Ad

திங்கள், 5 அக்டோபர், 2020

ஹத்ராஸ் படுகொலையை செய்தது காங்கிரஸ், கம்யூனிஸ்ட்! - பரபரப்பை ஏற்படுத்திய பா.ஜ.க போஸ்டர்

உத்திர பிரதேச மாநிலம் ஹத்ராஸில் பட்டியலினப் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அம்மாநிலத்தை ஆளும் பா.ஜ.க மீதும் எதிர்கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளன. மேலும் மரணமடைந்த பெண்ணின் வீட்டுக்கு செல்ல முயன்ற ராகுல் காந்தியை போலீஸார் தடுத்த சம்பவமும் பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து எதிர்கட்சிகள் நாடுமுழுவதும் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்ட பா.ஜ.க சார்பில் மரணமடைந்த இளம் பெண்ணுக்காக கண்ணீர் அஞ்சலி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. அந்த போஸ்டரில், ``உத்திரபிரதேச மாநிலம் ஹத்ராஸில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கயவர்களால் படுகொலை செய்யப்பட்ட தலித் இளம்பெண்ணுக்கு கண்ணீர் அஞ்சலியை காணிக்கை ஆக்குகிறோம். வருத்தத்துடன் பாரதிய ஜனதா கட்சி கன்னியாகுமரி மாவட்டம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

எஸ்.பி அலுவலகத்தில் புகார் அளித்த காங்கிரஸ், தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்

இந்த போஸ்டர் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ் கட்சியினரிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் பிரின்ஸ், ராஜேஷ்குமார், தி.மு.க எம்.எல்.ஏ மனோதங்கராஜ், சி.பி.எம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி பெல்லார்மின் உள்ளிட்டோர் நாகர்கோவிலில் உள்ள எஸ்.பி அலுவலகத்தில் போஸ்டர் ஒட்டிய பா.ஜ.கவினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து மனோதங்கராஜ் எம்.எல்.ஏ கூறுகையில், "பா.ஜ.க ஆளுகின்ற உத்தரபிரதேச மாநிலத்தில் பட்டியலினப் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, உடலைக் கூட பெற்றோருக்கு காட்டாமல் தீவைத்து எரித்த ஆட்சியின் அவலத்தை உலகமே அறியும். ஆனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டரில் காங்கிரஸ் கட்சியினரும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் அப்பெண்ணை கொலை செய்துவிட்டார்கள், கண்ணீர் அஞ்சலி என்று அவதூறு போஸ்டரை ஒட்டி உள்ளார்கள்.

மனோதங்கராஜ் எம்.எல்.ஏ

தங்கள் மேல் உள்ள கொலை பழியை, இந்த வக்கிர செயலை திசைதிருப்பி மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்படுத்துகின்ற வேலையை பி.ஜே.பி-யைச் சேர்ந்த சிலர் செய்துகொண்டிருக்கிறார்கள். அதுகுறித்து கூட்டணிக் கட்சியினருடன் இணைந்து மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நாங்கள் புகார் அளித்துள்ளோம். அது மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவது பி.ஜே.பி-யினரின் தொழில் போன்று ஆகிவிட்டது. அதை தடுத்து நிறுத்த வேண்டும் இல்லை என்றால் கன்னியாகுமரி மாவட்டத்தில் நாங்கள் மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் நடத்துவோம்" என்றார்.

Also Read: `நான்கு மாதங்களாகத் துன்புறுத்தப்பட்ட இளம்பெண்!’ - ஹத்ராஸ் சம்பவத்தில் நடந்தது என்ன?

இதுகுறித்து பா.ஜ.க கன்னியாகுமரி மாவட்ட தலைவர் தர்மராஜிடம் பேசினோம், ``அப்பெண்ணை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க-வைச் சேர்ந்தவர்கள் என்று காங்கிரஸ்காரர்களும் கம்யூனிஸ்ட்டு கட்சியினரும் அவதூறு பிரசாரம் செய்கிறார்கள். அவரை கொலை செய்தது ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க என்று அவர்கள் முதலில் நிரூபிக்கட்டும். அதன்பிறகு இந்த போஸ்டரில் நங்கள் குறிப்பிட்டுள்ளதை நிரூபிக்கிறோம்" என்றார்.



source https://www.vikatan.com/news/politics/bjp-poster-regarding-hathras-issue-in-kumari-creates-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக