Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

``ஷார்ஜான்னு நினைச்சியா.... இது துபாய்டி மாப்ளே!'' - ராஜஸ்தானுக்கு ரஸத்தை ஊற்றிய கொல்கத்தா! #RRvKKR

இடியாப்ப சிக்கல் கொல்கத்தா நைட் ரைடர்ஸும், இடியையே இடிக்கப்பார்த்த ராஜஸ்தான் ராயல்ஸும் துபாயில் நேற்று மோதினர். ஷார்ஜாவில் வீடியோ கேம் ஆடிய ராஜஸ்தான், துபாயில் ஆடியே ரன் எடுக்க வேண்டுமென சோகத்தில் இருந்தார்கள். ஏன்னா, மைதானம் கொஞ்சம் பெருசுப்பே! கடைசி மேட்சில் இரு அணிகளுமே சிறப்பான வெற்றியைப் பதிவு செய்திருந்ததால், ப்ளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லை!

'துபாயில் இதுவரை நடந்த 5 மேட்சிலும், முதல் பேட்டிங் ஆடிய அணியே ஜெயித்திருக்கிறது' என்ற புள்ளிவிவரத்தை நெஞ்சில் அடித்து மனப்பாடம் செய்துகொண்டிருந்த ஸ்டீவ் ஸ்மித், டாஸ் ஜெயித்ததும் பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். `அடக் கடவுளே!' என ராயல்ஸ் ரசிகர்கள் தலையில் கை வைக்க, `அவனவன் எடுக்குற முடிவு, நமக்கு சாதகமாத்தான்யா இருக்கு' என குஷியானார்கள் நைட் ரைடர்ஸ் ரசிகர்கள். கில்லும், நரைனும் வழக்கம்போல் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய, முதல் ஓவரை வீசினார் ஆர்ச்சர். முதல் ஓவரில் வெறும் 1 ரன் மட்டுமே மொய் வைத்தது கொல்கத்தா.

#RRvKKR

முதல் ஓவரில் வைத்த மொய்க்கு அடுத்த ஓவரில்தான் கறிசோறு! ராஜ்புத் வீசிய பந்தை, லாங் ஆன் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் கில். 3-வது ஓவர் வீசவந்தார் உனத்கட். நரைனுக்கு நரைனை விட மெதுவாக வீசிய பந்தை, தலைக்கு மேல் கொடியேற்றினர் நரைன். மேலே போய் ஐந்து நிமிடங்கள் கழித்து திரும்ப வந்த பந்தை, `பொறுப்பாகப் பிடிக்கிறேன்' என டிராப் செய்து, ரசிகர்களை வெறுப்பாக்கினார் உத்தப்பா. ராஜ்புத் வீசிய 4வது ஓவரில், டீப் மிட் விக்கெட் திசையில் நரைனும், மிட் விக்கெட் திசையில் கில்லும் ஒரு பவுண்டரியை பில் கொடுத்தனர்.

உனத்கட் வீசிய 5-வது ஓவரில், லெக் திசையில் ஒரு சிக்ஸரும், எக்ஸ்ட்ரா கவரில் ஒரு பவுண்டரியும் விளாசிய நரைன், அடுத்த பந்திலேயே ஸ்டம்ப்புகள் தெறிக்க க்ளீன் போல்டானார். டாம் கரண் வீசிய 6-வது ஓவரில், ராணா ஒரு பவுண்டரியை விரட்டினார். பவர்ப்ளேயின் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்திருந்தது கொல்கத்தா. கோபால் வீசிய 7-வது ஓவரில் ஒரு பவுண்டரியை பறக்கவிட்டார் கில். இந்த ஐபிஎல் சீசனின் முதல் ஓவரை வீசவந்த ரியான் பராக்கை சிக்ஸர் பறக்கவிட்டு வரவேற்றார் ராணா. கோபால் வீசிய 9-வது ஓவரில், இன்னும் இரண்டு பவுண்டரிகளை விரட்டினார் கில்.

#RRvKKR

`மூணு குத்து வாங்கி உதட்டோரம் ரத்தம் வடிஞ்சுடுச்சு. இனி திருப்பி அடிக்க வேண்டியதுதான்' என ரத்தத்தை தொட்டுப் பார்த்து திவேதியாவை சத்தம் போட்டு கூப்பிட்டார் ஸ்டீவ் ஸ்மித்! ராணாவின் விக்கெட் காலி. `என்ன சொன்னாலும் யாரப்பா நீ' என ஸ்மித் மிரட்சியாக பார்த்தார். `யார் எப்படி போனா நமக்கென்ன, நீ ரசத்த ஊத்து' எனப் பொறுப்பாக பவுண்டரிகளை அடித்துக்கொண்டிருந்தார் கில். கடைசியில், அவரும் ஆர்ச்சர் பந்தில் ஆர்ச்சரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். லெக் க்ளேன்ஸ் ஆடப்போய், லீடிங் எட்ஜாகி, பந்து மூக்கு மேல் ராஜாவானது. `எனக்கு ராஜாவா நான்...' என ஆர்ச்சரே அந்தக் கேட்சையும் பிடித்தார். ரஸலும் கார்த்திக்கும் களத்தில் இருந்தனர்.

கோபால் வீசிய 9-வது ஓவரில், இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு வார்ம் அப் செய்தார் ரஸல். ராஜஸ்தான் ரசிகர்களின் வயிற்றில் புளி கரைந்தது. `லெக் சைடு போடாதடா. ஆஃப் சைடே மெயின்டெய்ன் பண்ணு. அடிக்குறான்னு தெரியுதுல்ல' என தூரத்திலிருந்து சைகை காட்டிக்கொண்டிருந்தார் வார்னே. 2 ஓவர்கள் வீசி 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்திருந்த ஆர்ச்சர், 14-வது ஓவரை வீசவந்தார். கார்த்திக்கின் விக்கெட் காலி. கேப்டன், 1 ரன்னை மட்டும் எடுத்துக்கொண்டு `இன்னைக்கு பேட்டிங் கிளவுஸ் சரியில்ல, கீப்பிங் கிளவுஸ்ல பார்த்துக்கலாம்'என கிளம்பிவிட்டார். அந்த ஓவரிலும் வெறும் 2 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்தார் ஜோசிய ஆர்ச்சர்!

#RRvKKR

15 ஓவரை வீசவந்தார் ராஜ்புத். முதல் பந்து அகலப் பந்து. அடுத்த பந்து அவ்வளவுதான் பந்து. சிக்ஸருக்கு `சொய்ங்' என பறந்தது. `என்னடா ஸ்கெட்சா' என மூக்கைச் சொறிந்தார் ரஸல். ஆனால், அடுத்த பந்திலேயே அவுட் சைடு போனதை விரட்டிப் பிடித்து அடித்து கேட்சாகி கிளம்பினார். `வார்னே வாயை வெச்சா, அது ராங்கா போனதில்ல' என தனக்குதானே தம்ஸ் அப் காட்டிக்கொண்டார் ஷேன்.

அதன்பிறகு, 17வது ஓவரில் மீண்டும் ஆர்ச்சர் வந்தார். கம்மின்ஸ் ஒரு பவுண்டரியை விரட்ட, மார்கன் நூழிலையில் ஒரு சிக்ஸரை வெளுத்தார். எல்லாப் புகழும் டீப் பேக்வார்ட் பாயின்டில் நின்றிருந்த சாம் கரண் அண்ணன் டாம் கரணுக்கே! `நீ பண்ண தப்பை, நீதான் சரி பண்ணனும்' என பந்தைக் கொடுத்தனுப்பினார் ஸ்டீவ் ஸ்மித். 18வது ஓவரில், கம்மின்ஸின் விக்கெட்டைக் கழற்றினார் டாம் கரண். ஒரு வித்தியாசமான கோணத்தில் பந்தை விரட்டிப்போய் பிடித்த சாம்சனின், பின்பக்க தலை தரையில் இடித்தது. ஓடிவந்த மருத்துவக்குழு, `ஒண்ணும் பிரச்னை இல்லை' எனக் கிளம்பிவிட்டார்கள். அடுத்து ராஜ்புத் வீசிய 19வது ஓவரில் ஒரு பவுண்டரியும், டாம் கரண் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்ஸரும் மட்டுமே கொல்கத்தாவுக்கு கிடைத்தது. 20 ஓவர்களின் முடிவில், 174/6 என ஓரளவுக்கு நல்ல ஸ்கோரை எடுத்து இன்னிங்ஸை முடித்தது கொல்கத்தா.

175 எடுத்தால் வெற்றி என இன்னிங்ஸைத் தொடங்கியது ராயல்ஸ். பட்லரும், ஸ்மித்தும் ஓபனிங் இறக்க, நரைன்தான் பவுலிங்கையும் கொல்கத்தாவுக்காக ஓபன் செய்தார். வைடு லாங் ஆனில் ஒரு சிக்ஸரை வெளுத்தார் பட்லர். நரைன் முகத்தில் வழக்கம்போல் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. அடுத்த ஓவரில், தனது தேசிய அணி கேப்டனான ஸ்மித்தை வெச்சி செய்தார் கம்மின்ஸ். கடைசிப் பந்தில் கார்த்திக்கிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். எதிரணி கேப்டனும் தன்னைப் போலவே படுசுமாராக ஆடியதில், கார்த்திக்கின் முகம் பூரித்துப்போனது. அடுத்து, சஞ்சு களம் புகுந்தார்!

மாவி வீசிய 3வது ஓவரில், `நங்'கென ஒரு பவுண்டரி. இன்னொரு பக்கம் வெறிக்கொண்டு காத்திருந்த பட்லர். கம்மின்ஸ் வீசிய 4வது ஓவரில், சிக்ஸரை விரட்டினார். "எல்லாமே இனிமே நல்லாத்தான் நடக்கும். பட்டாசும் இனிமே கொளுத்தாமே வெடிக்கும்" என ராஜஸ்தான் ரசிகர்கள் பாடி முடிக்கும் முன் அவர்களின் நெஞ்சு வெடித்தது. மாவியின் பந்தில் அவுட் ஆனார் சாம்சன். மீண்டும் கம்மின்ஸ் வந்தார். `இவனெல்லாம் இப்படியே போக விட்றனும்' என பவுண்டரிக்கு ஆசைப்படாமல் பந்துகளைக் கடத்தினர். 6 ஓவர்களின் முடிவில், 39/2 என தத்தளித்துக் கொண்டிருந்தது ராஜஸ்தான்.

#RRvKKR

அடுத்த ஓவரிலேயே வெறிக்கொண்ட பட்லரின் விக்கெட்டைக் குறிவைத்துத் தூக்கினார் மாவி. ஷார்ட் தேர்ட் மேனில் கேட்ச் பிடித்தார் வருண் சக்கரவர்த்தி. அதற்கடுத்த ஓவரின் முதல் பந்திலேயே உத்தப்பாவின் விக்கெட்டைக் கழற்றினார் நாகர்கோட்டி. கேட்ச் பிடித்தது மாவி. நாகர்கோட்டியும் மாவியும் அண்டர் 19 உலகக்கோப்பையின் தண்டர் ரேஞ்சர்களாக செயல்பட்டவர்கள். `தண்டர் ஸ்டார்ம் ரேஞ்சர் ஃபோர்ஸ்... யா' என மார்ஃபரை அமுக்கிவிட்டால்போதும், மரண மாஸாக பந்து வீசுவார்கள். அதைக் கண்கூடாக பார்த்துவிட்ட கொல்கத்தா ரசிகர்கள் அளவில்லா சந்தோஷத்தில் ஷாருக்கான் பாடலுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தார்கள். அதே ஓவரில் நாகர்கோட்டி, பரக்கின் விக்கெட்டையும் கழட்ட பாடலின் சவுண்டை இன்னும் கொஞ்சம் ஏற்றினார்கள்.

Also Read: IPL 2020: கலக்கிய இளைஞர் படை... ராஜஸ்தானுக்கு முதல் தோல்வியைப் பரிசளித்த கொல்கத்தா! #RRvKKR

10 ஓவர்களுக்கு 61 மட்டுமே எடுத்து 5 விக்கெட்களை இனாமாகக் கொடுத்திருந்தது ராஜஸ்தான் ராயல்ஸ். `ராயல் பரம்பரைனாலும் இவ்வளவு வள்ளல்தன்மை கூடாதப்பா' என வருத்ததில் இருந்தார்கள் ராஜஸ்தான் ரசிகர்கள். `60 பந்துக்கு 114 ரன்தானே, 4 ஓவர்லேயே மேட்ச்சை முடிச்சுவாப்ல திவேதியா' என தாத்தா - பாட்டிகள் மட்டும் நம்பிக்கையாக இருந்தார்கள். வருண் வீசிய 11வது ஓவரில், திவேதியாவும் அவுட்! 14வது ஓவரை நரைன் வீச, அதில் ஒரே ஒரு ஆளாக ஒன்பது மாசம் பெயின்ட் அடித்துக்கொண்டிருந்த கோபாலும் அவுட். அடுத்த ஓவரை வருண் வீச, அதில் ஆர்ச்சரும் அவுட்! அட்டகாசமான கேட்சைப் பிடித்தார் நாகர்கோட்டி. 15 ஓவர்களுக்குள் 8 விக்கெட்டை இழந்து 90 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது ராயல்ஸ்.

#RRvKKR

ராஜஸ்தான் ரசிகர்களை விட, கொல்கத்தா அணியில் ஒருவர் பெருஞ்சோகத்தில் இருந்தார். அவர்தான் குல்தீப் யாதவ்! 'நான் மேட்ச்ல இருக்கேனா, இல்லையா?' என அவருக்கே குழப்பம் வந்துவிட்டது. சோகமாக ஃபீல்டிங் செய்துக்கொண்டிருந்தார். கடைசியாக, 15வது ஓவரை வீசவைத்தார் கார்த்திக். அந்த ஓவரில் 6 ரன்களை மட்டும் விட்டுக்கொடுத்தவர், 17-வது ஓவரில் உனத்கட்டின் விக்கெட்டைக் கழற்றினார். 19-வது ஓவரில் `என் வழி தோனி வழி' என 3 சிக்ஸர்களை பறக்கவிட்டுக்கொண்டிருந்தார் டாம் கரண். நரைன் முகத்தில் அதற்கும் எந்த ரியாக்‌ஷனும் இல்லை. கடைசியாக, குல்தீப் வீசிய ஓவரில் ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி என 137 ரன்களோடு இன்னிங்ஸை முடித்தது ராயல்ஸ். 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது கொல்கத்தா!

"அது ஒண்ணுமில்ல, எங்க ஆளுங்க சார்ஜாவுல விளையாண்ட நினைப்புலேயே இருக்காங்க. இது பெரிய கிரவுண்டுனு மறந்துட்டாங்க பாவம். இதோ, நான் இன்னைக்கு டிரெஸ்ஸிங் ரூம்ல புரிய வெச்சுடுறேன். அப்புறம், நான் கம்மின்ஸ் பந்துல ஒண்ணும் கஷ்டப்படல. `இந்த பந்தை எல்லாம் நீ நெட்ஸ்லயே அடிப்பியே மச்சான்'னு கம்மின்ஸும் சொன்னாப்டி" என்றார் ஸ்டீவ் ஸ்மித். ''இது எங்களுக்கு நல்ல மேட்ச். ஆனா, கச்சிதமான மேட்ச் இல்ல. அடுத்தடுத்து சரி பண்ணிக்க வேண்டியது நிறைய இருக்கு" என்றார் கார்த்திக். முக்கியமான 2 விக்கெட்களைக் கைப்பற்றிய மாவிக்கு, ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது!


source https://sports.vikatan.com/ipl/ipl-2020-rajasthan-royals-vs-kolkata-knight-riders-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக