Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

`8,367 ஏக்கர் பாசனம் பெறும்!’ - மோர்தானா அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி

வேலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய அணை மோர்தானா. குடியாத்தத்திலிருந்து சுமார் 25 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தமிழக-ஆந்திர வனப்பகுதி வழியாகப் பாய்ந்தோடுகிறது கௌண்டன்ய ஆறு. ஆந்திர மாநிலம், புங்கனூரில் இருந்து பலமநேர் வழியாகத் தமிழக எல்லையான மோர்தானா கிராமத்தை வந்தடையும் இந்த ஆற்றின் குறுக்கில்தான் மோர்தானா அணை அமைந்துள்ளது.

நீர்த்தேக்கம்

இந்த அணைக்கான கட்டுமானப் பணிகள் 1990-ம் ஆண்டு தொடங்கப்பட்டு 2000-ம் ஆண்டு முடிவடைந்தது. அணையின் நீர்த்தேக்க அளவு 11.50 மீட்டர். நீர் கொள்ளளவு 261.36 மில்லியன் கனஅடி. இந்த அணையிலிருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சில கிலோ மீட்டர் தூரம் உள்ள ஜிட்டப்பல்லி தடுப்பணைக்குச் செல்கிறது.

அங்கிருந்து வலது, இடது புறம் கால்வாய்கள் வழியாக 19 ஏரிகளுக்குத் தண்ணீர் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த ஏரிகள் மற்றும் நேரடி பாசனத்தின் மூலமாகச் சுமார் 8,367 ஏக்கர் நிலங்களும் 49 கிராமங்களும் பயன்பெறுகின்றன. இந்த நிலையில், அண்மைக்காலமாகப் பெய்து வரும் தொடர் மழையால், அணைக்கு நீர்வரத்து அதிகமாகியிருக்கிறது.

அணை நிரம்பியதால் சிறப்பு பூஜை

வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம், பொதுப்பணித்துறை அலுவலர்களுடன் சமீபத்தில் மோர்தானா அணையைப் பார்வையிட்டு ஆய்வுசெய்தார். அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளதால், ஆற்றுக் கரைப்பகுதியில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும் வருவாய்த்துறை மூலமாகத் தண்டோரா போட்டு அறிவுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், தொடர் நீர்வரத்து காரணமாக மோர்தானா அணை இன்று காலை முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் பூஜை நடத்தி ஆர்ப்பரித்து கொட்டிய உபரி நீரை மனம்குளிர வரவேற்றனர். விவசாயிகளும் பொதுமக்களும் கூட்டம் கூட்டமாக அணைப் பகுதிக்குச் சென்று கடல் போன்று காட்சியளிக்கும் நீர்த்தேக்கத்தைப் பார்வையிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகிறார்கள்.



source https://www.vikatan.com/news/farmers-happy-because-of-mordhana-dam-filled-up

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக