Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

நீட்: `அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 8 சீட்; இட ஒதுக்கீடு நிறைவேறினால் 303 சீட்' - உண்மை நிலை என்ன?

கடந்த அக்டோபர் 16-ம் தேதி, நீட் தேர்வு முடிவுகள் வெளியாயின. தமிழகத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவரான ஜீவித்குமார் என்பவர் இந்த ஆண்டுக்கான நீட் தேர்வில், அரசுப் பள்ளி மாணவர்கள் வரிசையில், இந்திய அளவில் அதிக மதிப்பெண் பெற்று சாதனை படைத்தார். பொதுப்பிரிவைப் பொறுத்தவரை 1,823-வது இடத்தை பிடித்திருந்தார் ஜீவித்.

தேனி மாவட்டம் சில்வார்பட்டி எனும் கிராமத்தைச் சேர்ந்த ஜீவித், கடந்த ஆண்டே 12-ம் வகுப்பு முடித்துவிட்டு நீட் தேர்வு எழுதியிருந்தார். ஆனால், அப்போது அவரால் அதிக மதிப்பெண்களைப் பெற முடியவில்லை. அதன் பிறகு, கடந்த ஓராண்டாக ஆசிரியர்களின் உதவியோடு தனியார் நீட் கோச்சிங் சென்டர் மூலம் பயிற்சி பெற்ற ஜீவித்குமார், இந்த ஆண்டு நீட் தேர்வில் 667 மதிப்பெண்கள் எடுத்திருக்கிறார்.

ஜீவித்குமார்

Also Read: திரட்டப்பட்ட நிதி, ஓராண்டு கோச்சிங், பள்ளியின் ஆதரவு... ஜீவித்குமார் `நீட்'டில் சாதித்தது எப்படி?

ஆரம்ப காலம் தொட்டே நீட் தேர்வை ஆதரித்துப் பேசும் சிலர், நீட் தேர்ச்சி விகிதம் கணிசமாக அதிகரித்துள்ளது என்றும் இந்த ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை எளிய மாணவர்களும் மருத்துவராகப் போகிறார்கள் என்றும் சொல்லி வருகிறார்கள். ஆனால், களநிலவரம் வேறு என்கிறார்கள் நீட் தேர்வை எதிர்ப்பவர்கள். ``நீட் தேர்வில் 667 மதிப்பெண்கள் பெற்றுள்ள ஜீவித் குமாருக்கு மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். அதேநேரத்தில், அவரைப் போலவே எல்லா அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் ஆசிரியர்கள் உதவி செய்து தனியார் கோச்சிங் சென்டரில் பயிற்சி பெற வைப்பதென்பது நடக்காத ஒரு விஷயம்'' என்று சொல்கிறார்கள்.

neet exam

நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 113 மதிப்பெண்கள் பெற்றாலே அது பாஸ் மார்க்தான். பாஸ் ஆகிவிட்டால் மட்டுமே சீட் கிடைத்துவிடாது. நீட் தேர்வில் பாஸ் மார்க் வாங்கியவர்கள், மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பிக்க மட்டுமே தகுதி பெறுகிறார்கள். கட்-ஆஃப் மதிப்பெண்களை வைத்துத்தான் சீட் கிடைப்பது முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒரு கட்-ஆஃப் மதிப்பெண் நிர்ணயித்து, அதற்கு அதிகமான மதிப்பெண்கள் பெறுபவர்களுக்கு மட்டுமே மருத்துவ சீட் வழங்கப்படுகிறது. ஆண்டுதோறும் நீட் தேர்வில் போட்டிகள் அதிகரிப்பதால், கட்-ஆஃப் மதிப்பெண்களும் அதிகரித்துக் கொண்டே போகும்.

``நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பாடத் திட்டம் வேறு, தமிழக அரசுப் பள்ளிகளின் பாடத் திட்டங்கள் வேறு என்பதால் இது நியாயமற்ற நுழைவுத் தேர்வு. மேலும், ஏழ்மை காரணமாக கோச்சிங் சென்டர்களுக்குச் சென்று அனைத்து மாணவர்களாலும் படிக்க முடிவதில்லை. ஏழை எளிய மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்படுகிறது. சமூக நீதியற்ற தேர்வாக இருக்கும் நீட் இனி வேண்டாம்'' என்று நீட் தேர்வு எதிர்ப்பாளர்கள் பலரும் சொல்லி வருகின்றனர்.

இந்த ஆண்டு நீட் தேர்வில், தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில் 89 பேர் 300 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்துள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் ஒற்றை இலக்கத்தில்தான் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

நீட் தேர்வு

Also Read: பீகார் தேர்தல்: 375 கோடிஸ்வரர்கள்... 61 `ரெட் அலர்ட்' தொகுதிகள் - அதிர்ச்சி தரும் ரிப்போர்ட்!

``தமிழக அரசின் நீட் பயிற்சி மையங்களில் பயின்ற 4 மாணவர்கள் மட்டுமே 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர். இந்த நான்கு பேரைத் தவிர பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த 2 மாணவர்கள் முறையே 495, 497 மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர். மேலும், இரண்டு மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு மருத்துவ சீட் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆக மொத்தம் 8 அரசுப் பள்ளி மாணவர்களுக்குத்தான் இந்த ஆண்டு மருத்துவ சீட் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அதுவும் இந்த 8 பேருக்குமே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்குமா என்பது சந்தேகம்தான்'' என்பதே நீட் தேர்வை எதிர்ப்பவர்கள் முன்வைக்கும் வாதமாக இருக்கிறது.

மேலும் இதுகுறித்து, பேசும் சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத்,

``அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்களில், இந்த ஆண்டு 8-க்கும் குறைவான மாணவர்களுக்கே மருத்துவ சீட் கிடைக்கும். காரணம், பாஸ் ஆன மாணவர்களில், அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை குறைவு. ஆகையினால், அதிகமான அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவப் படிப்பில் சேரமுடியாத நிலை உள்ளது. நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்கு வேண்டும் என்பதை வரவேற்கிறோம், ஆதரிக்கிறோம். அதே சமயத்தில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை உடனடியாக வழங்க வேண்டும்.

அப்படி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டால் இந்த ஆண்டு 303 அரசுப் பள்ளி மாணவர்கள், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர முடியும். அதைத்தவிர 75-க்கும் அதிகமான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் பல் மருத்துவ படிப்புகளிலும் சீட் கிடைக்கும். இந்த உள் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேற்றப்பட்டால், ஒட்டுமொத்தமாக சுமார் 400 தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில் சேர வாய்ப்புள்ளது. அப்படி நடந்தால், இதுவரையில்லாத ஒரு வரலாற்றுச் சாதனையாக இது அமையும். எனவே, இந்தச் சட்டத்துக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும்.

மருத்துவர் ரவீந்திரநாத்

அதுமட்டுமல்லாமல், தமிழக அரசு நடத்தும் நீட் பயிற்சி மையங்களைத் தரம் உயர்த்த வேண்டும். ஒவ்வொரு தாலுகாவிலும் விடுதி வசதியுடன் நீட் பயிற்சி மையங்கள் உருவாக்க வேண்டும். அங்கு மாணவர்களுக்கு நீட் பயிற்சி, தங்கும் வசதி, உணவு உள்பட அனைத்துமே இலவசமாக வழங்கப்பட வேண்டும். 12-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மட்டுமே தற்போது அரசாங்கம் பயிற்சி வழங்கி வருகிறது. இந்த ஆண்டு சீட் கிடைக்காமல் அடுத்த ஆண்டு நீட் தேர்வுக்காகக் காத்திருக்கும் மாணவர்களுக்கு அரசாங்கம் பயிற்சி அளிப்பதில்லை. அப்படியிருக்கும் மாணவர்களுக்கும் இனி பயிற்சி வழங்க வேண்டும். இதையெல்லாம், அரசாங்கம் செய்யும் பட்சத்தில் நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களால் அதிக மதிப்பெண்கள் பெற முடியும்.

இதையடுத்து, அதிகமான மருத்துவக் கல்லூரிகளை அரசு தொடங்க வேண்டும். 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீட்டை படிப்படியாக உயர்த்த வேண்டும். இந்த உள் இடஒதுக்கீடானது மருத்துவக் கல்லூரிகளுக்கு மட்டுமல்லாமல் வேளாண் கல்லூரிகள், சட்டக் கல்லூரிகள், பொறியியல் கல்லூரிகள், கால்நடை படிப்புகளுக்கான கல்லூரிகள் ஆகியவற்றிலும் கொண்டு வர வேண்டும். அப்படிக் கொண்டு வந்தால் அரசுப் பள்ளி மாணவர்கள் மற்ற துறைகளிலும் சாதிக்க முடியும்'' என்கிறார் டாக்டர். ஜி.ஆர்.ரவீந்திரநாத்.

நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு ஒரு வாரம் ஆன நிலையில், 7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்படாமல் இருப்பதால் மருத்துவக் கலந்தாய்வு தள்ளிப் போகிறது. இதன் காரணமாக `உள் இடஒதுக்கீடு மசோதாவை விரைவாக நிறைவேற்ற வேண்டும்' எனக் கடந்த இரு தினங்களுக்கு முன்பு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்து தமிழக அமைச்சர்கள் வலியுறுத்தினர். அதேபோல, `மருத்துவப்படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் இட ஒதுக்கீடு மசோதாவைத் தாமதிக்காமல் நிறைவேற்ற வேண்டும்' என வலியுறுத்தி ஆளுநர் மாளிகைக்கு தி.மு.க தலைவர் ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். அந்தக் கடிதத்துக்குப் பதில் கடிதம் அனுப்பியுள்ளார் தமிழக ஆளுநர், அந்தக் கடிதத்தில்...

ஆளுநரின் இந்த பதிலுக்கு எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் பலரும் கடுமையாக தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துவருகின்றனர். அதிலும், உட்சபட்சமாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி தமிழக ஆளுநரைத் திரும்பப் பெறவேண்டும் என குடியரசுத் தலைவருக்குக் கடிதம் எழுதியுள்ளார்.

NEET தேர்வு

Also Read: `நீட் தேர்வை ஆதரிக்கவும் இல்லை... எதிர்க்கவும் இல்லை!' - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

`7.5 சதவிகித உள் இட ஒதுக்கீடு மசோதா நிறைவேறினால்தான் தமிழகத்தில் மருத்துவக் கலந்தாய்வு நடத்தப்படும்' என்று தொடர்ந்து தமிழக அரசு தெரிவித்து வந்தாலும், இன்றைய நிலவரப்படி நீட் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருக்கும் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவக் கனவு கேள்விக்குறியாகவே உள்ளது!


source https://www.vikatan.com/government-and-politics/education/is-it-true-that-only-8-students-from-government-schools-can-get-medical-seat-this-year-in-tn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக