டுகள் பழைய கார்களுக்கு ரூபாய் 6,000 வரை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

* 3 வீலர்கள்/குவாட்ரி சைக்கிள்களுக்கு ரூ.3,500 ரூபாயாகவும், டாக்ஸிகளுக்கு 7,000 ரூபாயாகவும், கனரக வாகனங்களுக்கு 21% கட்டண உயர்வு என்பதை வைத்துப் பார்க்கும்போது – பழைய பேருந்து மற்றும் ட்ரக்குகளின் ரீ–ரெஜிஸ்ட்ரேஷன் கட்டணம் 12,500 ஆகவும் உயரலாம் என்றும் தெரிகிறது. இது தற்போதை கட்டணத்தைவிட 21 மடங்கு உயர்வு!

Car Scrappage

* சொந்த வாகனங்களுக்கு அதாவது, ஓன் போர்டு கார்களுக்கு 25% வரையும், கமர்ஷியல் வாகனங்களுக்கு 15% வரையும் சாலை வரியை ஏற்ற முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில் பசுமை வரி என்பது எக்ஸ்ட்ரா!

* வாகன ஃபிட்னஸ் பரிசோதனையில் தோல்வியுறும் வாகனங்கள், ஆட்டோமேட்டிக்காக De-Register ஆகிவிடும் என்பதையும் கவனத்தில் கொள்க! அக்டோபர் 2021–ல் இருந்து இந்த ஃபிட்னெஸ் சோதனை அமுலுக்கு வரும்.

* ‘'ரீ–ரிஜிஸ்ட்ரேஷன்தானே… யார் கண்டுக்கப் போறாங்க?’ என்றும் இனிமேல் இருக்க முடியாது. பழைய வாகனங்களின் ரிஜிஸ்ட்ரேஷனைப் புதுப்பிக்க காலதாமதம் ஏற்பட்டால், கூடுதல் அபராதமும் உண்டு. முதல் மாத தாமதக் கட்டணம் 300 ரூபாயிலிருந்து தொடங்குகிறது. அடுத்தடுத்த மாதங்களுக்கு அபராதத் தொகை கூடும். இதுவே கமர்ஷியல் வாகனங்கள் என்றால், நாள் கணக்கில் 50 ரூபாய் அபராதம் ஏறுமாம்.

* இனிமேல் ஆர்சி புக், ஸ்மார்ட் கார்டு வடிவில்தான் வரும் என்பதால், அதற்கும் சேர்த்து 200 ரூபாய் வசூலிக்கப்படும்.

Car Scrappage

* பழைய வாகன அழிப்புக் கொள்கையின் அடிப்படையில் நீங்களாக முன்வந்து உங்கள் காரை ஸ்க்ராப்பில் போட்டால், புதிய கார் வாங்கும்போது எந்தக் கட்டணமும் இன்றி ரெஜிஸ்ட்ரேஷன் செய்து ஆர்சி ஸ்மார்ட் கார்டைப் பெற்றுக் கொள்ளலாம். அதேபோல், புது காரின் எக்ஸ் ஷோரூம் விலையில் 4 – 6% வரை டிஸ்கவுன்ட் கொடுக்க வேண்டும் என்று ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு மத்திய அறிவுறுத்தியிருக்கிறது. அதேபோல் மாநில அரசுகளும் சொந்த வாகனங்களுகு சாலை வரியில் 25 சதவிகிதமும், கமர்ஷியல் வாகனங்களுக்கு 15 சதவிகிதமும் சலுகையளிக்கலாம் என சொல்லப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/automobile/motor/a-detailed-overview-on-the-new-vehicle-scrappage-policy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக