Ad

ஞாயிறு, 25 அக்டோபர், 2020

`பாகிஸ்தான், சீனாவுடன் போருக்கு நாள் குறித்துவிட்டார் பிரதமர் மோடி!’ - உ.பி பா.ஜ.க தலைவர் சர்ச்சை

கல்வான் பள்ளத்தாக்கு மோதல், பாங்கோங் சோ ஏரி அத்துமீறல் முறியடிப்பு என கடந்த சில மாதங்களாக எல்லையில் சீன ராணுவத்தின் செயல்பாடுகள் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்தநிலையில், எல்லையில் பதற்றத்தைத் தணிக்கும் வகையில் இருதரப்பிலும் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அதேபோல், பாகிஸ்தானும் எல்லையில் அவ்வப்போது அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

கல்வான் பள்ளத்தாக்கு

இந்தசூழலில் உத்தரப்பிரதேச பா.ஜ.க மாநிலத் தலைவர் ஸ்வந்திரதேவ் சிங் பேச்சு சர்ச்சையாகியிருக்கிறது. பா.ஜ.க எம்.எல்.ஏ சஞ்சய் யாதவின் வீட்டில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அக்கட்சித் தொண்டர்களிடையே பேசிய அவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது, ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது போன்ற விவகாரங்களைப் போலவே, பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளுடன் போருக்கான தேதியைப் பிரதமர் மோடி குறித்துவிட்டதாகப் பேசினார்.

ஸ்வந்திரதேவ் சிங் பேசிய வீடியோவை சஞ்சய் யாதவ் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதேபோல், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகிய கட்சிகளின் தொண்டர்களைத் தீவிரவாதிகளுடன் ஒப்பிட்டும் அந்த வீடியோவில் ஸ்வந்திரதேவ் பேசியிருக்கிறார்.

உ.பி பா.ஜ.க தலைவர் ஸ்வந்திரதேவ் சிங்

இதுகுறித்து பேசிய பா.ஜ.க எம்.பி ரவீந்திர குஷ்வாஹா, பா.ஜ.க தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்காக அவர் அப்படி பேசியிருக்கலாம் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார். அதேநேரம், சீனாவுடனான எல்லைப் பிரச்னை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு எதிராக அவர் கருத்துத் தெரிவித்திருப்பதாக சர்ச்சை எழுந்திருக்கிறது.

Also Read: இந்தியா - சீனா... எப்போது முடியும் எல்லைப்பிரச்னை?

எல்லைப் பிரச்னை குறித்து பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ``சீனாவுடனான எல்லைப் பிரச்னையை விரைவில் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது. அதேநேரம், இந்திய ஆளுகைக்குட்பட்ட பகுதியில் இருந்து ஒரு இன்ச் இடத்தைக் கூட விட்டுத்தர மாட்டோம்’’ என்று பேசியிருந்தார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/pm-modi-decided-date-of-war-with-pakistan-china-says-up-bjp-president

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக