Ad

புதன், 14 அக்டோபர், 2020

சேலம்: உயிருக்குப் போராடிய முதியவர்; ஃப்ரீஸரில்வைத்து சாவுக்காகக் காத்திருந்த சகோதரர்!

`எம்டன் மகன்’ திரைப்படத்தில் நடிகர் பரத் மற்றும் கோபிகாவின் தாத்தாவாக நடிக்கும் `என்னத்த’ கண்ணையா உயிருக்கு போராடிக்கொண்டிருப்பார். குடும்பமே சந்தோஷமாக அவருடைய மரணத்தை எதிர்நோக்கியிருக்கும். அப்படி ஒரு ரியல் சம்பவம் சேலத்தில் நடந்தேறியிருக்கிறது. உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த முதியவரை, விடிய விடிய குளிர்சாதனப் பெட்டியில்வைத்து, சாகும்வரை அவரின் சகோதரர் குடும்பத்தோடு காந்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முதியவர்

சேலம் மாநகராட்சி, 24-வது கோட்டம், கந்தம்பட்டி பழைய ஹவுஸிங் போர்டு பகுதியில் வசிப்பவர் சரவணன் (வயது 70). அவருடைய அண்ணன் பாலசுப்ரமணிய குமார். தனது அண்ணன் 12-ம் தேதி மாலை இறந்துவிட்டதாகக் கூறி, குளிர்சாதனப் பெட்டிக்கு சரவணன் தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து குளிர்சாதனப்பெட்டிப் பணியாளர்கள் சரவணன் வீட்டுக்கு வந்து குளிர்சாதனப் பெட்டியை வைத்துவிட்டு மறுநாள் மதியம் வருவதாகக் கூறிச் சென்றிருக்கிறார்கள்.

Also Read: தாயார் மரணம்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி கண்ணீர் அஞ்சலி!

அதன்படி, நேற்று மதியம் குளிர்சாதனப் பெட்டியைத் திரும்ப எடுக்க வந்த பணியாளர்கள், அதற்குள் முதியவர் உயிரோடு துடித்துக்கொண்டிருப்பதைக் கண்டு, அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அருகிலிருந்தவர்களிடம் தெரிவித்ததோடு, முன்னாள் கவுன்சிலர் தெய்வநாயகத்துக்கும் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.

விவாதம்

அவர்கள் வந்து பார்த்தபோது குளிர்சாதனப் பெட்டிக்குள் இரவு முழுவதும் அந்த முதியவர் உயிரோடு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், குளிர்சாதனப் பெட்டிக்குள் துடித்துக்கொண்டிருந்த முதியவர் பாலசுப்ரமணியகுமாரை மீட்டு, 108 ஆம்புலன்ஸை வரவழைத்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இது குறித்து சூரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.

இது பற்றி தி.மு.க-வைச் சேர்ந்த முன்னாள் கவுன்சிலர் தெய்வலிங்கம் கூறுகையில், ``குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவர் ஒருவர் துடித்துக்கொண்டிருக்கும் தகவலைக் கேள்விப்பட்டு அந்த வீட்டுக்கு சென்று பார்த்தேன். குளிர்சாதனப் பெட்டிக்குள் முதியவரின் கை, கால்கள் கட்டப்பட்டிருக்க, அவர் கண்கள் விழித்துப் பார்த்துக்கொண்டிருக்க, உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அருகில் அவருடைய தம்பி அமர்ந்திருந்தார்.

தெய்வலிங்கம்

அவரிடம் கேட்டதற்கு, `என் அண்ணன் இறந்துவிட்டார். ஆனால் அவருடைய ஆன்மா இன்னும் பிரியாமல் இருக்கிறது. கொஞ்ச நேரத்தில் ஆன்மா பிரிந்துவிடும். தேவையில்லாமல் அவரைத் தொந்தரவு செய்யாதீர்கள்’ என்று மனநலம் பாதித்தவரைப்போலச் சொன்னார். ஆனால், காலையில் உடன் பிறந்தவர்களும், உறவினர்களும் வந்து பார்த்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் வசதிபடைத்த உயரதிகாரிகளாக இருந்து ஓய்வுபெற்றவர்கள். எதற்காக இப்படிச் செய்தார்கள் என்று தெரியவில்லை. உடனே காவல்துறைக்கும், 108 ஆம்புலன்சுக்கும் தகவல் கொடுத்து முதியவரைக் காப்பாற்றியிருக்கிறோம்’’ என்றார்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/salem-man-kept-his-old-aged-brother-in-freezer-box

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக