Ad

வியாழன், 25 மார்ச், 2021

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 10 | குருவருளும் திருவருளும் அருளும் பிள்ளைலோகாசார்யர் திருக்கோயில்!

அது பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கம். திருவரங்கத்தை முற்றுகையிட அந்நியர்கள் வருகிறார்கள் என்ற சேதி பரவியது. அதைக் கேள்விப்பட்டுக் கலங்கியவர்களுக்கு மத்தியில் எப்படியேனும் அரங்கனையும் அவன் மூர்த்தங்களையும் காத்தே தீருவது என்று தீர்மானம் கொண்டு செயல்பட்டார் பிள்ளைலோகாசார்யர். அப்போது அவருக்கு வயது 118 என்கிறார்கள். மூல அரங்கனின் சந்நிதியைக் கல்திரை கொண்டு மூடச்செய்தார்.

பெருமாள்

அர்ச்சாவதார மூர்த்தமான அழகிய மணவாளப் பெருமானை பூதேவி ஶ்ரீதேவை சமேதராகப் பல்லக்கில் ஏற்றிக்கொண்டு தம் சீடர்கள் சிலரோடு மதுரையை நோக்கி நகர்ந்தார். அவர்கள் கானகத்தில் இருந்த வேதநாராயணர் கோயிலில் மறைந்திருந்து சில நாள்கள் சுவாமியை ஆராதனை செய்தனர். ஆனால் அந்நியர்கள் விடாமல் பின்தொடர்வதை அறிந்து அவர்களிடமிருந்து தப்பித்துப் பெருமாளின் திருமேனியைக் காக்க மதுரை ஆனைமலைமீது ஏறுவதைத் தவிர வேறு வழியில்லை என்று முடிவு செய்தனர். குடைவறை மூர்த்தியாக நரசிம்மர் அருள்பாலிக்கும் இந்த இடத்தை அடைந்து அங்கு மறைந்திருந்தனர்.

எதிர்பார்த்ததுபோலவே அந்நியர் படைகளும் வந்து தேடிப்பார்த்துவிட்டு யாரையும் காணாமல் திரும்பிப் போயினர். பிள்ளைலோகாசார்யரும் அவரின் சீடர்களும் மலையில் படர்ந்திருந்த ஒரு கொடியைப் பற்றிக்கொண்டு இறங்கினர். அப்போது அரங்கனின் திருவுருவை ஒரு கையிலும் கொடியை மற்றொரு கையிலும் பற்றிக்கொண்டு இறங்கினார் பிள்ளைலோகாசார்யர். ஆனால், எதிர்பாராதவிதமாக அவர் கீழே விழ நேர்ந்தது. அந்தக் கணத்திலும் அரங்கனின் மூர்த்தத்தைக் கீழே விடாமல் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக்கொண்டு வீழ்ந்தார் சுவாமி.

அது நிகழ்ந்த மூன்றாவது நாளில் அவர் பரமபதத்தை அடைந்தார். அவரின் சீடர்கள் தங்கள் குருவின் தியாகத்தை எண்ணி சிலிர்த்தனர். கலியுகம் முழுதும் வைணவ சம்பிரதாயம் நிலைத்து நிற்கும் காலம் மட்டும் நிலைக்கப்போகிற அவரின் தியாகத்தை எண்ணிப் போற்றினர். அவரை அங்கேயே ஐக்கியப்படுத்தினர்.

பிள்ளைலோகாசார்யர் திருக்கோயில்

தான் பெருமாளோடு சேரப்போகிறோம் என்பதை அறிந்துகொண்ட பிள்ளைலோகாசார்யர் தன் சீடர்களுக்கு சில விஷயங்களைக் கட்டளையிட்டார். அதில் முக்கியமானது மீண்டும் அழகிய மணவாளப் பெருமாளை ஶ்ரீரங்கத்தில் சேர்ப்பது. சீடர்களும் அவர் இட்ட கட்டளைகளைத் தவறாமல் நிறைவேற்றினர்.

பிள்ளைலோகாசார்யரின் நினைவாக எழுப்பப்பட்டது ஒரு சிறிய அழகிய ஆலயம். அளவில் சிறிது என்றாலும் சாந்நித்தியத்தில் மிகுந்தது இந்த ஆலயம். அழகிய மணவாளரை வைத்திருந்த குகையில், ஸ்வாமியின் பாதம் பதித்த பீடம் தற்போதும் உள்ளது. அதனையே ஸ்வாமியாகக் கருதி பூஜை செய்துவழிபடுகிறார்கள் அடியார்கள். இந்த ஆலயத்தில் பிள்ளை லோகாசார்யருக்குத் தனிச் சந்நிதி இருக்கிறது. அவரது அவதார தினமான, ஐப்பசி மாதம் திருவோணத்தன்று இங்கு விசேஷ பூஜைகள் நடைபெறும்.

இங்கே கல்விக் கடவுளான ஶ்ரீஹயக்ரீவரும் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இவரே இத்தலத்தின் ஆதி மூர்த்தி என்கிறார்கள். பிரம்மாவிடம் இருந்து படைப்பு ரகசியத்தை எடுத்துச் சென்ற மது, கைடபர் எனும் அசுரர்களிடம் இருந்து அவற்றை மீட்ட திருமால், அவற்றை உடனடியாகப் பிரம்மனிடம் கொடுக்கவில்லை; கவனக்குறைவாக இருந்த பிரம்மனுக்குப் பாடம் புகட்ட நினைத்தார். தனது தவற்றை உணர்ந்த பிரம்மன், பூலோகத்தில் புண்ணியம் மிகுந்த இந்தத் தலத்துக்கு வந்து தவமியற்றினார்.

அவருக்கு மனமிரங்கிய பெருமாள், பிரம்மனுக்குப் படைப்பு ரகசியங்களைக் கொடுத்ததோடு, தானே அவருக்கு குருவாக இருந்து வேதத்தையும் உபதேசித்தார். இவரே இத்தலத்தில் ‘ஹயக்ரீவ’ மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பெருமாளும் பிரம்மாவுக்கு சங்கு - சக்ரதாரியாகக் காட்சி அளித்தார். வேதங்களை உபதேசித்ததால் ‘வேதநாராயணர்’ என்ற திருநாமமும் பெற்றார். அவரது சந்நிதிக்கு உள்ளேயே, அவரை வணங்கியபடி பிரம்மா வீற்றிருக்கிறார். மனித வடிவில் இங்கே பிரம்மா தவமிருந்ததன் அடிப்படையில், இங்கு பிரம்மா ஒற்றைத் தலையுடன் காட்சியளிக்கிறார். வேறெங்கும் காணமுடியாத பிரம்மனின் அபூர்வமான திருக்கோலம் இது.

ஆனைமலை

ஹயக்ரீவர் மற்றும் வேத நாராயணரிடம் வேண்டிக்கொள்ள கல்வி, கலைகளில் சிறப்பிடம் பெறலாம். தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெறலாம் என்பது நம்பிக்கை. குழந்தைகள் கல்வியில் சிறப்பிடம் பெற, சரிவரப் படிக்காத பிள்ளைகள் அந்தக் குறையில் இருந்து நிவர்த்தி பெற இங்கே வேண்டிக் கொள்கிறார்கள்.

கோயிலுக்கு அருகிலேயே பிரம்ம தீர்த்தம் இருக்கிறது; பிரம்மன் உருவாக்கிய தீர்த்தம் இது என்கிறார்கள். அதன் புனிதம் கருதி, எவரும் இதில் நீராடுவதோ, கை கால் அலம்புவதோ கிடையாது. இங்கு வருபவர்கள், இந்தத் தீர்த்தத்தைப் பிரசாதமாகப் பெற்றுச் செல்கின்றனர். தீராத தோல் வியாதி, நாள்பட்ட காயங்களால் வருந்துவோர், இந்தத் தீர்த்தத்தை எடுத்துச் சென்று, நீரில் கலந்து குளிக்கின்றனர். இவ்வாறு செய்வதால், விரைவில் நோய் குணமாவதாக நம்பிக்கை. வைகுண்ட ஏகாதசியன்று சுவாமிக்கு விசேஷ பூஜைகள் நடக்கும்.

எங்கிருக்கிறது ஆலயம்?

மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் மதுரையில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் உள்ளது ஒத்தக்கடை. இங்கிருந்து பிரியும் சாலையில் சுமார் ஒரு கி.மீ. பயணித்தால் ஆனைமலையை அடைந்து, அங்கிருந்து கொடிக்குளம் கிராமத்திலுள்ள இக்கோயிலுக்குச் செல்லலாம். மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் இருந்து மினி பஸ் வசதி உண்டு.



source https://www.vikatan.com/spiritual/gods/madurai-temples-the-glory-and-history-of-pillailogaacharyar-temple

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக