Ad

திங்கள், 23 நவம்பர், 2020

`தேர்தலில் அதிக சீட் கேட்க மாட்டோம்; குறைவான சீட்டை ஏற்க மாட்டோம்!’- கே.எஸ்.அழகிரி சூசகம்

கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி பகுதியில் விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு நடைபெற்றது. இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி, அக்கட்சியின் தமிழகப் பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் 7 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பீகார் மாநிலத் தேர்தல் முடிவுகளோடு, தமிழகத்தை ஒப்பிடுவது அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட செயல், மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராகவும், அ.தி.மு.க ஆட்சியின் அராஜக ஊழல் ஆட்சிக்கு பாடம் புகட்டுகிற வகையில், 2021 சட்டமன்ற தேர்தல் நிச்சயம் அமையும்,

விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு

Also Read: மிஸ்டர் கழுகு: பீகார் ரிசல்ட் எதிரொலி... காங்கிரஸ் சீட்டுக்கு வேட்டு வைக்கும் தி.மு.க!

வேளாண்மைத் திருத்தச் சட்டங்களை திரும்பக் பெறக்கோரி நவம்பர் 28-ம் தேதி முதல் 234 தொகுதிகளிலும் ஏர்க்கலப்பை பேரணி நடத்தப்படும், ஊழலில் ஊறித் திளைக்கும் அ.தி.மு.க ஆட்சி அகற்றப்பட்டு மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி அமைந்திட காங்கிரஸ் கட்சியினர் அனைவரும் கண் துஞ்சாமல், அயராது தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்தக் கூட்டத்தில் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி,``காங்கிரஸின் வேர்கள், தமிழகத்தில் ஆழமாக வேறூன்றியுள்ளது. இரவும், பகலும் திரும்பத் திரும்ப வருவதுபோல வெற்றி, தோல்வி வரும். அதுதான் ஜனநாயகத்தின் அழகு. சர்வதிகாரிகாரிகள் கவர்ச்சிகரமாகத்தான் இருப்பார்கள்; கவர்ச்சிகரமாகத்தான் பேசுவார்கள். ஹிட்லர், முசோலினிபோல மோடி செய்து வருகிறார். சாமானியர்களால்தான் கட்சியை உயிரோட்டமாக நடத்த முடியும்.

விவசாயிகள் பாதுகாப்பு எழுச்சி மாநாடு

காங்கிரஸ் கட்சி நாத்திகக் கட்சி போலவும், இந்து மதத்துக்கு எதிரானது போலவும், காங்கிரஸ் கட்சியினர் இந்துக்கள் அல்லாதவர்களை போலவும், பா.ஜ.க மட்டும் இந்துகளுக்கு வாழ்வதுபோல பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ் சித்தரித்து வருகின்றன ஆன்மிகம் என்பது வேறு; மதம் என்பது வேறு. மனிதர் குலத்தில், கடவுளை ஏற்பதும், மறுப்பதும் காலம் காலமாக இருந்து வருகிறது.

நாட்டில் பகையுணர்ச்சியைத் தூண்ட பா.ஜ.க-வினர் வேலைக் கையில் எடுத்துள்ளனர். இது முருகனுக்கு செய்யும் துரோகம். முருகன் கையில் இருக்க வேண்டிய வேல், மற்றவர்கள் கைகளுக்குப் போனால் அது தவறாகிவிடும். மதச்சார்ப்பின்மை என்ற கொள்கை காரணமாகவே எங்கள் கூட்டணி உயிரோடு உள்ளது. நல்ல முறையில் சென்று கொண்டுள்ள இந்தக் கூட்டணி, வெற்றிக் கூட்டணி. வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிகமான சீட் கேட்க மாட்டோம்.

கே.எஸ்.அழகிரி

குறைவான சீட்டை ஏற்க மாட்டோம். எங்களுக்குத் தேவையானவற்றை மட்டும் பெறுவோம். பீகார் தோல்வி குறித்து காங்கிரஸ் முகாமில் இருந்தே எதிர்க் கருத்து வருகிறது. சோதனையான காலத்தில் சுயவிமர்சனம் செய்யக்கூடாது. இன்று காங்கிரஸ் கட்சி எழுந்து நின்று, புதிய பாதையில் பயணிக்கிறது. அதற்குக் காரணம் ராகுல்காந்தி” என்றார்.

Also Read: ``என் ட்விட்டர் பதிவு, குஷ்புவுக்கானது அல்ல!'' - கே.எஸ்.அழகிரி புது விளக்கம்

இதையடுத்துப் பேசிய அக்கட்சியின் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், ``இந்த மாநாடு தமிழக அரசியலில் திருப்புமுனையாக இருக்கும். கோயில், மசூதி, சர்ச் கட்டுவதற்காகவோ, பதவிகளுக்கவோ காங்கிரஸில் இணையவில்லை. மக்களுக்கு சேவை செய்ய காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளோம். இப்போது, சர்வதிகார ஆட்சி நடைபெறுகிறது. மோடிக்கு 56 இன்ச் மார்பு இருந்தாலும், இதயம் சிறியதாகவே உள்ளது. வரும் தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். தேர்தல் வெற்றிக்காக கடினமாக உழைக்க வேண்டும்” என்றார்.

தினேஷ் குண்டுராவ் - அழகிரி

இதையடுத்து ஏர்க்கலப்பைகளை ஏந்தியபடி பேரணி நடத்தினர். போலீஸார் அனுமதி மறுத்த நிலையில், பேரணியைத் தடுப்புகள் அமைத்து தடுத்து நிறுத்தினர். அப்போது இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸ் தடுப்புகளை மீறி கருமத்தம்பட்டி நால்ரோடு வரை பேரணி நடைபெற்றது. இதைத்தொடர்து, கே.எ.ஸ்.அழகிரி, தினேஷ் குண்டுராவ் உள்ளிட்ட காங்கிரஸ் பிரமுகர்கள் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.



source https://www.vikatan.com/news/politics/congress-leader-k-s-alagiri-speaks-about-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக