Ad

திங்கள், 26 அக்டோபர், 2020

`திருமாவளவன் மன்னிப்புக் கேட்கும்வரை விடப்போவதில்லை!’ - குஷ்பு

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பெண்களை இழிவாகப் பேசியதாகச் சர்ச்சை எழுந்தது. அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பா.ஜ.க சார்பில் இன்று போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தப் போராட்டத்தில் குஷ்பு உள்ளிட்டோர் கலந்துகொள்வார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த போராட்டத்துக்கு காவல்துறையினர் நேற்று மாலை அனுமதி மறுத்திருந்தனர்.

குஷ்பு

இந்தநிலையில், போராட்டத்தில் கலந்துகொள்ளச் சென்ற குஷ்பு உள்ளிட்ட பா.ஜ.க-வினர் முட்டுக்காடு அருகே தடுத்து நிறுத்தி கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட பின்னர் பேசிய குஷ்பு, ``சிதம்பரம் செல்வதற்குத் தடை இருக்கிறது. குறைந்தபட்சம் கடலூர் வரை அனுமதிப்பார்கள் என்று நினைத்தோம். ஆனால், முட்டுக்காடு தாண்டியதும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையில் போலீஸார் எங்களைக் கைது செய்துவிட்டனர்.

Also Read: `40 நிமிட உரை; முழுமையாகக் கேட்க வேண்டும்’ - `மனு தர்ம’ நூல் விவகாரத்தில் திருமாவளவன் பதில்

இந்தப் போராட்டம் பெண்களுக்கு எதிராக திருமாவளவன் பேசியதைக் கண்டித்தே நடத்த இருந்தோம். அண்ணன் திருமாவளவன் என்றுதான் எப்போதும் அவரை அழைப்பேன். ஆனால், பெண்களுக்கு எதிராக இப்படிக் கருத்துக் கூறுபவரை எப்படி அண்ணன் என்று அழைப்பது? ஏதோ 3,000 வருடங்களுக்கு முன்னர் எழுதப்பட்டதைப் பற்றி இவர் இப்போது பேசுகிறார். சம்ஸ்கிருதத்திலிருந்து இந்தி, ஆங்கிலம் என கைமாறி இப்போது வந்து நிற்கிறது அந்த விவகாரம்.

திருமாவளவன்

தேர்தல் வரப்போகிறது. இந்தநேரத்தில், பா.ஜ.க பெண்களை இழிவாக சித்திரிக்கிறது என்று காட்டப்போகிறீர்களா? பா.ஜ.க எங்கே பெண்களை இழிவாக சித்திரித்திருக்கிறது. எங்கே பேசியிருக்கோம்? யார் பேசியிருக்கிறார்கள்? நீங்கள் ஒவ்வொரு முறையும் பேசிக்கொண்டிருக்கிறீர்கள். திருமாவளவன், பெண்களிடம் மன்னிப்புக் கேட்கும் வரையில் சும்மா விடப்போவதில்லை. இன்றைக்கு எங்களைக் கைது செய்தால் நாளை நாங்கள் போராடுவோம். நாளை கைது செய்தால், அடுத்த நாள் போராடுவோம். அவர் மன்னிப்புக் கேட்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும். இது பா.ஜ.க சார்பில் ஒவ்வொரு பெண்ணுக்காகவும் நடத்தப்படும் போராட்டம் இது’’ என்றார்.



source https://www.vikatan.com/news/politics/bjp-leader-khushbusundar-arrested-near-mutukadu

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக