Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

ஸ்டாலினுக்கு எடுபடாத எக்ஸ்ட்ரா புரொமோஷன்கள்... ஏன்?

மத்திய அரசு கொண்டு வந்திருக்கும் புதிய வேளாண் மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பியிருக்கின்றன. தமிழ்நாட்டிலும் எதிர்க்கட்சிகளின் சார்பில் போராட்டம் நடத்துவது என கடந்த செப்டம்பர் 21-ம் தேதி, தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த செப்டம்பர் 28-ம் தேதி, சென்னை மேற்கில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கொருக்குபேட்டையில் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ் அழகிரி, வள்ளுவர் கோட்டத்தில் தி.மு.க இளைஞரணிச் செயலாளர் உதயநிதி, சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், கும்பகோணத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் முத்தரசன், கடலூரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், திருச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன், சென்னை பெருங்குடி கந்தன்சாவடியில் ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ ஆகியோரின் தலைமையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

ஸ்டாலின் பேச்சு

ஆனால், இவை எல்லாவற்றையும்விட காஞ்சிபுரம் மாவட்டம் கீழம்பியில், தி.மு.க தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போராட்டம்தான், சமூக வலைதளங்களில் வைரலானது; மிகப்பெரிய அளவில் பேசுபொருளானது.

ஏன், என்ன காரணம்?

அந்த ஆர்ப்பாட்டத்தில் புதிய வேளாண் மசோதாக்களை, யார் யார் எதிர்க்கிறார்கள் என மிக விரிவாக ஸ்டாலின் பேசிய பேச்சுக்காகவா... இல்லை!

எனில், அந்த மசோதாக்களை எதிர்க்கக் காரணம் என்னவென ஸ்டாலின் தந்த விளக்கங்களுக்காகவா என்றால்... அதுவும் இல்லை.

பிரதமர் மோடியையும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியையும் ஸ்டாலின் கடுமையாக விமர்சித்து விளாசியதற்காகவா என்றால் அதுவும் நிச்சயமாக இல்லை!

பின் எதனால் வைரலானது, பேசுபொருளானது?

ஸ்டாலின் அணிந்த பச்சைத்துண்டு, பச்சை மாஸ்க், வயல் வரப்புகளுக்குள் நடந்து வந்து மக்களிடையே அவர் குறைகேட்பதுபோல வெளியான புகைப்படங்களால் வைரலானது. இன்னும் நேரடியாகச் சொல்ல வேண்டுமென்றால், எதிர்மறையாக வைரலானது. 'போட்டோ ஷூட் நடத்துகிறார்' என விமர்சிக்கப்பட்டது. ஒட்டுமொத்த தேசம் பற்றியெரிகிற ஒரு பிரச்னை குறித்து, தமிழகத்தின் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் முன்னெடுத்த ஒரு போராட்டம், மீம்ஸ் கிரியேட்டர்களுக்கு மட்டுமே இரையாகிப்போனது.

இந்தப் போராட்டத்தில் மட்டுமல்ல, இதற்கு முன்னர் எதிர்க்கட்சியான தி.மு.க முன்னெடுத்த பல போராட்டங்களில் தி.மு.க தலைவர் ஸ்டாலினின் செயல்பாடுகள், பேச்சுகள் சமூக வலைத்தளங்களில் கேலிக்குரிய விஷயங்களாக மாற்றப்பட்டன. அதற்கான காரணம் என்ன?

``பேசியே தமிழகத்தின் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த வரலாற்றைக்கொண்ட தி.மு.க-வின் தலைவராக இருக்கும் மு.க.ஸ்டாலின், சாதாரண விஷயங்களையே பேப்பரைப் பார்த்துப் பார்த்துப் படிப்பதும், பேசும்போது தவறாக உச்சரிப்பதும், தேவையில்லாத-பொருத்தமில்லாத புரொமோஷன்கள் அவருக்காகச் செய்யப்படுவதுமே அனைத்துக்கும் காரணம்'' என்கிறார்கள், தி.மு.க-வின் உடன்பிறப்புகள் சிலர்.

நமக்கு நாமே

`பெயர் வெளியிட வேண்டாமே...' என்று சொல்லி அவர்கள் பகிர்ந்துகொண்ட தகவல்கள் இங்கே உங்களுக்காக...

``எங்கள் தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளர், சென்னை மாநகர மேயர், தமிழக உள்ளாட்சித்துறை அமைச்சர் எனப் பல்வேறு காலகட்டங்களிலும், தான் வகித்துவந்த பணியை மிகச்சிறப்பாகவே செய்துவந்திருக்கிறார். 90-களில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து மிகச் சிறப்பாகப் பேசியிருக்கிறார். சென்னையில் அவர் பேசிய அனைத்துப் பேச்சுகளையும் நாங்கள் கேட்டிருக்கிறோம். அதேபோல, மாநகராட்சி மேயராக இருந்தபோது அவரின் செயல்பாடுகளை கட்சி தாண்டியும் பலர் பாராட்டினார்கள். ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் நடத்திய கூட்டத்தில்கூட, `ஸ்டாலின் மிகச்சிறந்த நிர்வாகி' எனக் கூறியிருப்பார். காரணம், ஸ்டாலின் என்றாலே நல்ல நிர்வாகி என்பதுதான், பலருக்கு நினைவுக்கு வரும். ஆனால், இன்று ஸ்டாலின் என்றால், துண்டுச்சீட்டு பார்த்துப் படிப்பவராகவும், பேசுவதற்குத் திணறுபவராகவும், வேஷங்கள் கட்டுபவராகவும் அடையாளப்பட்டு நிற்கிறார்.

Also Read: தொகுதி மாறும் ஸ்டாலின் முதல் முக்கோணச் சிக்கலில் வாசன் வரை... கழுகார் அப்டேட்ஸ்!

துணை முதல்வராவதற்கு முன்புவரை அவருக்கு இது போன்ற பிரச்னைகள் இருந்ததில்லை. உதாரணமாக, 2007 டிசம்பரில் நெல்லையில் நடந்த இளைஞரணி மாநாட்டில் அவர் பேசியதை எடுத்துப் பாருங்கள்... 'ஸ்டாலினா இப்படிப் பேசியிருக்கிறார்...' என்று தோன்றும் அளவுக்கு இருக்கும். ஆனால், 2009-ல் அவர் துணை முதல்வரான பிறகுதான் இது போன்ற பிரச்னைகள் எழுந்தன. காரணம், அதற்கு முன்புவரை அவர் எந்தவொரு விஷயத்தையும் சுயமாகச் சிந்தித்து முடிவெடுத்தார். எந்தப் பிரச்னையையும் உள்வாங்கி அது குறித்துப் பேசினார். அப்போது அவர் பேச்சிலும் செயல்பாடுகளிலும் ஒரு தெளிவு இருந்தது. ஆனால், துணை முதல்வரான பிறகு, அவரை முதல்வராக புரொமோட் செய்வதற்காகப் பல வேலைகள் நடந்தன.

கட்சியில் இல்லாத அவரின் குடும்பத்தினர், குறிப்பாக அவர் மருமகன் சபரீசன், ஸ்டாலின் எதைப் பார்க்க வேண்டும், எதைப் பேச வேண்டும், எப்படி உடை உடுத்த வேண்டும் என்பது போன்ற விஷயங்களைத் தீர்மானிக்க ஆரம்பித்த பிறகுதான், இதுபோன்ற பிரச்னைகளெல்லாம் முளைக்க ஆரம்பித்தன.

சபரீசன்

தலைவர் ஸ்டாலினுக்குப் புதிதாக அறிமுகம் தேவையில்லை. `கலைஞரின் மகன்’ என்கிற அடையாளம் இருக்கிறது. நல்ல நிர்வாகி என்கிற பெயரும் இருந்தது. ஆனால், `நமக்கு நாமே’ திட்டத்தில் அவர் எடுத்த பல அவதாரங்கள், அவருக்கு பாசிட்டிவ் இமேஜைத் தருவதற்கு பதிலாக, நெகட்டிவ் இமேஜையே தந்தன. காரணம், செயற்கையாகப் புகுத்தப்பட்ட பல விஷயங்கள் அப்பட்டமாக வெளியில் தெரிந்துவிட்டன.

அந்தக் காலகட்டத்தில், ஸ்டாலின் எந்த ஊருக்குப் போகிறாரோ, முந்தைய நாளே கட்சிக்காரர்கள் அந்த இடத்துக்குச் சென்று, அவர் எங்கெங்கு போக வேண்டும், யார் யாரிடம் பேச வேண்டும், என்ன பேச வேண்டும் என்பதையெல்லாம் ரிகர்சல் செய்துவிடுவார்கள். ஸ்டாலின் அந்த ஸ்கிரிப்டுக்கு ஏற்றவாறு நடிக்க மட்டுமே செய்தார். ஸ்கிரிப்ட்டில் இல்லாமல் அவர் பேசிய பேச்சுகள் எல்லாம் சமூக வலைதளங்களில் கேலிப்பொருளாகின. சுருக்கமாகச் சோல்ல வேண்டுமென்றால், அவரை புரொமோஷன் செய்ய ஆரம்பித்த பிறகுதான் அவர் 'டி புரொமோட்' ஆனார்.

`ஸ்பூனில் டீ குடித்தது, வயலுக்கு நடுவே சிமென்ட் சாலை போட்டு நடந்து போனது, பதநீரில் சர்க்கரை போட்டீர்களா...' எனக் கேட்டது எனப் பல உதாரணங்களைச் சொல்ல முடியும். அரசியலில் புரொமோஷனெல்லாம் தேவைதான்; அதை மறுப்பதற்கில்லை. ஆனால், குறைந்தபட்சம் நமக்கு அது எடுபடுமா என்பதையாவது யோசிக்க வேண்டும். அப்போதைய காலகட்டத்தில் ஸ்கிரிப்ட் இல்லாமலும், அவரால் மக்களை அணுகியிருக்க முடியாது. காரணம், ஏதாவது ஒரு குறையைச் சொல்லும்போது, அதற்கு பதிலளிக்கும் வகையில் ஏற்கெனவே அந்த விஷயங்கள் குறித்த அடிப்படையாவது தெரிந்திருக்க வேண்டும். ஆனால், எங்கள் தலைவர் மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்க ஆரம்பித்ததும், கற்றுக்கொள்வதைக் கைவிட்டுவிட்டார். எழுதிக்கொடுத்துப் பேசுவதில் தவறில்லை. ஆனால், விஷயங்களை உள்வாங்கத் தவறிவிட்டார்.

இன்று, எடப்பாடி பழனிசாமியை விவசாயியாக புரொமோஷன் செய்கிறார்கள் என்றால், அது ஓரளவுக்கு எடுபடுவதற்குக் காரணம் அவர் அடிப்படையில் ஒரு விவசாயி... அப்படிப் பார்த்தோமென்றால், அடிப்படையில் சிறந்த நிர்வாகி எனப் பெயரெடுத்திருக்கும் எங்கள் தலைவரை அப்படித்தான் முன்னிறுத்தியிருக்க வேண்டும்.

ஸ்டாலின், பிரசாந்த் கிஷோர்

குடும்பத்தினர் மற்றும் பிரசாந்த் கிஷோர் போன்ற அரசியல் ஆலோசகர்களின் பேச்சைக் கேட்டுக்கொண்டு நடப்பதே இப்போதைய பிரச்னைகள் எல்லாவற்றுக்கும் காரணம். தி.மு.க-வுக்கு இருக்கும் கட்சிக் கட்டமைப்புக்கு இதெல்லாம் தேவையேயில்லை. மாவட்டச் செயலாளர்களிடமே எல்லாப் பொறுப்புகளையும் ஒப்படைப்பதை விட்டுவிட்டு, தலைவரே நேரடியாகக் கட்சியைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்து, நிர்வாகிகளின் நிறை, குறைகளைக் கேட்டிருந்தாலே போதும்'' என்கிறார்கள் அவர்கள்.

Also Read: `ட்ரெண்டிங்' கனிமொழி... `டேட்டா' பிரசாந்த் கிஷோர் மீது கடுப்பில் ஸ்டாலின்?!

எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும், இது போன்ற புரொமோஷன்கள் தேவையா என்பது குறித்து, தி.மு.க-வின் செய்தித் தொடர்பாளர், கான்ஸ்டன்டைன் ரவீந்திரனிடம் பேசினோம்,

``ஃபேஸ்புக், ட்விட்டரில் வரும் விமர்சனங்களையெல்லாம் நாம் பெரிதுபடுத்தத் தேவையில்லை. எங்கள் தலைவரை இனிமேல் புரொமோட் செய்ய வேண்டிய தேவையும் இல்லை. அவர் மக்களுக்கு நன்கு அறிமுகமான ஒரு தலைவர்தான். ஆனால், தற்போதைய அரசியல் சூழலுக்கு இது போன்ற ஃபேன்சி புரொமோஷன்களும் தேவைப்படுகின்றன. காரணம், அரசியல் புரிதல் இல்லாத, கொள்கைப் புரிதல் இல்லாத ஒரு தலைமுறையை அரசியலுக்குள் கொண்டு வர வேண்டிய ஒரு தேவை இருக்கிறது. ஒரு திசைகாட்டிதான் இது போன்ற விஷயங்கள்.

எங்கள் தலைவர் ஸ்டாலின், `முன்பு குறிப்புகள் இல்லாமல் பேசினார்; இப்போது குறிப்புகள் வைத்துக்கொண்டு பேசுகிறார்’ என்று விமர்சிப்பவர்களுக்கு நான் ஒன்றைச் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன். அவரின் தந்தை, தலைவர் கலைஞர் இருக்கும்போது அவர் என்ன பேசுகிறார் என்றுதான் அனைவரும் பார்ப்பார்கள். ஸ்டாலின் என்ன பேசுகிறார் என்பதை கவனிக்க மாட்டார்கள். அதனால்தான், அவர் குறிப்புகளில்லாமல் அப்போது பேசினார். ஆனால், ஸ்டாலின் தலைவரான பிறகு அவருக்கான கடமை அதிகரித்திருக்கிறது. தகவல் பிழை இல்லாமல் பேச வேண்டிய அவசியம் ஏற்படுகிறது. அதனால்தான், சில தகவல்களை குறித்து வைத்துக்கொண்டு பேசுகிறார். அதில் தவறேதும் இல்லை.

கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்

குறிப்புகள் இல்லாமலும்கூட எங்கள் தலைவரால் பேச முடியும். ஆனால், அப்போதும்கூட அவர் பேசிய ஏதாவது ஒன்றைப் பிடித்துக்கொண்டு சிலர் விமர்சிக்கத்தான் செய்வார்கள். அவரை அரசியல்ரீதியாக விமர்சிக்க முடியாதவர்கள்தான் இதுபோல விமர்சித்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், `எதிர்மறையான விமர்சனங்கள் குறித்துக் கவலைப்படத் தேவையில்லை’ என எங்கள் தலைவர் கலைஞரே சொல்லியிருக்கிறார்.

உதாரணமாக, தலைவர் கலைஞருடைய ஃபேஸ்புக், ட்விட்டர் கணக்குகளில் அவர்மீது வைக்கப்பட்ட கடுமையான விமர்சன கமென்ட்களை நீக்கிவிடலாம என அவரின் அட்மின்கள் கேட்டபோது, `வேண்டாம்’ என மறுத்தவர்தான் எங்கள் தலைவர் கலைஞர். என்னைப் பற்றிப் பாராட்டுபவர்களின் கமென்ட்கள் இருக்கும்போது, விமர்சிப்பவர்களின் கமென்ட்களும் இருக்க வேண்டும் எனச் சொன்னவர் கலைஞர். அதைத்தான் எங்கள் தலைவர் ஸ்டாலினும் சொல்கிறார். `எல்லோருமே நம்மை விரும்புவார்கள் என்று நாம் எப்படி எதிர்பார்க்க முடியும்...’ என்பதுதான் இது போன்ற விமர்சனங்களுக்கு அவரின் பதிலாக இருக்கிறது. அதுவே எங்களின் பதிலும்'' என்றார் அவர்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/extra-promotions-did-not-clicked-for-stalin-what-is-the-reason

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக