Ad

சனி, 3 அக்டோபர், 2020

`இளம்பெண் உடலை அதிகாலை 2:30 மணிக்கு தகனம் செய்த போலீஸார்?'- உ.பி வன்கொடுமை வழக்கு சர்ச்சை

2012 நிர்பயா கூட்டுப் பாலியல் வன்கொடுமைச் சம்பவம் போன்ற கொடுமைக்கு ஆளான உத்தரப்பிரதேசப் பட்டியலின இளம்பெண், கடுமையான பாதிப்புகளோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எலும்பு முறிவு, பக்கவாதம், துண்டிக்கப்பட்ட நாக்கு என்று கொடூரமாக பாதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்றுவந்தநிலையில் நேற்று அவர் உயிரிழந்தார். இந்த விவகாரம் தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தநிலையில், பெண்ணின் பெற்றோர்களைத் தடுத்து, அவசர அவசரமாக அதிகாலை 2:30 மணியளவில் பெண்ணின் உடலை ஊருக்கு வெளியில் காவல்துறையினர் தகனம் செய்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

`இந்தியாவில் கடந்த 2019-ம் ஆண்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018-ம் ஆண்டைவிட 7 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது. நாள்தோறும் சராசரியாக 87 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடக்கின்றன’ என்று தேசிய குற்ற ஆவணக் காப்பகம் (NCRB) தெரிவித்திருக்கிறது.

உத்தரப்பிரதேசம் மாநிலம், மேற்குப் பகுதியில் டெல்லிக்கு மிக அருகிலிருக்கும் சிறிய மாவட்டம் ஹாத்தரஸ். அந்த மாவட்டத்தின் சண்ட்பாவை கிராமத்தைச் சேர்ந்த 20 வயது இளம்பெண், வயல்வெளியில் வேலை செய்துகொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த நான்கு இளைஞர்கள் அந்த இளம்பெண்ணை தூக்கிச் சென்று அருகிலிருந்த வீட்டில் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்கள். மேலும், அவரைக் கடுமையாகத் தாக்கவும் செய்தனர்.

இதில் மயக்கமடைந்த அந்தப் பெண்ணை சாலை ஓரம் போட்டுவிட்டுச் சென்றனர். சில மணி நேரத்தில், கிராமவாசிகளின் கண்களில்பட்ட அந்தப் பெண், ஹாத்தரஸின் அரசு மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்டார். ஹாத்தரஸின் சண்ட்பா கிராமத்தில் பல்வேறு சமுதாயத்தினர் வாழ்ந்துவருகின்றனர். இதில் தாக்கூர் சமூகத்தினரின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது என்ற புகார் நீண்டநாள்களாகவே இருந்துவருகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக நான்கு இளைஞர்களும் கைதுசெய்யப்பட்டனர். முதலில், அவர்கள்மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டு, பின்னர் அது கொலை முயற்சியாக மாற்றப்பட்டிருக்கிறது. இதற்கிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்தப் பெண் மேல் சிகிச்சைக்காக டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

க்ரைம்

ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை அந்தப் பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், ``பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் கை மற்றும் இரு கால்களும் செயலிழந்துவிட்டன. நாக்கு துண்டிக்கப்பட்டதாலும், கழுத்து நெரிக்கப்பட்டதாலும் அவருடைய உடல்நிலை மோசமாகிவிட்டது. எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாற்ற முடியவில்லை" என்றனர்.

இதையடுத்து, டெல்லியிலிருந்து 200 கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஹத்ராஸ் கிராமத்துக்கு, அந்தப் பெண்ணின் உடல் நேற்று இரவே ஆம்புலன்ஸ் மூலம் எடுத்து வரப்பட்டது. இரவோடு இரவாக அந்தப் பெண் சடலத்துக்கு எரியூட்ட வேண்டும் என்று காவல்துறை வற்புறுத்தியதற்கு, அந்தப் பெண்ணின் குடும்பத்தார் சம்மதிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Also Read: உ.பி: வெட்டுப்பட்ட நாக்கு; செயலிழந்த கால்கள்; பாலியல் வன்கொடுமையால் உயிரிழந்த பெண் - நடந்தது என்ன?

`இந்து முறைப்படி தகனம் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும்’ என்று அந்தப் பெண்ணின் பெற்றோர்கள் காவல்துறையினரின் காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார்கள்: ஆம்புலன்ஸை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தவும் முயன்றிருக்கிறார்கள். ஆனால், அதற்கு காவல்துறை தரப்பில் அனுமதி இல்லை என்று கறார் காட்டியிருக்கிறார்கள். இதற்கிடையே, இன்று அதிகாலை 2:30 மணி அளவில் ஊருக்கு வெளியே அந்த இளம்பெண்ணின் உடலை அவசர அவசரமாக எரித்திருக்கிறார்கள் காவல்துறையினர்.

பெற்றோர்கள், மீடியா அனுமதியின்றி ஏன் அவசரமாக அந்தப் பெண்ணின் உடல் எரிக்கப்பட்டது என்ற கேள்விக்கு பதிலளித்த ஹத்ராஸ் மாவட்ட நீதிபதி பிரவீன் குமார் லக்ஸ்கர், ``பெண்ணின் குடும்பத்தினர் அனுமதியின்றி இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டுகள் தவறானவை. இரவில் இறுதிச் சடங்குகளை நடத்த பெண்ணின் தந்தையும் சகோதரரும் ஒப்புதல் அளித்தனர். இறுதிச் சடங்கில் குடும்ப உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். பெண்ணின் உடலை ஏற்றி வந்த வாகனம், அவரது கிராமத்தில் நள்ளிரவு 12:45 மணி முதல் அதிகாலை 2:30 மணி வரை நிறுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகுதான், தகனம் நடைபெற்றது'' என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், `அவசர அவசரமாக இளம்பெண்ணின் உடலை தகனம் செய்ய வேண்டிய அவசியம் என்ன...’ என்று பல்வேறு அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கேள்வியெழுப்பியிருக்கிறார்கள்.

பாலியல் வன்கொடுமை

இது தொடர்பாக அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறுகையில், ``இந்த விவகாரம் தொடர்பாக மூன்று பேர் கொண்ட சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. மாநில உள்துறைச் செயலர் தலைமை வகிப்பார். ஒரு வாரத்தில் விசாரணை அறிக்கையை இந்தக்குழு அளிக்கும். வழக்கு விசாரணை விரைவு நீதிமன்றத்தில் நடக்கும்'' எனக் கூறினார்.

``இந்தச் சம்பவம் தொடர்பாக பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டிருக்கிறார்" என்றும் யோகி ஆதித்யநாத் ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இந்தச் சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கூறுகையில்,``பாதிக்கப்பட்ட குடும்பத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும், மாநில அரசு செய்து தர வேண்டும். குற்றவாளிகளுக்கு விரைவு நீதிமன்றம் மூலமாக உடனடியாக தண்டனை வழங்கப்பட வேண்டும்” என்றார்.

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார்,``இந்தச் சம்பவம் கோபத்தையும் வெறுப்பையும் ஏற்படுத்தியிருக்கிறது. குற்றவாளிகளை உடனடியாக தூக்கில் போட வேண்டும்'' என காட்டமாக ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

இது குறித்து காங்கிரஸ் பொதுச்செயலாளர் ப்ரியங்கா காந்தி ட்விட்டர் பதிவில், ``வெறிச்செயலால் பாதிக்கப்பட்டு, உயிருக்காகப் போராடிய இளம்பெண் உயிரிழந்துவிட்டார். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு மிகவும் மோசமாகிவிட்டது. குற்றவாளிகள் பகிரங்கமாகக் குற்றச் செயல்களைச் செய்கின்றனர். இளம்பெண் சாவுக்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களே, நீங்கள்தான் உத்தரப்பிரதேச பெண்களின் பாதுகாப்புக்குப் பொறுப்பு’' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

தேசிய மகளிர் ஆணையத் தலைவர் ரேகா சர்மா கூறுகையில், ``பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இளம்பெண் உயிரிழந்தது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, உ.பி போலீஸாரிடம் அறிக்கை கேட்கப்பட்டிருக்கிறது. உயிரிழந்த இளம்பெண்ணின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து, அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஆணையம் செய்யும்” என்றார்.

உ.பி-யில் உன்னாவ் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, இந்த இளம்பெண்ணின் மரணத்தால் மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/crime/up-gang-rape-victim-cremated-without-familys-consent-alleges-activist

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக