Ad

வியாழன், 18 மார்ச், 2021

இந்தியாவில் பாலியல் இசைவு வயது 18... இது சரிதானா... அல்லது மாற வேண்டுமா? - ஓர் அலசல்

`செக்ஸ்’ என்கிற சொல்லே மிகுந்த பதற்றத்துக்கு உரியதாக இருக்கிற நம் இந்திய மன அமைப்பில், கடந்த சில ஆண்டுகளில் சிறிதளவு மாறுதல் ஏற்பட்டிருக்கிறது. பாலியல் குறித்து முழு புரிந்துணர்வுடனான உரையாடல் தேவை என்கிற கருத்து முன்வைக்கப்படுகிறது. பாலியல் கல்வி அவசியம் என்கிற குரல் தொடர்ச்சியாக எழுவதைக் கேட்க முடிகிறது. அவ்வரிசையில், பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயது (Age of sexual consent) குறித்தும் சில விவாதங்கள் எழுந்து வருகின்றன.

பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை 18 என நிர்ணயித்திருக்கிறது இந்திய அரசு. உலக நாடுகளில் இந்த வயது 12 முதல் 21 வரை வெவ்வேறு விதமாக நிர்ணயிக்கப்பட்டிருக்கின்றன. இந்தியாவில் 18 ஆக உள்ள இவ்வயதினை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்று ஒரு தரப்பும், 18 வயதிலிருந்து குறைக்கக்கூடாது, வேண்டுமென்றால் அதிகரிக்கலாம் என்று அதற்கு எதிர்த்தரப்பும் கூறி வருகின்றன.

இந்நிலையில், Age of sexual consent குறித்து உடல், உளவியல் மற்றும் சமூகவியல் நோக்கோடு திறந்த உரையாடலை முன்வைப்பதே இக்கட்டுரையின் நோக்கம்.

``18 வயதுக்கு முந்தைய உடலுறவு மருத்துவ ரீதியாகப் பல விதங்களில் ஏற்புடையதல்ல” என்கிறார் பெண்கள் நல சிறப்பு மருத்துவர் தீபா கணேஷ்.

கூடற்கலை

``முன்பைவிட தற்போது பெண்கள் பருவமெய்தும் வயது குறைந்துகொண்டே வருகிறது. 10 வயதில்கூட பருவமெய்திவிடுகிறார்கள். எனில், விரைவில் பருவமடைந்தால் உடல் விரைவிலேயே உறவுக்குத் தயாராகிவிடும் என்பது இல்லை. பருவமெய்துவதற்கான ஹார்மோன்கள் தூண்டப்படும் வயது முன்பைவிட குறைந்துள்ளது. என்றாலும், இனப்பெருக்க உறுப்புகளின் வளர்ச்சி 18 வயதில்தான் முடிவுபெறும்.

சிறுமிகள் பூப்படைந்த பிறகு, அவர்களது உடலில் இன்னும் பல ஹார்மோன் மாற்றங்கள் நிகழத்தொடங்குகின்றன. அவை உடலின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை. உடல்ரீதியாக அடிப்படையான வளர்ச்சிகள் 18 வயதில்தான் நிறைவு பெறுகின்றன. ஆகவேதான் பிறப்புறுப்பில் மேற்கொள்ளப்படும் முக்கியமான அறுவை சிகிச்சைகள் பெரும்பாலும் 18 வயதுக்குப் பிறகு செய்யப்படுகின்றன.

அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பெரும்பான்மை நாடுகள் 16 வயதை பாலுறவு இசைவு வயதாக நிர்ணயித்திருக்கின்றன. அங்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு அதிக அளவில் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. பள்ளிக்கல்வியை முடித்ததைக் கொண்டாடும் விதமாக `ப்ராம் நைட் (Prom Night)’ என்கிற நிகழ்வை நடத்துகிறார்கள். அக்கொண்டாட்டத்தின் இறுதியாக உடலுறவில் ஈடுபடுவதும் நடக்கிறது. பெற்றோர்களே இதை அறிந்து பாதுகாப்புடன் உறவு வைத்துக்கொள்ள அறிவுறுத்தி அனுப்புகிறார்கள். ஆனால், நம் நாட்டில் அப்படியான சூழல் இல்லை.

ஹார்மோன் உற்பத்தி சமநிலை அடைவதோடு, உளவியல் ரீதியாகப் பாலுறவுக்குத் தயாராவதற்கும், போதிய விழிப்புணர்வுடன் இயங்குவதற்கும் ஏற்புடையதாக இருக்கும் என்பதால்தான், 18 வயதை பரிந்துரைக்கிறோம். பாதுகாப்பற்ற உடலுறவால் தொற்றுக்கு ஆளாகும் பதின் வயதுப் பெண்களுக்கு சிகிச்சை அளித்திருக்கிறேன். பாலுறவு பற்றிய சரியான புரிந்துணர்வு மற்றும் எச்சரிக்கையுணர்வு அவர்களிடத்தில் இல்லை என்பதை உணர முடிகிறது.

கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுவதற்கு மிக இளம் வயதில் உடலுறவு கொள்வதும் முக்கியக் காரணியாக இருக்கிறது. மேலை நாடுகளில் சீரான இடைவெளியில் பரிசோதனை, தடுப்பூசிகள் எனப் பெண்கள் கர்ப்பப்பை வாய் புற்றுநோயிலிருந்து தற்காத்துக்கொள்ள வாய்ப்புகள் அதிகம் கிடைக்கின்றன. ஆனால் வளரும் நாடுகளில் உள்ள பெண்களுக்கு அதற்கான விழிப்புணர்வோ, வசதியோ இல்லை.

தீபா கணேஷ்

மேலும், கருத்தடை சாதனங்கள் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாது பயன்படுத்தும்போது அது தோல்வியுற்று கரு உண்டாவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. மிக இளம் வயதில் இது நிகழும்போது, சட்டத்திற்குப் புறம்பாகக் கருக்கலைப்பு செய்யும் நிலைக்கு ஆளாகும் அபாயங்களும் இருக்கின்றன. இக்கருக்கலைப்பின் வழியாகவும் தொற்றுகளுக்கு ஆளாகும் வாய்ப்பு இருக்கிறது.

சில பதின் வயதுப் பெண்களும் இளம் பெண்களும் தங்களது எதிர்பார்க்காத கர்ப்பத்தை கலைக்க வேண்டிச் செல்லும்போது, மருத்துவப் பணியாளர்கள் சிலர் சூழலை பயன்படுத்திக்கொண்டு அவர்களிடம் பல ஆயிரங்களில் கட்டணம் கேட்பது, அதற்கு வழியின்றி இந்தப் பெண்கள் தங்களின் கம்மல், செயின் என்று கழற்றிக்கொடுப்பது, பாதுகாப்பற்ற முறையில் கருக்கலைப்பு நடப்பது, ஃபாலோ அப் சோதனைகள் செய்துகொள்ளாமல் இருப்பது என்று ஏற்கெனவே பல பிரச்னைகளை பார்த்துவருகிறோம். இவையெல்லாம் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.

பருவமடைந்ததுமே பாலுறவுக்கான உந்துதல் ஏற்படுவது இயல்புதான். அந்த உந்துதல் ஏற்படுவதில் தவறொன்றும் இல்லை. ஆனால், நம் நாட்டில் மருந்தகங்கள் முதல் மருத்துவமனைகள் வரையிலான சூழல், மேலும் டீன் வயது உறவுகளால் ஏற்படக்கூடிய சமூக விளைவுகள் இவற்றின் காரணமாக, 18 வயதுக்குப் பிறகு பாலுறவில் ஈடுபடுவது பரிந்துரைக்கேற்றது. அது மருத்துவ ரீதியாகவும் பாதுகாப்பானது” என்கிறார் தீபா கணேஷ்.

பாலுறவு என்பது உடல் தொடர்புடைய தேவை மட்டும்தானா என்பது, இங்கு எழும் விவாதங்களின் வழியே வெளிப்படும் மையக்கேள்வி. உளவியல் ரீதியாக உடலுறவு குறித்த தெளிவான முடிவை எடுக்க ஏற்புடைய வயது என்ன? மன நல மருத்துவர் ஷாலினியிடம் கேட்டோம்.

ஷாலினி

``மனதளவில் முதிர்ச்சி அடைவதை வயதைக் கொண்டெல்லாம் தீர்மானிக்க முடியாது. இளம் வயதிலேயே நன்றாகப் பக்குவப்பட்டு தெளிவாக முடிவெடுக்கும் பெண்களும் இருக்கிறார்கள். நடுத்தர வயதைக் கடந்தும் பக்குவப்படாத பெண்களும் இருக்கிறார்கள். எனவே வயதை முதிர்ச்சிக்கான பொதுவான அளவீடாக முன்வைக்க முடியாது. பெண்ணின் மூளை வளர்ச்சி நிறைவு பெறுவது 24 வயதில்தான். ஆனால் அதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பாகவே பாலுறவுக்கான உந்துதலுக்கு ஆட்படுகிறார்கள். அவர்களை 10 ஆண்டுகள் காத்திருக்கச் சொல்வது நடைமுறைக்கு ஏற்புடையதல்ல.

18 வயதுவரை அனைவரும் குழந்தைகள்தான் என்று ஐநா சபை அறிவித்திருக்கிறது. அதை ஏற்றுக்கொண்டாலுமே, 16 வயதுக் குழந்தைக்குக் காதல் உணர்வு வரத்தானே செய்கிறது? அதை குற்றமாகப் பார்க்க முடியுமா?

Age of consent என்பது, 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண்ணைக் காதலிக்கிற ஆணை போக்சோ சட்டத்தில் தண்டிப்பதற்காகத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறது. 18 வயதுக்குக் கீழ் உள்ள பெண் குழந்தை ஓர் ஆண் மீது காதல் வயப்பட்டாலோ, அவனைத் தேடிச்சென்றாலோ தண்டனையை அனுபவிப்பது ஆண்தான் என்பதாக நமது சட்டங்கள் இருக்கின்றன.

ஆண்களைவிட பெண்களே இளம் வயதில் தீவிரமாகக் காதலில் ஈடுபடுகிறார்கள். ஆனால், இதில் தண்டிக்கப்படுவது ஆண்கள்தான். எனவே ஆண்களைக் காப்பாற்றுவதற்காகவாவது 18 என்கிற வயதை 16 ஆக மாற்றலாம். அது மட்டுமன்றி 16 வயதில் அறிவுத்திறன் வளர்ச்சி முழுமையடைகிறது. ஆகவேதான் பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை 16 ஆக நிர்ணயித்திருக்கிறது பிரிட்டிஷ் அரசு. அவர்கள் அந்த வயதிலேயே காதலிக்க அனுமதிக்கிறார்கள். தனக்கான பாலியல் தேர்வை அந்த வயதில் ஒரு பெண்ணால் முடிவு செய்ய முடியும் என நம்புகிறார்கள்” என்கிறார்.

``மனமுதிர்ச்சி அடையாத வயதில் ஒரு பெண்ணால் எப்படி பாலுறவு தொடர்பான சரியான தேர்வை மேற்கொள்ள முடியும்?'' ஷாலினியிடம் கேட்டோம்.

``பெண்ணின் பாலியல் தேர்வில் சரி, தவறு எங்கே வருகிறது? கற்பு நெறியை தூக்கிப்பிடித்து திருமணத்துக்கு முந்தைய உடல் ரீதியான உறவை மறுக்கும் கலாசார அமைப்பிலிருந்துதான் சரி, தவறு என்கிற பார்வை உருவாகிறது. ஆனால் இயற்கையான அமைப்பு வேறாக இருக்கிறது. தவறான தேர்வாக இருந்தாலும் அது அப்பெண்ணின் விருப்பம் சார்ந்தது. அவள் உடன்பட்டுத்தான் உறவு கொள்கிறாள் என்கிறபோது அதில் என்ன பிரச்னை? இதனால் அவள் ஏதோவொன்றை இழக்கிறாள் என்று சொல்வது இந்திய மனநிலை. ஒரு பெண் தனக்கான பாலியல் தேர்வை மேற்கொள்ளக்கூடாது என்பது நமது தந்தைவழிச் சமூகத்தின் மனநிலை.

இங்கே யாரும், 18 வயதுக்கு முன்பே உடலுறவு கொள்ளுங்கள் என்று சொல்லவில்லை. ஆனால், அது நடந்து கொண்டிருக்கிறது. அதற்காக அது குற்றம் என்று ஆகிவிடாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள் என்றுதான் சொல்கிறோம். ஆகவேதான் 18 என்கிற பாலுறவுக்கான இசைவு தெரிவிக்கும் வயதினை 16 ஆகக் குறைக்கும்படி கூறுகிறோம்” என்கிறார் ஷாலினி.

Law (Representational Image)

சட்டம் என்ன சொல்கிறது? குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைகளுக்கு எதிராகக் கொண்டு வரப்பட்டது போக்சோ சட்டம். இந்தியாவைப் பொறுத்தவரை 18 வயதுக்குட்பட்ட பெண்ணுடன் காதல் உறவில் ஈடுபட்டால்கூட அது இச்சட்டத்தின்படி பாலியல் குற்றமாகக் கருதப்படும். சாதிய நோக்கில் காதலை எதிர்ப்பவர்கள், அந்த உறவில் ஈடுபட்டிருக்கும் ஆண் சாதியப் படிநிலையில் கீழ் உள்ளவராக இருந்தால், இச்சட்டத்தின் மூலம் சிறைத் தண்டனை பெற்றுத் தருவதற்கு வாய்ப்பாக இது அமைகிறது. ஆகவே 18 என்கிற வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்கிற வாதம் முன் வைக்கப்படுகிறது.

அதே நேரம், பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதை 16 ஆகக் குறைப்பதன் மூலம் சாதி மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் 16 வயதுப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திவிட்டு, அவள் இணங்கித்தான் உறவில் ஈடுபட்டதாக அப்பெண்ணை மிரட்டிச் சொல்ல வைக்கவும் வாய்ப்பிருக்கிறது. எனவே இந்த 18 வயதைக் குறைக்கக்கூடாது என இருவேறான கருத்துகள் நிலவுகின்றன.

``குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையைத் தடுக்கும் பொருட்டு கொண்டு வரப்பட்ட போக்சோ மிகவும் அவசியமான சட்டம் என்றாலும் காதல் புரிகிறவர்களையும், பாலியல் குற்றவாளிகளையும் பிரித்து நடத்தும் அம்சம் அதில் சேர்க்கப்பட வேண்டும்” என்கிறார் வழக்கறிஞர் அஜிதா.

வழக்கறிஞர் அஜிதா

``18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையிடம் உடல் ரீதியான உறவு கொள்ளும் ஆண், போக்சோ சட்டத்தின்படி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார். ஒருவேளை அந்த ஆண் 18 வயதுக்குக் குறைவானவராய் இருந்தாரெனில் சிறார் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு அவர் சிறுவர் சீர்திருத்தப்பள்ளிக்கு அனுப்பப்படுவார். இதில் தொடர்புடைய அப்பெண் குழந்தை, தனது சம்மதத்தின் பெயரில்தான் இந்த உடலுறவு நிகழ்ந்தது என்று தெரிவித்தாலும் சட்டபூர்வமாக அது செல்லுபடியாகாது. ஏனென்றால் 18 வயதுக்குக் குறைவானவர்களுக்கு பாலியல் உறவுக்கான சம்மதம் தெரிவிக்கும் உரிமையில்லை.

போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்ட பிறகு நிறைய மாற்றங்கள் நிகழ்ந்திருக்கின்றன. 15 - 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தையைத் திருமணம் செய்துவிட்டு உடலுறவு கொண்டால் அது பாலியல் வன்முறை ஆகாது என்கிற முரண் தொடக்கத்தில் இருந்தது. உச்சநீதிமன்றம் அதை மறுத்து, குழந்தைத் திருமணம் செய்பவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யலாம் என்று தீர்ப்பு வழங்கியது. இந்துத் திருமணச் சட்டத்தில் பெற்றோர், தங்கள் பிள்ளைகளுக்குப் குழந்தைப் பருவத்தில் திருமணம் செய்து வைக்கலாம் என்றிருந்த பிரிவையும் நீக்கிவிட்டார்கள். போக்சோ சட்டத்துக்கு முரணாக இருந்த சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட்டு விட்டன. இத்தீர்ப்புக்கு பிறகு நிறைய குழந்தைத் திருமணங்கள் நின்று விட்டன.

தமிழ்நாட்டில் மட்டும் போக்சோ சட்டத்தின் கீழ் ஆண்டுக்கு சராசரியாக 1,500 வழக்குகள் பதியப்படுகின்றன. போக்சோவில், நுழைத்தல் (Penetration) குற்றங்கள், நுழைத்தல் இல்லாத குற்றங்கள் ஆகிய பிரிவுகள் இருக்கின்றன. அதன்படி 18 வயதுக்குட்பட்ட குழந்தையை உறுத்தும் விதமாகப் பார்ப்பது, உடலை வர்ணித்துப் பேசுவது, தவறான தொடுதல் போன்ற பாலியல் ரீதியான சீண்டல்கள் அனைத்தும் நுழைத்தல் இல்லாத குற்றங்களில் அடங்கும். இவற்றுக்கான தண்டனையைவிட, நுழைத்தல் குற்றங்களுக்குக் கூடுதல் தண்டனை வழங்கப்படும். இதே குற்றத்தை 12 வயதுக்குக்கீழ் உள்ள குழந்தை மீது நிகழ்த்தும்போது தண்டனை மேலும் கடுமையாக்கப்படும். குழந்தையை கண்காணித்துக் கொள்ளும் பொறுப்பில் இருப்பவர் இக்குற்றங்களைச் செய்கையில் தண்டனை கூடுதலாக்கப்படும். போக்சோ சட்டத்தின் கீழ் மரண தண்டனை வரையிலான கடும் தண்டனைகளை வழங்க முடியும்” என்கிறார்.

குழந்தைகள் மீதான பாலியல் வன்முறைக்கெதிராகக் கொண்டு வரப்பட்ட மிகச்சிறந்த சட்டம் போக்சோ என்பதில் மாற்றுக்கருத்தில்லை என்று கூறும் அஜிதா, ``இச்சட்டத்தின்படி 18 வயதுக்குட்பட்டவரிடம் காதலைத் தெரிவிப்பதுகூட தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என்கிறார்.

Law (Representational Image)

Also Read: `திருமண வாக்குறுதியை நம்பி ஓர் ஆணுடன் உடலுறவுகொண்டால்?'-டெல்லி உயர்நீதிமன்றத் தீர்ப்பு சொல்வது என்ன?

மேலும், ``18 வயது வரை அனைவரும் குழந்தைகள்தான் என்றாலும் அதற்கு முன்பாகவே காதல் வயப்படுவது இயற்கையானதுதான். காதல் வயப்பட்ட அவர்கள் 18 வயதுக்கும் முன்பாகவே உடலுறவு மேற்கொண்டால் அது தண்டனைக்குரிய குற்றமாகப் பார்க்கப்படுகிறது. ஆகவேதான் பாலுறவுக்கான இசைவு தெரிவிக்கும் வயதை 16 ஆகக் குறைக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சமூக ஆர்வலர்களும், குழந்தைகள் நல ஆர்வலர்களும் தொடர்ச்சியாக முன்வைத்து வருகிறோம்.

16 வயது என நிர்ணயம் செய்வதிலும் சில பிரச்னைகள் இருக்கவே செய்கின்றன. பாலியல் குற்றவாளிகள்கூட தங்களது அதிகார பலத்தைக் கொண்டு அப்பெண் குழந்தையின் சம்மதத்துடன்தான் உறவு கொண்டதாகச் சட்டத்திலிருந்து தப்ப வாய்ப்பிருக்கிறது. எனவே காதல் வேறு, பாலியல் வன்முறை வேறு என்பதை இச்சட்டத்தில் பிரித்து வகைப்படுத்த வேண்டும். காதல் உறவு கொள்கிறவர்களை குற்றவாளிகளாகப் பார்க்கக்கூடாது.

மேலும், ஐ.நா சபையின் பெண்களுக்கான சர்வதேச பிரகடனத்தில் 16-வது கட்டுரை ஒவ்வொரு பெண்ணுக்கும் தன் குடும்பத்தை அமைத்துக் கொள்ளும் உரிமை இருக்கிறது என்று கூறுகிறது. 1991-ம் ஆண்டு இந்தியா அப்பிரகடனத்தை ஒப்புக்கொண்டு கையெழுத்திட்டுள்ளது. அப்படியிருக்க, வேற்று சாதியைச் சேர்ந்த ஆணைக் காதலித்தால் ஆணவக்கொலை புரிகிற, கலாசாரம் என்கிற போர்வையில் பெண் உரிமைகளை மறுக்கிற இச்சமூகத்தில் Age of sexual consent பற்றியெல்லாம் பேசுவதற்கே இடமில்லை. பெண்களுக்கான திருமண வாழ்க்கையை அவர்களே முடிவு செய்துகொள்ள முடியும் என்கிற நிலை ஏற்படும்போதுதான் consent பற்றியெல்லாம் பேசுவது அர்த்தபூர்வமாக இருக்கும்” என்கிறார் அஜிதா.

தற்போதுள்ள 18 என்கிற வயது நிர்ணயமே சரியானதுதான் என்றும் அதனைக் குறைப்பதற்கான தேவை இல்லை என்றும் கூறுகிறார் சமூக செயற்பாட்டாளர் கீதா நாராயணன்.

``திருமணத்துக்கு முந்தைய உடலுறவை இச்சமூகம் மிகுந்த பதற்றத்துடனே எதிர்கொள்கிறது. ஏனென்றால் சாதி, குல மானங்கள் எல்லாம் பெண்ணின் கருப்பையில் இருப்பதாக இச்சமூகம் நம்புகிறது. பாலுறவு குறித்த புனிதப்படுத்தப்பட்ட மதிப்பீடுகளை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் திருமணத்துக்கு முந்தைய உடலுறவை குற்றமாகக் கருத முடியாது. ஏனென்றால் அதில் ஆண் - பெண் இருவரின் ஒத்திசைவும் அடங்கியிருக்கிறது. ஆனால் அதற்கான வயது நிர்ணயம் தேவையா, என்றால் நிச்சயம் தேவைதான்.

பருவமெய்தியதுமே பாலுறவுக்கான உந்துதலும், எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பும் ஏற்படுவது இயற்கையானதுதான். ஆனால் அதற்காகவெல்லாம் அவர்கள் பாலுறவுக்குள் செல்வது பல விதங்களில் சரியானதாக இருக்காது. அவர்களது உடலில் நடக்கும் மாற்றங்களை, அந்தந்த வயதுக்கான ஈர்ப்பை பெற்றோர் புரிந்துகொண்டு அவர்களுக்குத் தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். மிகவும் இளம் வயதில் உறவு சார்ந்து எடுக்கிற முடிவுகள் தவறாவதற்கான வாய்ப்புகள் அதிகம். கொஞ்சம் முதிர்ச்சி அடையும்போது தனது தேர்வு தவறானது எனத் தோன்றும்போது எந்த ஒட்டுதலும் இல்லாமல் விலகிவிட முடியுமா? உளப்பூர்வமாக நெருக்கம் உண்டாகாமல் ஓர் உறவுக்குள் செல்ல முடியாது. இன்னொருவர் முன்பு நாம் ஆடையின்றி இருக்கிறோம் என்றால் அந்த உறவு மற்ற எல்லாவற்றையும்விட ஆழமானது. அப்படியிருக்கையில் அதிலிருந்து வெளியேறுவது மிகவும் கடினமானதுதான். இதையெல்லாம் அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்.

தங்களுக்கான எதிர்காலத்தை, சுய வருமானத்தை அமைத்துக்கொள்ளும் வரையில் எந்த திசைதிருப்பமும் இல்லாமல் மனதை நேர்கோட்டில் கொண்டு செல்லக் கற்றுக்கொடுக்க வேண்டும். அதன்பிறகு அவர்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற இணையைத் தேடிக் கொள்வதிலும், அவரோடு உறவு கொள்வதிலும் எந்தப் பிரச்னையுமில்லை.

பாலுறவு குறித்த சமூக மதிப்பீடுகள் பற்றி எந்த பதற்றமும் கொள்ளத் தேவையில்லை. ஆண் - பெண் இருவரும் ஒரு புரிந்துணர்வுக்குள் வரும் வரை காத்திருக்கலாம் என்கிறேன். வளரிளம் பருவம் என்பது ஒட்டுமொத்த வாழ்க்கைக்கான அடித்தளத்தை எழுப்புவதைப் போன்றது. அந்த வயதில் பாலுறவு ரீதியான கவனச்சிதறல் ஏற்படுவது ஆரோக்கியமானதல்ல. ஆகவே இதுகுறித்து தெளிவான புரிந்துணர்வை அவர்களுக்கு ஏற்படுத்துவது நம் கடமை” என்கிறார் கீதா.

தற்போது 18 ஆக இருக்கும் பாலுறவுக்கான சம்மதம் தெரிவிக்கும் வயதில் எந்த மாற்றமும் தேவையில்லை, அப்படியே தொடரலாம் என்றும், ஆனால், அந்த வயதுக்குக் கீழ் காதல் உறவுக்குள் செல்வதை குற்றச்செயலாகப் பார்க்கக்கூடாது என்றும் கூறுகிறார்.

Couple

Also Read: போக்சோ: `பாதிக்கப்பட்ட பெண்ணை மணந்துகொள்கிறீர்களா?' - உச்ச நீதிமன்றத்தின் கேள்வியும் எதிர்வினையும்!

``Age of consent தொடர்பான குற்ற விசாரணையில் காவல் துறை மற்றும் நீதித்துறையின் பங்களிப்போடு உளவியல் ஆலோசகர்கள் மற்றும் குழந்தைகளுக்கான செயற்பாட்டாளர்களின் பங்களிப்பும் இருப்பது அவசியம். அப்போதுதான் பாலியல் வன்முறை செய்தவர்களையும், காதல் உறவில் ஈடுபட்டவர்களையும் தனித்தனியாக வகைப்படுத்த முடியும். பள்ளிகளில் இருந்தே பாலியல் கல்வி மற்றும் வாழ்க்கைத் திறன் கல்வி ஆகியவை பயிற்றுவிக்கப்பட வேண்டும். இதன்மூலம் பாலுறவு சார்ந்த புரிதலை ஏற்படுத்துவதோடு, அவர்களது வாழ்க்கையில் வளமான அடித்தளத்தை உருவாக்கவும் முடியும்.

அதி நவீனம் என்கிற பெயரில் உடலுறவை ஜஸ்ட் லைக் தட் ஆக எடுத்துக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. பாலுறவு மேற்கொள்வதற்கும் சரியான தேர்வு முக்கியமானது. அத்தேர்வை பொறுப்புணர்வுடன் மேற்கொள்வதற்கு வயது முதிர்ச்சியும் தேவைதான்” என்கிறார் கீதா நாராயணன்.

மானுடவியல் ஆய்வாளர் மோகன் நூகுலாவின் கருத்து மேற்கண்டவற்றிலிருந்து முற்றிலும் வேறுபட்டிருக்கிறது. அவர் பாலுறவுக்கு இசைவு தெரிவிக்கும் வயதினை 25 ஆக உயர்த்த வேண்டும் என்கிறார்.

மோகன் நூகுலா

``பாலுறவு பற்றிய பதற்றத்தை ஏற்படுத்துகிறார்கள், உடலை புனித பிம்பத்துக்குள் அடைக்கிறார்கள் என்றெல்லாம் குற்றம் சாட்டும் தரப்பு, 18 வயதுக்கு முந்தைய பாலுறவை தனிமனித விருப்பம் என்ற வகையில் மட்டுமே பார்க்கிறது. அதற்குள் சமூகப்பொறுப்புணர்வு அடங்கியிருக்கிறது என்பதை புரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால் தனிமனிதர்களின் கூட்டமைப்பே சமூகம். ஆகவே அதனைப் பிரித்துப் பார்க்க முடியாது. உடல் கேட்கிறது என்பதற்காக எல்லாவற்றையும் கொடுத்துவிட முடியாது. இந்தப் புரிந்துணர்வை ஏற்படுத்துவதை விடுத்து, அப்படிச் செல்வதையெல்லாம் தடுக்க முடியாது என்று கூறுவதும் ஒரு விதத்தில் அதனை ஊக்குவிப்பதைப் போலத்தான் ஆகும்.

உடலைப் புனிதப்படுத்திப் பார்க்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை. அக்கருத்தில் நானும் உடன்படுகிறேன். ஆனால், குறிப்பிட்ட வயது வரை பாலுணர்ச்சியை கட்டுப்படுத்தப் பழக வேண்டும் என்று சொன்னால் அது பிற்போக்குவாதமாகப் பார்க்கப்படுவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உலக அளவில் செக்ஸுக்கு அதிமுக்கியத்துவம் கொடுத்த சமூகங்கள் அத்தனையும் பெரும் வீழ்ச்சியைத்தான் சந்தித்திருக்கின்றன. முற்போக்குவாதம் என்கிற பெயரில் நமது சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களை அடியோடு மறுக்கிற போக்குதான் இன்றைக்கு நிலவி வருகிறது.

இன்றைக்கும் மனித இனம் ஆண் - பெண் உறவை முழுமையாகக் கையாளத் தெரியாமல் திணறி வருகிறது. உடலுறவு என்பது உடல் ரீதியான தேவை மட்டுமல்ல. அதனுள் நிகழும் உளவியற்பூர்வமான பிணைப்பு மிகப்பெரியது. ஒரு பெண்ணின் ஸ்பரிசம் கிடைக்கப்பெற்ற ஆணால் அவ்வளவு எளிதாக அப்பெண்ணை விட்டு விலக முடியாது. வயதில் முதிர்ச்சி அடைந்த ஆணால்கூட அது முடிவதில்லை. அப்பெண்ணின் அணுக்கத்துக்காக அவன் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராகிறான். அப்படியிருக்கையில் 18 வயதுக்குட்பட்ட ஓர் ஆண் குழந்தை அதை எப்படிக் கையாள்வான்?

காபி சாப்பிடுவதைப்போல் அல்ல காமம். அது மிகவும் உணர்வுபூர்வமானது. தான் விரும்பும் நபருடன் உறவு வைத்துக் கொள்ளும் உரிமை அனைவருக்கும் இருக்கிறதுதான். ஆனால் அதற்கான வயதுக் கட்டுப்பாடு தேவையா என்றால் தேவைதான். பக்குவப்படுதல் என்பது ஒவ்வொருவரது சூழலைப் பொறுத்து மாறுபடும். எனவே சராசரியாக தெளிவான முடிவினை நோக்கி நகர 25 வயதாவது தேவை என்பதை என் கருத்தாக முன் வைக்கிறேன். உடல் கேட்கிறது என்பதற்காக மனம்போன போக்கில் வாழ்வது சிக்கல்களை ஏற்படுத்தக்கூடியது” என்கிறார் மோகன் நூகுலா.

உலக நாடுகள் சிலவற்றில் பெண்களுக்கான சட்டபூர்வமான பாலியல் இசைவு வயது

இந்தியாவில் பெண்களுக்கான குறைந்தபட்ச திருமண வயது 18 ஆக இருந்தாலும், கல்வி கிடைக்கப்பெற்ற பெண்கள் 20+ வயதுகளில்தான் திருமணம் செய்துகொள்கிறார்கள். எனவே, அரசு பெண்களுக்கான திருமண வயதை உயர்த்துவதைவிட, பெண்களுக்குக் கல்வியை உறுதி செய்யும் திட்டங்களில் கவனம் செலுத்தினாலே போதும்... தங்களின் திருமண வயதை அவர்களாகவே உயர்த்திக்கொள்வார்கள் என்பது புரிகிறது.

அதேபோல, பெண்களின் பாலுறவு இசைவுக்கான வயது குறித்த உரையாடல்கள், சட்ட நடவடிக்கைகளைவிட பெண்களுக்கு இசைவான உறவுக்கும் சம்மதமற்ற உறவுக்குமான வித்தியாசங்களை கற்றுக்கொடுக்கும் பாலியல் கல்வியின் அவசியத்தை இன்னும் அழுத்தமாக உணர்த்துகின்றன. இது வயதை வைத்து முடிவு செய்யப்பட வேண்டிய விஷயம் என்பதைவிட, அது குறித்த விழிப்புணர்வை அடிப்படையாக வைத்து ஏற்படுத்த வேண்டிய மாற்றம்.

#VikatanPoll



source https://www.vikatan.com/lifestyle/relationship/is-the-age-of-consent-for-sex-is-need-to-be-revisited-an-analysis

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக