Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

கார்ட்டூன் சர்ச்சை; இமானுவேல் மேக்ரான் Vs இம்ரான் கான்! - பிரான்ஸைப் புறக்கணிக்கும் அரபு நாடுகள்

பிரான்ஸ் தலைநகர் பாரிஸிலுள்ள பள்ளியில் பணியாற்றி வந்த 47 வயதான சாமுவேல் பேட்டி எனும் ஆசிரியர் ஒருவர், `கருத்து சுதந்திரம்’ குறித்து மாணவர்களுக்கு வகுப்பெடுத்தார். அந்த வகுப்பில் முகமது நபி குறித்த கேலி சித்திரத்தை மாணவர்களுக்கு காட்டியதாக தலை துண்டித்துக் கொல்லப்பட்டார். இச்சம்பவம், பாரிஸ் நகர் மட்டுமல்லாது பிரான்ஸ் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுகுறித்த விசாரணையில், ஐ.எஸ். தீவிரவாத அமைப்போடு தொடர்புடைய ஒருவர் சாமுவேல் பேட்டியைக் கொலை செய்தது தெரியவந்தது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான், ``ஐ.எஸ். பயங்கரவாதிகள் பிரான்ஸில் நிம்மதியாக உறங்க முடியாது” என்றார்.

இந்நிலையில், முகமது நபியின் கேலி சித்திரத்தை வெளியிட்ட பத்திரிகைக்கு ஆதரவாகவும், இஸ்லாமிய மதத்தை இழிவுபடுத்தியும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் பேசியதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் கண்டனம் தெரிவித்தார்.

இம்ரான் கான்

```ஒரு தலைவர் என்பதற்கான தகுதி என்பது மண்டேலா செய்தது போல் அனைவரையும் ஒருங்கிணைத்துச் செல்வதே, அவர்களைப் பிரித்தாள்வதல்ல. இதுபோன்ற சூழலில், தீவிரவாதிகளுக்கு இடம்கொடுக்காமல், காயங்களுக்கு மருந்து போடுவதே அதிபர் இமானுவேல் மேக்ரானின் பணியாக இருக்க வேண்டும். அடக்குமுறை என்பது தீவிரவாதத்துக்கு வழிவகுத்துவிடும்.

இஸ்லாம் மதம், முகமது நபியை இழிவுபடுத்தும் கார்ட்டூனை பிரசுரிக்க ஆதரவு தெரிவித்ததன் மூலம் ஐரோப்பா, உலகம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையைப் புண்படுத்திவிட்டார் அதிபர் இமானுவேல் மேக்ரான்’’ என்று இம்ரான் கான் கண்டனம் தெரிவித்திருந்தார்

இம்ரான் கான் கருத்துக்கு ஆதரவாக அரபு நாடுகளில் பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணிப்பதாகப் போராட்டம் தொடங்கியிருக்கிறது. துருக்கி, குவைத், ஜோர்டான், கத்தார், லிபியா போன்ற அரபு நாடுகளில் உள்ள பல்பொருள் அங்காடிகளில் பிரான்ஸ் தயாரிப்புப் பொருட்களை முழுவதுமாக புறக்கணித்துள்ளனர்.

போராட்டம்

கத்தார் பல்கலைக்கழகத்தில் நடக்கவிருந்த பிரான்ஸ் கலாசார நிகழ்வுகளை இச்செயலுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களிலும் பெரும்பாலானோர் தங்கள் முகப்புப்படங்களை மாற்றி, பிரான்ஸுக்கு தங்கள் எதிர்ப்பைப் தெரிவித்து வருகின்றனர்.

இதுதொடர்பாக, #BoycottFrenchProducts, #BoycottFranceproducts, #boycottfrance, #boycott_French_products, #ProphetMuhammad போன்ற ஹேஷ்டாக்குகள் சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.

பிரான்ஸ் அதிபர்

இந்நிலையில், பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணிக்கும் செயலை கைவிடுமாறு பிரான்ஸ் வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய கிழக்கு நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், இம்ரான் கான் கூறிய கருத்துக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மறுப்புத் தெரிவித்துள்ளார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/feud-over-islam-imran-khan-vs-emmanuel-macron-middle-east-countries-boycott-france-products

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக