Ad

வியாழன், 26 நவம்பர், 2020

``ஏன் பிக்பாஸ்... எங்களைப் பார்த்தா அவ்ளோ மொக்கையாவா தெரியுது!'' பிக்பாஸ் - நாள் 52

மைசூர் போண்டாவிற்குள் மைசூரைத் தேடுவது எத்தனை அபத்தமோ, அப்படியே விஜய் டிவி ப்ரமோவைப் பார்த்து விட்டு நிகழ்ச்சிக்குள் அதைத் தேடுவதும் அபத்தம். வசீகரமாக ஒட்டி வெட்டி ஜித்து வேலை செய்திருப்பார்கள். ப்ரமோவில் ரமேஷ் தடுமாறுவதைப் பார்த்தவுடன் "ஆஹா... ஸ்வப்னா புத்திசாலி... 'ராஜா வீட்டு கன்னுக்குட்டி’யை வெளியே அனுப்பிடும் போல" என்று பார்த்தால் நிகழ்ச்சிக்குள் வேறு ட்விஸ்ட் நடந்தது.

ஏறத்தாழ ரமேஷ் – ரம்யா உரையாடலில் நடந்ததுதான், கேபி-சோம் உரையாடலிலும் நடந்தது. இன்னமும் சொல்லப்போனால் சோமுவும் கேபியும் பேசி வைத்துக் கொண்டது போலவே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்தார்கள். ஆனால் பிக்பாஸிற்கு என்ன காண்டோ?! ஸ்வப்னாவை பழிவாங்கி விட்டார்.

இதைப் போலவே ரியோ கத்திக் கொண்டிருந்த ‘ப்ரமோ’ காட்சியும் நிகழ்ச்சியில் வரவில்லை. நாளைக்கு வருமோ என்னவோ...

ஓகே... 52-ம் நாளில் என்ன நடந்தது?

பிக்பாஸ் ஒரு தீர்க்கதரிசிதான். இன்று மதியத்தில், பாலாஜி ‘சொடக்கு’ போட்ட விவகாரம்தான் ஒரு நீண்ண்ண்டடடட பஞ்சாயத்தைக் கிளப்பப் போகிறது என்பது அவருக்கு காலையிலேயே தெரிந்து விட்டது போல. எனவே ‘சொடக்கு மேலே சொடக்கு போடுது’ என்கிற பாடலை ஆருடம் போல காலையிலேயே போட்டு விட்டார்.

டீ போட்டுக் கொண்டிருந்த ரம்யா அணிந்திருந்த டீ ஷர்ட் இன்று நன்றாக இருந்தது. சுச்சி இல்லாத குறையைப் போக்கும் விதமாக தலைமுடியை விசிறி விசிறி ஆடினார் அனிதா.

பொதுவாக காலையில் எழுந்தவுடன் பெண்கள் உற்சாகமாக நடனமாடும் போது ஆண்கள் சோம்பேறிகளாக ஆங்காங்கே உலவிக் கொண்டிருப்பது ஆண் குலத்திற்கு அவமானம்.

பிக்பாஸ் நாள் 52

‘'வளர்ப்பு சரியில்லைன்னு சொல்றதில் தப்பில்லை’' என்று விடியாமூஞ்சியுடன் பாலாஜியிடம் சொல்லிக் கொண்டிருந்தார் சாம். அந்தக் கருத்தை பொதுவாக சொல்வது வேறு. ‘எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான், மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவராவதும்... தீயவராவதும் அன்னை வளர்க்கையிலே’ என்கிற பாடல் வரி கூட இருக்கிறது.

ஆனால் - ஒருவரை நோக்கி அப்படிச் சொல்லும் போது அது தவறாகி விடும். ஏனெனில் அது சம்பந்தப்பட்டவரின் பெற்றோரை அவமதிப்பது போல ஆகி விடுகிறது. அவர்கள் கஷ்டப்பட்டு புத்தி சொல்லி பல சிரமங்களுக்கு இடையில் பிள்ளையை ஆளாக்கியிருக்கலாம். ஆனால் சமூகத்தில் உள்ள கீழ்மைகளால் பிள்ளை ஒருவேளை பாதிக்கப்பட்டால் அதற்கு பெற்றோரை குறை சொல்வது தவறுதானே? ஒருவனை கெட்டவன் ஆக்குவதற்கு இந்தச் சமூகத்திற்கும் பெரிய பங்கிருக்கிறது.

''ஒரு பிரச்னை நடக்கும் போது அதைக் கலைத்து விடாம கருத்து சொல்லி இன்னமும் பெரிசாக்கறாரு” என்று ஆரியைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார் பாலாஜி. இதை சொல்ல அவருக்கு அருகதையில்லை. ரமேஷூம் ஆரியும் பேசிக் கொண்டிருந்த போது சம்பந்தமேயில்லாமல் உள்ளே வந்து, ஆரி தன்னிடம் தனிப்பட்ட முறையில் தகவலை சபையில் போட்டுக் கொடுத்து பிரச்னையை பெரிதாக்கிய பாலாஜி இதைச் சொல்லவே கூடாது.

‘சங்கீத ஸ்வரங்கள் ஏழே கணக்கே’ என்கிற மம்முட்டி – பானுப்பிரியா பாடல் கதையாக ‘கால் சென்டர் டாஸ்க்’ மிக நீண்டதாக இழுத்துக் கொண்டே போவதால், அதன் விதிமுறையில் சில மாற்றங்களை இன்று கொண்டு வந்தார் பிக்பாஸ். ‘தில்லாலங்கடித்தனம் பண்ணாம ஆடுங்க’ என்றும் உபதேசித்தார்.

பிக்பாஸ் நாள் 52

தன்னுடைய உடல்மொழி தவறாக புரிந்து கொள்ளப்படுவது உள்ளிட்ட சில விஷயங்களை கேப்டன் ரியோவிடம் அனத்திக் கொண்டிருந்தார் ஆரி. (தேவையில்லாத ஆணி!). காபி அருந்திக் கொண்டே அத்தனையையும் கேட்ட ரியோ, கடைசியில் ‘அதான் நேத்தே முடிஞ்சிடுச்சே. ப்ரோ... ஒருத்தருக்கு ஒருத்தர் சாரி கேட்டுட்டீங்களே’ என்று சொல்லி விட்டு கூலாக விலகிச் சென்றார். (அடப்பாவி! அப்ப காப்பி குடிக்கற வரைக்கும் டைம்பாஸூக்குத்தான் கதை கேட்டுட்டு இருந்தீங்களா!).

'‘அடுத்த ரெண்டு வாரத்திற்கு நீங்கதான் நாமினேஷன் ஆவப் போறீங்க’' என்று வழக்கம் போல் சனத்தை சீண்டிக் கொண்டிருந்தார் பாலாஜி. (இந்த டாம் அண்ட் ஜெர்ரி டிவிடி தேயத் தேய ஓடும் போல.)

சூப்பர்வைசர் வருவதைப் பார்த்து அரை தூக்கத்திலிருந்து அலறி எழும் தொழிலாளி மாதிரி கேப்டன் ரியோ வருவதைப் பார்த்து படுக்கையிலிருந்து எழுந்து விட்டார் நிஷா. “நான் தூங்கலை சார்.. .படுத்தாதீங்க... சார்’ என்று சிணுங்கினார். ‘இருடா... அடுத்த முறை நீ கேப்டன் ஆக விடாம நானே தடுக்கறேன்’ என்று ரியோ போய் விட்ட பிறகு ஜாலியாக சூளுரைத்தார் நிஷா. (வேற பொய் சொல்லுங்க தாயி. நம்ப ட்ரை பண்றோம்!).

கால்சென்டர் டாஸ்க் மறுபடியும் ஆரம்பித்தது. கேபி Vs சோம். முன்பே சொன்னபடி இது முன்பே பேசி வைத்துக் கொண்டு செய்யப்பட்ட விளையாட்டு போலவே இருந்தது.

‘உன் கண்ணு ரொம்ப அழகா... மூக்கு ரொம்ப அழகா’ என்று வழிசலாக பாட்டு பாடிய சோம், வீட்டு நாய்க்குட்டி, கேபியின் டான்ஸ் திறமை வெளிப்படாதது போன்றவற்றைப் பற்றி பேசி நேரம் கடத்தினார். (சோம் மட்டும் ஏதோ ஜாக்கிசான் படத்தை நமக்கு காட்டி சாகசம் செய்தாரா என்ன?! அர்ச்சனாவின் நிழலிலேயே திரியும் இவர் உண்மையிலே மார்ஷியல் ஆர்ட்ஸ் ஆசாமியா என்று சந்தேகமாக இருக்கிறது). பிறகு இருவரும் பரஸ்பரம் இளித்துக் கொண்டு உரையாடலை முடித்தனர். ‘தெரிஞ்சேதான் விட்டுக் கொடுத்தேன்’ என்று வெளிப்படையாகவே சொன்னார் கேபி. (பிக்பாஸ் இதற்கு ஆட்சேபம் தெரிவிக்கவில்லை).

பிக்பாஸ் நாள் 52

பாலாஜி தன்னைக் கண்டு கொள்ளாததாலும் ஷிவானி மீது மட்டுமே ஃபோகஸ் செய்வதாலும் மனம் வெறுத்துப் போன கேபி, இப்போது பாலாஜியை வெறுப்பேற்றுவதற்காக எதிர் டீமில் தன்னை ஐக்கியப்படுத்திக் கொள்ளும் கடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் போல. அதன் அடையாளம்தான் சோமை ஜெயிக்க வைத்தது. இதன் மூலம் கேபி நாமினேஷில் வருவார். என்றாலும் மக்கள் காப்பாற்றி விடுவார்கள் என்று அவர் நம்புகிறார் போல.

சோம் வழிந்த அத்தனை அசட்டுத்தனத்தைக் கூட மன்னித்து விடலாம். ஆனால் ‘பல்லின் இடையே கேப் இருப்பதால்தான் உன் பேர் கேபி’ என்று அடித்த மகா மொக்கை ஜோக்கை மட்டும் மன்னிக்கவே முடியாது.

‘'நான் சாமர்த்தியமா பேசி கேபியை போன் வைக்க வைச்சிட்டேன்'’ என்று பெருமிதமாக வெளியில் வந்து கூறினார் சோம். இன்னொரு பக்கம், ‘நான்தான் விட்டுக்கொடுத்தேன்’ என்று தோளைக் குலுக்கிக் கொண்டே அலட்சியமாக கூறினார் கேபி. (நல்லா இருக்கு உங்க டிராமா!). சோமின் இந்த லட்சணத்திற்கு வாழ்த்துகள் வேறு கூறி அசிங்கப்பட்டார் சனம்.

‘கேபி பண்ணதைப் பார்த்தீங்களா... லவ் பெட்டோட கூட்டணி வேலை இது. அவங்களுக்குள்ள ஒருமுறை கூட இதுவரை நாமினேட் பண்ணாங்களா... பார்த்தீங்களா’ என்று வெளியில் வந்து காண்டானார் பாலாஜி. (அது சரிங்க சார்... நீங்க ஒருமுறையாவது ஷிவானியை நாமினேட் செய்திருக்கீங்களா?!)

பிக்பாஸ் நாள் 52

பாலாஜி, சனம், அனிதா ஆகியோர் கேபி செய்த தந்திரத்தைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். சனம் அளித்த விளக்கத்திற்கு ‘'எனக்கு இதெல்லாம் தெரியும்... ஐ நோ...’' என்று அனிதா சலித்துக் கொள்ள ‘சும்மா சும்மா... ஐ நோ-ன்னு சொல்லாத. இதை ஏற்கெனவே ஒரு படத்துல ரகுவரன் வேற வேற மாடுலேஷன்ல சொல்லிட்டாரு' என்பது போல சனம் எரிச்சல் காட்ட, கோபத்துடன் எழுந்து போனார் அனிதா. பாலாஜியோ, சனமோ இதைப் பற்றி அலட்டிக் கொள்ளாமல் தங்களின் பேச்சைத் தொடர்ந்தார்கள்.

போன வேகத்திலேயே திரும்பி வந்த அனிதா, ‘'சாரி’' என்றார். அவருக்கு இப்போது ஆதரவு பாலாஜியும் சனமும்தான். அவர்களையும் பகைத்துக் கொண்டு யாரிடம் பேசுவது என்கிற பயம் உள்ளூற வந்திருக்க வேண்டும். எனவே இப்படி இறங்கி வந்தார். இப்போது சோமுவுடன் அவருக்கு நல்ல உறவு ஒருவேளை இருந்திருந்தால் அங்கு சென்று ஒரு மணி நேரத்திற்கு மூக்கைச் சிந்தியிருப்பார்.

‘'மொதல்ல ரெட் காயின் போகுது... பின்னாடியே பிளாக் காயினும் போகுதே'’ என்கிற 'சந்திரமுகி' திரைப்பட காமெடி மாதிரி ஷிவானியின் பின்னால் சென்றார் பாலாஜி. “நீங்க உங்க ஸ்ட்ராட்டஜில பிசியா இருங்க. நான் ஒண்ணும் உங்களை டிஸ்டர்ப் பண்ணவேயில்லையே'’ என்று சர்காஸ்டிக்காக சொன்னார் ஷிவானி. அவருக்கும் பாலாஜியை விட்டால் பேச ஆள் கிடையாது. எனவே அந்தக் கோபத்தை இப்படி அலட்சிய பாணியில் வெளிப்படுத்தினார். இந்த விளையாட்டில் பெண்கள் அனைவருமே கின்னஸ் சாதனை புரிந்தவர்கள்.

பிக்பாஸ் நாள் 52

பாலாஜி தனது ராஜதந்திர நடவடிக்கைகளில் பிஸியாகி விட்டதால், ‘முதல்வனே என்னைக் கண் பாராய், முந்தானைக் கொடியேற்ற நேரமில்லையா?’ என்று மனிஷா கொய்ராலா மாதிரி ஷிவானி பாடினாலும் தனது கெத்தை விட்டுக் கொடுக்காமல் பேசினார். இந்த வீட்டில் பாலாஜி மடங்கி ஒடுங்கி விழும் ஒரே இடம் அதுதான். பிறகு ‘சாரி’ என்று சமாதானக் கொடி காட்டினார் பாலாஜி. (இந்த ‘லவ் ஸ்டோரி’க்கு ஊடல் ஒண்ணுதான் குறைச்சல்..)

'‘தாங்கள் சாப்பாட்டை மிச்சம் பிடித்து தியாகம் செய்து அன்பு செலுத்தினாலும் இந்தக் கல்லுளி மங்கன் பாலாஜிக்கு புரியவேயில்லையே?” என்று அர்ச்சனா அனத்திக் கொண்டிருக்க அதற்கு கச்சிதமாக பக்கவாத்தியம் வாசித்தார் நிஷா. '‘பாலாஜிக்கும் நீங்க அதே அன்புதானே செலுத்தறீங்க.. அப்புறம் என்ன?’' என்று ஷிவானியும் தன்னிடம் வந்து கேட்டதாக சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. (10% ஷிவானியை நம்பலை என்று பாலாஜி சொல்லிக் கொண்டிருந்தது சரிதான் போல).

அப்புறம் நடந்ததுதான் ஒரு காமெடி. ''இந்த இடமெல்லாம் பாரு. எவ்ளோ குப்பை. பெருக்கவே மாட்றான்" என்று பாலாஜியை முன்னிட்டு சொல்லிக் கொண்டிருந்தார் அர்ச்சனா. இந்த வார கேப்டன் அவரின் செல்லப்பிள்ளைகளில் ஒருவரான ரியோதான். எனவே இதை அவரால் சத்தமாக சொல்ல முடியவில்லை. இதுவே வேல்முருகனாக இருநதிருந்தால் அவர் ஹேண்டில் செய்யும் விதமே இப்போது வேறு மாதிரியாக இருந்திருக்கும். இதற்கான உதாரணக் காட்சியை முன்பே பார்த்தோம்.

கால் சென்டர் டாஸ்க். இதை ரமேஷ் எப்படி சமாளிக்கப் போகிறாரோ... என்று நேற்றே எழுதியிருந்தேன். ரம்யாவின் கிடுக்கிப்பிடி கேள்விகளால் பல இடங்களில் தடுமாறினாலும், பரவாயில்லை… ஒரளவிற்கு சமாளித்து விட்டார். அதிலும் பெண் சாணக்கியரான ரம்யாவிடம் தப்பித்து அவர் வெளியே வந்தது ஒரு சாதனைதான்.

‘'என்ன காரணம் சொல்லி உங்க டீம்ல இருப்பவரை நாமினேட் பண்ணுவீங்க?'’ என்று வளைத்து வளைத்து புன்னகையுடன் கேட்டார் ரம்யா. ‘'வழக்கமா கால் சென்டர்ல இருக்கறவங்க குரல் ஸ்வீட்டா இருக்கும். உங்க குரல் ஏன் கர கரன்னு காராச்சேவு மாதிரி இருக்கு?’' என்று ஆரம்பத்திலேயே பவுண்டரி அடித்தார் ஸ்வப்னா... ஸாரி ரம்யா...
பிக்பாஸ் நாள் 52
நாமினேஷன் காரணங்களில், ‘'ராஜா வீட்டு கன்னுக்குட்டியா இருக்காங்க'’ என்ற பேச்சு வந்த போது நமக்குமே முதலில் ரமேஷின் நினைவுதான் வந்தது. (ஆனால் சோமைக் குறித்து ஆரி சொன்ன கிண்டல் அது.).

இந்த டாஸ்க் உரையாடலின் போது ரம்யா அந்த விஷயத்தைக் கிளப்ப, “ஆமாம்... என்னைப் பத்திதான் சொன்னது போல் இருந்தது” என்று தானே இப்போது வாக்குமூலம் தந்து விட்டார் ரமேஷ். அதாவது அவரிடமிருந்து வாக்குமூலத்தை வாங்கினார் வழக்கறிஞர் ரம்யா.

‘'தனக்கு துணி துவைத்து தருகிறார்கள். தலைவலி என்றால் மசாஜ் செய்கிறார்கள்... என்னை ராஜா மாதிரி பார்த்துக் கொள்கிறார்கள். இதையெல்லாம் பார்த்து பொறாமை பிடித்தவர்கள் எவராவது புறணி கூறியிருப்பார்கள்'’ என்று இன்னொரு வாக்குமூலத்தை தானே உளறி மாட்டினார் ரமேஷ். ஆக... ஆரி சொன்ன புகார் உண்மை என்பது ரமேஷின் வாக்குமூலத்தில் வெளியே வந்து விட்டது. ஜெயிலுக்குப் போன தாதா மாதிரி ‘உள்ளே’ ராஜவாழ்க்கையை ரமேஷ் வாழ்கிறார் போல.

'‘உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னே தெரியலைங்க. நீங்களே ஒரு ஐடியா கொடுங்க’' என்கிற 'பாஸ் என்கிற பாஸ்கரன்' மாதிரி ஒரு கட்டத்தில் ரம்யா அசடு வழிய, அந்தக் கொஞ்சலில் மயங்கி ‘அப்படிக் கேளு செல்லம்’ என்று விட்டுக் கொடுத்து போனை வைத்து விட்டார் ரமேஷ். ‘ஹே...’ என்று தனது டிரேட் மார்க் புன்னகையுடன் இருந்த ரம்யாவின் மகிழ்ச்சி அதிக நேரம் நீடிக்கவில்லை. '‘விதிமுறைகளை மீறி விட்டதால் நீங்கள் இந்த வாரம் நாமினேட் ஆகி விட்டீர்கள்’' என்று பிக்பாஸ் சொன்னதும் ரம்யாவிற்கு ‘புஸ்’ என்று ஆகி விட்டது. அப்போதும் புன்னகையை கைவிடாததுதான் அவரின் கெத்து. ரமேஷிற்கு இப்போது 5 நட்சத்திரம் என்பது கூடுதல் லாபம்.

ரமேஷிற்கும் ரம்யாவிற்கும் நடந்த உரையாடலை இந்தியா –பாகிஸ்தான் மேட்ச் போல பரபரப்பாக பார்த்துக் கொண்டிருந்தது அர்ச்சனா குழு. ரமேஷ் சரியாகப் பேசும் போது ‘சிக்ஸர் அடித்த’ மகிழ்ச்சியை வெளிப்படுத்திய இவர்கள், அவர் தடுமாறும் போது ‘கேட்ச் பிடிக்கப் போகும் ஃபீல்டருக்கு சொல்வது மாதிரி '‘பாத்துடா... விட்றாத'’ என்று பதற்றம் ஆனார்கள்.

இதில் ரியோவின் பங்குதான் அதிக காமெடியையும் கடுப்பையும் தந்தது. இந்த டாஸ்க் இப்படித்தான் என்று அவருக்குத் தெரியும். டாஸ்க் அறிவிப்பை படித்தவரே அவர்தான். என்றாலும் தன்னைப் பற்றிய விஷயம் வரும்போது கண்கலங்கி டென்ஷன் ஆகி ‘டிரிக்கர் பண்றா’ என்று ரம்யா மீது கோபம் வந்து எழுந்து செல்லத் தயார் ஆனார். ஆனால் ரம்யா வெளியில் வந்தவுடன், அப்படியே முகத்தை மாற்றிக் கொண்டு ‘'சூப்பரா பண்ணீங்க’' என்று இரட்டை வேடத்தில் பின்னியெடுத்தார்.

ஆக... பிக்பாஸின் சதியால் ரம்யாவும் இந்த வாரம் எவிக்ஷன் பிராஸஸ் பட்டியலில் இணைகிறார். (ஆர்மிக்காரவுக தீயா வேலை செய்யத் தயார் ஆகுங்க!). அர்ச்சனா கழுத்தில் இருந்த போர்டு ரம்யாவின் கழுத்திற்கு மாறியது.

சனம் மற்றும் அனிதா அமர்ந்திருக்க ஆரி மீண்டும் பழைய புராணத்தைப் பாட ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் பாலாஜியும் வர அந்த நெடும் பஞ்சாயத்து ஆரம்பித்தது. '‘நான் ஒரு மொள்ளமாறிங்க...”, “ஐயா.. நான் ஒரு முடிச்சவிக்கிங்க” என்று ஒரு நகைச்சுவைக் காட்சியில் கவுண்டமணியும், செந்திலும் மாற்றி மாற்றி தங்கள் மீது பழிபோட்டுக் கொள்வது போல் ‘நீதான் ஹீரோ... நான்தான் வில்லன்’ என்று மாற்றி மாற்றிச் சொல்லி பாலாஜியும் ஆரியும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள்.

பிக்பாஸ் நாள் 52

ஆரி அடிப்படையில் புத்திசாலி. எனில் பாலாஜியின் தூண்டுதலுக்கும் தனது கோபத்திற்கும் தானே இரையாகி விடக்கூடாது என்கிற ஜாக்கிரதையுணர்ச்சி அவருக்குள் இருக்க வேண்டும். இந்த விளையாட்டு அப்படி. ஆனால் அவரோ இன்னமும் போன சீஸனில் நடந்த பஞ்சாயத்தையெல்லாம் தூசு தட்டி விவாதிக்கும் போது ‘இது எப்ப நடந்தது?’ என்று நாம் மண்டையைக் குழப்பிக் கொள்ள வேண்டியிருக்கிறது. இதற்கு நடுவில் பஞ்சாயத்தில் நடுவராக செயல்பட்ட சனத்திற்கும் ஆரிக்கும் இடையிலும் வேறு முட்டிக் கொண்டது.

இந்த இடத்தில் ஒரு பழைய நகைச்சுவை நினைவிற்கு வருகிறது. சகித்துக் கொண்டு படித்து விடுங்கள். நடிகர் மயில்சாமியும் இசைக்குழு நடத்தும் லட்சுமணனும் புகழ்பெறுவதற்கு முந்தைய காலத்தில் நகைச்சுவை காசெட் வெளியிட்டார்கள். அதில் வந்த ஒரு நகைச்சுவை இது.

நபர் 1: சார்.. உங்களை எங்கயோ பார்த்த மாதிரி இருக்கு.. நீங்க காந்தி நகர்லயா இருக்கீங்க?”

நபர் 2: “ஆமாங்க. காந்தி நகர்தான். விவேகானந்தர் தெருல இருக்கேன்”

நபர் 1: “அட! ஆச்சரியமா இருக்கே.. நானும் விவேகானந்தர் தெருலதான்… டோர் நெம்பர் 18”

நபர் 2: ‘அடடே!.. எனக்கும் ஆச்சரியமா இருக்கு.. நானும் டோர் நெம்பர் 18-ல்தான் குடியிருக்கேன்… நீங்க எத்தனாவது மாடி?”

நபர் 1: “நான் மூணாவது மாடில இருக்கேம்ப்பா... ஃபிளாட் நெம்பர் 4”

நபர் 2: ‘அட! நானும் அதே நாலாம் நெம்பர் ஃபிளாட்லதான் குடியிருக்கேன்”

இவர்களைப் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்து மண்டை குழம்பிய ஓர் ஆசாமி, அருகில் சென்று இவர்களை விசாரித்தார். ‘சார்.. .நீங்க ரெண்டு பேரும் என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க.. ஒண்ணுமே புரியலை”.

அதற்கு நபர் 1 எரிச்சலுடன் சொன்னது. “யோவ்... அப்பனும் புள்ளயும் பொழுது போகாம எதையோ பேசிட்டு இருக்கோம். நீ ஏன்யா நடுவுல வந்து டிஸ்டர்ப் பண்றே?”

இந்த நகைச்சுவையை வாசித்து விட்டீர்களா? மன்னிக்கவும். பாலாஜி மற்றும் ஆரிக்கும் இடையில் நடந்த இந்த ‘கச்சா முச்சா’ உரையாடல் இப்படித்தான் இருந்தது. பொழுது போகாமல் எதையோ பேசிக் கொண்டிருக்க வேண்டுமே என்று ‘நான் ஹீரோ... நீ வில்லன்... நீ கைய இப்படி வெச்சு சொடக்கு போட்டே” என்று வெட்டியாக இழுத்துக் கொண்டிருந்தார்கள். இதற்கு சனம் என்கிற நடுவர் வேறு. ரம்யா உள்ளிட்ட பார்வையாளர்கள் வேறு.

கூத்தில் கோமாளி மாதிரி உபநடுவராக இருந்த அனிதாவும் இந்தப் பஞ்சாயத்தில் சிக்கி சற்று நேரம் அனத்திக் கொண்டிருந்தார்.

சந்தானம் ஒரு நகைச்சுவையில் சொல்வது மாதிரி “ஏன் பிக்பாஸ்... எங்களைப் பார்த்தா அவ்ளோ மொக்கையாவா தெரியுது?’ என்றே கேட்கத் தோன்றுகிறது.

இந்த வெட்டி பஞ்சாயத்தைப் பற்றி வேறு என்னத்தை எழுதறது?! அவ்வளவுதான். கால்சென்டர் டாஸ்க்கில் ஷிவானி பேசும் போதாவது ஏதேனும் நல்ல காமெடி தேறுகிறதா என்று பார்ப்போம்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/call-centre-task-continues-on-bigg-boss-tamil-day-52

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக