Ad

திங்கள், 23 நவம்பர், 2020

தேனி:`சில நாள்கள் என்றார்; ஆறு மாதமாகியும் வரல!’ - விவசாயிகளை அதிரவைத்த ரூ.2 கோடி பால் மோசடி

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி, பெரியகுளம், போடி, சின்னமனூர், கம்பம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த பால் உற்பத்தியாளர்கள் சங்க நிர்வாகிகள், விவசாயிகளிடம் இருந்து பாலைக் கொள்முதல் செய்து, உத்தமபாளையம் அருகே உள்ள புலிக்குத்தி கிராமத்தில் அமைக்கப்பட்டிருந்த பாண்டியராஜ் என்பவருக்குச் சொந்தமான ஸ்ரீ மீனாட்சி அக்ரோ புட்ஸ் டிரேடிங் என்ற நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனர். வாங்கிய பாலுக்கு பாண்டியராஜ் பணம் கொடுக்கவில்லை என்றும், நிறுவனத்தை மூடிவிட்டு தலைமறைவாகிவிட்டார் என்றும் கூறப்படுகிறது.

புகார் மனு கொடுக்க வந்தவர்கள்.

இதுதொடர்பாக குமணன் தொழுவைச் சேர்ந்த பாண்டி என்பவர் கூறும்போது, ``கொரோனா காலத்தில் பால் அதிக அளவில் தேக்கமடைந்தது. அப்போது எங்களை அணுகிய புலிக்குத்தியைச் சேர்ந்த பாண்டியராஜ் என்பவர், பாலைக் கொள்முதல் செய்வதாகவும், உரிய பணம் கொடுப்பதாகவும் கூறினார். நாங்களும், அவருடைய நிறுவனத்தை நேரில் சென்று பார்த்துவிட்டு, பாலைக் கொடுக்க ஆரம்பித்தோம்.

Also Read: கேரளா: ரூ.150 கோடி தங்க நகை மோசடி! - மஞ்சேஸ்வரம் முஸ்லிம் லீக் எம்.எல்.ஏ கைது

சில நாள்களில் பணம் தருவதாகக் கூறியவர், மாதக்கணக்கில் பணத்தைக் கொடுக்காமல் இருந்தார். கேட்டதற்கு, தனது நிறுவனத்தில் இருந்து கொள்முதல் செய்த கேரள வியாபாரிகள் இன்னும் பணம் கொடுக்கவில்லை என கூறினார். நாங்களும் ஆறு மாதம் வரை பொறுத்துப் பார்த்தோம். ஒரு நாள், நிறுவனத்துக்குப் பூட்டு போட்டுவிட்டு, தலைமறைவாகிவிட்டார்.

பாண்டியராஜின் நிறுவனம்

இது தொடர்பாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் கொடுத்தோம். ஆனால், இன்றுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஒவ்வொரு பால் உற்பத்தியாளர் சங்கத்துக்கும் லட்சக்கணக்கில் பணம் கொடுக்கவேண்டியுள்ளது. மொத்தம் 30 பால் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மட்டும் ரூ.2 கோடி பணம் தர வேண்டும். தலைமறைவாக உள்ள பாண்டியராஜைப் பிடித்து, அவரிடம் இருந்து பணத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும்” என்றார்.

இதுதொடர்பாக, கலெக்டர் அலுவலக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``புகார் மனு, காவல் கண்காணிப்பாளருக்கு அனுப்பப்பட்டு, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.



source https://www.vikatan.com/news/crime/theni-milk-producers-association-members-seeks-action-over-fraud

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக