Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

திருப்பத்தூர்: `600 போலி விவசாயிகள்!’ - கிசான் திட்ட முறைகேட்டில் பா.ஜ.க நிர்வாகி கைது

பிரதமரின் கிசான் நிதி உதவித் திட்டத்தின்கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6,000 ரூபாய் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில், விவசாயிகள் அல்லாத ஆயிரக்கணக்கானோர் போலியாக சேர்க்கப்பட்டு நிதி உதவி பெற்றிருக்கிறார்கள். இது தொடர்பாக, சி.பி.சி.ஐ.டி போலீஸார் தமிழகம் முழுவதும் தீவிர விசாரணை மேற்கொண்டு, முறைகேட்டில் ஈடுபட்ட நபர்கள்மீது கைது நடவடிக்கை எடுத்துவருகிறார்கள்.

விவசாயி

போலி விவசாயிகளின் வங்கிக் கணக்கிலிருந்தும் பணம் திரும்பப் பெறப்பட்டுவருகிறது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் நடத்தப்பட்ட ஆய்விலும், ஆயிரக்கணக்கான போலி விவசாயிகள் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக, எட்டு கணினி ஆபரேட்டர்கள் தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

Also Read: வேலூர்: `8 கணினி ஆபரேட்டர்கள் டிஸ்மிஸ்!’ - கிசான் திட்ட முறைகேட்டில் அதிரடி

சி.பி.சி.ஐ.டி போலீஸார், வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஏற்கெனவே நான்கு பேரைக் கைதுசெய்து சிறையிலடைத்திருக்கிறார்கள். இந்தநிலையில், திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக நாட்றாம்பள்ளியை அடுத்துள்ள வெலக்கல்நத்தம் நந்தபெண்டா பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகரான கண்மணி (33) என்பவரை சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்திருக்கிறார்கள்.

கைது

பா.ஜ.க-வில், ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியத் தலைவராக பொறுப்புவகிக்கும் கண்மணி, கணினி மைய உரிமையாளரான ஜெகநாதன் என்பவரைக் கூட்டுச்சேர்த்துக்கொண்டு அந்தப் பகுதியைச் சேர்ந்த 600 பேரின் ஆதார் எண் மற்றும் வங்கி விவரங்களைப் பெற்று கிசான் திட்டத்தில் முறைகேடு செய்திருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, கணினி மைய உரிமையாளர் ஜெகநாதனையும் சி.பி.சி.ஐ.டி போலீஸார் கைதுசெய்து விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/government-and-politics/crime/cbcid-arrested-bjp-cadre-in-tirupathur-over-kissan-scheme-fraud

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக