Ad

திங்கள், 23 நவம்பர், 2020

வேல் பிரதர்ஸ், போஷ் கேங்க், தனிப்படை... சுச்சி சொன்னதெல்லாம் உண்மையா? #BiggBossAnalysis

பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்கள் வெளியேறும் போது சிலரின் வாயைக் கிளற முயல்வார் கமல். இதர போட்டியாளர்களைப் பற்றிய அபிப்ராயத்தை அறிய முயல்வார். ஏனெனில் அதுவரை அவர்கள் வீட்டினுள் அடக்கி வைத்திருந்த அழுத்தத்தை வெளிப்படுத்த அப்போது தயாராக இருப்பார்கள். பிக்பாஸ் இது போன்ற வாய்ப்புகளை கச்சிதமாகப் பயன்படுத்திக் கொள்ள தயாராக இருப்பார்.

துணிச்சலானவர்கள் வெளிப்படையாகத் தங்களின் அபிப்ராயங்களைச் சொல்லி விடுவார்கள். சிலர் அப்போதும் மென்று முழுங்கி விடுவார். வேறு சிலர், அப்போது தயங்கி விட்டு வெளியே சென்று நேர்காணல்களில் வெளிப்படையாகப் பேசுவார்கள். (வேல்முருகனின் பேட்டிகள் ஓர் உதாரணம்).

இந்த வகையில் சமீபத்தில் வெளியேறிய சுச்சியின் வாயையும் கமல் கிளறினார். சுச்சி ‘பட்’டென்று போட்டு உடைக்கக்கூடியவர் என்பதால் நல்ல தீனி கிடைக்கும் என்பது நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களுக்குத் தெரியும். அது உண்மையாயிற்று. ஒவ்வொரு போட்டியாளரையும் பற்றி நறுக்குத் தெறித்தாற் போல தன் வெளிப்படையான அபிப்ராயங்களைச் சொன்னார். அவை பெரும்பாலும் துல்லியமாகவே இருந்தது.

பிக்பாஸ் – கமல், சுச்சி

அவற்றில் பலவற்றுடன் பார்வையாளர்கள் உடன்பட்டிருக்கலாம். சிலவற்றில் மாறுபாடு கொண்டிருக்கலாம். இது சுச்சியின் தரப்பிலான பார்வை. மட்டுமல்லாமல் அவர் பிக்பாஸ் வீட்டிலும் சரி, வெளியேறும் சமயத்திலும் சரி, சமநிலையான மனதுடன் இருந்தது போல் தெரியவில்லை.

சுச்சி வெளியிட்ட அபிப்ராயங்களில் எத்தனை சதவிகிதம் சரியானது என்பதை இந்தக் கட்டுரையில் அலச முயல்வோம்.

அதற்கு முன் – ரியோ கேங் தங்களின் குழுவின் பெயருக்கு ‘வேல் பிரதர்ஸ்’ என்று பெயர் சூட்டி அதை கேமராக்களின் முன்பு வெளிப்படையாகவே காண்பித்துக் கொள்கிறார்கள் என்றார் சுச்சி. இது தொடர்பான காட்சிகள் பார்வையாளர்களுக்கு காட்டப்பட்டது போல் தெரியவில்லை. ஏன் இந்த பாரபட்சம்?

‘சேது’ திரைப்படத்தில் ‘சீயான்’ என்பதற்கு பலர் அர்த்தம் தேடுவது போல, இந்த ‘வேல் பிரதர்ஸ்’ எதைக் குறிக்கிறது என்று சமூகவலைத்தளங்களில் ஆராய்ச்சிகள் நடக்கின்றன. வேல்முருகனின் நினைவாக இந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது என்று காமெடியாக சொல்கிறது ஒரு தரப்பு. ‘வாயை மூடு வேலு’ என்று இருக்கும் போதெல்லாம் அவரை அதட்டி விட்டு, அவர் சென்ற பிறகு நினைவு கொண்டாடுவது என்பது அபத்தம். அர்ச்சனா குழுவிற்கு வேல்முருகன் மீது அத்தனை பாசம் எல்லாம் இல்லை. எனவே இந்த யூகம் வெறும் நகைச்சுவைதான்.

திமிங்கலம் என்னும் பொருள் வரும்படி ‘whale’ என்று வைத்திருக்கிறார்களோ என்று சிலர் கேட்கிறார்கள். தெரியவில்லை. ரியோவும் சோமுவும் அர்ச்சனாவிற்கு ‘வேல் காவடி’ தூக்குவதால் அந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று ஒருவர் நகைச்சுவையாக கருத்து தெரிவித்திருக்கிறார்.

ஓகே. நிகழ்ச்சியின் போக்கில் இது தெரியவரலாம். இப்போது இதர போட்டியாளர்களைப் பற்றி சுச்சி சொன்ன கருத்துக்கள் (ஹைலைட் செய்யப்பட்டவை) சரியா என்று பார்ப்போம்.

சனம், அனிதா
சனம்: இனிமையான இதயம் உள்ளவர், தவறாக புரிந்து கொள்ளப்படுபவர், அழகான ஆன்மா, வீரமானவர். இவரை காமெடி பீஸாக நடத்துகிறார்கள். அதையும் தாண்டி தைரியமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.

இருக்கலாம். ஆரம்பத்தில் சனத்தைப் பற்றிய தவறான அபிப்ராயங்களே பார்வையாளர்களுக்கு கிடைத்தன. கவன ஈர்ப்பிற்காக மற்றவர்களின் விவகாரங்களில் அடிக்கடி மூக்கை நுழைப்பவர் என்பது மாதிரியான சித்திரம் கிடைத்தது. பாலாஜிக்கும் இவருக்கும் நடந்த ராவடிகள் தனியான கதை. ஆனால் இப்போது சனத்திடம் நிறைய மாற்றம் தெரிகிறது. எந்தக் குழுவிலும் இணையாமல் யார் துவண்டு போனாலும் தைரியம் சொல்கிறார். சமாதானப்படுத்துகிறார். எத்தனை சண்டையிட்டாலும் பாலாஜி மீது தனியான கரிசனம் காட்டுகிறார். தன் மீது ஏவப்படும் நகைச்சுவைகளுக்குப் பதிலடி தருகிறார்.

ரியோ: இவரை அதிகம் தெரிந்துகொள்ள வாய்ப்பு இருந்ததில்லை. ஆனால் இரண்டு வம்பு படுக்கைகள் இருக்கின்றன. நள்ளிரவிற்கு மேல் அத்தனை சதியாலாசனைகளும் அங்கு நடக்கும். கேமராவிற்கு ஒரு முகம், கேமராவுக்குப் பின் இன்னொரு முகம் என்று இருமுகம் கொண்டவர்.

அர்ச்சனா குழுவுடன் தன்னை முழுமையாக ஐக்கியப்படுத்திக் கொண்டவர், ரியோ. முதன்மையான செல்லப்பிள்ளை. ‘குரூப்பிஸம்’ இல்லை என்று பாவனையாக சொல்லிக் கொண்டே அதில் தீவிரமாக ஈடுபடுபவர். கேமரா கான்ஷியஸ் உள்ளவர் என்பது நிஷாவிற்கு ஆலோசனை சொல்லும் போது தெரியும். இருமுகம் கொண்டவராக நிச்சயம் இருக்கலாம்.

அர்ச்சனா: அதே டீம்தான். தொழிற்முறை சார்ந்து எங்களுக்குள் நல்ல உறவு இருந்தது. ஆனால் ஒரு தனிநபராக ஏமாற்றம் தந்தார். நான் சொன்ன சில தனிப்பட்ட தகவல்களைத் தவறாக பயன்படுத்திக் கொண்டார்.
அர்ச்சனா, நிஷா

நிச்சயம் இருக்கும். அர்ச்சனா ஒரு குழுவிற்கு தலைமையேற்று ஆதிக்கம் செலுத்தும் மனோபாவமுடையவர். இதற்காக சென்ட்டிமென்ட் மற்றும் கிச்சன் அதிகாரத்தை வலுவாகப் பயன்படுத்துபவர். சோமை அனிதாவிடமிருந்து பிரித்து ஏறத்தாழ கைப்பாவை போல வைத்திருப்பவர். ‘என் புள்ள மாதிரி’ என்று பாலாஜி குறித்து இவர் சொன்னது ஒரு சென்டிமென்ட் தந்திரம் மட்டுமே.

ரம்யா: அழகான நபர், சைலன்ட் கில்லர், தெளிவானவர், நிதானமுடையவர்.

பிக்பாஸ் வீட்டிலேயே குறைந்த அளவு புகார்களைச் சொல்ல முடியும் என்றால் அது ரம்யாதான். இயல்பான அழகோடு சமயோசிதமும் உள்ளவர். தனது புன்னகையின் மூலம் மழுப்பி குத்தலான வார்த்தைகளையும் புகார்களையும் சாமர்த்தியமாக சொல்லி விடுபவர். எந்தக் குழுவிலும் இல்லாமல் தப்பிப்பதே இவரது ப்ளஸ் பாயின்ட்.

ஷிவானி: இவரைப் பற்றி எனக்கு ஐடியாவே இல்லை. Antagonist. 99% தவறான அதிர்வுகளையே எனக்கு தந்து கொண்டிருந்தார். பாலாஜியுடன் நான் கொண்டிருந்த நட்பு அவருக்குப் பிடிக்கவில்லை.

இது நூறு சதவீதம் உண்மையான கருத்து. இயல்பிலேயே introvert ஆன ஷிவானி, அந்த வீட்டின் வலிமையான போட்டியாளரான பாலாஜியுடன் ஒரு வலுவான நட்பை இன்று வரை பேணி வருகிறார். அவரின் நிழலாகவே இயங்குகிறார். அதை காதல் என்று மற்றவர்கள் ஜாடையாக கிண்டலடித்தாலும் கண்டுகொள்வதில்லை. இந்த நட்பிற்கு இடையில் சுசித்ரா வந்ததை இவர் நிச்சயம் வெறுத்திருப்பார். பாலாஜிக்கு சுசித்ரா மீது அடிக்கடி கோபம் வந்ததற்கு ஷிவானியின் தூண்டுதலும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.

அனிதா: அற்புதமான மனுஷி. உண்மை ரேடார். பாலாஜி மற்றும் அனிதாவுடன் மட்டுமே எனக்கு செட் ஆகும் என்று வீட்டிற்குள் போகும் முன்பே கணித்திருந்தேன். அது உண்மையானது. அனிதாவின் நட்பை எனக்கு கிடைத்த சொத்து என்பேன்.
ஆரி

இதுவும் உண்மையான வெளிப்பாடாக இருக்கலாம். பாலாஜியும் சரி, அனிதாவும் சரி, தனக்குப் பட்ட கருத்துக்களை உடனே போட்டு உடைத்து விடுவார்கள். சுச்சியும் இதே மனோபாவம் கொண்டவர் என்பதால் அனிதாவை இவருக்குப் பிடித்திருக்கலாம். ஃப்ரெண்ட்ஷிப் band-ஐ திருப்பிக் கேட்டது கூட ‘அனிதா அதைக் கட்டவில்லையே’ என்கிற ஏமாற்றத்தில் எழுந்த தற்காலிக கோபமாக இருக்கலாம்.

ஆரி: நேர்மை ரேடார். இவர் மீது பெரிய மரியாதை உண்டு. சொல்வதையெல்லாம் காது கொடுத்து கேட்பார்.

இதுவும் உண்மையான கருத்தாக இருக்கலாம். அர்ச்சனா மற்றும் பாலாஜி ஆகிய இரு குழுக்களிலும் சேராதவர் ஆரி. சுச்சியின் நிலைமையும் ஏறத்தாழ அதேதான். எனவே தனித்து விடப்பட்டவர்கள் என்கிற ரீதியில் சுச்சியின் கருத்துக்களை ஆரி பரிவுடன் கேட்டிருக்க சாத்தியங்கள் அதிகம் உண்டு.

நிஷா: Completely fake. ரியோவுடனான பாசம் கூட பொய்யாக இருக்கலாம். விசுவாசம் அற்றதாக இருக்கலாம். வெவ்வேறு பாணியில் சாமர்த்தியம் காட்டி விளையாடுகிறார்.

இந்தக் கருத்தில் எத்தனை சதவிகிதம் உண்மை இருக்கிறது என்று தெரியவில்லை. அர்ச்சனாவின் வலது கையாக, கிச்சன் அதிகாரத்தை கைப்பற்றியதில் நிஷாவின் பங்கும் இருக்கிறது. ஆனால் ரியோவின் மீதான பாசம் பொய் என்பதை நம்ப முடியவில்லை. ஏனெனில் அப்படி நடித்தால் அவருக்குத்தான் அது பின்னடைவை ஏற்படுத்தும். நிஷாவின் செயல்பாடுகள் பல சமயங்களில் வெகுளித்தனமாகத்தான் தெரிகின்றன. ஆனால் நாம் அறியாத பக்கங்களும் இருக்கக்கூடும்.

சோம்: நல்ல மனிதன். ஆனால் கைப்பாவை என்பது இவருக்கு கச்சிதமாகப் பொருந்தும். இன்னமும் வளராமல் தேங்கியிருக்கிறார். இவரை கேப்டனாக்கி பயன்படுத்திக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
பாலா, சுசித்ரா

இதுவும் உண்மையான கருத்தாக தெரிகிறது. சோம் தனது தனித்தன்மையை இதுவரை வெளிப்படுத்தவில்லை. அனிதாவிடம் முதலில் நட்பு கொண்டு பிறகு அவரைச் சமாதானப்படுத்துவதிலேயே அதிக நேரத்தை செலவழித்தார். பிறகு அங்கிருந்து விலகி அர்ச்சனாவின் குழுவில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொண்டார். அர்ச்சனாவின் சீண்டல்களையும் அவமதிப்புகளையும் பல சமயங்களில் மென்று விழுங்கி விடுகிறார். மிக அபூர்வமாகத்தான் கோபம் வருகிறது. அந்தக் குழுவிலிருந்து விலகினால் ஒரே நாளில் ஆள் காலி.

பாலாஜி: என்னோட Closest associate. Crime partner. எல்லாவற்றிலும் பங்குதாரர். இவர் வெற்றி பெறுவார் என்று நம்புகிறேன்.

இதுவும் சரியான கருத்து. உடல் பலத்திலும் சரி, சாதுர்யத்திலும் சரி, பாலாஜி வலிமையானவர். ஒரு உறவை எங்கே நிறுத்த வேண்டும் என்பது இவருக்கு நன்கு தெரிந்திருக்கிறது. தவறு செய்தாலும் அதை சாமர்த்தியமாக மழுப்பத் தெரிந்திருக்கிறது. இந்த சீசனின் வலிமையான போட்டியாளர். இறுதி வரை தாக்குப் பிடிக்கக்கூடியவர். டைட்டிலை வென்றாலும் ஆச்சர்யமில்லை.

ரமேஷ்: சோம்பேறி, மேற்பார்வை செய்வதில் மட்டுமே ஆர்வமுள்ளவர். Highly pampered. வேல் பிரதர்ஸ் ஆதரவு உள்ளவர். ஒருமுறை அணியில் வர மாட்டேன் என்றதற்கு ‘வெளில வா பார்த்துக்கறேன்’ என்று மிரட்டினார். கொஞ்சம் அச்சுறுத்தும் வகையில் இருந்தது.

மிரட்டல் காட்சியை நாம் பார்க்கவில்லை. அதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. எனவே மற்ற கருத்துக்கள் உண்மைதான். எளிமையான பின்னணியிலிருந்து கிளம்பி பிறகு உயர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் ரமேஷ் சொகுசாகவே வளர்ந்தவர், கடுமையான வேலைகளுக்குப் பழக்கமில்லாதவர் என்பது நன்கு தெரிகிறது. நட்பு என்கிற பெயரில் நிஷாவை அடிமையாகவே நடத்துகிறார். தனது செல்வாக்கு பின்னணி குறித்த மேட்டிமைத்தனத்தினால் அது சுச்சியிடம் மிரட்டலாக வெளிப்பட்டிருக்கக்கூடும்.

சம்யுக்தா
சம்யுக்தா: நிறைய ஏமாற்றமடைந்தேன். துரோகம் செய்யப்பட்டது போல் உணர்ந்தேன். ஒருமுறை நீண்ட நேரம் செலவழித்து நிபந்தனையற்ற மன்னிப்பைக் கோரினாலும் குத்தலாகவே பேசினார். ‘சிடுமூஞ்சி மேக்ஸ்’ என்கிற பட்டத்தை தந்தார். இதை அவராகவே என்னிடம் சொன்னார்.

அர்ச்சனாவைப் போலவே சம்யுக்தாவிடம் தொழில்முறையாக பழகி, பின்பு தனிநபராக நெருங்கிய போது இன்னொரு முகத்தை சுச்சி அறிய நேர்ந்திருக்கலாம். பொதுவாக ஒரே துறையில் பணியாற்றும் பெண்களிடம் ரகசிய விரோதம் தன்னிச்சையாக வளர்ந்து விடும். ஆனால் ‘சிடுமூஞ்சி மேக்ஸ்’ என்று சம்யுக்தா சொன்னது, அனிதாவைப் பற்றிதான். இதை கமலும் சூசகமாக உணர்த்த முயன்றார். ஆனால் இது தனக்கானது என்று எப்படி சுச்சி புரிந்து கொண்டார் என்று தெரியவில்லை. மற்றபடி சம்யுக்தாவும் தந்திரமான மனோபாவமுடையவர் என்பதை உணர முடிகிறது.

**

இவை தவிர பிக்பாஸ் வீட்டிலுள்ள குழுக்களைப் பற்றி கமல் விசாரித்த போது சுச்சியிடமிருந்து கிடைத்த தகவல்கள்:

‘வேல் பிரதர்ஸ்’ என்கிற குழுவில் அர்ச்சனா, ரியோ, ரமேஷ், சோம், மற்றும் நிஷா இருக்கிறார்கள். கேபி அவ்வப்போது வந்து செல்வார். ஆரி, சனம், அனிதா மற்றும் நான் ஆகியோர் எதிலும் இணையாமல் தனிப்படையாக இருந்தோம்.

இன்னொரு குழுவும் இருந்தது. பாலாஜி, ஆஜீத் மற்றும் சம்யுக்தா. என் தலையில் ஏதாவது நுழைக்க விரும்பினால் அதை பாலாஜி மூலமாக செய்வார்கள். பாலாஜி சொல்வது என்னை பாதிக்கும் என்பது அவர்களுக்கு நன்றாகத் தெரியும். பின்னால் என்னை நிறைய கேலி செய்திருக்கிறார்கள்.

இவையெல்லாம் உண்மை. பார்வையாளர்களுக்கே தெரிந்ததுதான். ‘சுச்சி கிட்ட ஜாக்கிரதையா இரு’ என்று சாம் ஒரு முறை பாலாஜியை எச்சரித்தது நினைவிருக்கலாம். தன்னிடமிருந்து பாலாஜியை சுச்சி அபகரித்து விடுவாரோ என்று ஷிவானி அஞ்சுவது போலவே வேறு கோணத்தில் சம்யுக்தாவும் அஞ்சியிருக்கலாம். ஆகவே இந்தப் பிரிவினைவாத யுக்தியை நிகழ்த்தியிருக்கலாம். ஆனால் சுச்சியும் பாலாஜியின் குழுவில்தான் இணைய முயன்று நிராகரிக்கப்பட்டார் என்பதால் இந்த விமர்சனங்கள் அவருக்கும் பொருந்தும்.

ரம்யா

ரம்யா?

எது பொருத்தமாக இருக்கிறதோ, அந்த அணியில் இருப்பார். ஆனால் பொதுவாக பாலாஜி அணியில் இருக்கிறவர்.

ரம்யா ஒரு விலாங்கு மீன். எந்தச் சூழலில் எங்கு இருக்க வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது. எந்தக் குழுவோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாமல் அதே சமயத்தில் எந்தப் பக்கம் இருந்தால் நன்று என்கிற தந்திரம் அறிந்தவர். அதனால்தான் அர்ச்சனா மற்றும் பாலாஜி குழுவிடமிருந்து விலகி இருக்கிறார். அதே சமயத்தில் முழுவதுமாக விலகவில்லை.

கூட்டி கழித்துப் பார்க்கும் போது சுசித்ரா வெளியிட்ட அபிப்ராயங்கள் பெரும்பாலும் துல்லியமானவையாகவே தெரிகிறது. "இந்த நிகழ்ச்சியை எனக்கு ரொம்ப பிடிக்கும். Fan girl-ஆகத்தான் உள்ளே போனேன். ஆனா போன ரெண்டாவது நாள்லயே அவங்களோட உண்மையான முகங்கள் எனக்குத் தெரிய ஆரம்பிச்சது" என்றார். அது உண்மைதான்.

பிக்பாஸ் வீட்டில் சுசித்ராவிற்கு கிடைத்த இந்த அனுபவங்கள் வெளியுலக வாழ்க்கையைச் சமாளிக்கும் திறனை அவருக்குத் தரும் என்று நம்புவோம்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/analyzing-suchitras-take-on-bigg-boss-tamil-season-4-contestants

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக