உலகின் இன்றைய ஹாட் டாபிக், உலக சுகாதார நிறுவனம் (WHO) அண்மையில் வெளியிட்டுள்ள ஆய்வு முடிவுதான். உலகின் பல நாடுகளில் கோவிட் நோய்க்கு சிகிச்சையாகப் பரிந்துரைக்கப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்தால் எந்தப் பலனும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு. இந்த ஆய்வு முடிவைக் கேட்டதிலிருந்து, களத்தில் கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்கள் மத்தியில் சலசலப்பு தோன்றியிருப்பது உண்மை. அந்த ஆய்வு குறித்தும் அதன் முடிவுகள் குறித்தும் இந்தக் கட்டுரையில் காண்போம்.
உலக சுகாதார நிறுவனம் 35 நாடுகளில் உள்ள 400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு பயன்படும் முக்கியமான மருந்துகள் குறித்த ஆய்வை கடந்த மார்ச் மாதம் தொடங்கி நடத்தி வருகின்றது. இந்தியாவில் இருந்தும் சென்னை, ஜோத்பூர், அகமதாபாத், போபால் ஆகிய நகரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் இந்த உலகம் தழுவிய ஆய்வில் கலந்து கொண்டுள்ளன. இந்த ஆய்வுக்கு `Solidarity' என்று உலக சுகாதார நிறுவனம் பெயரிட்டுள்ளது. இந்த ஆய்வை உலகின் பல நாடுகளைச் சேர்ந்த துறைசார் வல்லுநர்களின் குழு (Steering committee) கண்காணித்தும் வழிநடத்தியும் வருகின்றது.
இதன் தொடர்ச்சியாகக் கடந்த ஜூலை மாதம் 4-ம் தேதி, பெருந்தொற்று ஆரம்பித்த காலத்தில் பெரிதாகப் பேசப்பட்டு வந்த ஹைட்ராக்சி குளோரோகுயின் (HCQS) எனும் மருந்தால் பெரியளவில் பலன் இல்லை என்று கூறியது. அதன் பிறகு, ஸ்டீராய்டு மருந்தான டெக்சாமீதசோன் (Dexamethasone) எனும் மருந்து கொரோனா தொற்று நோயாளர்களிடையே மரண விகிதத்தை கணிசமாகக் குறைக்கிறது என்று சான்று பகிர்ந்தது. அந்த ஆராய்ச்சியின் தொடர்ச்சியாகத் தற்போது, ``11,266 கொரோனா தொற்றுக்குள்ளான நோயாளிகளுக்கு செய்யப்பட்ட ஆய்வின் முடிவில் ஹைட்ராக்சி குளோரோகுயின், ரெம்டெசிவிர், லோபினாவிர், இன்டர்ஃபெரான் ஆகிய இந்த நான்கு மருந்துகளும் கொரோனா தொற்று நோயாளிகளின் மரணத்தைக் குறைக்கவில்லை. அவர்களுக்கு செயற்கை சுவாசம் தேவைப்படும் வாய்ப்பை குறைக்கவில்லை. மருத்துவமனையில் தங்கியிருக்கும் நாள்களையும் குறைக்கவில்லை" என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறது.
ஆனால், இந்த ரெம்டெசிவிர் மருந்தை உருவாக்கும் `கில்லாட் (Gilead)' நிறுவனமோ இந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது. தங்களது நிறுவனம் மேற்கொள்ளும் ஆய்வுகளிலும் சரி, ஏனைய நாடுகளில் நடக்கும் அறிவியல் ஆய்வுகளிலும் சரி... ரெம்டெசிவிர் மருந்து மருத்துவமனையில் நோயாளி தங்கியிருக்கும் கால அளவைக் குறைக்கிறது என்றும், மரணங்களையும் தடுக்கிறது என்றும் வாதிட்டு வருகிறது.
தற்போது இந்திய நாட்டில் ரெம்டெசிவிர் மருந்தானது மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறும் மிதமான (Moderate) கொரோனா தொற்று நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. ரெம்டெசிவிர் மருந்தை மருத்துவமனையில் தங்கி சிகிச்சை அளிக்கும் நோயாளிகளுக்கு வழங்கி வரும் மருத்துவர்களின் கூற்றானது, உலக சுகாதார நிறுவனத்தின் கூற்றுக்கு எதிராக இருப்பது உண்மை.
ரெம்டெசிவிர் மருந்து எந்தளவுக்கு விரைவாகக் காலம் தாழ்த்தப்படாமல் வழங்கப்படுகிறதோ அந்தளவுக்குத் திறனுடன் அது வேலைசெய்து வைரஸை கொன்றும், மேலும் பல்கிப்பெருகவிடாமலும் தடுக்கிறது, இதனால் நோயாளிகள் நலம் பெறுகிறார்கள் என்பதே பெரும்பான்மை மருத்துவர்களின் கருத்தாக இருக்கிறது. ரெம்டெசிவிர் என்பது வைரஸ் உடலுக்குள் வந்த நிலையின் ஆரம்பக்கட்டத்திலேயே கொடுக்கப்படும்போது அதன் திறன் சிறப்பாக இருக்கிறது என்பதற்கு மருத்துவர்கள் சான்று பகிர்கிறார்கள்.
உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிக்கையின் இறுதி வடிவத்தில், ரெம்டெசிவிர் மருந்தை இனி எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்த ஆலோசனை இடம்பெறும். ஆனால், அதை முடிவாக ஏற்பதும் ஏற்காமல் விடுவதும் அந்தந்த நாடுகளின் செயல்திட்ட வரைமுறை மற்றும் அந்த நாடுகளில் செய்யப்படும் ஆராய்ச்சி முடிவுகளைப் பொறுத்து அமையும். இந்தியாவில் ரெம்டெசிவிரை வைத்து நடக்கும் ஆய்வுகள் தொடர்ந்து நடக்கலாம் என்று அரசு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா தொற்றின் இரண்டாம் அலையை எதிர்நோக்கியிருக்கும் இவ்வேளையில் ஐரோப்பிய யூனியன், `கில்லாட்' நிறுவனத்திடம் ஒரு பில்லியன் யூரோவுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை ஆர்டர் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவைப் பொறுத்தவரை மருத்துவமனைகளில் இந்த மருந்தை நோயாளிகளுக்கு வழங்கி வரும் மருத்துவர்கள், இதன் நோய் தீர்க்கும் திறனைப்பற்றி சிலாகித்துப் பேசிவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில், ரெம்டெசிவிர் உபயோகம் குறித்து உலக சுகாதார நிறுவனம் இன்னும் சில நாள்களில் வழங்க இருக்கும் அதிகாரபூர்வ முக்கிய அறிவிப்பை எதிர்நோக்கி உலக நாடுகள் காத்துக்கொண்டிருக்கின்றன.
மேலும், இது தொடர்ந்து நடக்கும் ஆய்வு. ஆதலால் இன்னும் அதிகமான மக்களிடம் இருந்து கிடைக்கும் தரவுகள் ஆய்வின் முடிவை மாற்றியமைக்கலாம். அதற்கான விடையை காலம்தான் சொல்ல வேண்டும்.
source https://www.vikatan.com/health/healthy/remdesivir-didnt-reduced-covid-19-mortality-rates-says-who-trial
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக