Ad

புதன், 25 நவம்பர், 2020

தஞ்சை : கஜா டு நிவர் புயல்... பாதிப்பிலிருந்து தப்பிய டெல்டா - நிம்மதியில் மக்கள்!

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து பட்டுக்கோட்டை, பேராவூரணி மக்கள் இன்னும் முழுமையாக மீளாத நிலையில், நிவர் புயல் பற்றிய அறிவிப்பு அப்பகுதியினருக்கு பெரும் அச்சத்தையும், கவலையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், நிவர் புயலால் பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படாதது அப்பகுதியினருக்கும் நிம்மதியைத் தந்திருப்பதாக உருக்கமுடன் தெரிவித்தனர்.

கஜா புயல் ஏற்படுத்திய பாதிப்பு

கடந்த 2018-ம் ஆண்டு வீசிய கஜா புயல் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரிப் படுகையை சூறையாடிவிட்டுச் சென்றது. குறிப்பாக பட்டுக்கோட்டை, பேராவூரணி பகுதி விவசாயிகளின் பெரும் வாழ்வாதாரமாக இருந்த தென்னை மரங்களைச் சாய்த்துப் போட்டது கஜா புயல்.

வாழ்க்கைக்கும், எதிர்கால கனவுகளுக்கும் ஆதாரமாக இருந்த தென்னை மரங்கள் விழுந்ததில் ஒரே இரவில் வாழ்க்கை கேள்விகுறியாதாகப் பலரும் நிலைகுலைந்தனர். உடுத்த உடைகள், உடமைகள் என அனைத்தையும் இழந்து மக்கள் தவித்து நின்றனர். ஆசையாக வளர்த்த ஆடு, மாடு, கோழி ஆகியவற்றையும் விட்டு வைக்கவில்லை கஜா புயலின்போது சூறாவளியாக வீசிய அந்த அசுரக் புயல் காற்று.

Also Read: நிலப் பகுதியில் நிவர் புயல்; 6 மணிநேரத்துக்குத் தாக்கம்! - 4 மாவட்டங்களில் மிகக் கனமழை

மனித உயிரிழப்புகள் தொடங்கி பல்வேறு பாதிப்புகளை உண்டாக்கி கஜா ஏற்படுத்திய பாதிப்பிலிருந்து, இன்னும் காவிரிப் படுகை மக்கள் மனரீதியாக மீளவில்லை. புயல் வீசி சரியாக இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன.கடந்த பத்து நாள்களுக்கு முன்னர்தான் பல இடங்களில் கஜா புயல் நினைவு தினத்தைக் கடைபிடித்தனர்.

இந்நிலையில், வானிலை ஆய்வு மையம், நிவர் புயல் உருவாகியிருப்பதால் தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் காற்றுடன் கூடிய மிகக் கன மழை பெய்யும் என எச்சரித்திருந்தது. அனைத்து மாவட்ட நிர்வாகங்களும் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தன. புயல் குறித்த அறிவிப்பு வெளிவந்ததுமே பட்டுக்கோட்டை, பேராவூரணி மக்கள் பெரும் அச்சத்திற்கு ஆளாகினர்.

தென்னை மரம் காவாத்து செய்யும் விவசாயி

கஜா புயலில் தப்பி மிச்சமிருக்கிற தென்னை மரங்களையும் நிவர் புயல் சூறையாடிவிடுமோ என கவலை அனைவரது முகத்திலும் தெரிந்தது. புயலுக்கு மரங்களை பலி கொடுத்து விடக்கூடாது என முன்னெச்சரிக்கையாக மரங்களை காவாத்து செய்தனர். பலர் பிள்ளையாக வளர்த்த தென்னையிடம், `எங்களை விட்டுட்டு போயிடக் கூடாது’ என பாசமாக உரையாடினர். `என்ன நடந்தாலும் தோப்பை விட்டுட்டு போக மாட்டோம்’ என தோப்புக்குள்ளேயேயும் குடியிருந்தனர்.

இதையடுத்து, நேற்றிரவு நிவர் புயல் பாண்டிச்சேரியில் கரையைக் கடந்த நிலையில் டெல்டாவில் மழை பெய்ததுடன் லேசான காற்றும் வீசியது. ஆனால், பெரிய அளவிலான பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. குறிப்பாகத் தென்னை மரங்களுக்கு சிறு ஆபத்தும் ஏற்படவில்லை. புயலால் தங்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என அச்சத்தில் தவித்த தஞ்சை மாவட்ட மக்கள் அனைவரும் பெரும் நிம்மதியடைந்துள்ளனர்.

காந்தி

இது குறித்து பேராவூரணி மருங்கப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த காந்தி என்பவரிடம் பேசினோம். ``எனக்கு 1,500 தென்னை மரங்கள் வரை இருந்தன.இதில் கஜா புயலில் 900 மரங்கள் முறிந்து, அடியோடு சாய்ந்து விட்டன. இதுபோல் பெரும்பாலானவர்களின் வாழ்வதாரமாக இருந்த தென்னை மரங்கள் விழுந்தன.

இதற்கு முன் இப்படியொரு அழிவை இப்பகுதி மக்கள் பார்த்ததில்லை. கஜா ஏற்படுத்திய சுவடு அனைவரையும் நிலைகுலைய வைத்ததுடன், நீங்காத வடுவையும் உண்டாகியது. மிச்சமிருக்கிற தென்னையை காக்கவும், புதிய தென்னங்கன்றை ஊன்றி உருவாக்குவது என மெல்ல அதிலிருந்து மீள்வதற்கான முயற்சியை செய்து வந்தனர்.

கஜா புயலில் தப்பிய தென்னை மரங்கள்

இந்நிலையில், நிவர் புயல் பாதிப்பை ஏற்படுத்தும் என்ற அச்சம் பெரும் கவலையைத் தந்தது. யாரைப் பார்த்தாலும் புயல் பற்றியே பேசி வந்தனர்.`கஜா புயல் எல்லாவற்றையும் அழித்து விட்டது. இனி அழிவதற்கு என்ன இருக்கு? எதுவாக இருந்தாலும் எதிர்கொள்வோம்’ என்ற நம்பிக்கையும் பலரிடம் தென்பட்டது.

Also Read: தஞ்சை: கஜா புயல் நினைவு... நிவர் புயலை அச்சத்துடன் எதிர்கொள்ளும் டெல்டா மக்கள்!

கஜாவில் முழுமையான வலியை உணர்ந்திருந்ததால், `பாண்டிச்சேரி, கடலூர், சென்னை உள்ளிட்ட எந்த பகுதியும் புயலால் பாதிக்கப்படக் கூடாது’ என எங்க பகுதி மக்கள் கடவுளை வேண்டினர். இதையடுத்து, நிவர் புயல் கரையைக் கடக்கும் போது லேசான காற்றுடன் கூடிய மழை பெய்தது. மக்கள் அச்சப்பட்டப்படி எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை.

பாதிப்பை ஏற்படுத்தாத நிவர் புயல்

இன்று காலை விடிந்ததும் பலரும் தென்னந்தோப்புக்கு ஓடிச் சென்று பார்த்தனர். தென்னைக்கும் மற்ற உடமைகளுக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்பதையறிந்து நிம்மதியடைந்தனர். உறவினர்களுக்கு போன் செய்து பாதிப்பு எதுவும் இல்லையே என அக்கறையோடு விசாரித்தனர். சில தினங்களாகத் தூக்கத்தைத் தொலைத்து புயல் குறித்த கவலையுடன் தவித்த டெல்டா மக்களின் முகத்தில் இப்பதான் நிம்மதியைப் பார்க்க முடிகிறது. ஒவ்வொருவரும் முகம் முழுக்க சந்தோஷத்துடன் தென்னை மரங்களைத் தொட்டு பார்த்து வருவதும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’’ என்று தெரிவித்தார்.



source https://www.vikatan.com/news/disaster/cauvery-delta-district-people-seems-relaxed-after-minimum-damage-in-cyclone-nivar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக