Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

`தனித்தனி ஆலோசனையில் தவறில்லையே..?’ - பற்றவைத்த சீனிவாசன்; விளக்கமளித்த ஜெயக்குமார்

துணை முதல்வருக்கு அழைப்பு இல்லை?!

அ.தி.மு.க-வில் கடந்த சில நாள்களாகவே முதல்வர் வேட்பாளர் பஞ்சாயத்துதான் ஹாட் டாப்பிக். கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற செயற்குழுக் கூட்டத்தில், வரும் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்வர் வேட்பாளர் குறித்த வாதங்கள் அனலாகத் தெறிக்க, கூட்டம் முடிந்த பின்னர், `வரும் 7-ம் தேதி அ.தி.மு.க-வின் முதல்வர் வேட்பாளர் குறித்த அறிவிப்பு வெளியாகும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

அ.தி.மு.க செயற்குழுக் கூட்டம்

இந்த நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தனது இல்லத்தில் ஆதரவாளர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். கட்சி நிர்வாகிகள், ஆதரவு அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் என ஓ.பி.எஸ் வீட்டு வாசலில் வரிசைகட்ட அரசியல் களம் பரபரப்பானது. அன்றைய தினம், கொரோனா தடுப்பு தொடர்பான ஆலோசனையில் ஈடுப்பட்டிருந்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தக் கூட்டத்தை ஓ.பி.எஸ் தவிர்த்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே ஓ.பி.எஸ் தனது துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யப்போவதாகத் தகவலகள் வெளியாகின.

Also Read: முதல்வர் ஆலோசனைக் கூட்டத்தைத் தவிர்த்த ஓ.பி.எஸ்! - ஆதரவாளர்களுடன் ஆலோசனை

இந்தநிலையில் நேற்று, புதன்கிழமை நடைபெற்ற சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை தொடர்பான அரசு நிகழ்ச்சிக்கு, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. அதற்கான அழைப்பிதழ், அது தொடர்பான அரசு விளம்பரங்களிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் பெயர் இடம்பெறவில்லை. இதனால், அரசு நிகழ்ச்சிகளை ஓ.பி.எஸ் தவிர்க்கிறாரா என்று அ.தி.மு.க வட்டாரத்தில் விவாதம் தொடங்கியது. ஆனால், மதியம் நடைபெற்ற சி.எம்.டி.ஏ கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். கூட்டத்தை முடித்துவிட்டு வெளியில் வந்த அவரிடம் பல்வேறு கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர். ``தேவைப்பட்டால் நானே அழைக்கிறேன்” என்று சொல்லிவிட்டு நகர்ந்தார். `எப்போது அழைப்பீர்கள்?’ என்ற கேள்விக்கு, ``நாளையாகக்கூட இருக்கலாம்'' என்று மட்டும் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

பற்றவைத்த திண்டுக்கல் சீனிவாசன்!

இந்தநிலையில்தான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், ``முதல்வர் வேட்பாளர் யார் என்பதில் போட்டியெல்லாம் கிடையாது. அடுத்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிதான். நாங்கள் அனைவரும் ஒன்றாகவே இருக்கிறோம். வரும் 7-ம் தேதி முதல்வர் பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம் இணைந்து முதல்வர் வேட்பாளரை அறிவிப்பார்கள்” என்றார். அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் இந்தக் கருத்து ஓ.பி.எஸ் தரப்பைக் கடும் கொந்தளிப்பில் தள்ளியது.

திண்டுக்கல் சீனிவாசன்

இந்தநிலையில் நேற்று இரவு ஓ.பி.எஸ்-ஐ அவரது வீட்டில் சந்தித்துப் பேசிய ஜே.சி.டி.பிரபாகர், பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் திண்டுக்கல் சீனிவாசனின் கருத்துக்கு பதிலளித்தார். ``அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மூத்த உறுப்பினர். கட்சியின் வரலாறு தெரிந்தவர். அவர், இந்த நேரத்தில் இப்படிப்பட்ட கருத்தைத் தெரிவிப்பது தவறு என கருதுகிறேன். ஏற்கெனவே கட்சித்தரப்பிலிருந்து அறிக்கை மூலம், `முதல்வர் வேட்பாளர் குறித்துப் பொதுவெளியில் பேசக் கூடாது’ என்று சொல்லியிருக்கிறார்கள். நான் கட்சிக்குக் கட்டுப்பட்டவன். இதற்குமேல் இது தொடர்பாகப் பேச விரும்பவில்லை” என்றார்.

Also Read: தலைமறைவு தினகரன், பா.ஜ.க திட்டம், ஓ.பி.எஸ் ராஜினாமா? அப்டேட் நிலவரம்!

கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது!

இதற்கிடையே இன்று நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 93-வது பிறந்தநாள் விழா அரசுத் தரப்பில் கொண்டாடப்பட்டது. சென்னை அடையாறு மணிமண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும், அமைச்சர்களும் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் தேனி எம்.பி ரவீந்திரநாத்தும் கலந்துகொண்டார். `ஒரே நாடு ஒரே ரேஷன்’ தொடர்பான நிகழ்ச்சியில் கலந்துகொள்வதால், இந்த விழாவில் துணை முதல்வர் கலந்துகொண்டதாகக் கூறப்பட்டது.

சிவாஜி பிறந்தநாள் விழாவில் ஓ.பி.எஸ்

இந்த நிகழ்வில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார், ``கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் பேசக் கூடாது. அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உட்பட அனைவருக்கும் கட்சியின் கட்டுப்பாடு ஒன்றுதான். அ.தி.மு.க.-வில் எப்போது பிளவு ஏற்படும் என்று எதிரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அமைச்சர்களும் தொண்டர்களும் அதற்கு இடமளிக்கக் கூடாது. ஓ.பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்துவதில் தவறில்லையே... இருவருக்குமிடையே எந்தப் பிரச்னையும் இல்லை. பிரச்னை இருந்தால்தானே சமாதானம் செய்வதற்கு...” என்றார். அதேபோல், ``அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் சொன்னது அவரது சொந்தக் கருத்து'' என அமைச்சர் வெல்லமண்டி நடராஜனும் கருத்து தெரிவித்திருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/minister-jayakumar-statement-on-admks-cm-candidate

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக