Ad

ஞாயிறு, 8 நவம்பர், 2020

`கொஞ்சம் இறங்கி வரலாமே ஆப்பிள்!'- இந்திய ரசிகனின் வேண்டுகோள்

வாங்குகிறோமோ இல்லையோ ஒவ்வொரு ஆண்டும் புதிய ஐபோன்களில் என்ன ஸ்பெஷல் எனப் பார்ப்பதில் டெக் ரசிகர்கள் அனைவரிடத்திலும் அலாதியான ஆர்வம் உண்டு. காரணம், எப்போதும் எதாவது புதிய தொழில்நுட்பத்தைக் கண்ணில் காட்டி நம்மை சர்ப்ரைஸ் செய்யாமல் ஐபோன் நிகழ்வை நிறைவு செய்யாது ஆப்பிள். இம்முறை கொஞ்சம் லேட் என்றாலும் பார்ப்பவர்களை 'வாவ்' சொல்ல வைக்கத் தவறவில்லை ஆப்பிள். கொரோனாவினால் ஆன்லைனில் நடந்தேறினாலும் இம்முறையும் நேர்த்தியாகப் படமாக்கப்பட்ட வீடியோ ஒன்றின் மூலம் ஐபோன்களை அறிமுகம் செய்து அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது ஆப்பிள். கடந்த மாதம் நடந்த அறிமுக விழாவில் அறிமுகமான நான்கு ஐபோன்களுமே இப்போது இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது. ஆனால் என்னதான் 'ப்ரைவசிக்கு பெஸ்ட்', 'ஆப்பிள் ஆப்பிள்தான்யா' என மெச்சினாலும் இந்திய வாடிக்கையாளர்கள் தொடர்ந்து ஆப்பிள் மீது ஒரு பிராது வைத்துக்கொண்டுதான் இருக்கின்றனர். அது அதிகப்படியான விலைதான்.

ஏன் இந்தியச் சந்தையில் தாக்குப்பிடிக்க ஆப்பிள் விலையைக் குறைப்பது அவசியம்?

இதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன் ஐபோன் 12 சீரிஸில் என்ன ஸ்பெஷல் என்பதைத் தெரிந்துகொள்ளக் கீழ்க்காணும் கட்டுரையைப் படியுங்கள்!

Also Read: வந்துவிட்டது #iPhone12… செராமிக் ஷீல்டு, 5G, டால்பி விஷன் வீடியோ... ஆனால், சார்ஜர்?

உலகத்தில் இன்று தொழில்நுட்ப தயாரிப்புகளுக்கு, குறிப்பாக ஸ்மார்ட்போன்களுக்கு இருக்கும் மிகப்பெரிய சந்தைகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இருப்பது இந்தியா. 130 கோடி மக்களுடன் அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டாவது நாடாக தற்போது இருக்கும் இந்தியா இன்னும் வெகு சில ஆண்டுகளில் சீனாவையும் முந்திவிடும் என்கின்றன கணிப்புகள். இதனால்தான் ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் அனைத்தும் முதலில் இந்தியாவிற்குப் படையெடுக்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் இங்கு விலைதான் ராஜா. குறைந்த விலையில் நிறைவான வசதிகளைத் தரும் பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள்தான் இந்தியாவில் பெருவாரியாக விற்பனையாகின்றன. அதற்காக பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் மட்டுமே விற்பனையாகும் சந்தையாக இந்தியா இல்லை. நடுத்தர குடும்பங்கள் அதிக அளவில் வாழும் நாடாகவும் இந்தியா இருக்கிறது. இவர்கள் தினமும் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களுக்கு கொஞ்சம் கூடுதலாகச் செலவழிப்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை. இதனால்தான் ஒன்ப்ளஸ் போன்ற நிறுவனங்கள் குறுகிய காலத்திலேயே இந்தியாவில் முக்கிய பிராண்ட்டாக கோலோச்சி இருக்கிறது.

OnePlus

இத்தனை பெரிய சந்தையாக இருந்தும் ஆப்பிள் இந்தியாவில் தடம் பதிக்க போதிய ஆர்வம் காட்டுவதாகத் தெரியவில்லை. ஆப்பிளின் வாடிக்கையாளர்களை மூன்று விதமாகப் பிரித்து விடலாம். ஒன்று புதிய வாடிக்கையாளர்கள். மற்றொன்று பிற பிராண்ட் ஸ்மார்ட்போன்களிலிருந்து வருபவர்கள். மற்றொன்று ஏற்கெனவே ஐபோன் வைத்து அதிலிருந்து புதிய ஐபோனுக்கு அப்கிரேட் ஆகிறவர்கள். இதில் 2010-லிருந்து 2015 வரை மேற்கத்தியச் சந்தைகளில் புதிய வாடிக்கையாளர்களைப் பெருமளவில் பெற்றது ஆப்பிள். அதனால் இமாலய வளர்ச்சியைக் கண்டது. ஆனால் 2015-க்கு பிறகு இந்த வளர்ச்சி அப்படியே மொத்தமாகத் தணிந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் ஆப்பிள் கொடிகட்டிப் பறக்கும் நாடுகளில் புதிய வாடிக்கையாளர்கள் மிச்சம் இல்லை என்பதுதான்.

இன்று ஐபோன் வாங்கினால் மூன்று வருடங்களுக்கும் மேல் அப்டேட் கிடைக்கும் என்பதால் ஐபோன் வாடிக்கையாளர்கள் 3-4 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் தங்களது போன்களை அப்கிரேட் செய்கிறார்கள். இதனால்தான் ஆப்பிளின் வளர்ச்சி என்பது வேகம் குறைந்துள்ளது. அதற்காக ஆப்பிள் பார்க்கும் லாபம் குறைந்துவிட்டது என்று அர்த்தம்கொள்ள வேண்டாம். இப்போது ஐபோன்களுடன் ஐகிளவுட், ஆப்பிள் டிவி, ஆப்பிள் மியூசிக் போன்ற டிஜிட்டல் சேவைகளிலிருந்தும் வருமானம் ஈட்டுகிறது ஆப்பிள். ஏர்பாட்ஸ் அதற்கென தனி சந்தையையே உருவாக்கியிருக்கிறது. ஆனால் இதனால் வரும் வளர்ச்சியும் ஒரு நாள் நீர்த்துப்போகும் என்றே கணிக்கப்படுகிறது. அப்போதுதான் 'இந்தியாவில் ஏன் கவனம் செலுத்தவில்லை?!' என்ற எண்ணம் ஆப்பிளுக்கு வரும் போல!

ஆப்பிள் அமெரிக்க பங்குச்சந்தையில் இருக்கும் ஒரு பொது நிறுவனம். பெரிய வளர்ச்சி இல்லையென்றால் பங்குதாரர்களுக்கு ஏமாற்றம்தான். அதனால்தான் டிஜிட்டல் சேவைகள், ஏர்பாட்ஸ் என அதற்காக முடிந்ததைச் செய்கிறது ஆப்பிள். இந்த பிரச்னைக்கு இந்தியா ஒரு எளிய தீர்வாக இருக்கும் என்பது இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக ஆப்பிளுக்குப் புரிய ஆரம்பித்திருக்கிறது. அமேசான், கூகுள், உபர் போன்ற நிறுவனங்கள் நுழையாத சீனாவிலேயே நன்கு ஊடுருவி ஐபோன்களை விற்ற நிறுவனம் ஆப்பிள். ஆனால், ஓப்பன் மார்க்கெட்டான இந்தியாவில் கடமைக்குத் தயாரிப்புகளை விற்றுவருகிறது. இதற்கு உதாரணங்கள் கூற முடியும்.

ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர்

இத்தனை பெரிய சந்தையில் இன்னும் ஒரு ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர் கூட கிடையாது. இந்திய அரசின் கட்டுப்பாடுகள் இருக்கிறதுதான், ஆனால் இந்தியச் சந்தையில் ஆர்வம் கொண்ட ஒரு நிறுவனம் என்றால் அவற்றைப் பூர்த்தி செய்து பெருநகரங்களிலாவது அதன் சொந்த ரீடெயில் ஸ்டோர்களை இந்நேரம் ஆப்பிள் திறந்திருக்க வேண்டும். ஆனால், இப்போதுதான் ஆன்லைன் ஸ்டோரே திறந்திருக்கிறார்கள். மற்ற நாடுகளில் பிரமாண்ட ஆப்பிள் ரீடெயில் ஸ்டோர்கள் மூலம் மட்டும் பல லட்சம் வாடிக்கையாளர்களை ஒவ்வொரு நாளும் ஈர்த்திருக்கிறது ஆப்பிள்.

அடுத்த முக்கிய விஷயம் விலைதான். இந்தியாவில் 12 சீரிஸில் இருப்பதிலேயே குறைந்த விலை ஐபோனான ஐபோன் 12 மினியின் ஆரம்ப விலை 69,900 ரூபாய். இதே மாடலின் அமெரிக்க விலை இந்திய மதிப்பில் வெறும் 53,484 ரூபாய்தான். மற்ற நாடுகளிலும் இந்த விலை இந்தியாவை விட குறைவாகத்தான் இருக்கிறது. குறைந்த விலை மாடல் என்பதால்தான் விலை வித்தியாசம் இவ்வளவு இருக்கிறது. அதிக விலை மாடல்கள் என்றால் இந்த விலை வித்தியாசம் இன்னும் எகிறுகிறது.

iPhone 12
இங்கிருந்து பிளைட் பிடித்து அமீரகத்தில் ஒரு நாள் தங்கி ஒரு ஐபிஎல் மேட்ச் பார்த்துவிட்டு ஐபோன் வாங்கி வந்தாலும் கூட இந்தியாவில் விற்கும் விலையில் கொஞ்சம் மிச்சம் பிடித்துவிடலாம். அதுதான் இங்கிருக்கும் நிலை.

உலகமெங்கும் ஐபோன் 12 மினியின் விலை (இந்திய மதிப்பில்):

ஜப்பான்- 52,056 ரூபாய்

அமெரிக்கா- 53,484 ரூபாய்

UAE - 59,906 ரூபாய்

சீனா - 60,240 ரூபாய்

மலேஷியா - 60,114 ரூபாய்

ரஷ்யா - 66,001 ரூபாய்

இங்கிலாந்து - 66,235 ரூபாய்

இந்தியா - 69,990 ரூபாய்

தொடர்ந்து இந்தியாவில் முதலீடுகள் செய்துவந்தாலும், ஐபோன் உற்பத்தியை இங்கு இடமாற்ற ஆரம்பித்துவிட்டாலும் விலையை மட்டும் குறைக்க மாட்டோம் என அடம்பிடிக்கிறது ஆப்பிள். இதற்குத் தொடர்ந்து இறக்குமதி வரி போன்ற விஷயங்களைக் காரணம் சொல்லி வருகிறது. இப்படியான காரணங்களைச் சொல்லிவந்த கூகுளும் கூட சமீபத்தில் வெளிவந்த பிக்ஸல் 4a விலையைக் குறைத்துவிட்டது. அதற்கான வரவேற்பையும் கண்கூட பார்க்க முடிந்தது.

ஐபோன் என்பது ஒரு ப்ரீமியம் பிராண்ட் என்பது புரிகிறது. விலையை ஒரேயடியாக ஒன்ப்ளஸ் அளவுக்குக் குறைக்க முடியாதுதான். ஆனால் அமெரிக்காவில் விற்கும் விலைக்கு அருகிலாவது இங்கு ஐபோன்களை ஆப்பிள் விற்கலாம். அதற்கான வாய்ப்புகளும் இருக்கவே செய்கிறது. இந்த வருடம் மின்னணு கழிவுகளைக் குறைக்க ஐபோனுடன் சார்ஜர்கள், ஹெட்போன்கள் கொடுக்க மாட்டோம் என்றது ஆப்பிள். ஆனால் அதற்கேற்றவாறு விலையைக் குறைக்கவில்லை. முக்கியமாக சீனத் தயாரிப்புகளை புறக்கணிக்கும் மனநிலை இந்தியர்கள் பலரிடத்திலும் இருக்கிறது. இதை சாதகமாக ஆப்பிளால் பயன்படுத்த முடியும்.

Iphone

ஆனால், இன்றைய சூழலில் ஆப்பிளின் இரண்டு வருட பழைய மாடல்கள் மட்டுமே இந்தியாவில் சரியான விலையில் விற்பனையாகிறது எனச் சொல்லலாம். ஆனால், இந்திய வாடிக்கையாளன் மட்டும் ரூ.40,000+ விலை கொடுத்து பழைய மாடலை ஏன் வாங்க வேண்டும்?! ஐபோன் SE என்ற மிட்ரேஞ்ச் போனை கடந்த வருடம் அறிமுகப்படுத்தியிருந்தாலும் அதன் விலையும் இந்தியாவில் கொஞ்சம் அதிகம்தான். விலையைச் சரியாக நிர்ணயிக்காத வரை என்ன அம்சங்கள் இருந்தாலும் இந்திய வெகுஜன மக்களுக்கு அந்நியமான ஒரு தயாரிப்பாகவே ஐபோன்கள் இருக்கும்.

உங்க நல்லதுக்குதான் சொல்றோம்... கொஞ்சம் இறங்கி வாங்க ஆப்பிள்!


source https://www.vikatan.com/technology/gadgets/its-high-time-for-apple-to-reduce-its-price-in-india-why

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக