Ad

வியாழன், 26 நவம்பர், 2020

பிரெக்னன்ஸி போட்டோஷூட், இயற்கைமுறை பிரசவம், `சூரரைப்போற்று' சே... வைரலான மருத்துவர் ரோஹினி!

கர்ப்பகாலத்திலும், குழந்தை பிறந்த சில மாதங்கள் வரையிலும் அம்மாவையோ, குழந்தையையோ புகைப்படங்கள் எடுக்க அந்தக் காலத்தில் அனுமதிக்கப்படவில்லை. இன்று கர்ப்பகால போட்டோஷூட்டும், பிறந்த குழந்தையின் போட்டோஷூட்டும் சாமானிய குடும்பங்களில்கூட சம்பிரதாயமாகி வருகிறது. பிரபலங்கள் இத்தகைய போட்டோஷூட் செய்யும்போது கவன ஈர்ப்பு அதிகமாகிறது.

ரோஹினி

கர்ப்பகால போட்டோஷூட் என்பது ஒருவகையிலான பெண் சுதந்திரம் என்ற பார்வையும் வர ஆரம்பித்திருக்கிறது. சமூக வலைதளங்களில் வைரலான செலிபிரிட்டீஸின் பிரெக்னன்ஸி போட்டோஷூட்டில் முக்கியமானது மருத்துவர் மற்றும் செயிலிங் சாம்பியன் ரோஹினியின் படங்கள். `சூரரைப் போற்று' படத்தில் கேப்டன் சே கேரக்டரில் நடித்த கிருஷ்ணகுமாரின் மனைவி இவர். ரோஹினியிடம் பேசினோம்.

``நான் சென்னையைச் சேர்ந்தவள். காவேரி மருத்துவமனையில் மருத்துவர். 10 வயதிலிருந்து செய்லிங் பயிற்சிகள் செய்கிறேன். சர்வதேச அளவில், உலக அளவில் சாம்பியன்ஷிப்புகள், பதக்கங்கள் வென்றிருக்கிறேன். தேசிய பெண்கள் பிரிவில் தொடர்ச்சியாக எட்டு முறை தங்கப் பதக்கங்கள் பெற்றிருக்கிறேன்.

ரோஹினி

Also Read: இயற்கை முறை பிரசவம், நீர்த்தொட்டி பிரசவம்... மருத்துவம் என்ன சொல்கிறது?

கர்ப்பகால புகைப்படங்கள் தாய்மையை ரசிப்பதன் வெளிப்பாடு. நண்பரின் மூலம் செலிபிரிட்டி போட்டோகிராபர் அம்ரிதாவின் அறிமுகம் கிடைத்தது. எனக்குப் பிடித்த உடைகளை அணிந்து கணவருடன் சேர்ந்து என் கர்ப்பகாலத்தில் அம்ரிதாவை வைத்து போட்டோஷூட் செய்துகொண்டேன். சிலர் இப்படியான புகைப்படங்கள் எடுக்கத் தயங்குவார்கள். ஆனால், நான் கர்ப்பகாலத்தில் என் உடலை அதிகம் ரசித்தேன். அதனால் போட்டோஷூட் செய்தோம்'' என்பவர் இயற்கை முறை பிரசவத்தில் குழந்தைப் பெற்றிருக்கிறார்.

``இயற்கை முறையில் பிரசவம் நடக்க வேண்டும் என்ற என் ஆர்வத்துக்கு கணவர் முழு ஆதரவு தந்தார். தினமும் நான் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றைச் செய்யத் தொடங்கினேன். இன்று சத்தான உணவு கிடைக்காமல், பெண்கள் பலவீனமாகி விடுகிறார்கள். அதனால் பலருக்கும் இயற்கையான பிரசவம் சாத்தியப்படுவதில்லை. கொச்சியில் `பர்த் வில்லேஜ்' என்ற மையத்தை பிரசவம் நடக்கத் தேர்வுசெய்தோம்.

ரோஹினி

சுகப்பிரசவம், தாய்ப்பால் ஊட்டுவது, வலியில்லாமல் பிரசவத்தை எதிர்கொள்வது போன்றவற்றில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பிரசவ வலியின்போது, எனக்கு மருந்து மாத்திரை எதுவும் கொடுக்கப்படவில்லை. பிரசவ அறையில் கணவரின் உதவியோடு சுகப்பிரசவத்தில் மகிழ்ச்சியோடு குழந்தையைப் பெற்றெடுத்தேன். உலகளவில் பெரிய எண்ணிக்கையில் அதிகரித்துக்கொண்டிருக்கும் சிசேரியன் பிரசவங்களைத் தவிர்க்க எல்லோரும் இயற்கை முறை பிரசவம் பற்றி யோசிக்கலாம்'' - தாயாகவும் மருத்துவராகவும் சொல்கிறார் ரோஹினி.

அம்மா புரொமோஷன் கிடைத்த கையோடு கணவர் நடித்த `சூரரைப் போற்று' படத்தின் வெற்றிக் களிப்பும் கைகூடியிருக்கிறது ரோஹினிக்கு.

சூர்யா - கிருஷ்ணகுமார்

``கணவர் கிருஷ்ணகுமார் தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் மற்றும் இயக்குநர். ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது, எழும்பூரில் உள்ள அருங்காட்சியகத்தில் குழந்தைகளுக்கான நாடகங்கள் நடத்தி வருகிறோம். கணவருக்கு நடிப்பில் 10 வருட அனுவபம் உண்டு. நண்பரின் மூலம் அவருக்கு `சூரரைப் போற்று' பட வாய்ப்பு கிடைத்தது. பட்ட கஷ்டங்களுக்குக் கிடைத்த வெற்றியாகப் படத்தையும் கணவரின் நடிப்பையும் பலரும் பாராட்டுகிறார்கள். குடும்பமே சந்தோஷத்தில் மூழ்கியிருக்கிறது'' பூரிக்கிறார் ரோஹினி.

- ஆனந்தி ஜெயராமன்


source https://www.vikatan.com/health/news/rohini-rau-speaks-about-her-recent-pregnancy-photoshoot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக