Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

`கிச்சா ம்ம்ம்ம்...' ஸ்பார்க் செக் செய்த சிஎஸ்கே... ருத்ர தாண்டவமாடிய மும்பை! #CSKvMI

ஒரு நாள், ஒரு டீம், ஐ.பி.எல் கிரிக்கெட் விளையாட ஐக்கிய அரபு அமீரகம் போகையில திடீருன்னு இரண்டு ரிட்டையர்மென்ட் செய்தி துரத்துச்சுனா...

அதுல ஒண்ணு ஓட ஓளிய பால்கனில இடம் இல்லாம, மேட்ச் நாள் நெருங்க நெருங்க, பாஜியும் ஊரைத் தாண்டி சரிவுல பாய, அந்த சரிவுல ஒரு பியூஷ் சாவ்லா இருந்தா...

அங்க சாவ்லா இருந்து, பாஜியை விட்டு, தாஹிரை விட்டு, கடைசியில கையில சிக்குன கரன் சர்மாவை பிடிச்சு தொங்க, கீழ குதிக்கலாம்னா பிராவோவுக்கு காயம். மேல முரளி விஜய் உட்கார்ந்திருக்காப்ல. சரி, இதே லெவனை வெச்சு ஆடிருவோம்னு நினைக்குறப்போ, ஒரு கொடி மெல்ல அந்த டீமை வளைச்சு இறுக்குனா...

#CSKvMI

அந்த கொடி கேதர் ஜாதவ்னு தெரிய, இப்போ அங்கேயே இருக்கலாம்னா, கேதர் ஜாதவ் ஃபினிஷ் பண்ணிடுவாப்ல. `என்னடா இது ச்சைக்'னு அந்த டீம் மேல பார்க்க. மேலே வீசுன டாஸ் காயினோட, பனியும் வந்து விழுக...

அவன் ஒரு நொடி... ப்ளேயிங் லெவனாவது, ப்ளே ஆஃபாவது, குவார்ட்டர் ஃபைனலாவது, குவாலிஃபையராவதுனு... ஸ்பார்க் போனால் கப் போச்சுனு கண்ணை மூடி, நாக்கை நீட்டி... ஆஹான்னு சொன்னா... நாக்கையும் வெட்டிடுச்சு இந்த மும்பை இந்தியன்ஸ்!

நேற்று சார்ஜாவில் நடைபெற்ற 2020 ஐபிஎல்லின் 41வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியுடன் பலவீன பரீட்சை நடத்தியது சென்னை சூப்பர் கிங்ஸ். டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் கெய்ரான் பொல்லார்டு, பௌலிங்கைத் தேர்ந்தெடுத்தார். `சந்தானம், கொஞ்சம் பொறுப்பா... மியூசிக் போடுவாங்க. ஃபீல் பண்ணிட்டு போ' என அம்பயர்களே தோனியிடம் சொல்லாத குறை. ரோகித் சர்மாவுக்கு காயம் ஏற்பட்ட காரணத்தினால், பொலார்டு மும்பை அணியை வழிநடத்தினார். சவுரப் திவாரி, ரோகித்துக்கு பதிலாக அணிக்குள் நுழைந்தார். சென்னை அணியில், வாட்சன், சாவ்லா மற்றும் கேதாருக்கு பதிலாக ருதுராஜ், தாஹிர் மற்றும் ஜெகதீசன் அணிக்குள் இணைந்தனர்.

#CSKvMI

ருத்துராஜும் டுப்ளெஸ்ஸியும் சென்னை அணியின் இன்னிங்ஸைத் துவங்க, முதல் ஓவரை வீசவந்தார் போல்ட். இளம் வீரரான ருத்துராஜ், கையில் இரண்டு ஒயர்களைப் பிடித்துக்கொண்டு, `கிச்சா ம்ம்ம்ம்...' என ஸ்பார்க் செக் செய்துகொண்டிருந்தார். ஸ்பார்க் வருவதில் சின்ன சிக்கலாகிப்போனதில் ஒயர்களை வாயில் வைத்து கடித்த நேரம், ஆயிரம் வோல்ட் மின்சாரத்தை பாய்ச்சினார் போல்ட். முதல் ஓவரே, விக்கெட் மெய்டன். களம் புகுந்தார் ராயுடு.

இரண்டாவது ஓவரை வீச வந்தார் பும்ரா. 2வது ஓவரில் 2வது பந்தில் முதல் ரன்னை எடுத்தது சென்னை அணி. அடுத்த பந்தில் ஒரு டபுள்ஸ். வழிந்து வந்த கண்ணீருக்கு இடையிலும் சற்று ரிலாக்ஸாகி கண்ணிமைத்தார்கள் சென்னை ரசிகர்கள். ராயுடு அவுட்! அரைக்குழி பந்தில் அம்பத்தியை விழி பிதுங்க வைத்தார் பும்ரா. அடுத்ததாக உள்ளே வந்தார் ஜெகதீசன். சென்னை அணியில் ஆடிக்கும் அமாவசைக்கும் கிடைக்கும் இது போன்றதொரு கோல்டன் வாய்ப்பை பயன்படுத்தாமல் கோல்டன் டக்கில் வெளியேறினார்.

இரண்டாவது ஓவரிலேயே களத்துக்குள் நுழைந்தார் தோனி. 3வது ஓவரை வீசவந்தார் போல்ட். இம்முறை டுப்ளெஸ்ஸி அவுட். ஓவர் பிட்சாகி, வைடு அவுட் சைடு ஆஃப் சென்ற பந்தை விரட்டியடித்து கீப்பரிடம் கேட்ச் ஆனார். `இன்னும் என் வாழ்க்கையில, என்னென்ன கொடுமை எல்லாம் பார்க்கணும்னு இருக்கோ' என ஒரு பொசிஷனில் நின்றுகொண்டு ஃபீல் செய்தார்கள் சென்னை ரசிகர்கள். ஜடேஜா உள்ளே வந்தார். `இனி தோனியும் ஜடேஜாவும் சேர்ந்து உருட்டுற உருட்டுல கந்தர்வகோட்டை சமஸ்தானமே அதிரப்போகுது! பார்ட்னர்ஷிப்னா என்ன, கேப்டன்ஷிப்னா என்ன, ஸ்போர்ட்ஸ்மென்ஷிப்னா என்ன, ஃப்ரெண்ட்ஷிப்னா என்னனு இன்னைக்கு பார்ப்பீங்கடா' என கண்ணைத் துடைத்துக்கொண்டு அமர்ந்தார்கள் சென்னை ரசிகர்கள்.

#CSKvMI

4வது ஓவரை வீச வந்தார் பும்ரா. முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி. ஆனால், அதுவும் நூலிழையில் எட்ஜாகி போனது என்பது தனிக்கதை. மூன்றாவது பந்தில் இன்னொரு பவுண்டரி அடித்தார் தோனி. இம்முறை கவர் திசையில் ஒரு பன்ச். 5வது பந்தில் ஜடேஜாவுக்கு தன் பங்குக்கு ஒரு பவுண்டரியை விளாசினார். `நீ அடி, நான் பார்க்கணும்' என `ஜெயம்' படத்தில் வருகின்ற சதாவை போல் டிவி முன்னர் உக்கிரமாக அமர்ந்திருந்தார்கள் அன்பு குகை வாசிகள்.

நல்லவேளையாக, 5வது ஓவரை வீசவந்தார் க்ருணால் பாண்டியா. 3 ரன்கள் கிடைத்தது. கொஞ்சமாக மீண்டுக்கொண்டிருந்த சென்னையை, மொத்தமாக காலி செய்ய மீண்டும் வந்தார் போல்ட். ஜடேஜா அவுட். ஜடேஜா அடித்த அடிக்கு, பவுண்டரியைத் தாண்டி பந்து பறந்திருக்கும் என கேமரா மேனே நம்பினார். ஆனால், பந்தோ மிட் விக்கெட்டில் நின்றுக்கொண்டிருந்த க்ருணாலைப் பிடித்தது. பவர் ப்ளேயின் முடிவில், 24 ரன்களுக்கு 5 விக்கெட்களைப் பறிகொடுத்து பரிதாபகராமான நிலையில் சுருண்டு படுத்திருந்தது சென்னை அணி.

ஏழாவது ஓவரை வீசவந்தார் ராகுல் சஹார். இறங்கிவந்து டமாரென ஒரு சிக்ஸரை வெளுத்தார் தோனி! அந்த சிக்ஸரை ரீப்ளே காட்டி முடிப்பதற்குள், அவுட்டும் ஆனார். அதுவரை `ஜெயம்' சதா மோடில் இருந்த சென்னை ரசிகர்கள், `ப்ரெண்ட்ஸ்' க்ளைமாக்ஸ் விஜய் மோடுக்கு மாறினார்கள். சென்னையின் வீடுகளுக்கு உள்ளேயும் நேற்று மழை பெய்தது. சாம் கரணும், தீபக் சஹாரும் களத்தில் இருந்தார்கள்.

#CSKvMI

ராகுல் சஹார் வீசிய ஆட்டத்தின் 9வது ஓவரில், சாம் கரண் ஒரு சிக்ஸரை வெளுத்தார். `என்ன கரண், என் தம்பி ஓவர்லேயே அடிக்குறீங்க. இதெல்லாம் ரொம்ப தப்புங்க' என கைமாறாக தன் விக்கெட்டை தியாகம் செய்துவிட்டுக் கிளம்பினார் தீபக் சஹார். சென்னை அணியின் கடைசி நம்பிக்கையான ஷ்ரதுல் தாக்கூர் உள்ளே வந்தார். குல்டர் நைல் வீசிய 10வது ஓவரில், லாங் லெக் திசையில் ஒரு சிக்ஸரை பறக்கவிட்டார் சாம் கரண். அதன் மூலம், 49 எனும் கண்டத்தைக் கடந்தது சென்னை அணி.

அடுத்த ஐந்து ஓவர்கள் யாராரோ வந்து பந்து வீசிப்போனார்கள். பவுண்டரியும் வரவில்லை, விக்கெட்டும் வரவில்லை. மீண்டும் 15வது ஓவரை வீச குல்டர் நைலே வந்தார். பெரும் நம்பிக்கைக்குரிய நட்சத்திர பேட்ஸ்மேன் தாக்கூரின் விக்கெட்டைக் கழற்றினார். சென்னை அணி சரிந்தது! பிறகு, 17வது ஓவரில் ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார் இம்ரான் தாஹிர். 18வது ஓவரில், சாம் கரணும் ஃபைன் லெக்கில் ஒரு பவுண்டரியை விளாசினார். பும்ரா வீசிய 19வது ஓவரில், தாஹிர் செம கூலாக ஒரு பவுண்டரியைத் தட்டிவிட்டார். சிஎஸ்கே 100 ரன்களை எட்டியது!

#CSKvMI

ஓடி ஓடி, சிறுக சிறுக சேர்த்த 40 ரன்களோடு களத்தில் இருந்தார் சாம் கரண். கடைசி ஓவரை விசவந்தார் போல்ட். 2 வது பந்தை, டீப் ஸ்கொயர் திசையில் பவுண்டரிக்கு விரட்டினார் கரண். 4வது பந்தை பேக்வார்ட் பாயின்ட் திசையில் பவுண்டரிக்கு தூக்கினார். 5வது பந்தை, ஃபைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விளாசினார். தன் வாழ்நாளுக்கும் மறக்கமுடியாத அரைசதத்தை நிறைவு செய்தார் கரண். கடைசி பந்து, பவுண்டரியா, சிக்ஸரா என எல்லோரும் எதிர்பார்த்திருக்க, `ரெண்டுமே கிடையாது. விக்கெட்' என ஓவரை முடித்தார் போல்ட். அற்புதமான 9வது விக்கெட் பார்ட்னர்ஷிப்பின் மூலம் 114/9 எனும் ஓரளவுக்கு மரியாதையான ஸ்கோரை எட்டியது சென்னை அணி.

120 பந்துகளில் 115 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் நிலையில், இன்னிங்ஸைத் துவங்கினார்கள் டி காக்கும் இஷான் கிஷனும். முதல் ஓவரை வீசவந்தார் தீபக் சாஹர்.

எச்சரிக்கை: 18 வயதுக்கு குறைவான, இதயம் பலவீனமான சென்னை ரசிகர்கள், தொடர்ந்து படிக்க வேண்டாம். ஓவரின், 2வது பந்து, அவுட்சைடு எட்ஜாகி பவுண்டரிக்கு அதுவாகவே விரைந்தது. 3வது பந்தை, ஸ்ட்ரெய்ட் டிரைவ் ஆடி பவுண்டரிக்கு விரட்டினார் டி காக். 2வது ஓவர் வீசவந்தார் ஹேசல்வுட். முதல் பந்தை கவர் திசை பவுண்டரிக்கு விரட்டினார் கிஷன். 3வது பந்தை கவர் பாயின்ட் மற்றும் பேக்வார்ட் பாயின்ட்களுக்கு இடையில் பவுண்டரிக்கு தட்டிவிட்டார்.

#CSKvMI

3வது வீசவந்த தீபக் சாஹருக்கு, பேக்வார்ட் பாயின்ட் திசையில் ஒரு பவுண்ட்ரியை பரிசாக கொடுத்தனுப்பினார் டி காக். மீண்டும் ஹேசல்வுட் வந்தார். கவர் பாயின்ட்டில் ஒன்று, ஃபர்ட்ஸ்ட் ஸ்லிப்பைக் கடந்து ஒன்று என இரண்டு பவுண்டரிகள் கிடைத்தது இஷான் கிஷனுக்கு. மீண்டும் சாஹர் வந்தார். 2 பவுண்டரிகளையும் 1 சிக்ஸரையும் விளாசினார் கிஷன். 6வது ஓவரை வீசவந்தார் தாஹிர். வெறும் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். பவர்ப்ளேயின் முடிவில் விக்கெட் இழப்பின்றி 52 ரன்கள் எடுத்து, கெத்தாக நின்றுக்கொண்டிருந்தது மும்பை. அடுத்த 5 ஓவர்களிலும், குறைந்தது ஒரு சிக்ஸராவது பறந்தது. 29 பந்தில் அரை சதத்தை நிறைவு செய்தார் கிஷன். `நான் கருணையா பார்த்தாலே கொலைதான்டா' என ருத்ர தாண்டவமாடியது மும்பை அணி. எத்தனை வருச கோவமோ?!

Also Read: நம்பமுடியவில்லை... இது எங்க #CSK-வே இல்லை... ஆடுவது எங்க கேப்டன் தோனியும் இல்லை! #CSKvMI

12வது ஓவரில் நல்லவேளையாக, சிக்ஸரோ, பவுண்டரியோ பறக்கவில்லை. ஆனால், 13வது ஓவரில் மேட்சே முடிந்துவிட்டது. 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியடைந்தது மும்பை அணி. டி காக் 46 (37), கிஷன் 68 (37) இருவரும் சிறப்பாக வேலையை முடித்தனர்.

#CSKvMI

"ரொம்ப சங்கடமா இருக்குங்க. பேப்பர்ல ஆடப்போற லெவன்ஸ் டீம் பக்காவா இருந்தாலே போதும், பாதி வேலை முடிஞ்சுடும். ஆனா, நம்ம டீம்ல யாருக்கெல்லாம் காயம்னு எழுதவே தனி பேப்பர் தேவைப்படுது. அப்புறம், அதுல இருக்குற பெயரெல்லாம் கழிச்சுவிட்டு, ஃபார்ம்ல இல்லாத ஆட்களை சுழிச்சுவிட்டு, பென்ச்ல இருக்குற ஆட்களை எழுப்பிவிட்டு கூட்டி வர்றதுக்குள்ள பேப்பர் கிழிஞ்சுடுது. நினைச்ச நேரம் டாஸ் விழமாட்டேங்குது. நினைக்காத நேரத்துல பனி விழுகுது. அதிர்ஷ்டம் கொஞ்சம் கூட இல்லை. ஒண்ணும் பண்ண முடியாது. அடுத்த மூணு மேட்ச்ல, இதுவரைக்கு மேட்சே ஆடாத ஆட்களுக்கு வாய்ப்பு குடுக்கப்போறேன். என்ன பண்றாய்ங்கனு பார்ப்போம்" என சொல்லிவிட்டு நகர்ந்தார் தோனி. ட்ரென்ட் போல்டுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-mumbai-indians-crushes-chennai-super-kings-to-deny-playoff-chances

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக