Ad

செவ்வாய், 24 நவம்பர், 2020

அமித் ஷா சவால்: `ஊழல் பற்றி விவாதிப்போமா?’ - பா.ஜ.க., `இது குஜராத் அல்ல’ - தி.மு.க!

இன்னும் சில மாதங்களில் நடைபெறவிருக்கும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க வெற்றிபெற வாய்ப்பிருப்பதாக ஒரு கருத்து நிலவும் நிலையில், தி.மு.க-வை ஆட்சிக்கு வரவிடக் கூடாது என்று பா.ஜ.க தீவிரமாகச் செயல்பட்டுவருகிறது. வேல் யாத்திரை உட்பட பல இடங்களில் இந்தக் கருத்தை பா.ஜ.க தலைவர்களே வெளிப்படையாகப் பேசிவருகிறார்கள். இன்னொருபுறம், அ.தி.மு.க-வைக் காட்டிலும் பா.ஜ.க-வையே தனது முதன்மை எதிரியாக தி.மு.க தற்போது கருதுகிறது. எனவே, `தமிழகத்துக்கு மத்திய பா.ஜ.க அரசு துரோகம் இழைத்துவருகிறது’, `தமிழகத்தை பா.ஜ.க அரசு வஞ்சித்துவிட்டது’ போன்ற விமர்சனங்களை தி.மு.க தொடர்ந்து எழுப்பிவருகிறது.

அமித் ஷா

இந்தநிலையில், அரசுமுறைப் பயணமாக சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சரும், பா.ஜ.க-வின் முன்னாள் தேசியத் தலைவருமான அமித் ஷா, தி.மு.க-வுக்கு நேரடியாகச் சவால் விட்டுச் சென்றிருக்கிறார். சென்னை நிகழ்ச்சியில் பேசிய அமித் ஷா, `வாரிசு அரசியல்’ உட்பட தி.மு.க மீது பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தார். மேலும், `தமிழகத்துக்கு மத்திய அரசு அநீதி இழைத்திருப்பதாக தி.மு.க தலைவர்கள் அவ்வப்போது கூறுகிறார்கள். தமிழகத்துக்கு நாங்கள் செய்தவற்றைப் பட்டியலிடத் தயார். அது பற்றி விவாதிக்க தி.மு.க தயாரா?’ என்று சவால் விட்டிருக்கிறார் அமித் ஷா.

அமித் ஷாவின் இந்தப் பேச்சுக்கு பதிலடி கொடுத்து, நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார் தி.மு.க-வின் பொருளாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான டி.ஆர்.பாலு. காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் பத்தாண்டுகால ஆட்சியில் தி.மு.க இடம்பெற்றிருந்தது. அந்த ஆட்சியின்போது, தமிழகத்துக்கு மத்திய அரசு செய்த நன்மைகள், சாதனைகள் என டி.ஆர்.பாலு பட்டியலிட்டிருக்கிறார்.

டி.ஆர்.பாலு

மேலும் அவர், பா.ஜ.க ஆட்சியில் `ஜி.எஸ்.டி மூலம் தமிழகத்தில் கிடைத்த நிதி எவ்வளவு... அதில் தமிழ்நாட்டுக்கு நீங்கள் செலவிட்ட நிதி எவ்வளவு... வட மாநிலங்களுக்கு வாரிக்கொடுத்தது எத்தனை கோடி?’ என்று கேள்விகளை எழுப்பியிருக்கிறார். அத்துடன், `தமிழ் மொழியைப் புறக்கணிப்பது, இந்தித் திணிப்பு - மத துவேஷத்தை உருவாக்குவது, சமூக நல்லிணக்கத்தைப் பாழ்படுத்துவது போன்ற துரோகங்களை மட்டுமே மத்திய பா.ஜ.க அரசு செய்துவருகிறது’ என்று டி.ஆர்.பாலு சாடியிருக்கிறார்.

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநிலச் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதியிடம் பேசினோம். ``மத்தியிலுள்ள பா.ஜ.க ஆட்சியில் தமிழகத்துக்கு ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. பா.ஜ.க ஆட்சியில்தான் தமிழ்நாட்டுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை வருகிறது. மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தில் அதிகமாகப் பயன்பெற்ற மாநிலம் தமிழ்நாடுதான். இந்தியாவிலேயே சதவிகித அடிப்படையில் மத்திய அரசிடமிருந்து அதிக நிதி பெற்றிருப்பது தமிழ்நாடுதான். ஆயுஷ்மான் யோஜனா என்கிற ரூ.5 லட்சம் காப்பீட்டுத் திட்டத்தில் அதிகமாகப் பயடைந்தது தமிழ்நாடுதான். பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழ்நாடுதான் அதிகமாகப் பயனடைந்திருக்கிறது.

நாராயணன்

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் தமிழ்நாடு, கடந்த மூன்று ஆண்டுகளாக அதிகமான நிதியைப் பெற்றுவருகிறது. மத்திய அரசின் திட்டத்தில் தமிழ்நாட்டுக்கு ஏராளமான இலவச எரிவாயு இணைப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. பா.ஜ.க ஆட்சியில் தமிழ்நாட்டுக்கு ஸ்மார்ட் சிட்டி திட்டங்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. மத்திய அரசு கொண்டுவந்த ஜி.எஸ்.டி உள்ளிட்ட திட்டங்களால் பல நன்மைகளைப் பெற்று, அதிக தொழில் முதலீடுகளை ஈர்த்த மாநிலமாக தமிழகம் விளங்கிவருகிறது.

இப்படி, தமிழகத்துக்கு மத்திய பா.ஜ.க அரசு நிறைவேற்றியிருக்கும் திட்டங்களைப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். ஆனால், மத்தியில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் 10 ஆண்டுகாலம் இடம்பெற்றிருந்த தி.மு.க., தமிழ்நாட்டுக்கு எதையும் செய்யவில்லை. தமிழ்நாட்டுக்கு வரவிருந்த தொழிற்சாலைகளை ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு விரட்டியடித்ததுதான் தி.மு.க-வின் சாதனை. ஐ.மு.கூட்டணியில் இடம்பெற்ற தி.மு.க செய்த முறைகேடுகள் பற்றி விவாதிக்க நாங்கள் தயார். அதற்கு தி.மு.க தயாரா?” என்றார் அவர்.

ஸ்டாலின்

இது குறித்து தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் சரவணனிடம் பேசினோம். ``மத்தியில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்து அனைத்து வகைகளிலும் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு தரவில்லை. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும், மத்திய அரசு அதைச் செயல்படுத்தவில்லை. காவிரி வாரியம் அமைக்கப்படாததால், கர்நாடக அரசின் கட்டுப்பாட்டில்தான் இன்னமும் அணைகள் இருக்கின்றன. அதனால், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும்கூட, தமிழகத்துக்கான உரிமை நிலைநாட்டப்படவில்லை. இது, மத்திய பா.ஜ.க அரசு தமிழ்நாட்டுக்குச் செய்த மிகப்பெரிய துரோகம்.

Also Read: நிவர் புயல்: `கஜா போன்ற பாதிப்பு இருக்காது; முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார்!’ ஆர்.பி.உதயக்குமார்

நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தி மொழியைத் திணிப்பதும் தமிழ்நாட்டுக்குச் செய்யும் துரோகம். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வரப்போவதாகச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்களே ஒழிய, அது எப்போது வரும் என்பது தெரியவில்லை. நீட் தேர்வு என்பது தமிழகத்துக்குச் செய்த மிகப்பெரிய துரோகம். தமிழகத்தில் `டிஃபன்ஸ் காரிடர்’ கொண்டுவரப்போவதாகச் சொன்னார்கள். இதனால், நிறைய தொழிற்சாலைகள் வரும் என்று சொன்னார்கள். இதன் மூலம் தமிழகத்தில் எத்தனை தொழிற்சாலைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன... ஒன்றும் வரவில்லை.

சரவணன்

கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைக் கொண்டுவந்ததே தி.மு.க அங்கம் வகித்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுதான். அதற்கு அதிகமாக நிதி ஒதுக்க வேண்டும், வேலைநாள்களை அதிகரிக்க வேண்டும் என்று சொல்லிவருகிறோம். அதைச் செய்யாத மத்திய பா.ஜ.க., இந்தத் திட்டத்தைத் தனது சாதனையாகச் சொல்வது வேடிக்கையானது. திருவாரூரில் மத்தியப் பல்கலைக்கழகத்தைக் கொண்டுவந்தது தி.மு.க-வின் சாதனை.

தமிழ்நாட்டுக்கு சர்வதேசத் தரத்திலான தேசிய கடல்சார் பல்கலைக்கழகத்தைக் கொண்டுவந்தோம். மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டுவந்தோம். கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கொண்டுவந்தோம். திருச்சியில் ஐ.ஐ.எம் எனப்படும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனத்தை நிறுவினோம். இப்படி, தி.மு.க-வால் தமிழகம் பெற்ற பயன்கள் ஏராளம். அப்படியிருக்கும்போது, ஏதோ குஜராத்தில் பேசுவதைப்போல நினைத்துக்கொண்டு இங்கு வந்து அமித் ஷா பேசியிருக்கிறார்” என்றார் சரவணன்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/dmk-hits-back-amit-shahs-speech-in-chennai

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக