Ad

ஞாயிறு, 22 நவம்பர், 2020

தப்புன்னா தட்டிக்கேளுங்க ஆண்டவரே... சுச்சிக்கு நடந்தது நியாயமா?! பிக்பாஸ் – நாள் 49

நேற்றைய யூகங்களின் படி சுச்சி இன்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். உள்ளே இருந்த போது நமக்கு எரிச்சலையும் கேலிச்சிரிப்பையும் உண்டாக்கிய சுச்சி, வெளியே செல்லும் போது பரிதாபத்தை ஏற்படுத்தினார் என்பதுதான் உண்மை. ஆரி சொன்னபடி, சுச்சிக்கு இன்னமும் சற்று அவகாசம் தரப்பட்டிருக்கலாம்.

உள்ளே வருவதற்கு முன்பே, தனிப்பட்ட சில காரணங்களால் சுச்சி மனஅழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. எனில் அவர் ஏன் பிக்பாஸிற்கு வர வேண்டும், அது நல்லதா, கெட்டதா? பிக்பாஸ் வீட்டிற்குள் வர அவர் முடிவு செய்தது. நெருப்புடன் விளையாடுவதைப் போன்றது. அதில் ஜாக்கிரதையாக விளையாடினால் குளிர்காயலாம். ஆனால், உணர்ச்சிமிகுதியில் அருகில் சென்று விட்டால் சுட்டு விடும். சுச்சிக்கு நேர்ந்தது இரண்டாவது வகை.

ஒரு கோணத்தில் சுச்சி இந்த விளையாட்டிற்குள் வந்ததும் நல்ல முடிவுதான். "நீ எதைக் கண்டு மிகவும் அஞ்சுகிறாயோ, அதனிடம் நெருங்கிச் சென்றால் அச்சம் விலகி விடும்” என்பது உளவியல் அடிப்படை. அந்த வகையில் வெளியுலக மனிதர்களினால் மனஅழுத்தத்துக்கு உள்ளான சுச்சி, அதிலிருந்து விலகி திசை மாற, இந்த விளையாட்டை ஒரு சவாலாக எடுத்துக் கொண்டு உள்ளே வந்திருக்கலாம்.

பிக்பாஸ் – நாள் 49

‘'இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடிக்கும்’' என்று மேடையில் உற்சாகமாக சொன்னவருக்கு இந்த விளையாட்டு இப்படித்தான் இருக்கப் போகிறது என்பதை யூகிக்க முடியாமல் போனதன் ரகசியம் புரியவில்லை. நாம் வெளியில் இருந்து பார்ப்பதற்கும், உள்ளே இருந்து பார்ப்பதற்கும் பிக்பாஸ் வீட்டில் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றனவா, பிக்பாஸ் வீடு என்ன அப்படியொரு மர்ம மாளிகையா, அதுவும் வெளியுலகத்தைப் போன்ற ஒரு ‘மினி’சமூகம்தானே?

சுச்சியைப் போன்ற சென்சிடிவ்வான மனிதர்கள் பிக்பாஸ் வீட்டில் தாக்குப் பிடிப்பது மிகச் சிரமம். இன்னொரு வகையில் அவரின் இந்தத் தோல்விக்கு அவரும் ஒரு காரணம். தீதும் நன்றும் பிறர் தர வாரா. அவரால் அர்ச்சனா குழுவை நெருங்க முடியவில்லை. பாலாஜி குழுவுடனும் பொருந்திப் போக முடியவில்லை. இரண்டிற்கும் இடையில் தத்தளித்தார். இப்படி தத்தளிக்கும் குழுவாக அனிதா, சனம், ஆரி ஆகியோரைச் சொல்ல முடியும். இவர்களில் குழு மனப்பான்மையைச் சமாளிக்கும் திறன் ஆரிக்கு மட்டுமே இருப்பதாகத் தோன்றுகிறது.

பிக்பாஸ் வீட்டில் தான் இருந்த தருணங்கள் தொடர்பான வீடியோவைப் பார்த்த சுச்சி, "பார்க்க அசிங்கமா பல்லி மாதிரி இருக்கேன்ல. மத்தவங்கலாம் அழகா இருக்காங்க. அதான் என்னை வெளியே அனுப்பிச்சுட்டாங்களோ" என்று சுயகேலியுடன் சொன்னது அவருக்குள் இருந்த தாழ்வுமனப்பான்மையைக் காட்டியது.

நிஷா முன்பு சொன்னது போல சமூகம்தான் ஒருவருக்குள் தாழ்வுமனப்பான்மையை ஊட்டுகிறது. சுச்சி குறிப்பிட்டது ஒருவகையில் அவரது தாழ்வு மனப்பான்மையைக் காட்டினாலும் இன்னொரு வகையில் அவர் சொன்னது கசப்பான உண்மையும் கூட. அது கூட அவரது வெளியேற்றத்திற்கு காரணமாக இருக்கலாம். வெறும் அழகுப் பதுமையாக விளங்கும் ஷிவானி போன்றவர்கள் அந்த வீட்டில் நீடிப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

பிக்பாஸ் – நாள் 49

‘எது அழகு... எது அசிங்கம்’ என்பது தொடர்பான பல கற்பிதங்கள் நம் மூளையில் அழுத்தமாக திணிக்கப்பட்டிருக்கின்றன. நுகர்வுக்கலாச்சாரம் இதை ஒரு வெறியாக வளர்த்து தன் வணிகத்தை அதிகப்படுத்திக் கொள்கிறது. சிகப்பழகு க்ரீம்கள் உதாரணம். நிறம், இனம், வர்க்கம் என்று பல்வேறு செயற்கையான பிரிவினைகளின் இடையில் நாம் வாழ்கிறோம்.

பாடும் திறமை நன்கு இருந்தும், புறத் தோற்றத்தில் சுமாராக இருந்த காரணத்தினால் ஒரு சிறுமி மறைவாக நிற்க வைக்கப்பட்டாள். அதற்குப் பதிலாக அழகான சிறுமி ஒருத்தி மேடையில் நின்று அந்தப் பாடலுக்கு வாயசைத்தாள். ஒலிம்பிக் போட்டியின் துவக்க விழா ஒன்றில் நிகழ்ந்த இந்தச் சம்பவம் பெரும் சர்ச்சையானது. சீனாவின் இந்த முறையற்ற செயலை உலகமே கண்டித்தது. சம்பிரதாயமாக இது போன்ற ‘அரசியல் சரித்தன்மைகள்’ அவ்வப்போது நடந்தாலும் உலகம் இன்னமும் புறஅழகிற்கே முக்கியம் தருகிறது என்பதுதான் நடைமுறை உண்மை. இயற்கையின் பார்வையில் எதுவுமே அசிங்கமில்லை என்பதை நாம் உணர நீண்டகாலம் ஆகலாம்.

ஓகே 49-வது நாளில் என்ன நடந்தது?

"ரியோ பாக்ஸிங் கிளவுஸை நிஷாவிற்கு ஏன் கொடுத்தார் என்று புரியவில்லை" என்று அனிதா சொல்ல ‘'தெரிஞ்சுதானே அவங்க பண்றாங்க'’ என்றார் சுச்சி. வலிமையான போட்டியாளருக்குத்தான் கிளவுஸ் தரப்பட்டிருக்க வேண்டும். இந்த வகையில் ரியோ ஆடியது போங்காட்டம். நிஷாவை அவர் வலிமையான போட்டியாளராக எண்ணுகிறார் என்றால் அந்த கிளவுஸே அதை நம்பாது. ஒருபக்கம் நிஷாவை அரவணைத்தாலும், இன்னொரு பக்கம் பல சமயங்களில் அவரை மலினப்படுத்தியிருக்கிறார் ரியோ. இன்னமும் கூட ‘குரூப்பிஸம் இல்லை’ என்று ரியோ பாவனை செய்வாராயின் அதை விடவும் அபத்தம் வேறு இருக்க முடியாது. நிஷாவிற்கு பாக்ஸிங் கையுறை தருவதின் மூலம் அவரே அதை நிரூபித்து விட்டார்.

கமல் அணிந்திருந்த ஆடை இன்றும் வித்தியாசமாக இருந்தது. ராணுவ அதிகாரியின் உடை போல. ஆனால் அவரைப் போன்றவர்கள் அணிந்தால்தான் உலகம் மதிப்பை ஏற்றிப் பார்க்கும். நாம் அணிந்தால் வேறு மாதிரி சொல்லி விடுவார்கள். தெருநாயும் துரத்தி வரும்.

பிக்பாஸ் – நாள் 49

"உங்களுக்கு எதுக்குங்க பிக்பாஸ் எல்லாம்?" என்று தடுத்தவர்களுக்கு முன்னால் இங்கு வந்து நின்று காட்டியிருக்கிறேன். பார்வையாளர்களின் நேரடி எதிர்வினைகள் இல்லாமல் எனக்கு சுவாரஸ்யம் இல்லை. ஆனால் அதற்கு சற்று ஈடுதரும் வகையில் டிஜிட்டல் பார்வையாளர்கள் இருக்கிறார்கள். இன்று ஐம்பதாவது நாள்" என்ற முன்னுரையுடன் வந்த கமல் பார்வையாளர்களில் சிலரை பேசச் சொன்னார்.

பத்மபிரியா என்னும் சற்றுச் சூழல் ஆர்வலர், மனித குலம் இயற்கையைத் தொடர்ந்து பாழ் செய்வது குறித்த கவலையைப் பகிர்ந்து கொண்டார். அந்தச் சமயத்தில், அல்கோர் எழுதிய ‘An Inconvenient Truth’ என்னும் ஆவணப்படத்தை நினைவுகூர்ந்தார் கமல். அல்கோர் அமெரிக்க பிரதமர் ஆகியிருந்தால் சுற்றுச்சூழல் மேம்பாட்டில் சிறிய வித்தியாசம் நிகழ்ந்திருக்கக்கூடும் என்பது கமலின் கணிப்பு.

"வருங்காலத்தை யூகிப்பது மாயம் ஒன்றுமில்லை. நேற்றைப் படித்தால், இன்றை உணர்ந்தால் நாளையை யூகிக்கலாம்" என்று கமல் சொன்னது திருவாசகம். "இன்னாங்க... இது இதையெல்லாம் அப்பவே சொல்லிட்டாங்களே" என்று சில உலக மேதைகளைப் பற்றி நாம் வியப்போம். அவர்கள் தொலைநோக்குப் பார்வையில் சிந்தித்ததின் விளைவு அது.

அகம் டிவி வழியாக உள்ளே நுழைந்த கமலை ‘ஸ்மார்ட்டா இருக்கீங்க சார்’ என்று போட்டியாளர்கள் வரவேற்றார்கள். “இன்னுமா புரியலை. பிக்பாஸில் இன்று ஐம்பதாவது நாள். விநாடியை எண்ணி எண்ணி நாட்களை எண்ண மறந்துட்டீங்க போல" என்று நுட்பமாக கிண்டலடித்தார் கமல்.

‘இந்த வீட்டில் உங்கள் பங்களிப்பு என்ன?’ என்பதை ஒவ்வொரு போட்டியாளரும் 60 விநாடிகளுக்கு மிகாமல் பேச வேண்டும் என்கிற பத்து மார்க் கொஸ்டினை தந்தார் கமல். விநாடியை எண்ணும் பொறுப்பை பாலாஜியிடம் அவர் தந்தது புத்திசாலித்தனம். திருடனிடமே சாவியைத் தரும் சமயோசிதம். பின்பென்ச் மாணவனாக இருந்தாலும் வாத்தியார் தரும் அத்தனை சில்லறை வேலைகளையும் பவ்யத்துடன் செய்யும் பையன் மாதிரி இயங்கினார் பாலாஜி. காலத்தை பைபாஸ் ரோட்டில் கடந்து குறுக்கு வழியாக பயணித்த பாலாஜி இப்போது ஒழுங்காக நடந்து கொண்டார்.

பிக்பாஸ் – நாள் 49

‘'மத்தவங்க ஃபீலீங்ஸ்ல இருக்கும் போது ஆறுதல் சொல்லியிருக்கேன்’' என்று ஆரம்பித்து 25 விநாடிகள் பாக்கியிருக்கும் போதே அனிதா பேசி முடித்தது சிறப்பு. “மக்களுக்கு ஃபேஷன் டிப்ஸ், மொழிவளம் சார்ந்து சிலது சொல்லிக் கொடுத்திருக்கேன்... மேக்ஸ் என்பதை வைத்து வார்த்தைகளை உருவாக்கலாம்” என்ற சாம் அதன் இடையில் ‘சிடுமூஞ்சி மேக்ஸ்’ என்பதையும் சொல்ல ''இப்பத்தான் அந்த ரகசியம் வெளியே வருது'’ என்று கிண்டலடித்தார் கமல். சம்யுக்தா அதை திட்டமிட்டு சொன்னதாகத்தான் தெரிகிறது. தவறிச் சொன்னது போல் தெரியவில்லை.

"எப்படி இருக்கணும்... இருக்கக்கூடாது ஆகிய ரெண்டையுமே சொல்லித் தந்திருக்கேன். ஆண் –பெண் ஒண்ணாப் பழகுனா அது காதல் இல்லைன்னு சொல்லியிருக்கேன். நான் நானாதான் இருப்பேன்" என்றார் பாலாஜி. "கூட்டுக்குடும்பம்-ன்ற சிஸ்டத்தை இப்ப இழந்துட்டு வர்றோம். அதன் சிறப்பை உணர்த்தியிருக்கேன்" என்றார் அர்ச்சனா. இருக்கலாம். (கூடவே கூட்டுக்குடும்பத்தில் உள்ள அரசியலையும் அவர் கற்றுத்தருகிறார் எனலாம்).

ஒரு முக்கியமான விஷயத்தை நாம் கவனிக்க வேண்டும். சோம், ஆஜீத், சம்யுக்தா போன்றவர்களிடம் இருக்கும் தனித்திறமைகள், தொழிற்முறை சார்ந்த அறிவுப்பகிரல்கள், அனுபவங்கள் போன்றவை இந்த நிகழ்ச்சியில் அதிகம் இடம்பெறவில்லை. அப்படிப்பட்ட காட்சிகள் நமக்கு காட்டப்படவில்லை. சர்ச்சையும் சண்டையும்தான் அதிகம் காட்டப்பட்டன. ஒருவகையில் இதற்கு நிகழ்ச்சி வடிவமைப்பாளர்களை குற்றம் சொல்ல முடியாது. வம்புகளைத்தான் நாம் அதிகம் ரசிக்கிறோம். அந்த மனப்பான்மையைத்தான் பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகள் வணிகமாக்கிக் கொள்கின்றன. ஒருவேளை ‘எப்படி ஆங்கிலம் பேசுவது’ என்று சாம் விளக்குவதை ஐந்து நிமிடம் தொடர்ந்து காட்டியிருந்தால் நாம் சேனலை மாற்றியிருப்போம்.

இதற்கிடையில் ஒரு நெகிழ்வான சம்பவம் நடந்தது. "இந்த நிகழ்ச்சிக்கு வந்த பிறகுதான் எனக்குள் இருக்கும் நகைச்சுவையுணர்வு அதிகமாக வெளியே வந்தது. அதற்கு முன்னால் நெருங்கிய நண்பர்களுடன் மட்டும்தான் அப்படி பேசிக் கொண்டிருந்தேன். இந்த வீட்டில் உங்களுடன் தங்கு தடையில்லாமல் பேச முடிகிறது" என்று தனது திக்கும் பிரச்னையைத் தாண்டி வர முடிந்தததைப் பற்றி கலங்கிய கண்களுடன் சோம் கூற அவருக்கு தகுந்த முறையில் ஆறுதல் சொன்னார் கமல்.

பிக்பாஸ் – நாள் 49

கட்டுரையின் துவக்கத்தில் சொன்ன விஷயம்தான். நம் மனம் எதைக் கண்டு அஞ்சுகிறதோ, அதன் பக்கத்தில் சென்றால் அச்சம் போய் விடும். சுச்சிக்குத் தோல்வியான விஷயம், சோமிற்கு வெற்றியைத் தந்திருப்பது சிறப்பானது.

நேரத்தைப் பொறுப்பாக எண்ணிய ‘பாலாஜி’ எவிக்ஷனில் இருந்து காப்பாற்றப்பட்ட செய்தியை போகிற போக்கில் சொன்னார் கமல். பிறகு அடுத்த வார கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட ரியோவிற்கு வாழ்த்து சொன்னவர், நடப்பு கேப்டன் (ஆஜீத்) எப்படி செயல்பட்டார் என்று மற்றவர்களிடம் விசாரித்தார்.

'‘தயங்குகிறார்... மயங்குகிறார். ஒரு க்ரூப்பின் கைப்பாவையாக செயல்பட்டார்'’ என்பது போல் பல எதிர்மறையான அபிப்ராயங்கள் ஆஜீத்தைப் பற்றி வெளியே வந்தன. ஆனால் சனம், பாலாஜி, ரமேஷ் போன்றவர்களிடம் மட்டுமிருந்து அழுத்தமான ஆதரவு வந்தது. பாலாஜியை ஓய்வறைக்கு அனுப்பும் காரணங்களை ஆஜீத்தால் சபையில் தெளிவாக சொல்ல முடியாதததை பலர் காரணமாகச் சொல்ல ‘'சரியாகத்தான் சொன்னார்’' என்பதை வலியுறுத்தினர் ரமேஷ்.

"ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா இருக்க இதுவொன்னும் ஸ்கூல் இல்லை. வீடுதானே... எனவே சில தளர்வுகளை அனுமதித்தேன்" என்று ஆஜீத் சொன்னது ஒருவகையில் சிறப்பான கருத்து. பள்ளிக்கூடங்கள் மாணவர்களை எப்படி இறுக்கமான சிறைக்கூடங்களாக உணர வைக்கின்றன என்பதையே அவரது கருத்து பிரதிபலித்தது. “ஆனால்… வீட்டிலும் சில அடிப்படை ஒழுக்கங்கள் இருக்கணும். ஆஜீத்... பார்த்துக்கங்க" என்று கமல் சொன்னதும் முக்கியமானது.

சுச்சிக்கும் பாலாஜிக்கும் ஓய்வறையில் நிகழ்ந்த வாக்குவாதங்களுக்கு வந்த கமல், ''ஒருவருக்கொருவர் தண்டனை கொடுத்துக்கிட்டீங்களே'’ என்று இதை வர்ணித்தார். "மொதல்ல கொஞ்ச நேரம்தான் சார் சண்டை. அப்புறம் சமாதானம் ஆகிட்டோம்" என்றார் சுச்சி. தூங்கிய பாலாஜிக்கு விசிறி விட்ட தருணத்தை கமல் நினைவுப்படுத்தும் போது ''நான் தூங்கியிருந்தா நிச்சயம் பாலாஜி விசிறியிருக்க மாட்டான். சந்தேகம்தான்'’ என்று சுச்சி சொன்னது ஹைலைட்டான தருணங்களில் ஒன்று. (இந்தத் தெளிவு பெரும்பாலான தருணங்களில் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்குமே சுச்சி!)

சோம் காப்பாற்றப்பட்டதை இதற்கிடையில் தெரிவித்தார் கமல். ஆக மீதமிருந்தவர்கள் சுச்சி, அனிதா, சம்யுக்தா.
கோபல்லபுரத்து மக்கள்

வாரம் ஒரு புத்தக அறிமுகம் என்னும் பகுதியில் இந்த வாரம் கமல் அறிமுகப்படுத்திய நூல் ‘கோபல்லபுரத்து மக்கள்’. (கோபாலபுரத்து மக்கள் என்று தவறாக வாசித்து விடாதீர்கள்). கி.ரா என்று அழைக்கப்படும் கி.ராஜநாராயணன் எழுதியது.

தமிழின் மூத்த எழுத்தாளர்களுள் கி.ரா. ஒருவர். கரிசல் இலக்கியம் என்னும் வகைமையை நவீன தமிழ் இலக்கியத்திற்கு தந்தவர். அவரையொட்டி ஏராளமான எழுத்தாளர்கள் அந்த மண்ணிலிருந்து கிளம்பி கரிசல் இலக்கியத்தை செழுமைப்படுத்தினார்கள். இந்திய இலக்கியத்தின் மிக உயரிய விருதான ‘ஞான பீட’ விருது கி.ராவிற்கு வழங்கப்பட வேண்டும் என்று தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள் எல்லாம் நெடுங்காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அது நிஜமாக வேண்டியது அவசியம்.

தெலுங்கு தேசத்திலிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக தமிழகத்திற்கு இடம் பெயர்ந்து வந்த சாதாரண மனிதர்களின் வாழ்வியலை சுதந்திர போராட்டக் காலத்தின் பின்னணியில் எளிய, சுவாரசியமான சொற்களால் விவரிப்பதுதான் ‘கோபல்லபுரத்து மக்கள்’ நாவலின் உள்ளடக்கம். சாகித்ய அகாதமி விருது பெற்ற நூல் இது. ஆனந்த விகடனில் தொடராக வந்து பரவலான கவனத்தையும் வரவேற்பையும் பெற்றது. ‘கோபல்ல கிராமம்’ இதற்கு முன்னால் எழுதப்பட்ட நூல்.

"நூறு வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் கி.ரா, தற்போது எழுதிக் கொண்டிருக்கும் ‘அண்டரண்டப்பட்சி’ என்னும் நாவலின் கைப்பிரதியை பார்க்க நேர்ந்த போது அதை வாசிக்க முடியாமல் கண்கள் பனித்தன" என்று நெகிழ்ந்து போனார் கமல். நமது மண்ணின் தொன்மையை, பழைமையை எளிய மனிதர்களின் வாழ்வியல் வழியாக பதிவு செய்து வரும் கி.ரா.வின் எழுத்துக்கள் மக்களால் அவசியம் வாசிக்கப்பட வேண்டியவை.

பிக்பாஸ் – நாள் 49

ஓர் இடைவேளைக்குப் பின்னால் மேடைக்கு திரும்பி வந்தார் கமல். அனிதாவிற்கு அப்போதே முகத்தில் டென்ஷன் ஆரம்பித்தது. "இந்த மூவரில் யார் இங்கே இருக்க வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?" என்று கமல் கேட்ட போது சம்யுக்தாவின் பெயரையே பலரும் சொன்னார்கள். பாலாஜியும் இதை சொன்ன போது சுச்சியின் முகத்தில் வந்து போன ஒரு வேதனையின் சுவட்டை எத்தனை பேர் கவனித்தார்கள் என்று தெரியவில்லை.

ஆரி மட்டுமே சுச்சியின் பெயரைச் சொன்னார். அனிதாவின் பெயரை சனம் சொன்னார். சுச்சிக்கான காரணங்கள் வெளிப்படை. ஆனால் அனிதாவை ஒட்டுமொத்த வீடே வெறுக்கிறது என்பது ஆச்சர்யமான தகவல்தான். அனிதாவின் நெருங்கிய நண்பரான சோம் கூட அனிதாவைக் கைவிட்டபோது அனிதாவின் முகத்தில் அடிபட்ட வலி தெரிந்தது. தீதும் நன்றும் பிறர் தர வாரா.

'‘நிறைய ரசிகர்களைச் சம்பாதிச்சு வெச்சிருக்கீங்க போல'’ என்று கமல் பாராட்டிய போது சாமின் முகத்தில் அடக்கமான புன்னகை வந்தது. ஆரி மற்றும் அனிதா காப்பாற்றப்பட்ட செய்தியை ‘சுசித்ரா’ என்று பெயர் அடங்கிய அட்டையை காண்பிப்பதின் மூலம் வெளிப்படுத்தினார் கமல்.

அர்ச்சனா குழுவினர் சாமிற்கு வாழ்த்து சொல்வதில் மும்முரமாக இருக்க வெளியேறும் சுச்சிக்கு முதலில் ஓடி வந்து ஆறுதல் சொன்னவர் சனம். அவரிடம் இப்போது கணிசமான மாற்றங்கள் தெரிகின்றன. பிக்பாஸ் வீட்டின் அமைதிப்புறாவாக அவர் மாறுவதைப் போன்ற ஒரு பிரமை. அனிதாவும் பாலாஜியும் சுச்சியைக் கட்டியணைத்து ஆறுதல் சொன்னார்கள். அதற்கும் முன்னால் கட்டியணைத்தவர் ஆரி.

‘விட்டால் போதும்’ என்பது போல் உண்டியலை உடைத்து தலைதெறிக்க வெளியே ஓடினார் சுச்சி. ‘என்னதிது... இத்தனை சீக்கிரம் கிளம்பிட்டாங்க’ என்பது போன்ற பாவனையுடன் மற்றவர்கள் பின்தொடர்ந்தார்கள். சுச்சி இந்தச் சமயத்தில் சற்று மனமுதிர்ச்சியுடன் செயல்பட்டிருக்கலாம். இதைப் போலவே, அர்ச்சனா குழு தூரத்தில் நின்று மெளனப் பார்வையாளர்களாக இருந்தார்களே ஒழிய, பெருந்தன்மையுடன் அருகில் வந்து ஆறுதல் சொல்ல முன்வரவில்லை. அப்படி வந்து சுச்சி ஏதாவது கத்தி அவமானப்படுத்தி விடுவார் என்று பயந்தார்களோ என்னமோ.

பிக்பாஸ் – நாள் 49

இதற்காக அர்ச்சனா குழுவை நான் விமர்சிக்க மாட்டேன். அங்கு உள்ளே என்ன நிகழ்ந்து கொண்டிருக்கிறது என்கிற முழு விவரம் நமக்குத் தெரியாது. எடிட்டிங் வழியாக நமக்கு காட்டப்படும் சில நிமிடங்களை வைத்து நாம் எந்த முடிவுக்கும் வர முடியாது; வரவும் கூடாது. அவர்களும் நம்மைப் போன்ற சராசரி மனிதர்கள்தான். அவர்களை சமூகவலைத்தளங்களில் திட்டுவதின் மூலம் நம்முடைய கீழ்மைகளை நாம் ஒளித்துக் கொள்ள முடியாது.

வெளியில் வந்த சுச்சியிடம் "என்ன அதுக்குள்ள வந்துட்டீங்க” என்று கமல் விசாரிக்க, "நூறு சதவீதம் உள்ளே நான் நானதான் இருந்தேன். என் தந்தை கனவில் வந்தார். ‘நீ இங்கு செய்யும் நல்ல விஷயங்கள் வெளியில் தெரியவில்லை. வெளியேறி விடுவதுதான் உனக்கு நல்லது’ என்பது போல் சொன்னார்” என்றார் சுச்சி. அது அவரது உள்ளுணர்வின் பிரதிபலிப்பாக இருக்கலாம். அது உண்மையாகவும் இருக்கலாம். சுச்சி தொடர்பான எதிர்மறையான காட்சிகளுக்குத் தரப்பட்ட முக்கியத்துவம் நேர்மறையான காட்சிகளுக்குத் தரப்பட்டதா என்பது சந்தேகம்தான். பிக்பாஸ் எடிட்டிங் டீமிற்கே வெளிச்சம்.

சமூகவலைத்தளங்களில் செய்யப்படும் கிண்டல்களைப் பற்றி சுச்சி அஞ்சுகிறார். இது தொடர்பாக அவருக்கு நிறைய முன்அனுபவமும் இருக்கிறது. அதுதான் அவருக்கு மனஅழுத்தத்தையும் ஏற்படுத்தியது.

சோஷியல் நெட்வொர்க்கில் மீம் உருவாக்குபவர்களிடம் அபரிதமான நகைச்சுவை உணர்வு இருக்கிறது. அவர்கள் அதை ஆரோக்கியமாகவும் கண்ணிய எல்லையைத் தாண்டாமலும் பயன்படுத்தினால் சிறப்பாக இருக்கும். சுச்சியின் விருப்பப்படி அவரின் தொழிற்முறை வாழ்க்கையை மீண்டும் பெற்று இசைத்துறையில் பிரகாசிப்பதையே நாமும் விரும்புவோம்.

"நீங்க முகத்திற்கு நேராக உண்மைகளைப் பேசிவிடும் பழக்கமுடையவர். போட்டியாளர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சொல்லுங்கள். பார்க்கலாம்" என்று கமல் ஏத்தி விட ரம்யா, அனிதா, ஆரி, பாலாஜி ஆகியோர்களைப் பற்றி நேர்மறையாக சொன்ன சுச்சி, அர்ச்சனா குழுவின் போலித்தன்மைகளை வெளிப்படையாக அம்பலப்படுத்தினார். (அதென்ன வேல் பிரதர்ஸ்?!)

தப்புன்னா தட்டிக்கேட்பேன் என்று சொன்ன உலகநாயகன் கமல்ஹாசன் பிக்பாஸ் வீட்டுக்குள் நடக்கும் சில விஷயங்களைத் தட்டிக்கேட்க வேண்டும் என்பதே நம் விருப்பம்.

பிக்பாஸ் – நாள் 49

இந்தத் தொடரில் நான் அடிக்கடி சொல்வதுதான். எந்தவொரு மனிதக்கூட்டத்திலும் குழுவும், குழு மனப்பான்மையும் உருவாகாமல் இருக்கவே முடியாது. மனிதன் என்பவன் அடிப்படையில் ஒரு சமூக விலங்கு. ஆனால் அந்த குழு மனப்பான்மை நேர்மறையாக செயல்படுகிறதா அல்லது எதிர்மறையாக இயங்குகிறதா என்பதுதான் முக்கியம்.

வீடியோவின் மூலம் அகம் டிவிக்குள் வந்த சுசித்ரா, தனது நண்பர்களுக்கு உள்ளார்ந்த மகிழ்ச்சியுடன் வாழ்த்து சொன்னார். அர்ச்சனா, ரியோ குரூப்பிற்கு சம்பிரதாயமான வாழ்த்தை இடது கையால் பகிர்ந்து கொண்டார்.

போட்டியாளர்களின் எண்ணிக்கை ஒன்று குறைந்திருக்கிறது. புதிய போட்டியாளர் எவராவது உள்ளே வரலாம் அல்லது வெளியேறிய போட்டியாளர்களில் ஒருவரே கூட (சுரேஷ்) ஆச்சரிய வரவாக திரும்ப வரலாம். இனி பிக்பாஸ் வீடு எப்படி இருக்கும்? எதிர்பாராததை எதிர்பார்ப்போம்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/suchi-evicted-bigg-boss-tamil-season-4-day-49-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக