Ad

புதன், 25 நவம்பர், 2020

`அரசு அதிகாரி இப்படிலாம் இருக்க முடியுமானு வியப்பா இருக்கு!'- மாற்றுத்திறனாளிக்கு உதவிய இன்ஸ்பெக்டர்

``சமூகத்தை நாம் பார்க்கும் பார்வையைத்தான் மாத்தணும். முடியாதவங்களுக்கு உதவ நிறைய பேர் தயாராக இருக்காங்க. என்னால் நடக்க முடியாது. கையையும் அசைக்க முடியாது. ஆனால், என் உழைப்பு எனக்கு சோறு போடும்னு நம்பிக்கை இருக்கு. நிறைய கஷ்டங்களைத் தாண்டி வந்துட்டேன். எனக்கு அறிமுகம் ஆன நல்ல மனுஷங்களால்தான் நாலு பேரு மதிக்கிற மாதிரி வாழ முடியுங்கிற நம்பிக்கை விதை என் மனசுக்குள் விழுந்திருக்கு" என்று உணர்ச்சி பொங்கப் பேசுகிறார் சென்னையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வி.

தமிழ்ச் செல்வி

``எங்க அம்மா, அப்பா ரெண்டு பேரும் சொந்தத்துல கல்யாணம் பண்ணவங்க. அம்மாக்கு நடக்கும் திறன் கிடையாது. எங்க அப்பா ஆரம்பத்திலிருந்தே குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி எங்களை சரியா கவனிச்சுக்கல. எனக்கு ஒரு தம்பி இருந்தான். ஒரு நாள் அப்பா குடிச்சுட்டு வந்து அவனை அடிச்சாரு. வாழ்க்கையை வெறுத்து 7 வயசில் வீட்டைவிட்டுப் போனவன் இப்ப எங்க இருக்கான்னு கூட எங்களுக்குத் தெரியாது. தேடாத இடம் கிடையாது. ஒரு கட்டத்தில் அப்பாவும் வேற திருமணம் செய்துகிட்டுப் போயிட்டாரு.

நடக்க முடியாத என் அம்மா, எனக்கு மூணு நேரம் சாப்பாட்டு செலவுக்கு காசு சம்பாதிக்க அவ்வளவு கஷ்டப்படுவாங்க. அம்மா படும் கஷ்டத்தைப் பார்க்கும்போது மனுஷங்க மேல இருந்த நம்பிக்கையே எனக்குப் போயிருச்சு. படிக்கவைக்க காசு இல்லாம அம்மா என் படிப்பையும் நிறுத்திட்டாங்க. வீட்டு வேலைக்குப் போயிட்டு இருந்தேன்.

காவல் ஆய்வாளார் ராஜேஸ்வரி

15 வயசுல திடீர்னு ஒரு நாள் என்னால் நடக்க முடியல. கைகளை அசைக்க முடியல. அரசு ஆஸ்பத்திரியில் எல்லா ஸ்கேனும் எடுத்துப் பார்த்துட்டு, மரபணு குறைபாடு, இதைச் சரி பண்ண முடியாதுனு சொல்லிட்டாங்க. அன்னைக்கு எங்க அம்மா அழுத அழுகை இப்போ கூட மனசை உலுக்குது. என்னை தனியா விட்டுட்டுப் போகக் கூடாதுனு அம்மா வீட்டு வாசலிலேயே பெட்டிக்கடை வெச்சு பார்த்துட்டு இருந்தாங்க. நான், அம்மானு எங்க உலகம் நல்லாதான் போயிட்டு இருந்துச்சு.

ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி ஒரு நாள் காலையில் எங்க அம்மா எந்த அசைவும் இல்லாமப் படுத்துக்கிடந்தாங்க. அலுப்புல தூங்குறாங்கனு விட்டுட்டேன். ரொம்ப நேரம் அசையாம இருக்கவே, அக்கம் பக்கத்துல இருக்கறவங்களைக் கூப்பிட்டு பார்க்கச் சொன்னேன். அம்மா இறந்துட்டதா சொன்னாங்க. அம்மாவைத் தூக்கிட்டுப்போற வரை சொந்த பந்தமெல்லாம் இருந்தாங்க. அப்புறம் தனிமை என்னை விரக்தியின் உச்சத்துக்கே தள்ளுச்சு.

சாப்பாட்டுக்கு என்ன பண்றது? யார்கிட்ட உதவி கேட்கறதுனு வழி தெரியாமத் தவிச்சு நின்னப்போதான் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மேடம் பத்தின தகவலை பேப்பர்ல பார்த்தேன். அவங்ககிட்ட இருந்து எனக்கு ஏதாவது உதவி கிடைக்கும், பாதுகாப்பாகவும் இருக்கும்னு அவங்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.

டிவியில் காட்டுற மாதிரி நான் உங்க ஏரியா இன்ஸ்பெக்டர் இல்லம்மானு சொல்லாம என் முகவரியைக் கேட்டு வாங்குனாங்க. அடுத்த ஒரு மணி நேரத்தில் கொஞ்சம் மளிகை சாமன்களையெல்லாம் வாங்கிட்டு வீட்டுக்கே வந்துட்டாங்க. நிறைய தைரியம் சொன்னாங்க. என் அம்மாவே என்கூட இருக்குற மாதிரி தோணுச்சு. உதவிங்கிறதைத் தாண்டி, என்னால் என்னை பார்த்துக்க முடியுங்கிற நம்பிக்கையை விதைக்க, `அம்மா பார்த்து வந்த கடையை நீ எடுத்து நடத்து'னு சொல்லி பொருள்கள் வாங்கிக் கொடுத்தாங்க. அடிக்கடி வந்து பார்த்துப்பாங்க. சொந்த பொண்ணு போல கவனிச்சுக்கிறாங்க. அரசாங்க அதிகாரி இப்படியெல்லாம் இருக்க முடியுமானு வியப்பா இருக்கு.

தமிழ்ச்செல்வி

தீபாவளிக்கு கூட எனக்கு மாற்றுத்திறனாளி சைக்கிள் வாங்கித் தர்றேன்னு கேட்டாங்க. சைக்கிளுக்கு பதிலா அரசாங்கம் தரும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாத உதவித் தொகை வாங்க உதவ முடியுமா அம்மானு சின்ன தயக்கத்தோடதான் கேட்டேன். மறு நாளே ஜீப்பை எடுத்துட்டு வந்து அரசு ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போயி எல்லா செக் -அப்பும் செய்து, மாற்றுத்திறனாளிக்கான சான்றிதழ் வாங்கிக் கொடுத்தாங்க. அது மட்டுமல்ல கலெக்டர் ஆபீஸுக்கு கூட்டிட்டுப்போய், ஊனமுற்றவருக்கான சைக்கிளும் வாங்கிக் கொடுத்தாங்க. எனக்கு வங்கிக் கணக்கு கிடையாது. வங்கிக் கணக்கு ஆரம்பிச்சு கொடுத்ததோடு, ஒரு லட்சம் ரூபாய் லோன் வாங்கிக் கொடுக்கவும் ஏற்பாடு செய்துருக்காங்க. இப்போ நான் மாற்றுத் திறனாளிங்கிற எந்தத் தாழ்வு மனப்பான்மையும் எனக்கில்ல. என்னால் என்னைப் பார்த்துக்க முடியும்னு நம்புறேன். கை இல்லைன்னாலும் நம்பிக்கை இருக்குதுனு சொல்லி விடைபெற்றார் செல்வி."

செல்விக்கு உதவிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரியைத் தொடர்பு கொண்டு பேசினோம். ``அந்தப் பொண்ணு ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி எனக்கு போன் பண்ணி, `அம்மா எனக்கு தனியா இருக்க பயமா இருக்கு'னு சொல்லுச்சு. அந்தப் பொண்ணுக்கு மனிதாபிமானத்தின் அடிப்படையில் உதவ ஆரம்பிச்சேன். தாழ்வு மனப்பான்மையில் இருந்தவளைக் கொஞ்சம் கொஞ்சமாக மீட்டுக் கொண்டு வந்திருக்கோம். இது என்னோட தனிப்பட்ட முயற்சி கிடையாது. என் கூட சேர்ந்து தலைமைக் காவலர் குமரன், முதல்நிலை பெண் காவலர் ஜலஜாகுமாரி ஆகியோருக்கும் சேரும்.

Also Read: கர்ப்பிணிப் பெண்ணைக் காப்பாற்றிய காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி... யார் இவர்? ஆச்சர்ய பின்னணி!

இப்போ சைக்கிள் வாங்கித் தர்றேனு சொன்னதும், உதவித் தொகை வாங்கிக் கொடுக்க முடியுமானு கேட்டுச்சு. அந்தப் பொண்ணே நிறைய அலைஞ்சிருக்கு. ஆனாலும் மாற்றுத்திறனாளி சான்றிதழை வாங்க முடியல. காவல் துறையில் இருந்தே உதவ முன் வர்றோம்னு தெரிஞ்சதும், மருத்துவமனையிலும் உடனே நடவடிக்கை எடுத்து சான்றிதழ் கொடுத்தாங்க. அதுமட்டுமல்ல மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இந்தப் பொண்ணோட பிரச்னையைச் சொன்னதும், மாற்றுத்திறனாளிக்கான சைக்கிள் வழங்கி, உடனடியாக உதவித் தொகை வழங்கியும் உதவுனாங்க.

வங்கியிலும் லோன் கிடைச்சது. இப்போ அவளுக்கு ஒரு நம்பிக்கை பொறந்திருக்கு. அதைப் பார்க்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. என்னைப் பொறுத்தவரை ஒருவருக்கு உதவுறது என்பது பசியைப் போக்குறது இல்ல. வாழ்க்கையின் இருட்டைப் போக்குறது. மக்களுக்கு சேவை செய்யத்தான் இந்த உடுப்பை போட்டேன். அதைத்தான் செய்றேன். கம்பீரமாகச் சொல்லுவேன் நான் மக்களுக்கு சேவை செய்யப் பிறந்தவள். உசுரு இருக்குறவரை உதவுவேன்" என்று விடைகொடுத்தார் ஆய்வாளர் ராஜேஸ்வரி.

மனிதம் மலரட்டும்.



source https://www.vikatan.com/news/women/inspector-rajeswari-helped-differently-abled-woman-thamizh-selvi-for-livelihood

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக