Ad

திங்கள், 23 நவம்பர், 2020

சென்னை: `துப்பாக்கி என்னுடையதுதான்; ஆனால்..!' - 3 பேர் கொலையில் சிக்கியவர் அதிர்ச்சித் தகவல்

சென்னை சௌகார்பேட்டையில் கடந்த 11-ம் தேதி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஃபைனான்சியர் தலில் சந்த், அவரின் மனைவி புஷ்பா பாய் மற்றும் மகன் சீத்தல் குமார் ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இந்தச் சம்பவத்தில் யானைகவுனி போலீஸார் விசாரணை நடத்தி சீத்தல் குமாரின் மனைவி ஜெயமாலா மற்றும் அவரின் சகோதரர்கள் விலாஷ், கைலாஷ் உள்பட 6 பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பறிமுதல் செய்யப்பட்ட துப்பாக்கி

Also Read: சென்னை: செல்போன் சிக்னல்; கார்கள்! - 3 பேர் சுட்டுக் கொலையில் மருமகள் சிக்கியது எப்படி?

ஜெயமாலாவின் சகோதரர்களுக்கு துப்பாக்கி, கார் ஆகியவற்றை கொடுத்தது தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ராஜீவ் துபேவை போலீஸார் கைது செய்திருக்கின்றனர். அவரின் மனைவி விமானப்படையில் பணிபுரிந்தவர். போலீஸாரின் தீவிர விசாரணையில் முக்கிய தகவல்களை முன்னாள் ராணுவ வீரர் ராஜீவ் துபே கூறியிருக்கிறார்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தனிப்படை போலீஸார், ``கைது செய்யப்பட்ட சகோதரர்கள் கைலாஷ், விலாஷ் ஆகியோர் ராஜீவ் துபேவை ஹோட்டல் ஒன்றில் சந்தித்திருக்கின்றனர். அப்போது ராஜீவ் துபேவின் மனைவியின் பெயரில் உள்ள கார் கைலாஷிடம் விற்கப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கான முழு தொகையையும் கொடுக்கப்படவில்லை.

காரிலேயே தன்னுடைய லைசென்ஸ் துப்பாக்கியை ராஜீவ் துபே மறந்து வைத்துவிட்டதாக விசாரணையின்போது தெரிவித்தார். அப்படியென்றால், `அதுதொடர்பாக ஏன் நீங்கள் காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை’ என்று கேள்வி கேட்டதற்கு அவர் மழுப்பலான பதிலைக் கூறினார். ராஜீவ் துபே அளித்த தகவலின்படி போலீஸ் காவலில் எடுக்கப்பட்ட ஜெயமாலாவின் சகோதரரிடம் விசாரணை நடத்த முடிவு செய்திருக்கிறோம். இந்த வழக்கில் 7-வது நபராக ராஜீவ் துபே கைது செய்யப்பட்டிருக்கிறார்.

மருமகள் ஜெயமாலா

இதற்கிடையில் சென்னையில் கொலை நடந்த இடத்தில் இரண்டு துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டிருந்தது. அதில் ஒன்று ராஜீவ் துவேவுக்கு சொந்தமானது. இன்னொன்று கள்ளத்துப்பாக்கி எனத் தெரியவந்திருக்கிறது. கள்ளத் துப்பாக்கி குறித்து கைதான விலாஷிடம் விசாரித்தபோது புனே அகமது நகர் காட்டுப்பகுதியில் தூக்கி எரிந்து விட்டதாகக் கூறினார். அதனால் அந்த மாநில போலீஸாரின் உதவியோடு துப்பாக்கியைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறோம். ஃபைனான்ஸியர் தலில்சந்த் வீட்டிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட லாக்கரிலிருந்த நகைகள், பணம் குறித்து விசாரித்து வருகிறோம். இதுவரை ஒரு லட்சத்து 80 ஆயிரம் ரூபாயையும், நான்கு தங்க வளையல்களையும் பறிமுதல் செய்திருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது" என்றனர்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-ex-army-officer-in-murder-case

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக