Ad

ஞாயிறு, 18 அக்டோபர், 2020

திண்டுக்கல்: `ஆளும் கட்சியினர் என்னைத் தரக்குறைவாக பேசுகின்றனர்!’ - கொதிக்கும் ஜோதிமணி எம்.பி

திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே உள்ள ஆர்.கோம்பை சீலக்கரட்டுப் பகுதியில், 56 ஏக்கர் நிலத்தில் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. விவசாய நிலத்தின் அருகே, சிட்கோ தொழிற்பேட்டை அமைத்தால், தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அப்பகுதி விவசாயிகளும், பொதுமக்களும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடத்திவருகின்றனர். இதனை அறிந்த கரூர் எம்.பி ஜோதிமணி, சம்பவ இடத்திற்கு நேற்று வந்திருந்தார். குஜிலியம்பாறை தி.மு.க நிர்வாகிகளும் உடனிருந்தனர். சிட்கோ தொழிற்பேட்டைக்கான பாதை அமைக்கும் பணி அங்கே நடந்துவந்தது. ஜே.சி.பி இயந்திரம் மூலம், நிலத்தை சமன் செய்துகொண்டிருந்தனர். அதனைப் பார்த்த ஜோதிமணி, ஜே.சி.பி இயந்திரம் முன் பொதுமக்களுடன் அமர்ந்து போரட்டம் நடத்தினார்.

ஜோதிமணி

இதனை அறிந்த குஜிலியம்பாறை அ.தி.மு.க கிழக்கு ஒன்றியச் செயலாளர் மலர்வண்ணன், தனது ஆதரவாளர்களுடன் சம்பவ இடத்திற்கு வந்து, ஜோதிமணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள், ஜோதிமணிக்கு ஆதரவாக பேசி, மலர்வண்ணன் மற்றும் அவரது ஆதரவாளர்களை அங்கிருந்து விரட்டியடித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Also Read: ``குஷ்பு மாதிரியானவங்களுக்கு பா.ஜ.க ஏற்றதில்லை!" - ஜோதிமணி

தொடர்ந்து அங்கே வந்த காவல்துறையினர், எம்.பி. ஜோதிமணியுடன் சமாதானம் பேசினர். ஜே.சி.பி இயந்திரத்தை நிலத்தில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும் என ஜோதிமணி கோரிக்கை வைக்க, ஜே.சி.பி இயந்திரம் அங்கிருந்து கொண்டுசெல்லப்பட்டது.

ஜோதிமணி

இந்நிலையில், இன்று திண்டுக்கல் வந்திருந்த எம்.பி.ஜோதிமணி, பத்திரிகையாளர்களிடம் பேசிய போது, ``தரிசு நிலத்தில் சிட்கோ, சிப்காட் அமைக்கலாம். அதன் மூலம் வேலைவாய்ப்பினை உருவாக்கலாம். அதற்கு என்ன உதவி வேண்டுமானாலும் செய்ய தயார். ஆனால், சீலக்கரட்டில் சிட்கோ தொழிற்பேட்டை என்ற பெயரில், ரூ200 கோடி மதிப்புள்ள மண்வளத்தை கொள்ளையடிக்க ஆளும் கட்சியினர் முயற்சி செய்து வருகின்றனர். அதனை தடுக்க வந்த என்னை தரக்குறைவாக பேசினார் அ.தி.மு.க ஒன்றியச் செயலாளர் மலர்வண்ணன். அவர் மீது புகார் கொடுக்க உள்ளேன். வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அனுமதியுடன், இயற்கை வளங்களை கொள்ளையடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/karur-congress-mp-jothimani-slams-admk-over-sidco-project

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக