Ad

சனி, 7 நவம்பர், 2020

உலகப்போர் தொடங்கி கோவிட் வரை... பக்கா பிராண்டாக `பார்லே' உருவானது எப்படி?

நம்மில் பலர் பாப்பின்ஸ் மிட்டாய், மேரிகோல்ட் பிஸ்கெட் எல்லாம் சாப்பிடாமல் இருந்திருக்கவே முடியாது. இவற்றை எல்லாம் தயாரிக்கும் நிறுவனம் எது தெரியுமா? பார்லே-ஜி. இந்த நிறுவனத்தின் வரலாற்றையும் பிசினஸ் மேனேஜ்மென்ட்டைப் பற்றியும் பார்ப்போம்.

Parle G

குஜராத் டு மும்பை

மோகன்லால் தயாள் செளஹான் 12 வயதுச் சிறுவனாக இருந்தபோது, தெற்கு குஜராத்தில் வல்சாத் நகருக்கு அருகிலிருக்கும் பார்டி (Pardi) என்கிற இடத்திலிருந்து பம்பாய்க்கு (இன்றைய மும்பை) புலம்பெயர்ந்தார். அவருடைய ஆசை தையல் கற்றுக்கொண்டு தையல் கடை வைக்க வேண்டும் என்பதாகும். அது போலவே, அவர் தன்னுடைய 18-வது வயதில் பம்பாயின் காம்தேவி பகுதியில் டி.மோகன்லால் & கம்பெனி, சிப்பா துர்லப் (Chhiba Durlabh) என்கிற பெயரில் இரண்டு கடைகள் ஆரம்பித்து நடத்திவந்தார்.

தையல் கடையிலிருந்து மிட்டாய்...

அவருடைய ஐந்து மகன்களுக்கும் பள்ளிக்கூடங்களில் சொல்லித் தரப்படாத வியாபார நுணுக்கங்களைச் சொல்லிக் கொடுத்தார். ஒரு கட்டத்தில், தனது கடைகளை மூடிவிட்டு மிட்டாய் தயாரிக்கும் தொழிலில் ஈடுபட விரும்பி பம்பாயிலிருக்கும் வில்லேபார்லே (Vile Parle) பகுதியில் 1929-ம் ஆண்டு 12 பணியாளர்களுடன் மிட்டாய் தயாரிக்கும் சிறிய தொழிற்சாலையை ஆரம்பித்தார்.

1938-ம் ஆண்டு `பார்லே க்ளூக்கோ’ என்கிற பெயரில் பிஸ்கெட் தயாரிக்க ஆரம்பித்த சில மாதங்களில் இரண்டாம் உலகப்போரும் ஆரம்பித்தது. அப்போதிருந்த சட்டப்படி, தயாரிக்கப்பட்ட பொருள்கள் முதலில் ராணுவத்துக்குத்தான் விநியோகம் செய்ய வேண்டுமென்கிற விதி இருந்ததால் சந்தையில் விற்பனை செய்ய இயலவில்லை.

Parle G

இரண்டாம் உலகப் போரும் முடிந்து, நாடும் விடுதலையாகி ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டுச் சென்ற நிலையில் பார்லே க்ளூக்கோ பிஸ்கெட்டுக்கு சந்தையில் நல்ல வரவேற்பு இருந்தது. நிறுவனத்தின் `Freedom from British’ என்கிற பெயரிலான விளம்பரப் பரப்புரை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

1938-ம் ஆண்டிலிருந்து 1996-ம் ஆண்டு வரை `பார்லே புராடக்ட்ஸ் லிமிடெட்’ என்கிற இந்த நிறுவனம் பிஸ்கெட், மிட்டாய் பிரிவுகளில் பல பிராண்டுகளை சந்தையில் அறிமுகப்படுத்தியது. இது அறிமுகப்படுத்திய அனைத்து பிராண்டுகளும் மக்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பைப் பெற்றன.

அவற்றில் குறிப்பிடத்தக்க சில பிராண்டுகள்:

மொனாக்கோ (இந்தியாவில் அறிமுகமான முதல் உப்பு பிஸ்கெட் – 1941-ம் ஆண்டு), சீஸ்லிங்க்ஸ் (1956),

கிஸ்மி மிட்டாய் (1963),

பாப்பின்ஸ் (1966),

க்ராக் ஜாக் (இனிப்பும் உப்பும் கலந்த பிஸ்கெட் – 1974),

1981-க்கும் 1985-க்கும் இடைப்பட்ட காலத்தில் `பார்லே – க்ளூக்கோ' என்கிற பெயரை மாற்றி `பார்லே - ஜி (Parle - G)' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் `G’ என்பது `Glucose’-ஐக் குறிக்கும்.

1983-ம் ஆண்டு `மெலடி’ சாக்லேட்டும்,

1986-ம் ஆண்டு `மேங்கோ பைட்’ மிட்டாயும்,

1996-ம் ஆண்டு `ஹைட் அண்ட் சீக்’ பிஸ்கெட்டும் அறிமுகப்படுத்தப்பட்டன.

Parle G

25 அடி நீள அடுப்பு...

1946-ம் ஆண்டில் பிஸ்கெட் தயாரிப்புக்கென்று இந்தியாவிலேயே 250 அடி நீளத்துக்கான ஓவனை (Oven) இந்த நிறுவனம் உருவாக்கி தயாரிப்பில் ஈடுபட்டது. 1971-ம் ஆண்டு உலக அளவில் பிரபலமான மான்ட் செலக்‌ஷன் அவார்டை (Monde Selection Award) முதல் தடவையாக இந்த நிறுவனம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

1998-ம் ஆண்டு இந்திய காமிக்ஸின் சூப்பர் ஹீரோவாக விளங்கிய `சக்திமான்’ இதன் விளம்பரங்களில் இடம்பெற்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 2004-ம் ஆண்டில் `பார்லே-ஜி’ என்பதில் இருக்கும் `ஜி’ என்பது `Glucose’ மட்டுமல்லாமல் `Genius’ எனவும் விளம்பரப் பரப்புரையில் குறிப்பிட்டது.

2011-ம் ஆண்டு நீல்சன் சந்தை ஆய்வின்படி, உலகத்திலேயே அதிகமாக விற்பனையாகும் பிஸ்கெட் பார்லே-ஜி எனத் தெரியவந்தது. எகானமிக் டைம்ஸ் வருடம்தோறும் நடத்தும் `மிகவும் நம்பிக்கையான பிராண்டுகள்’ என்கிற ஆய்வில் பார்லே-ஜி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது. 2020-ம் ஆண்டு இது எட்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.

2019-ம் ஆண்டு இந்த நிறுவனத்தின் விற்பனை சுமார் ரூ.9,030 கோடியாகும். இது அதற்கு முந்தைய ஆண்டைவிட 6% அதிகமாகும். இந்தியாவுக்கு வெளியே ஏழு நாடுகளில் இதற்கான தொழிற்சாலைகள் இருக்கின்றன. சுமார் 50,500 பேர் இந்நிறுவனத்தில் வேலை செய்துவருகின்றனர்.

Parle G

சர்ச்சையில் சிக்கிய பார்லே-ஜி

பார்லே-ஜி பிஸ்கெட் கவரில் இடம்பெற்றிருக்கும் குழந்தை குறித்தும், அந்தக் குழந்தையின் பெயர், வயது குறித்தும் பல செய்திகள் ஊடகங்களில் உலா வந்தன. அந்தக் குழந்தை நாக்பூரைச் சேர்ந்த நீரா தேஷ்பாண்டே என்றும், இப்போது நீராவின் வயது 65 என்றும் சிலர் கூற, வேறு சிலர் அக்குழந்தையின் பெயர் `குஞ்சன் குந்தானியா (Gunjan Gundaniya)’ என்றும் குறிப்பிட்டு செய்திகளைப் பரப்பினர். ஆனால், அந்நிறுவனத்தில் மேலாளராக வேலை பார்க்கும் ஒருவர், `அந்தக் குழந்தையை உருவாக்கியவர்கள் எவரெஸ்ட் விளம்பர நிறுவனத்தின் க்ரியேட்டிவ் குழுவினர்’ என்றும் நிஜமான குழந்தை இல்லை என்றும் கூறி தவறாகப் பரப்பப்பட்ட செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிறுவனத்தின் கீழ் தற்போது சுமார் 100-க்கும் மேற்பட்ட பிஸ்கெட், மிட்டாய்கள் சந்தைப்படுத்தப்பட்டு வருகின்றன.

பார்லே புராடக்ட்ஸ் நிறுவனம் தவிர, செளகான் குடும்பத்தினர் நிர்வகிக்கும் மற்ற நிறுவனங்கள் `பார்லே அக்ரோ’, `பார்லே பிஸ்லரி’ ஆகும். 1959-ம் ஆண்டு குளிர்பானங்களைத் தயாரிக்க `பரோடா பாட்லிங் கம்பெனி’யை ஆரம்பித்தது. 1984-ம் ஆண்டு இது`பார்லே அக்ரோ’வாகப் பரிணமித்தது. இவை தயாரிக்கும் பானங்களில் குறிப்பிடத்தக்கவை ஃப்ரூட்டி, ஆப்பி ஆகும்.

ஆரம்பத்தில் இந்த நிறுவனம் தயாரித்து விற்பனை செய்த பிரபலமான தம்ப்ஸ் அப், லிம்கா, கோல்ட் ஸ்பாட், சிட்ரா, மாஸா ஆகிய பிராண்டுகள் 1990-களின் ஆரம்பத்தில் சுமார் 40 மில்லியன் டாலருக்கு கோகோ கோலா நிறுவனத்துக்கு விற்கப்பட்டன. இந்த பிராண்டுகள் 1977 முதல் 1991 வரை சந்தையில் கோலோச்சின. தாராளமயமாக்கலுக்குப் பின் போட்டியைச் சமாளிக்க முடியாமல் கோகோ கோலா நிறுவனத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.

Parle Products

1969-ம் ஆண்டு ரமேஷ் செளகான் இத்தாலி நாட்டைச் சேர்ந்த `Felice Bisleri of Italy’ என்கிற நிறுவனத்தை வாங்கினார். அதன்பின் 1991-ம் ஆண்டு 20 லிட்டர் கொள்ளளவு கொண்ட கேனை சந்தையில் அறிமுகப்படுத்தியது.

ஆக, செளகான் குடும்பத்தினரின் பார்லே குழுமத்தைச் சேர்ந்த பார்லே புராடக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் சுமார் 90 ஆண்டு பாரம்பர்யமிக்கதும், சுதேசி இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு ஆங்கிலேய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்குப் போட்டியாக பிஸ்கெட்டுகளைத் தயாரித்து விற்பனை செய்ய ஆரம்பித்த நிறுவனமுமாகும். கோவிட்-19 காலகட்டத்தில் இந்த நிறுவனத்தின் புதிய அறிமுகம் `பார்லே – ஹாண்ட் சானிடைசர்’ ஆகும்.



source https://www.vikatan.com/business/news/a-brief-history-of-parle-company-and-its-products

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக