Ad

வெள்ளி, 23 அக்டோபர், 2020

மும்பையைப் பதறவைத்த தீ விபத்து! - அடுக்குமாடிக் குடியிருப்பிலிருந்து வெளியேற்றப்பட்ட 3,500 பேர்

மத்திய மும்பை பகுதியிலுள்ள சிட்டி சென்டர் மாலில் நேற்று இரவு திடீரென ஏற்பட்ட தீவிபத்து அப்பகுதியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டநிலையில், 12 மணி நேரப் போராட்டத்துக்குப் பிறகு இன்று காலையில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

சிட்டி செனட்டர் மாலில் நேற்று இரவு 8:52 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்புப் படையினர் உள்ளே இருந்த பொதுமக்களை மீட்டனர். வணிக வளாகத்துக்கு அருகிலிருந்த 55 மாடிகள் கொண்ட குடியிருப்புப் பகுதியில் வசித்துவந்த 3,500 பேரையும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தினர்.

நான்கு அடுக்கு கட்டடமான சிட்டி சென்டர் மாலில், இரண்டாம் தளத்தில் ஏற்பட்ட தீ, மெல்ல மெல்லப் பரவி நள்ளிரவு 2.42 மணியளவில் மூன்றாவது மாடியிலும் தீ கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.

மும்பை தீ விபத்து

24 தீயணைப்பு வாகனங்கள், தலைமை தீயணைப்பு வீரர்கள் உட்பட 250 தீயணைப்பு வீரர்கள், 16 ராட்சத தண்ணீர் டேங்குகள் உதவியுடன் பல மணி நேரமாக தீயை அணைக்க போராடினர். மீட்புப் பணியில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர்கள் இருவர் படுகாயம் அடைந்ததால், அவர்கள் அருகிலுள்ள ஜே ஜே மருத்துவமனையில் அனுமதிக்கப்படுள்ளனர்.

இதுகுறித்து மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ``சிட்டி சென்டர் மாலின் இரண்டாம் தளத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீயால், அப்பகுதி முழுவதும் புகைமண்டலமாக காட்சியளித்தது. உள்ளே சிக்கியிருந்த பொதுமக்களை மீட்கவும், தீயை அணைக்கவும் வீரர்கள் மாலின் ஜன்னல் கதவுகளைத் தகர்த்து அதன் வழியாக உள்ளே சிக்கியிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டனர். பாதுகாப்பு கருதி அருகிலிருந்த குடியிருப்பில் வசித்து வந்த 3,500 பொதுமக்களையும் அந்த இடத்திலிருந்து அப்புறப்படுத்தினர்” என்று கூறினார்.

மீட்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் அதிகாரிகள் கூறுகையில் , ``மீட்புப் பணியில் ஈடுபட்ட வீரரான ஷாம்ராவ் ஜலன் பஞ்சாரா என்பவருக்கு பணியின்போது ஏற்பட்ட மூச்சுத்திணறல் காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும், ரமேஷ் பிரபாகர் சவுகுலே என்பவருக்கு வலது கையில் காயங்கள் ஏற்பட்டது. இருவரும் தற்போது சிகிச்சை முடித்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்தார்.

தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



source https://www.vikatan.com/news/accident/mumbai-central-mall-fire-3500-people-evacuated

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக