Ad

புதன், 11 நவம்பர், 2020

``வடசென்னை பசங்கன்னாலே அந்த எண்ணம்தான் வருது; அதை மாத்தணும்ல?!" - அலிபாஷாவின் கல்விச் சேவை

டைவிடாமல் ஒலிக்கும் கடல் அலையின் ஓசை, தகிக்கும் அனல் காற்று, ஓயாமல் அணிவகுக்கும் வாகனங்கள் என எந்நேரமும் பரபரப்பாகக் காணப்படுகிறது திருவொற்றியூர் கடற்கரைச் சாலை. அதன் பக்கவாட்டில் அமைதியாகக் காட்சியளிக்கிறது அலிபாஷாவின் வீடு. உள்ளே நுழைந்தால், மினி பள்ளிக்கூடத்துக்குள் சென்ற உணர்வு. பல்வேறு வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்கள், அமைதியாகப் படித்துக்கொண்டிருக்க, அதைக் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தார் பாஷா.

மாணவர்களுடன் அலிபாஷா

இத்தகைய பரவச உணர்வால் 30 ஆண்டுகளாக மகிழ்ச்சியடைபவர், பத்தாம் வகுப்பில் இடைநிற்றலாகி மேற்கொண்டு படிக்க முடியாமல் வருந்தியவர். தனக்குக் கிடைக்காத கல்வியை, தன்னைப் போன்ற ஏழ்மை நிலையிலுள்ள மாணவர்கள் கற்க வழிவகை செய்யும் அன்பு சேவகர். தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், கடைகள் அதிகளவில் பெருகி வர்த்தக ரீதியாக வளர்ச்சி பெற்றுள்ள இந்தப் பகுதியில், அதிகளவில் இருப்பது ஏழை சமூக மக்கள்தாம். அவர்களில் பலருக்கும் இன்றளவும் கல்வி எட்டாக்கனியே!

அந்த நிலையைத் தன்னால் இயன்ற அளவுக்கு மாற்றும் நோக்கில், 30 ஆண்டுகளாக ஏழைக் குழந்தைகளுக்கு இலவச டியூஷன் நடத்துகிறார். அதே பகுதியில் இறைச்சிக் கடை நடத்துபவர், அந்த வருமானத்தில் ஒரு பகுதியைக் கல்விப் பணிக்குத் தொடர்ந்து ஒதுக்குகிறார். இறைச்சி வியாபாரத்தை முடித்துவிட்டு, வீட்டில் நடக்கும் டியூஷன் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தவரைச் சந்தித்தோம்.

அலிபாஷா

``5 தலைமுறைகளாக இதே பகுதியில்தான் வசிக்கிறோம். ஏழ்மையான குடும்பம். இறைச்சி வியாபாரம்தான் குடும்பத் தொழில். குடும்பத்துல இதுவரை யாருமே டிகிரி முடிக்கலை. குடும்பத்துல ஆண் பிள்ளைகளுக்கு 10 வயசாகிட்டா உடனே இறைச்சி தொழிலுக்கும், ஆடு மேய்க்கவும் அனுப்பிடுவாங்க. என் கூடப் பிறந்த எட்டுப் பேரும் ஸ்கூல் படிப்பைக்கூட முழுமையா நிறைவு செய்யலை. அதனால, என்னைப் படிக்க வைக்க ரொம்பவே ஆசைப்பட்டாங்க. ஆனா, ஒரு பிரச்னையால பத்தாவதுல டிராப்அவுட் ஆகிட்டேன். பிறகு, இறைச்சி வியாபாரம், ஆடு மேய்க்கிற வேலைனு குடும்பத் தொழிலில் கவனம் செலுத்தினேன். படிக்காத காரணத்தால் பல இடங்கள்ல புறக்கணிக்கப்பட்டேன்.

அந்த ஏக்கமெல்லாம் என்னோடு போகட்டும். ஏழைக் குழந்தைகளாவது நல்லா படிக்க உதவலாம்னு நினைச்சேன். எனக்கு ஆசிரியராவது கனவு. எனவே, குழந்தைகளுக்குக் கட்டணமின்றி டியூஷன் சொல்லிக் கொடுக்கலாம்னு நினைச்சப்போ, அதே எண்ணத்துடன் தோழி சித்ரா, நண்பர் ஒருவரும் என்னுடன் இணைஞ்சாங்க. மூவரும் டியூஷன் எடுப்போம். பல குழந்தைகள் எங்களை நம்பி வந்தாங்க. ஸ்கூலுக்குப் போகாத குழந்தைகளின் பெற்றோர்கிட்ட பேசி ஸ்கூலுக்கு அனுப்பியதோடு, அவங்களுக்கு டியூஷனும் சொல்லிக்கொடுத்தோம். சித்தப்பா வீட்டுலயும், எங்க சொந்த கட்டடத்துலயும் சில வருஷங்கள் டியூஷன் நடத்தினோம்.

மாணவர்களுடன் அலிபாஷா

`கொஞ்ச நாள் சரியா இதைச் செஞ்சாலே பெரிய விஷயம்’னு சொன்ன சிலர், பிறகு எங்களை ஊக்கப்படுத்தினாங்க. அரசு மருத்துவர் வெள்ளியங்கிரி சார் அவரது கட்டடத்துல சில வருஷங்கள் இலவசமாவே டியூஷன் நடத்த உதவினார். எங்க நல்ல முயற்சிக்கு சிலர் ஊக்கமும் ஆதரவும் கொடுத்து உதவினாங்க. கற்றல் குறைபாடுடைய குழந்தைகளுக்கும் வகுப்புகள் எடுப்போம். மூணு வருஷமா வாடகை கட்டடத்துல டியூஷன் நடத்தறோம்.

ஒருவேளை சாப்பாடுகூட ஆரோக்கியமானதா சாப்பிட முடியாத குழந்தைகளுக்கு, சாயந்திரம் டியூஷன் வந்ததும் ஹெல்தியான ஸ்நாக்ஸ் கொடுத்த பிறகுதான் பாடம் நடத்துவோம். தேர்வு நேரத்துல பசங்க படிப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் கொடுப்போம். கவர்ன்மென்ட் ஸ்கூல் மாணவர்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதோடு, தனியார் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கும் டியூஷன் சொல்லிக்கொடுப்போம். எங்க டியூஷன்ல படிச்சு காலேஜ், வேலைக்குப் போன முன்னாள் மாணவர்கள்தாம் வகுப்புகள் எடுக்க முன்வருவாங்க. எனக்கு ஆங்கிலம் நல்லா வரும் என்பதால ஆங்கில வகுப்புகள் மட்டும் நான் எடுப்பேன்" என்று பெருமிதத்துடன் கூறுபவர், கொரோனா சூழலில் ஏழை மக்களுக்குப் பல்வேறு அத்தியாவசிய உதவிகளையும் செய்துள்ளார்.

மாணவர்களுடன் அலிபாஷா

``என் சின்ன வயசுல இந்தப் பகுதியில தொழிற்சாலைகளும் மக்கள் நெருக்கமும் அதிகமில்லை. இப்போ வடசென்னை பொருளாதார ரீதியா வளர்ச்சி பெற்றிருந்தாலும், ஏழை மக்களின் வாழ்வாதாரம் மட்டும் இன்னும் முன்னேறவேயில்லை. மேலும், வடசென்னைன்னாலே இங்கிருக்கும் பசங்க மோசம்ங்கிற எதிர்மறையான பேச்சும், இந்தப் பசங்க மேல ஏளனப் பார்வையும் இப்போவரை தொடருது. இங்குள்ள ஏழை வர்க்கத்தினரின் குடும்பங்கள்ல குடும்பத் தலைவர்கள்ல பலரும் மதுப்பழக்கத்துடன், பொறுப்பில்லாமதான் இருக்காங்க.

அந்தக் குடும்பப் பெண்களின் கூலி வேலையில் கிடைக்கும் வருமானத்துலதான் குடும்பமே இயங்கும். அதனால, அம்மாக்கள் பிள்ளைகளை கவர்ன்மென்ட் ஸ்கூலுக்கு அனுப்புவாங்களே தவிர, அதுக்கு மேல பிள்ளைகளின் படிப்பு விஷயத்தில் கவனம் செலுத்த மாட்டாங்க. இந்த நிலையில் அந்தப் பிள்ளைங்க மெனக்கெட்டு படிச்சு கரைசேர்ந்தால்தான் அந்தக் குடும்பம் முன்னேறும். இல்லைன்னா, அவங்களும் வேலைக்குப் போக வேண்டியதுதான். எனவே, ஆர்வமுள்ள பசங்களைக் கண்டுபிடிச்சு தொடர்ந்து எங்க டியூஷனில் சேர்க்கிறோம்.

மாணவர்களுடன் அலிபாஷா

மாதம்தோறும் ஃபேரன்ட்ஸ் மீட்டிங் நடத்தி, கல்வியின் அவசியத்தைப் பெற்றோருக்கும் உணர்த்துவோம். படிப்பு மட்டுமல்லாம, அறிவுத் தேடலுக்காகப் பல்வேறு பகுதிகளுக்கும் பசங்களைக் கூட்டிட்டுப்போவேன். வடசென்னையில் அத்தோ உணவு மிகப் பிரபலம். அதைக்கூட பல பெற்றோர்களால் வாங்கிக் கொடுக்க முடியாது. இதனால், எங்க டியூஷன் குழந்தைகள் பலரும் ஏங்கிப்போவாங்க. மாணவர்களின் இதுபோன்ற சின்னச் சின்ன ஏக்கத்தையும் நிவர்த்தி செய்ய முக்கியத்துவம் கொடுக்குறோம். 55-க்கும் அதிகமான மாணவர்கள் தினசரி டியூஷனுக்கு வந்துட்டு இருந்தாங்க. கொரோனா பிரச்னையால் சில மாதங்கள் டியூஷன் நடக்கலை. இப்போ முறையான பாதுகாப்பு வழிமுறைகளுடன் என் வீட்டுலயே பகல் முழுக்க டியூஷன் நடக்குது. பத்தாம் வகுப்பு முதல் ப்ளஸ் டூ வரையிலான மாணவர்கள் மட்டும் டியூஷன் வர்றாங்க. அவங்களுக்கு மதிய உணவும் கொடுத்திடுவோம்.

உணவு, உடை, வீடு உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்கும், சமூகத்தில் மதிப்புமிக்க நிலைக்கு உயரவும் கல்வி மட்டுமே கைகொடுக்கும் என்பதை இப்போ நிறைய மக்கள் புரிஞ்சுகிட்டாங்க. எங்க டியூஷன்ல படிக்கும் குழந்தைகளுக்கும் மார்க் மட்டுமே முக்கியமில்லை. தனக்கான தேவையை சுயமா பூர்த்தி செய்துக்கிற ஆற்றல் கிடைச்சா போதும். படிப்பு தவிர, விளையாட்டு உள்ளிட்ட ஆர்வமுள்ள துறையில் கவனம் செலுத்தவும் வழிவகை செய்றோம். என்கிட்ட டியூஷன் படிச்ச மாணவர்கள், இன்னிக்கு பல்வேறு வேலைகள்ல இருக்காங்க. கல்வி அவங்க வாழ்க்கையில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கு. அதனால் எனக்குக் கிடைக்கும் மனநிறைவுக்கு அளவேயில்லை" என்னும் அலிபாஷா, உள்ளம் நெகிழ்ந்து பூரிப்படைகிறார்.

மாணவர்கள்

மாணவர்கள் மதிய உணவு சாப்பிட ஆயத்தமாக, புன்னகையுடன் அங்கிருந்து விடைபெற்றோம்!



source https://www.vikatan.com/news/miscellaneous/ali-basha-a-man-from-north-chennai-doing-free-educational-services-to-students

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக