Ad

வெள்ளி, 2 அக்டோபர், 2020

IPL 2020: மும்பை மேரி ஜான்... அரே ஓ சம்போ பஞ்சாப்! #KXIPvMI

223 ரன்களை இலக்காக நிர்ணயித்தும் எதிரணிக்கு 2 பாயின்ட்களை இனாமாக கொடுத்துவிட்டு வந்த கிங்ஸ் லெவன் பஞ்சாப், 201 ரன்கள் இலக்கை விரட்டி, சூப்பர் ஓவரில் தோற்ற மும்பை இந்தியன்ஸ் என இருவரும், நேற்று அபுதாபியில் வைத்து துக்கம் விசாரித்துக்கொண்டார்கள்.

`நாங்க நல்லாதான் விளையாடுறோம். விதிதான் எக்கு தப்பா விளையாடிடுது' என கண்ணீர் வடித்த பஞ்சாப்பிற்கு கட்டிப்பிடி வைத்தியம் பார்த்தது மும்பை. `எங்க மேல அவ்ளோ பாசமா ப்ரோ' என ஆனந்த கண்ணீர் பைப்பை திறந்து விட்டு, மும்பையை முதல் பேட்டிங் ஆடச்சொன்னது டாஸ் ஜெயித்த பஞ்சாப். போன மேட்ச் பொறுப்பாக பந்து வீசிய முருகன் அஷ்வினை கழற்றிவிட்டு, கிருஷ்ணப்ப கௌதமை அணியில் இணைத்தார் ராகுல். மும்பை அணி வீரர்களில் எந்த மாற்றமும் இல்லை.

#KXIPvMI

டி காக்கும், ரோஹித்தும் இன்னிங்ஸை ஓப்பன் செய்ய, காட்ரெல் முதல் ஓவரை வீசினார். முதல் நான்கு பந்துகள் டாட். ஐந்தாவது பந்தில் டி காக் அவுட். மீண்டும் ஒரு டாட். முதல் ஓவரே, விக்கெட் மெய்டன்! `என்ன காட்ரெல், மாஸ் காட்றேள்' என சிரித்த முகமாக இருந்தார்கள் பஞ்சாபிகள். ஷமி வீசிய 2-வது ஓவரில், 2 பவுண்டரிகளை விரட்டினார் ரோஹித். முதல் பவுண்டரி மூலம், 5 ஆயிரம் ஐபிஎல் ரன்களை கடந்து சாதனைப் படைத்தார் ரோ ப்ரோ. ஓவரின் கடைசிப் பந்தில் ரோஹித்துக்கு தவறாக எல்பிடபிள்யு கொடுத்துவிட்டு, பிறகு வெறுங்காற்றில் கையை விட்டு அழித்தார் நடுவர். காட்ரெல் வீசிய 3-வது ஓவரில், மிட்-ஆஃப் மற்றும் எக்ஸ்ட்ரா கவருக்கு இடையே உள்ள கேப்பில், இரண்டு பவுண்டரிகளை விளாசினார். 4வது ஓவரில் சூர்யகுமார் ரன் அவுட்!

`ஏக் காவ் கா' கிஷன் உள்ளே நுழைந்தார். கையில் பேட்டை பிடித்ததும் கடைசியில் ஆடிய மேட்ச், அவர் கண்ணு முன்னால் வந்துப்போனது. பந்துகளை உருட்ட ஆரம்பித்தார். முருகன் அஷ்வினுக்கு பதிலாக நுழைந்த கௌதம், பந்து வீச வந்தார். மிட் ஆஃபில் ஒன்று, பாயின்ட்டில் ஒன்று, `மடார்' என இரண்டு பவுண்டரிகளை விளாசினார் ரோஹித். பவர்ப்ளேயின் முடிவில் 2 விக்கெட் இழப்பிறகு 41 ரன்கள்தான் எடுத்திருந்தது மும்பை. 7-வது ஓவர் வீசவந்தார் நீஷம். அப்போதும் `வாழ்க்கையே வேஷம்' என தவழ்ந்துக்கொண்டிருந்தார் கிஷன். ரோஹித்துக்கு திக் எட்ஜாகி ஒரு பவுண்டரி கிடைத்தது.

#KXIPvMI

ஷமி வீசிய 8-வது ஓவரில், 4 சிங்கிள்கள் மட்டுமே கிடைத்தன. பிஷ்னாய் வீசிய 9-வது ஓவரில், ஒரு பாயின்ட் மற்றும் ஷார்ட் தேர்ட் திசையில் ஒரு பவுண்டரியை லேட் கட் செய்தார் ரோஹித். 10வது ஓவரில், ரன் அவுட் வாய்ப்பில் இருந்து நூழிலையில் தப்பித்தார் கிஷன். ரோஹித்துக்கு செம வருத்தம். 11வது ஓவரில்தான், கொஞ்சம் சுறுசுறுப்பாகி ஒரு சிக்ஸரை அடித்தார் கிஷன். `இந்த ஒரு சிக்ஸரை அடிக்கவா, 21 பந்தை உருட்டின?' என ரோஹித் கோபமும், சோகமும் கலந்து கேட்க, `அண்ணே உனக்கு ஒரு விஷயம் சொல்லவா. இதுதான் இன்னைக்கு நம்ம டீம் அடிச்ச முதல் சிக்ஸே' என கிஷன் சொல்ல, தூக்கி வாரிப்போட்டது ரோஹித்துக்கு.

கடைசியில் அது நடந்தேவிட்டது. 32 பந்துகளைப் பிடித்து, ஒரு சிக்ஸர், ஒரு பவுண்டரி மட்டுமே விளாசி, 28 ரன்கள் அடித்திருந்த கிஷன், கௌதம் வீசிய 14-வது ஓவரில் அவுட்டானார். `ஆஹா, கிளம்பிட்டான்டா' என சந்தோஷத்தில் டாப் கியரைப் போட்டது மும்பை. 15வது ஓவரில், பொல்லார்டு ஒரு சிக்ஸரும், ரோஹித் ஒரு சிக்ஸரும் வெளுத்தனர். 15 ஓவரின் முடிவில், 102/3 என்ற நிலையில் இருந்தது மும்பை. நீஷம் வீசிய 16வது ஓவரில், லாங் லெக்கில் ஒரு பவுண்டரி, மிட் ஆஃப் - எக்ஸ்ட்ரா கவர் திசைக்கு இடையில் ஒரு பவுண்டரி, ஸ்கொயர் லெக்கில் ஒரு சிக்ஸர், கவருக்கு மேல் ஒரு சிக்ஸர் என மளிகை சாமான் பட்டியல் வாசித்தார் ரோஹித். `ஒரு சென்சுரியை போட்டு விட தல' என மும்பை ரசிகர்கள் மீசையை முறுக்க, அடுத்த ஓவரே அவுட்டானார் ரோஹித். `இன்னா தல' என அதிர்ச்சியானார்கள் பல்தான்கள். `எஞ்சாமி' என ஷமியைப் பார்த்து சந்தோஷ கண்ணீர் வடித்தார்கள் பஞ்சாப் ரசிகர்கள். 

#KXIPvMI

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியா, நீஷம் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்ஸரையும் இரண்டு பவுண்டரியையும் பறக்கவிட்டார். 3 ஓவர் வீசி 17 ரன்கள் மட்டுமே கொடுத்திருந்த ஷமி, 19வது ஓவரை வீசவந்தார். அதன் 2வது பந்தில் ஒரு சிக்ஸரை விளாசிவிட்டு, பொல்லார்டிடம் ஆட்டோ ஏற்றி அனுப்பி வைத்தார் பாண்டியா. பிறகு, பொல்லார்டு தன் பங்குக்கு ஹாட்ரிக் பவுண்டரிகளை ஊமைக்குத்தாக குத்திவிட்டார். ஆரஞ்சு தொப்பி ராகுலுக்கு கண்கள் கலங்காத குறை!

கடைசி ஓவரை வீசவந்தார் கௌதம். இதிலும் அப்படியே! 2வது பந்தை சிக்ஸருக்கு அனுப்பிவிட்டு, கௌதமை பொல்லார்டிடம் டாக்ஸி ஏற்றி அனுப்பி வைத்தார் பாண்டியா. பிறகு, பொல்லார்டு தன் பங்குக்கு ஹாட்ரிக் சிக்ஸர்களை முரட்டு குத்தாக குத்திவிட்டார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் 89 ரன்களை குவித்திருந்தது மும்பை அணி. `விடுணே, அவிய்ங்க நிறைய ரன் அடிச்சாதானே சேஸ் பண்ணும்போது நீ நிறைய அடிக்க முடியும். நிறைய ரன் அடிச்சாதானே ஆரஞ்சு கேப் வெச்சிருக்க முடியும். எல்லாம் உன் நல்லதுக்குதான் பண்ணோம். எதாவது தப்பா நடந்துச்சுனா `கஜா கா தோஸ்த்'னு சொல்லுங்க' என ராகுலின் தோளில் தட்டிக்கொடுத்துவிட்டு சந்தோஷமாக கிளம்பினார்கள் பஞ்சாப் பெளலர்கள். 192 ரன்கள் அடித்தால் வெற்றி எனும் இலக்கை விரட்ட ஆரம்பித்தது பஞ்சாப்.

#KXIPvMI

ராகுலும் மயங்கும் ஓப்பனிங் இறங்க, முதல் ஓவரை வீசினார் போல்ட். மயங்க் ஒரு பவுண்டரியும், ராகுல் ஒரு பவுண்டரியும் விளாசினார்கள். சிறப்பான ஸ்டார்ட்! பேட்டின்ஸன் வீசிய 2வது ஓவரில் முதல் பந்தை கவருக்கு மேல் ஒரு பவுண்டரியை விரட்டினார் மயங்க். அவரே போல்ட் வீசிய 3வது ஓவரில், டீப் பாயின்ட்டில் இன்னொரு பவுண்டரியை விரட்டினார். 5வது ஓவரை வீசவந்தார் பும்ரா. பந்து மயங்கைக் கடந்து ஸ்டெம்ப்பைத் தகர்த்தது. 18 பந்துகளில் 25 ரன்களோடு நடையைக் கட்டினார். க்ருணால் வீசிய 6வது ஓவரில் கருண் நாயார், டக் அவுட்! பவர் ப்ளேயின் முடிவில் பஞ்சாபும் மும்பையைப் போலவே, 41/2 என்கிற நிலைமையில் இருந்தது.

ராகுல் சஹார் கக்கிய விஷ பந்துகளில், பஞ்சாப் அணியால் 4 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. க்ருணால் வீசிய 7-வது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார் பூரான். சஹார் வீசிய அடுத்த ஓவரில், ராகுலும் நடையைக் கட்டினார். மேக்ஸ்வெல் உள்ளே நுழைந்தார். பேட்டின்ஸன் வீசிய அடுத்த ஓவரில், இன்னொரு பவுண்டரியை விரட்டினார் பூரான். 10 ஓவரின் முடிவில் 3 விக்கெட்களை இழந்து 72 ரன்கள் மட்டுமே எடுத்திருந்து பஞ்சாப். 11வது ஓவரில் பாம்புக்கும் பூரானுக்கும் சண்டை! சஹார் பந்தில் ஒரு சிக்ஸரைக் கொளுத்திவிட்டார் பூரான். அடுத்து பும்ரா வந்தார், அவரையும் விட்டுவைக்கவில்லை பூரான். இன்னொரு பவுண்டரி.

#KXIPvMI

இப்படி ஒற்றை ஆளாக போராடிக்கொண்டிருந்தவர் 14வது ஓவரில் அவுட்டாகி கிளம்பினார். 27 பந்துகளில் 44 ரன்கள் எடுத்திருந்தார் பூரான். அவருக்கு கம்பெனி கொடுக்க வேண்டிய மேக்ஸ்வெல், 13 பந்துகளில் 9 ரன்களை சிறுசேமிப்பு செய்திருந்தார். 15வது ஓவரில், அந்த உண்டியலையும் உடைத்தது மும்பை. 11 (18) ரன்களில் நடையைக் கட்டினார் மேக்ஸி. பும்ரா வீசிய 16வது ஓவரில், நீஷமும் அவுட். கடைசி, 4 ஓவர்களில் ஓவருக்கு ஒரு விக்கெட் என பறிகொடுத்தது பஞ்சாப்.

Also Read: IPL 2020: சிக்கலில் சிஎஸ்கே... 3 மாற்றங்கள் செய்வாரா தோனி? #CSKvSRH #Dhoni

ஒரு ஓவர் தள்ளி 18வது ஓவரில் சர்ஃப்ராஸ் கானும் அவுட். 19வது ஓவரில் பிஷ்னாயும் அவுட். போல்ட் பந்தில் ஒரு சிக்ஸரும் பவுண்டரியும், பும்ராவின் கடைசி ஓவரில் ஒரு பவுண்டரியும் விளாசி தன் கோபத்தைத் தீர்த்துக்கொண்டார் கௌதம். 20 ஓவரின் முடிவில், 8 விக்கெட் இழப்பிறகு 143 ரன்கள் மட்டுமே எடுத்தது பஞ்சாப். 48 ரன்கள் வித்தியாசத்தில் ஜெயித்தது மும்பை. "ரொம்ப கஷ்டமா இருக்குங்க. ஜெயிக்க வேண்டிய மேட்ச் எல்லாத்தையும் தோத்துகிட்டே இருக்கோம். இன்னொரு பெளலரோ, ஆல் ரவுண்டரோ இருந்தா நல்லாருக்கும். கோட்ச் கூட பேசணும்" என கிளம்பிவிட்டார் ராகுல்.

#KXIPvMI

"பஞ்சாப் டீம் படு பயங்கரமான டீமாச்சே. இப்படி நாம உருட்டினா என்னத்துக்கு ஆகுறதுனு பயந்துட்டேன். நல்லவேளையா ஹர்திக்கும் பொல்லார்டும் சரவெடி கொளுத்துனாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு" என்றார் ரோஹித். பஞ்சாப் பெளலர்கள ஊமைக் குத்தாய் குத்திய பொல்லார்டு ஆட்டநாயகன் விருது வென்றார்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-kings-xi-punjab-vs-mumbai-indians-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக