Ad

திங்கள், 23 நவம்பர், 2020

100 நாள் பரப்புரையில் உதயநிதிக்கு கொடுக்கப்பட்ட டாஸ்க்... தி.மு.க-வுக்குப் பலன் தருமா?

தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில், பரப்புரை மேற்கொண்டு வருகிறார் தி.மு.க இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின். `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' என்கிற முழக்கத்தை முன்வைத்து திருக்குவளையில் கருணாநிதியின் வீட்டிலிருந்து பரப்புரையைத் தொடங்கினார் உதயநிதி. நவம்பர் 20-ம் தேதி தொடங்கி, தொடர்ச்சியாகத் திருக்குவளை, நாகை, குத்தாலம், மயிலாடுதுறை, கும்பகோணம், திருப்புவனம் உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரம் நடத்தி வருகிறார் அவர். தினமும் பிரசாரத்துக்கிடையே கைது செய்யப்பட்டு, முக்கியச் செய்தியிலும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறார் உதயநிதி.

உதயநிதி ஸ்டாலின்

Also Read: `பிரசாரப் பயணத்தை வெற்றிபெறவைத்த காவல்துறைக்கு நன்றி!’ - மூன்றாவது நாளிலும் உதயநிதி கைது

உதயநிதியின் 100 நாள் பரப்புரையால் தி.மு.க-வினர் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள் என்ற செய்திகளே அதிகம் வருகின்றன. தி.மு.க மாவட்ட அலுவலகங்கள் அனைத்திலும், இந்தப் பரப்புரை காரணமாகத் தேர்தல் களைகட்டிவிட்டதாகச் சொல்லப்படுகிறது. உதயநிதி முன்னெடுத்திருக்கும் `விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்' பிரசாரப் பயணம் தி.மு.க-வுக்குப் பலம் சேர்க்குமா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, அரசியல் விமர்சகர்கள் சில கருத்துகளைப் பகிர்கின்றனர்.

``கடந்த 4 நாள்களாக உதயநிதி மேற்கொண்டிருக்கும் பரப்புரையை வைத்துப் பார்க்கும் போது நிச்சயம் இது தி.மு.க-வுக்கு கூடுதல் பலமாக இருக்குமென்றே தோன்றுகிறது. காரணம், இந்தக் கொரோனா காலத்திலும், அவரைக் காண மக்கள் அதிக அளவில் கூடுகிறார்கள். பொதுவாக அரசியல் தலைவர்களின் பிரசாரக் கூட்டமென்றால், அந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூடுவார்கள். மிகக் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் கூடுவார்கள். சில இடங்களில் பணம் கொடுத்து கூட்டம் கூட்டப்படும். ஆனால், உதயநிதி சினிமாவில் நடித்திருக்கிறார் என்ற காரணத்தால் அவரைக் காணத் தானாகவே மக்கள் கூட்டம் கூடுகிறார்கள். கட்சி தொடர்பில்லாத இளைஞர்கள், இளம் பெண்கள்கூட உதயநிதியைக் காண வருவதாகத் தகவல்கள் வருகின்றன. குழந்தைகள்கூட அவருடன் புகைப்படம் எடுக்க ஆர்வம் காட்டுவதாகவும் செய்திகள் சொல்லப்படுகின்றன. பிடிக்காத ஒருவரைக் காண நிச்சயம் நம் மக்கள் படையெடுத்துச் செல்லமாட்டார்கள். உதயநிதியைக் காண வரும் மக்கள் அனைவரும் தி.மு.க-வுக்கு வாக்களித்து விடுவார்களா என்றால், அது சந்தேகமே. ஆனால், கூட்டம் தானாகக் கூடுவதே ஒரு கட்சிக்கு பலம்தான்'' என்கிறார்கள்.

உதயநிதி

மேலும், ``உதயநிதியை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று சொன்ன அ.தி.மு.க-வினர் தற்போது அவர் பேசும் கருத்துகளுக்குப் பதிலளிக்கத் தொடங்கியுள்ளனர். அவர் மேற்கொள்ளும் பரப்புரைகள் குறித்துக் குற்றம்சாட்டி வருகின்றனர். சமீபத்திய செய்தியாளர் சந்திப்பில், ``உதயநிதி ஸ்டாலின் நேற்று நடத்திய ஊர்வலத்தில் சமூக இடைவெளி,முகக் கவசம் என்று எந்த ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றவில்லை. இப்போது உள்ள சூழ்நிலையில் உதயநிதி ஸ்டாலின், தேர்தல் பிரச்சாரம் செய்யலாமா?'' என்று ஜெயக்குமார் பேசியிருக்கிறார். உதயநிதியை `சாக்லேட் பாய்' என்று எள்ளி நகையாடிய ஜெயக்குமாரே, அவரை அரசியல்வாதியாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார். அதனால்தான் முதலில் உதயநிதி குறித்துக் கிண்டலாகப் பதிலளித்தவர், தற்போது சீரியஸாகப் பேசுகிறார்.

தினமும் செய்தித் தாள்களில், `உதயநிதி ஸ்டாலின் இரண்டாவது நாளிலும் கைது... மூன்றாவது நாளிலும் கைது' என்று செய்திகள் வந்த வண்ணம் உள்ளன. இதுவே தி.மு.க-வுக்கும் உதயநிதிக்கும் பப்ளிசிட்டியாக மாறிவிட்டது. ``என்னைக் கைது மேல் கைது செய்து தேர்தல் பிரசாரப் பயணத்தை வெற்றிபெறவைத்த காவல்துறைக்கு நன்றி!'' என்று உதயநிதியும் பேசியிருக்கிறார். உதயநிதியின் 100 நாள் பரப்புரை பயணத்துக்கு, தி.மு.க-வினர் நினைத்ததைவிட அதிக அளவு வரவேற்புக் கிடைத்துள்ளதாகவே தெரிகிறது.

கைது செய்யப்பட்ட உதயநிதி

Also Read: `இந்தி தெரியாது போடா', `தமிழ் எங்கள் வேலன்; இந்தி நம்ம தோழன்' - டி-ஷர்ட் அரசியல் பின்னணி!

இந்தப் பரப்புரை பயணத்தின் மிக முக்கிய விஷயமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். பிரசார பரப்புரையின் முதல் நாளன்று திருக்குவளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயிலுக்குச் சென்றார் உதயநிதி. அங்கு அவருக்குப் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. இதையடுத்து இரண்டாவது நாளில் தருமபுரம் ஆதினத்தை நேரில் சந்தித்தார் அவர். அங்கு வழங்கப்பட்ட திருநீரையும் வைத்துக் கொண்டார். அதுமட்டுமல்லாமல் `தமிழ்க் கடவுள் சேயோன்' என்கிற ஆன்மிக புத்தகத்தின் முதல் பிரதியையும் பெற்றுக் கொண்டார் அவர். `தி.மு.க ஒரு இந்து விரோத கட்சி' என்பதை முன்னிறுத்தி பா.ஜ.க-வினர் செய்து வரும் பிரசாரத்துக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இருக்கிறது உதயநிதியின் இந்தச் செயல்கள்.

`தி.மு.க இந்து விரோத கட்சி' என்ற விமர்சனத்தை உடைப்பதுதான் அவருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் முக்கிய டாஸ்காக இருக்கும் எனத் தெரிகிறது.
தரும்புரம் ஆதீனகர்த்தரிடம் ஆசிபெற்ற உதயநிதி ஸ்டாலின்

Also Read: நாகை: 5 கோயில் பிரசாதம்... மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனகர்த்தரிடம் ஆசிபெற்ற உதயநிதி ஸ்டாலின்!

மேலும், வேளாங்கண்ணி பேராலயத்தின் அதிபர் பிரபாகருடன் காணொலியில் பேசியிருக்கிறார் உதயநிதி. இதையெல்லாம் முன்னிறுத்தி `தி.மு.க அனைத்து மதத்தினருக்கும் ஆதரவாக நிற்கும்' என்பதைச் சொல்லி ஆதரவு திரட்டும் வேலையை இப்போதே ஆரம்பித்துவிட்டனர் தி.மு.க-வினர்.

உதயநிதி பதற்றமடையாமல் பேசுகிறார். ஆளும்கட்சிகளுக்கு எதிராக நச்சென்ற கேள்விகளைக் கேட்கிறார். இவையெல்லாம் தென் மாவட்ட தி.மு.க-வினரை பெரிதும் கவர்ந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. எனவே, உதயநிதியின் பரப்புரை, தி.மு.க-வுக்கு ஓரளவாவது பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகமேயில்லை'' என்று முடித்துக் கொள்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.

உதயநிதி

Also Read: ``நல்ல நடிகனாக வருவதே என் நோக்கம்!'' 5 ஆண்டுகளுக்கு முன் உதயநிதி சொன்னதும் வாரிசு அரசியலும்!

இதுகுறித்து அ.தி.மு.க-வினர் கூறுகையில், ``இப்போதும் உதயநிதியை நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அவரை மக்கள் அரசியல்வாதியாகப் பார்க்கவில்லை. சினிமாக்காரராகத்தான் பார்க்கிறார்கள். கூட்டம் கூடினாலும் அவையெல்லாம் வாக்குகளாக மாறாது. மக்கள் எப்போதும் அண்ணா தி.மு.க பக்கம்தான் நிற்பார்கள்'' என்கிறார்கள் நம்பிக்கையாக.

உதயநிதியின் பரப்புரை பயணம் தி.மு.க-வுக்கு பலமா? பலவீனமா? உங்கள் கருத்துகளை கமென்ட்டில் பதியுங்கள்!


source https://www.vikatan.com/government-and-politics/politics/will-udhayanidhi-stalins-campaign-add-more-strength-to-dmk

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக