மது குடிக்கப் பணம் கேட்டு தாயிடம் பிரச்னை செய்த அண்ணனின் கையை வெட்டி வாழைத்தோப்பில் வீசிவிட்டு அரிவாளுடன் காவல் நிலையத்தில் அவரது தம்பி சரணடைந்த விவகாரம் திருச்சி மாவட்டம், முசிறியில் நடந்திருக்கிறது.
திருச்சி மாவட்டம், தொட்டியம் அருகே சீலைப் பிள்ளையார் புத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால். இவரின் இளைய சகோதரர் ராஜா. இருவரும் கூலித் தொழிலாளர்களாக வேலை பார்த்துவருகின்றனர். கோபால், தனது தாயை அடிக்கடி திட்டிக்கொண்டே இருப்பது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தம்பி ராஜா, `தாயைத் திட்டுவதை நிறுத்திக்கொள்’ என்று கோபாலை எச்சரித்திருக்கிறார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது. அப்போது, ராஜா அரிவாளால் கோபாலை வெட்டியிருக்கிறார்.
இதில் கோபாலின் வலது மணிக்கட்டு துண்டானது. ரத்தவெள்ளத்தில் வலி தாங்க முடியாமல் அலறித் துடித்திருக்கிறார் கோபால். சகோதரனின் துண்டான வலது மணிக்கட்டை எடுத்து வாழைத்தோப்பில் வீசிய ராஜா, அரிவாளுடன் காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, போலீஸார் அவரைக் கைதுசெய்தனர். போலீஸார் கோபாலின் வலது கையை வாழைத்தோப்பில் தேடியும் கிடைக்கவில்லை. அவர் சிகிச்சைக்காகக் கரூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
Also Read: வேலூர்: `மனைவியின் காதலன் வெட்டிக் கொலை!’ - ஓராண்டுக்குப் பிறகு பழிதீர்த்த இளைஞர்
இது குறித்து வழக்கை விசாரித்துவரும் காவலர்களிடம் பேசினோம்.``கோபால் தினந்தோறும் வேலைக்குப் போவதும் அதில், கிடைக்கும் வருமானம் முழுவதையும் குடித்துவிட்டு வந்து வீட்டில் பிரச்னை செய்வதுமாக இருந்திருக்கிறார். கொரோனா காலகட்டத்தில் சரியாக வேலைக்குப் போகாததால், குடிப்பதற்கு அவரிடம் பணம் இல்லாத சூழலில், அம்மாவிடம் பணம் கேட்டிருக்கிறார்.
`பணம் இல்லை’ என்று கூறிய தாயிடம் கோபால் பிரச்னையில் ஈடுபட்டதோடு, அவரைக் கடுமையாகத் தாக்கியிருக்கிறார். இதை அவருடைய தம்பி ராஜா தட்டிக்கேட்டதில், இருவருக்குள்ளும் கைகலப்பு நடந்திருக்கிறது. இந்தநிலையில் இரண்டு நாள்களுக்கு முன்னர் மீண்டும் தன் அம்மாவிடம் மது அருந்துவதற்குப் பணம் கேட்டு கோபால் பிரச்னை செய்திருக்கிறார்.
இதனால் கோபாலுக்கும் ராஜாவுக்கும் மீண்டும் கைகலப்பு நடந்திருக்கிறது. தொடர்ந்து இது போன்ற பிரச்னைகளில் ஈடுபடுவதால், ஆத்திரத்தில் கோபாலின் கையை வெட்டிய ராஜா அதை வாழைத்தோப்பில் வீசிவிட்டு, காவல் நிலையத்தில் வந்து சரணடைந்திருக்கிறார். இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகிறோம்’’ என்றனர்.
source https://www.vikatan.com/news/crime/man-surrenders-before-police-after-cut-off-brothers-hand-near-musiri
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக