Ad

புதன், 18 நவம்பர், 2020

`அமித் ஷா வருகையும் முக்கிய ஆலோசனைக் கூட்டமும்..! - தேர்தலுக்கு தயாராகும் அ.தி.மு.க

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் நவம்பர் 21-ம் தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில், தேர்வாய்கண்டிகை புதிய நீர்தேக்கம் திட்டம், மெட்ரோ ரயில் 2-ம் கட்ட விரிவாக்கம் திட்டம் உள்ளிட்ட எட்டு திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். அவர் வருகைக்கு ஒருநாள் முன்னதாக, கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்துக்கு அ.தி.மு.க அழைப்பு விடுத்திருக்கிறது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில், மண்டல பொறுப்பாளர்கள், அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

அமித் ஷா

இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர், “ஒரு பூத்துக்கு 25 பேர் வீதம் பூத் கமிட்டி அமைக்க கட்சித் தலைமை உத்தரவிட்டது. டிசம்பர் இரண்டாவது வாரத்துக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணி முடிவடையும். புதுச்சேரி உள்பட அமைப்புரீதியாக உள்ள 74 மாவட்டங்களையும் 30 மண்டலங்களாகப் பிரித்து, மண்டலத்திற்கு ஒரு பொறுப்பாளர் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பணி குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

அ.தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ஜ.க., 60 தொகுதிகள் வரை எதிர்பார்க்கிறது. இதுகுறித்தும் நிர்வாகிகள் கூட்டத்தில் ஒருங்கிணைப்பாளர்கள் பேசவிருக்கின்றனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவை, அடுத்தநாள் நவம்பர் 21-ம் தேதி அமித் ஷாவுடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் பகிர்ந்து கொள்ளவும் கட்சித் தலைமை தயாராகிறது. அதே போன்று வேல் யாத்திரை மூலம் பா.ஜ.க தரும் அழுத்தம் தொடர்பாகவும் இதில் ஆலோசிக்கப்படலாம்.

Also Read: பெப்பர் பாயா விருந்து... அ.தி.மு.க-வின் கண்டிஷன் - சீட் பங்கீட்டுக்குத் தயாராகும் அமித் ஷா!

2019 நாடாளுமன்றத் தேர்தலில், தி.மு.க-வுக்கு முன்னதாகவே கூட்டணியை இறுதி செய்து, சீட் பங்கீட்டையும் முடித்துவிட்டு, தேர்தல் களத்தில் முதல் ஆளாக அ.தி.மு.க கூட்டணி குதித்தது. அதேபாணியில், வரும் 2021 சட்டமன்றத் தேர்தலுக்கும் சீட் பங்கீட்டை விரைவிலேயே முடித்துவிட்டு தேர்தல் களத்தைச் சந்திக்க கட்சித் தலைமை தயாராகிறது. அமித் ஷாவின் வருகைக்குப் பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்களை தமிழகம் சந்திக்கலாம்” என்றனர்.

அ.தி.மு.க தலைமை அலுவலகம்

மண்டலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவர்களில் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், பொன்னையன், தம்பிதுரை, நத்தம் விஸ்வநாதன், செம்மலை, பா.வளர்மதி, ஜே.சி.டி பிரபாகர், கோகுல இந்திரா, மனோஜ் பாண்டியன், ப.மோகன், முக்கூர் சுப்பிரமணியன், ஆர்.கமலக்கண்ணன் ஆகியோர் அமைச்சர் பதவியில் இல்லாதவர்கள். இவர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் மண்டலங்களுக்கு தேவைப்படும் நிதியை கட்சித் தலைமையே பிரித்து அனுப்பும் என்று கூறப்படுகிறது. இவர்களைத் தவிர்த்து, மற்ற மண்டலங்களுக்குப் பொறுப்பு ஏற்றிருக்கும் அமைச்சர்கள், கணிசமான நிதியை பங்களிப்புச் செய்ய வேண்டுமென்று கட்சித் தலைமை கண்டிப்பான உத்தரவிட்டிருக்கிறதாம். இந்த நிதி விவகாரம் குறித்தும் நவம்பர் 20-ம் தேதி நடைபெறும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் விவாதிக்கப்படலாம் என்கிறது அ.தி.மு.க வட்டாரம்.



source https://www.vikatan.com/news/politics/admk-getting-ready-for-election-and-planning-for-amit-shah-visit

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக