Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

அனுஷ்கா, மாதவன், அஞ்சலியின் `நிசப்தம்'... அமேஸானுக்கு ஒரு ரெக்வஸ்ட்! #SilenceTamilMovie

மாதவன், அனுஷ்கா, அஞ்சலி, ஷாலினி பாண்டே, தெலுங்கு நடிகர்களான சுப்பராஜு, ஶ்ரீனிவாஸ் அவசராலா, ஹாலிவுட் புகழ் மைக்கேல் மேட்சன் என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளத்துடன் 'அவெஞ்சர்ஸ்... அசெம்பிள்!' கணக்காக அமேசானில் குதித்திருக்கும் 'சைலன்ஸ்' எனும் தமிழ்ப்படம் (?) எப்படி இருக்கிறது?

ஒரு ஓவியத்தை எடுக்க 'பேய் வில்லா' என்று அறியப்படும் வீட்டுக்குள் செல்லும் அனுஷ்கா, அங்கே தன் காதலனான மாதவனை இழக்கிறார். மாதவனைப் பேய்தான் கொன்றது என ஊரே நம்பும்போது, யார் கொன்றார்கள் எனத் துப்புத் துலக்கும் டிடெக்டிவான அஞ்சலி, உண்மையை ஊருக்கு உரக்கச்சொன்னாரா என்பதுதான் படத்தின் 'பயங்கரமான' கதை.

சைலன்ஸ்

ஹாலிவுட் பேய் படங்கள் என்றாலே ஊரைவிட்டு தனியே ஒரு வில்லா இருக்கும். அங்கு விடுமுறையைக் கழிக்க வரும் ஒரு தம்பதியைக் கீழே பேஸ்மென்ட் ரூமில் இருக்கும் ஒரு அமானுஷ்ய சக்தி ஒலி அல்லது ஒளி எழுப்பி படிக்கட்டு வழியாக வரவைத்துக் காவு வாங்கும். அப்படித்தான் Woodside Villa எனும் இந்த பேய் வில்லாவுக்கு மாதவனும் அனுஷ்காவும் வருகிறார்கள். மாதவனின் கொடூர கொலையோடு படம் ஆரம்பிக்கிறது. ஹாலிவுட்டில் சுட்ட அதே புளித்துப்போன பழைய மாவு தோசை! கொஞ்சம் நல்ல மசாலாவாது சேர்த்திருக்கலாம்.

என்னது ஹாலிவுட் பேய்க்கதை டெம்ப்ளேட்டா என்று நினைத்தால் நம்மூர் 'சிகப்பு ரோஜாக்கள்', 'மன்மதன்' சிடிக்களை கொஞ்சம் மிக்ஸியில் அரைத்து நடுவே 2010-ல் ரிலீஸான 'Listen to your Heart' என்ற ஹாலிவுட் படத்தை உல்டாவாக மாற்றி (ஹாலிவுட் படத்தில் காதுகேட்காத வாய்பேசாத பணக்காரப் பெண்ணுக்கும் ஏழை இசைக்கலைஞனுக்கும் இடையேயான காதல் கதை) சீராகத் தூவி விட்டு இறக்கினால் 'நிசப்தம்'... பிராண சங்கடம் ரெடி!

சைலன்ஸ்

அனுஷ்கா சிறுவயதிலிருந்து ஆதரவற்றோர் இல்லத்தில் வளர்ந்ததெல்லாம் சரி... ஆனால் படத்தில் காட்டியிருக்கும் அந்த பிரமாண்ட ஹோமைப் பார்த்தால் கெட்ட ராயலாக இருக்கிறது. ரிச்னெஸ் இருக்க வேண்டியதுதான். அதற்காகக் காதில் பூ சுற்றும் அளவுக்கா? இதில் வேறு அனுஷ்காவின் கதாபாத்திரம் அனாதை. ஆனால், அப்பா அனாதை ஆசிரமம் நடத்தினார் என ஃபில்லர் வசனத்தில்கூட குழப்பியடிக்கிறார்கள்.

Also Read: பிக் பாஸ் வீட்டுக்குள் பிரபல பாடகர்... கடைசி நேரத்தில் சர்ப்ரைஸ் என்ட்ரி!

அஞ்சலி போலீஸ் டிபார்ட்மென்ட்டில் இருக்கிறார். அவர் உள்ளுணர்வு யோசிப்பதை நாமே எளிதாக யோசித்துவிடுகிறோம். அவர் வாய்ஸ் ஓவரில் வரும் வசனங்களும் புலனாய்வு செய்யும் விஷயங்களும் அமெச்சூராக இருப்பதால் சிரிப்பே வருகின்றன. அவர் பேசும் பட்லர் இங்கிலீஷ் மிகவும் பரிதாபமாய் இருக்கிறது. இதில் உச்சமாக, எல்லா வாய்ஸ் ஓவரையும் 'என் வாழ்க்கையில வந்தது மொத்தம் மூணே லெட்டர்ஸ்... Still I remember my first letter' என `கற்றது தமிழ்' மாடுலேஷனிலேயே பேசியிருக்கிறார். இதனால் அம்மணி மனதளவில் என்ன எமோஷனோடு இருக்கிறார் என்பது கடைசிவரை விளங்கவே இல்லை.

சைலன்ஸ்

உலகப் புகழ்பெற்ற செல்லோ பிளேயராய் மாதவன் பக்கா. ஆனால், அவரது கேரக்டர் பலவீனமாக எழுதப்பட்டிருப்பதால் அவரது நடிப்பெல்லாம் விழலுக்கு இரைத்த நீர். அனுஷ்கா அழகாய் இருக்கிறார். ஆனால், 'பெண்குயின்'ல் கீர்த்தி சுரேஷுக்கு நேர்ந்த அதே கதி இங்கேயும். எப்போதும் மென்சோகம் வழியும் முகத்தோடு நடித்திருக்கிறார். தேவையில்லாமல் மெத்தட் ஆக்ட்டிங் எல்லாம் பண்ணிவிட்டாரோ என்னவோ? அதிகம் எக்ஸ்பிரஷன்கள் இல்லை. ஷாலினி பாண்டேவுக்கு அனுஷ்காவின் தோழியாக நல்ல ரோல்தான் என்றாலும் அவர் செய்யும் அனைத்திலும் செயற்கைத் தனமே மிஞ்சுகிறது. 'மன்மதன்' மாதவன் தவறானவர் என்பதை நிரூபிக்க அம்மணி போகும் எல்லையெல்லாம்... சீரியல் மெட்டீரியல்!

இருப்பதிலேயே பெரிய துன்பம் ரிச்சர்ட் டாக்கின்ஸ் எனப் பெரிய சயின்டிஸ்ட்டின் பெயரை வைத்துக்கொண்டு சுற்றும் ஹாலிவுட் நடிகர் மைக்கேல் மேடிசனின் கதாபாத்திரம்தான். முதல் பாதி முழுக்கவே விசாரணை என்று எங்காவது போகிறார். அமர்கிறார். எழுந்து வருகிறார். 'ஏதாவது பண்ணுங்க சாரே' என நாம் வெறுத்துப்போய் சைலன்ஸை உடைக்கும்போதுதான் நானும் இந்தக் கதையில் இருக்கேன் என அட்டென்டன்ஸ் போடுகிறார். காமெடி, ரொமான்ஸ் என ஆங்காங்கே ஏதோ வசனங்களில் முயன்றிருக்கிறார்கள். சிரிப்புதான் சிரியா பார்டர் தொலைவிலிருந்துகொண்டு வரமாட்டேன் என்கிறது. அதிலும் டப்பிங்கில் இன்னமும் கவனம் செலுத்தியிருக்கலாம். பல கதாபாத்திரங்கள் பேசுவது டப்ஸ்மாஷ், டிக் டாக் ஃபீல்!

சைலன்ஸ்

படத்தின் ஒரே ப்ளஸ் ஷானீல் டியோவின் ஒளிப்பதிவும், பிரவீன் புடியின் எடிட்டிங்கும்தான். கிரிஷ் ஜியின் பின்னணி இசை த்ரில்லர் கதைக்கான டெம்ப்போவை சில இடங்களில் மட்டும் கூட்டுகிறது. பாடல்கள் ஸ்பீட் பிரேக்கர்ஸ். வெளிநாட்டில் நடக்கும் கதை என்பதாலோ என்னவோ லொக்கேஷன்களில் ஸ்கோர் செய்திருக்கிறார்கள். என்ன இருந்து என்ன... கதை அரைத்த மசாலா என்றால், திரைக்கதை எக்ஸ்பைரியான மசாலா. மீண்டும் ஒருமுறை அமேஸானுக்குப் படத்தை விற்று அவர்களை ஏமாற்றியிருக்கிறார்கள். அமேஸான் நம்மை ஏமாற்றியிருக்கிறது. பார்த்து பண்ணுங்க அமேஸான்!

ஒரு 20 வருடங்களுக்கு முன்னாடி ரிலீஸ் செய்திருந்தாலே துன்பியல் சம்பவமாகியிருக்கும் படத்தை இந்த 2020-ல் ரிலீஸ் செய்து ஏற்கனவே சூப்பராக சென்று கொண்டிருக்கும் வருடத்தில் இன்னமும் நம்மைச் சோதித்திருக்கிறார்கள். 'காதல்... காதலர்களை மட்டுமல்ல... குற்றவாளிகளையும் உருவாக்கும்' என இறுதியில் தயாரிப்பாளர் கோனா வெங்கட்டும் இயக்குநர் ஹேமந்த் மதுக்கரும் மெசேஜ் கார்டு போடுகிறார்கள். 'என்னணே சொல்றீங்க?' என ஜெர்க் ஆகவேண்டியிருக்கிறது. ஆனால், படம் முழுக்க ஆங்காங்கே முயன்ற ஹ்யூமர் இங்கேதான் ஒர்க்அவுட் ஆகியிருக்கிறது என எடுத்துக்கொள்ளலாம்.

சைலன்ஸ்
எப்போதும் ஸ்க்ரிப்டைத் தேர்வு செய்யும் விஷயத்தில் ஸ்கோர் செய்யும் அனுஷ்கா, மாதவன், அஞ்சலி போன்றோர் இப்படி ஒரு கதையை எப்படித் தேர்வு செய்தார்கள் என்பதுதான் நாம் துப்புத் துலக்க வேண்டிய கேஸ் ஃபைல்!


source https://cinema.vikatan.com/tamil-cinema/amazon-prime-anushka-starrer-silence-tamil-movie-review

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக