Ad

செவ்வாய், 20 அக்டோபர், 2020

`ஆன்லைன் சூதாட்டம் பக்கம் போகாதீங்க; குடும்பம் நடுத்தெருவுல நின்னுடும்’ - விஜயகுமாரின் மனைவி கண்ணீர்

புதுச்சேரி, வில்லியனூரை அடுத்த கோர்க்காடு பகுதியைச் சேர்ந்த சிம் கார்டு மொத்த விற்பனையாளரான விஜயகுமார், ஆன்லைன் ரம்மி விளையாட்டில் 38 லட்சம் ரூபாயை இழந்ததால் பெட்ரோல் ஊற்றி, தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்வதற்கு முன்னர் அவர் தனது மனைவிக்கு அனுப்பிய உருக்கமான வாட்ஸ்அப் ஆடியோவில், ஆன்லைன் ரம்மி விளையாட்டை எப்படியாவது தடைசெய்துவிடும்படி கோரிக்கை வைத்திருந்தார்.

ஆன்லைன் ரம்மி

இந்தநிலையில் விஜயகுமாரின் மனைவி மதுமிதா விகடனுக்கு அளித்த பேட்டியில், ``எங்க வீட்டுக்காரரு கொரோனா டைம்ல விளையாட்டுக்காக அதைத் தொட்டாரு. நூறு ரூபாய்வெச்சதுக்கு 500 ரூபாய் லாபமா குடுத்திருக்கானுங்க. 500 ரூபாய்வெச்சதுக்கு 5,000 ரூபாய் குடுத்திருக்கானுங்க. 50,000 ரூபாய்வெச்சதுக்கு ஒரு லட்சம் குடுத்திருக்கானுங்க. அந்த ஒரு லட்சத்தைப் பெருக்கி, பெருக்கி பொண்டாட்டிக்கு வீடு கட்டிக் குடுத்துரலாம்னு நினைச்சிருக்காரு. ரெண்டு நாளா 50,000 ரூபாய் ஜெயிச்சா, மூணு நாள்ல 3 லட்சம் ரூபாய் விட்டிருக்காரு. அது அவருக்குத் தெரியலை.

விட்ட காசை எடுத்துடலாம்னு கடன் வாங்கி 35 லட்சம் ரூபாயை விட்டுட்டாரு. தயவுசெய்து உங்க எல்லாருக்கும் ஒண்ணு சொல்லிக்கிறேன். எம்புருஷன் கடைசி ஆசையும் அதுதான். நூறு ரூபாய்க்கு 500 ரூபாய் கிடைக்குதுனு போயிடாதீங்க. உங்க குடும்பம் நடுத்தெருவுல நின்னுடும் (கதறுகிறார்). என் புருஷன் அதுல சாட் பண்றவங்களையெல்லாம் பார்த்தாராம். `அவங்க எல்லாரும் வெளியில வர மாட்டாங்க மதி. எல்லாரும் சாகப்போறாங்க மதி. நீ ஏதாச்சும் ஒண்ணு சொல்லி அதை பேன் பண்ணிரு மதி. அப்பத்தான் என் ஆத்மா சாந்தியடையும்’னு சொன்னாரு.

விஜயகுமாரின் மனைவி மதுமிதா

இருக்கற ஆம்பளைங்களுக்கெல்லாம் பெரிய கும்பிடா போடறேன். என்னை மாதிரி பொண்டாட்டிங்களை ரோட்டுல விட்டுடாதீங்கடா (கதறியழுகிறார்). ஐயோ... அவருக்கு சூதுல எதுவுமே தெரியாதுடா. விளையாடவெச்சு, 30 லட்சம் பணமும் போயி, என் புருஷன் உயிரும் கருகிப் போச்சுடா. கேமுக்கு அடிமையாகி உங்களை நம்பி இருக்குற பொம்பளைங்களை ரோட்டுல விட்ராதீங்கடா... நான் சொல்றதுல நூறு பேரு திருந்துனீங்கனாக்கூட என் புருஷன் ஆத்மா சாந்தி அடைஞ்சுடும். நீங்க எல்லாரும் புருஷன் பொண்டாட்டியா இருந்திருப்பீங்க. ஆனா, நீங்க எவ்வளவு யோசிச்சுப் பார்த்தாக்கூட என்னைய மாதிரியும், என் புருஷன் மாதிரியும் குடும்பம் நடத்தியே இருக்க மாட்டீங்க.

இந்த ஆன்லைன்ல அவரு ஒண்ணரை வருஷமா விளையாடினதெல்லாம் எனக்குத் தெரியாது சார். இந்த அஞ்சு நாளாத்தான் என்கிட்ட அவரு ஒரு வார்த்தைகூடப் பேலை. நான் கிட்டப் போனாக்கூட, `வீட்டைவிட்டு வெளியே போ. உன் அம்மா வீட்டுக்குப் போ. மாசம் 15,000 ரூபாய் அனுப்பிவெக்கறேன்’னு ஆன்லைன் மோகத்துல என்னைத் தட்டி விட்ருவாரு சார். இப்போ சாகுறதுக்கு முன்னாடிகூட அவரு ஃபிரெண்டுக்கு போன் பண்ணி ஒரு லட்சம் ரூபாய் கேட்டிருக்காரு. அதைப் போட்டுக்கூட பணத்தை எடுத்துரலாம்னு நினைச்சிருக்காரு. அவரு இல்லைனு சொல்லிட்டதால, விளையாடக் காசு இல்லாம போயிடுச்சி. இருந்த காசுக்கு பெட்ரோலை மட்டும் வாங்கிட்டு வந்து செத்தே போயிட்டாரு.

கருகிய நிலையில் விஜயகுமார் உடல்

கடைசியா அவரு சாகறதுக்கு முன்னாடி மூனு ரெக்கார்டு (வாட்ஸ்அப் ஆடியோ) அனுப்புனாரு. அப்போதான் அவரு 30 லட்சம் ரூபாய் விட்டதே எனக்குத் தெரியும். அதுவரைக்கும் பணம் விட்டுட்டேன்னு சொன்னாரு. அவரோட மச்சான்லாம், `நாங்க பணம் தர்றோம். நீங்க கடனை அடைச்சிரலாம். பழையபடி தொழில் பண்ணுங்க’னு சொன்னாங்க.

அப்போ 12 லட்சம்தான் விட்டேன்னு சொன்னாரு. சாகுறதுக்கு முன்னாடிதான் 30 லட்சம்னு சொன்னாரு. அதுவுமே கணக்கு இல்லையாம். அதைவிட கூடவாம். `சும்மா 5 ரூபாய், 100 ரூபாய்வெச்சு விளையாடுற கேம்’னு என்கிட்ட சொல்லுவாரு.

Also Read: புதுச்சேரி: `30 லட்ச ரூபாய்க்கு மேல விட்டுட்டேன், மதி!' - இளைஞரின் உயிரைப் பறித்த ஆன்லைன் ரம்மி

`கொரோனா நேரத்துல வியாபாரம் இல்லை மது. என்டர்டெயின்மென்ட்டுக்கு விளையாடுறேன். உன் புருஷன் அப்படில்லாம் விட்டுட மாட்டேன்’னு சொன்னாரு. அவரை நான் நம்புவேன் சார். ஆன்லைன்ல அவரு போக மாட்டாருனு நம்புனேன். என் புருஷன் உயிரைப் புடுங்கிட்டானுங்க. நீங்க ரெண்டு பேரும் எவ்வளவு ஒத்துமையா இருந்தாலும், புருஷன் ஆன்லைனுக்குப் போயிட்டா புருஷனை மறந்துருங்கடீ. போறதுக்கு முன்னாடியே தடுத்துருங்க” என்று கதறி அழுதார்.

ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையானவர்களுக்கு கேட்குமா மதுமிதாவின் அழுகுரல்?



source https://www.vikatan.com/social-affairs/crime/dont-be-addicted-to-online-gambling-games-says-vijayakumars-wife

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக