Ad

திங்கள், 23 நவம்பர், 2020

`உலகிலேயே காற்றில் ஊழல் செய்த ஒரே கட்சி தி.மு.கதான்!’ - பா.ஜ.க எல்.முருகன் சாடல்

பா.ஜ.க சார்பில் தமிழகம் முழுவதும் வேல் யாத்திரை நடத்தப்பட்டு வருகிறது. கோவை மருதமலை முருகன் கோயிலில் கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வந்த் நாராயண், தமிழக பா.ஜ.க தலைவர் முருகன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் வேல் பூஜை செய்தனர். மருதமலை அடிவாரத்தில், முருகன் உள்ளிட்ட சில முக்கிய தலைவர்களின் காரைத் தொடர்ந்து வந்த கார்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

பா.ஜ .க வேல்யாத்திரை

Also Read: `தமிழத்தில் மூலை மூலைக்கு டாஸ்மாக் திறந்துள்ளனர்!' - பா.ஜ.க முருகன் ஆவேசம்

இதையடுத்து, போலீஸாருக்கும், பா.ஜ.க-வினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. சில நிமிடங்களுக்கு பிறகு வாகனங்கள் செல்ல அனுமதியளித்தனர். இதையடுத்து, சிவானந்தகாலனி பகுதியில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் பேசிய துணைத்தலைவர் அண்ணாமலை,``கோவை எப்போதுமே பா.ஜ.க-வின் கோட்டை. இந்த அளவுக்கு எங்கேயும் இப்படி கூட்டம் கூடியதில்லை. காலில் செருப்புக் கூட போடாமல் முருகன் வேல் யாத்திரை விரதத்தை கடைபிடித்துக் கொண்டிருக்கிறார். தி.மு.க-வுக்கு துளிர்விட்டு போய்விட்டது. அவர்களை யாரும் கேள்வி கேட்க மாட்டார்கள் என்ற மனநிலையில் இருக்கின்றனர். தமிழ்க் கடவுள் முருகன் அவமானப்படுத்தப்பட்டதை தட்டிக் கேட்பதற்காக, நம் தலைவர் முருகன் கிளம்பியிருக்கிறார். கோவை பா.ஜ.க-வின் கோட்டை என்பதை நிரூபிக்க வேண்டும். கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயன், மிஸ்டர் கிளீன் என்று பெயரெடுத்தவர். அதேபோல, பா.ஜ.க சார்பில் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்ற உறுப்பினர்களும் மிஸ்டர் கிளீன் ஆக இருப்பார்கள்" என்றார்.

பா.ஜ.க வேல் யாத்திரை

கர்நாடக துணை முதலமைச்சர் அஸ்வத் நாராயணன் பேசுகையில், ``தமிழ்க் கடவுள் முருகனையும், கந்தசஷ்டிக் கவசத்தையும் அவதூறாகப் பேசியவர்களை விடக்கூடாது. தி.மு.க-வின் இந்து விரோத போக்குக்கு எதிராக பா.ஜ.க தொண்டர்கள் பொங்கி எழுந்து வருகின்றனர். தமிழக மக்கள் பா.ஜ.க-வுக்கு வாய்ப்புக் கொடுக்கும் பட்சத்தில், தமிழகத்தை முன்னோடி மாநிலமாக எடுத்துச் செல்வோம். தமிழகத்தை தாண்டியும் கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலும் வேல் யாத்திரை நடத்துவது பேசி வருகிறோம்" என்றார்.

பா.ஜ.க தேசிய மகளிர் அணித் தலைவர் வானதி ஸ்ரீனிவாசன் பேசுகையில்,``பா.ஜ.க யாத்திரை செய்தால், மதக் கலவரம் வரும் என்று எதிர்க்கட்சிகள் சொல்லி வருகின்றன. இப்போதுவரை, எங்கேயும் பிரச்னை ஏற்படவில்லை. மாறாக, நாங்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டம்தான் வந்து கொண்டிருக்கிறது. தமிழக சட்டமன்றத்துக்கு கோவையில் இருந்து எம்.எல்.ஏ-க்கள் நுழைவார்கள். தமிழகத்தில் பா.ஜ.க-வுக்கு எம்.பி., எம்.எல்.ஏ-க்கள் இல்லை. ஆனாலும், தமிழகத்தைத் சேர்ந்த நிர்மலா சீதாராமனை மத்திய நிதி அமைச்சராக்கியுள்ளனர்.

பா.ஜ.க வேல் யாத்திரை

நம்முடன் பணியாற்றிய தமிழிசைக்கு தெலங்கானா மாநிலத்தில் கவர்னர் பதவி வழங்கப்பட்டுள்ளது. கிராமத்தில் பிறந்த என்னை தேசிய மகளிரணித் தலைவராக்கி, பா.ஜ.க அழகு பார்த்துள்ளது. இந்து மக்களையும் இந்து தெய்வங்களையும் இழிவுபடுத்துவதை எப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இந்த வெற்றிவேல், சக்திவேலாக மாறும்" என்றார்.

மாநிலத் தலைவர் எல். முருகன் பேசுகையில், ``வெற்றிவேல் யாத்திரை அவசியமா எனக் கேட்டனர். இது அத்தியாவசியம். இந்தக் கூட்டம் தொடங்கியப் பிறகு, தி.மு.க ஸ்டாலினின் தூக்கம் தொலைந்துவிட்டது. இந்த யாத்திரையைத் தடுக்க நினைப்பவர்கள்தான், கலவரம் செய்ய நினைக்கிறார்கள். தமிழ் கலாசாரம், பண்பாட்டை சிதைத்தது தி.மு.கதான். கறுப்பர் கூட்டத்துக்கு பின்னால் தி.மு.க இருக்கிறது, கறுப்பர் கூட்டத்தையும், அந்த கயவர் கூட்டத்தையும் இந்த காவிக் கூட்டம் விரட்டியடிக்கும். உலகத்திலேயே காற்றில் ஊழல் (2 ஜி) செய்த கட்சி தி.மு.கதான். தி.மு.க-வும், ஊழலும் உடன் பிறந்தவர்கள். தி.மு.க எதை கையில் எடுத்தாலும், அது மக்களிடம் புஸ்வானம் ஆகிவிடுகிறது. தி.மு.க ஆட்சிக்கு வரமுடியாது.

பா.ஜ.க முருகன்

அது கனவாகதான் இருக்கும். தேசிய ஜனநாயக கூட்டணிதான் ஆட்சி அமைக்க போகிறது. யாத்திரை யாருக்கும் தொந்தரவு இன்றி அமைதியாக நடைபெற்று வருகிறது. பா.ஜ.க-வுக்கு அமைப்பு ரீதியில் பலம் குறைந்த கடலூர், திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் மக்களிடையே வரவேற்பும் ஆதரவும் பெருமளவில் கிடைத்தது. மற்ற மத பண்டிகைகளுக்கு அரசு விடுமுறை விடப்படுவது போல, தைப்பூசத்துக்கும் தமிழக அரசு விடுமுறை அளிக்க வேண்டும்" என்றார்.

Also Read: வேல் யாத்திரை : `ஊருக்கு மட்டும்தான் உபதேசமா முதல்வரே?' - கொதிப்பில் தமிழக பா.ஜ.க!

இந்நிலையில், பா.ஜ.க வேல்யாத்திரை கூட்டத்தில் 6,000 பேர் கலந்து கொண்டதாகவும், அதில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டதாகவும் மாநகர காவல்துறை அறிக்கை விடுத்தது. மேலும், முருகன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வேல் யாத்திரை பொதுக்கூட்டம்

ஆனால், ``மூத்தத் தலைவர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை. காவல்துறையும், தமிழக அரசும் மறைமுகமாக வேல் யாத்திரைக்கு ஆதரவளிக்கின்றனர்" என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.



source https://www.vikatan.com/news/politics/bjp-murugan-slams-dmk-over-2g-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக