Ad

வியாழன், 26 நவம்பர், 2020

நிவர்: தத்தளிக்கும் வீடுகள்; மூழ்கிய பயிர்கள்; வேரோடு சாய்ந்த மரங்கள்! - வேலூர் நிலவரம்

நிவர் புயலின் தாக்கம், வேலூர் மாவட்டத்திலும் பலத்த சேதத்தை ஏற்படுத்திவருகிறது. இம்மாவட்டத்தில் நேற்று காலை முதலே பெய்யத் தொடங்கிய மழை, நேரம் செல்லச்செல்ல வலுப்பெற்றது. இன்று காலை முதல் பலத்த மழை கொட்டித் தீர்க்கிறது. காற்றின் தீவிரமும் வலுப்பெற்று வருகிறது. பெரும்பாலான ஏரிகள் நிரம்பியுள்ளதால், கரையோரம் வசிக்கும் மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இருந்தபோதும், தாழ்வான இடங்களை மழைநீர் சூழ்ந்துள்ளதால், பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் மூழ்கிய நெற்பயிர்கள்...

வேலூர் கன்சால்பேட்டைப் பகுதியில், முட்டி அளவுக்குத் தண்ணீர் தேங்கியிருக்கிறது. வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்துள்ளதால் குழந்தைகளைத் தூக்கிக்கொண்டு பாதுகாப்பான இடங்களை நோக்கி மக்கள் சென்றவண்ணம் இருக்கிறார்கள். சி.எம்.சி மருத்துவமனை அமைந்துள்ள ஆற்காடு சாலையில் கழிவுநீருடன் மழைநீர் கலந்து தேங்கி நிற்கிறது. இதனால், அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வேலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள ஜி.ஆர்.டி ஹோட்டலின் பின்புறம் இருக்கிற கழிவுநீர் கால்வாயிலும் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. பலத்த காற்று வீசுவதால் மாநகருக்குள் பல இடங்களில் மரங்கள் வேரோடு முறிந்து விழுந்துள்ளன.

கூரை வீடுகளும் பலமாக சேதமடைந்துவருகின்றன. வேலூர் மாநகரின் நிலை இவ்வாறிருக்க புறநகர் பகுதிகளும், மாவட்டத்தின் இதர பகுதிகளும் கடும் சேதமடைந்துவருகின்றன. பல இடங்களில் மின்கம்பிகள் அறுந்து விழுந்துள்ளதால், காலை முதலே மின் நிறுத்தமும் செய்யப்பட்டுள்ளது. வேலூரை அடுத்துள்ள கணியம்பாடி சிங்கிரிகோயில் கிராமத்தில், பலத்த காற்றுக்கு 10 ஏக்கர் பரப்பிலான வாழை மரங்கள் சாய்ந்துவிழுந்துள்ளன. இதேபோல், மலைகளில் திடீரென உருவாகியிருக்கும் நீர்வீழ்ச்சிகளில் குளிக்கவும், மலைமீது ஏறி விளையாடுவதை தவிர்க்கவும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இதேபோல், அணைக்கட்டு வட்டத்துக்குட்பட்ட அகரம் ஆற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தில் மூழ்கிய கன்சால்பேட்டை பகுதி...

கீழ் அரசம்பட்டு வழியாகப் பாய்ந்தோடும் நாகநதி ஆற்றிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பள்ளிகொண்டா பெரிய ஏரிக்கு பேயாறிலிருந்து நீர்வரத்து அதிகளவில் வருவதால், அந்த ஏரியைச் சுற்றிவசிக்கும் மக்கள் அருகில் உள்ள பள்ளிக்கட்டடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். பேரணாம்பட்டு அடுத்த பத்தலப்பல்லி கிராமத்தில் வசித்துவரும் நாடோடியின நரிக்குறவ மக்கள் கிராம சேவை கட்டடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தேவையான உணவும் மாவட்ட நிர்வாகம் மூலம் வழங்கப்பட்டுவருகிறது.

மாவட்டம் முழுவதும் முறிந்துவிழுந்த மரங்களை அகற்றும் பணியும் உடனுக்குடன் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. பாதிப்பு ஏற்படும் பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் மாவட்ட நிர்வாகம் மூலம் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு தகுந்த உதவிகளும் செய்யப்பட்டுவருகின்றன.



source https://www.vikatan.com/news/general-news/nivar-cyclone-heavy-rain-in-vellore

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக