Ad

சனி, 24 அக்டோபர், 2020

அர்ச்சனாவை டார்கெட் செய்த கமல்; `யாரு மனசுல யாரு... பாலா மனசுல யாரு?'- பிக்பாஸ் – நாள் 20

கமல் வந்தும் கூட இன்றைய நிகழ்ச்சி சுமாராகத்தான் இருந்தது. சில சுவாரஸ்யங்கள். நிறைய சலிப்புகள். நடந்த விஷயங்களை மீண்டும் அலசுவது பழைய மாவை அரைப்பது போலவே இருக்கிறது. ஆனால் ஒன்றை குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். குறுக்கு விசாரணையை மேற்கொள்ளும் சில தருணங்களில் கமல் அற்புதமாக பளிச்சிடுகிறார்.

குறிப்பாக அர்ச்சனாவின் டாமினேஷனை முதலில் நேராக சொல்லாமல் சுள்ளி வளைத்து வந்து பிறகு ‘ரிவீட்’ வைத்த அந்த அழகு இருக்கிறதே... அற்புதம்! ‘மாமூ.. ரிவீட்ன்னா என்னன்னு தெரியுமா?’ என்ற ‘வசூல்ராஜா’வின் சிறிய எபிஸோடை இங்கு பார்த்தது மாதிரியே இருந்தது. வாழைப்பழத்தில் கடப்பாறையைச் செருவது என்பதற்கு சரியான உதாரணம்.

சுருக்கமாகச் சொன்னால் இந்தப் பஞ்சாயத்தை ‘டிப்ளமஸியுடன்’ கமல் கையாண்டதுதான் இன்றைய நாளின் ‘ஹைலைட்’ எனலாம்.

என்ன நடந்ததென்று விரிவாகப் பார்ப்போம்.

பிக்பாஸ் - நாள் 20

‘யாமறிந்த சீஸனிலே… இந்த சீஸனைப் போல் கலாட்டா நிகழ்ந்தது வேறில்லை’ என்கிற முன்னுரையுடன் வந்தார் கமல்.

ஞாயிறு அன்று நிகழப் போகும் ‘எவிக்ஷனின்’ குறியீடாக ‘சத்தியமா நீ எனக்குத் தேவையேயில்ல’ என்கிற பாடலுடன் வெள்ளிக்கிழமை விடிந்தது. “டேய் கேமரா தம்பி... அதை தூக்கிட்டு இந்தப் பக்கம் வா" என்கிற மாதிரி ஷிவானி தனியான களத்தில் ஆடிக் கொண்டிருந்தார்.

‘நான் கேப்டன் போட்டிக்கு நிக்கப்போறதில்லை’ என்று காலையிலிருந்து சனம் சிணுங்கிக் கொண்டிருந்தார். “காரணம் சொல்லு. இல்லைன்னா எனக்கு தலை வெடிச்சுடும்" என்று அதற்கு பாலாஜி மயங்கிக் கொண்டிருந்தார். ''வரிசைப்படுத்தும் டாஸ்க்கில்’ தனக்கு 13வது இடம் அளிக்கப்பட்டதைப் பற்றிய வருத்தம் சனத்திற்கு இருக்கிறது. மக்கள் அதற்கு முக்கியத்துவம் தருவார்கள்' என்று நினைக்கிறார்.

"அதெல்லாம் ஒரு மேட்டரே கிடையாது" என்றார் பாலாஜி. அதுதான் உண்மை. வரிசைப்படுத்துதல் விளையாட்டு என்பது பிக்பாஸ் போட்டியாளர்களுக்குள் நிகழ்வது. ஆனால் மக்களின் பார்வை பல்வேறு விதங்களில் மாறுபடும். “வேல்முருகன் அண்ணாவுக்கு ஒண்ணுமே தெரியல... புரியல... ஆனா அவர் என்னை விட முன்னால் நிக்கறாரு... என்னா கேம் இது?’ என்று தன் சலிப்பிற்கு உதாரணம் காட்டினார் சனம்.

‘நாடா.. காடா’ டாஸ்க்கின் போது சனம் தமிழை ('தமிலை') கொலை செய்த வேடிக்கையை ரம்யா, சம்யுக்தா, ஆரி ஆகியோர் கிண்டல் செய்து கொண்டிருந்தார்கள். “சுரேஷோட உத்தி என்ன தெரியுமா... அவர் கிட்ட யாராவது வாக்குவாதம் செய்யும் போது அங்கும் இங்கும் நகர்ந்துக்கிட்டே இருப்பாரு... அப்படியே எஸ்கேப் ஆயிடுவாரு” என்று புதியதொரு ‘கண்டுபிடிப்பை’ நிகழ்த்திக் கொண்டிருந்தார் ஆரி. ஜெயிலில் தியானம் செய்ததின் பலன் போல. (பாவிகளா! இப்பத்தான் இதையே கண்டுபிடிக்கிறீங்களா!).

பிக்பாஸ் - நாள் 20
‘யார் மனசுல யாரு’ என்கிற விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தார் கேப்ரியல்லா. “பாலாவின் மனதில் இருப்பது யார் தெரியுமா?” என்று ஆஜித்தை யூகிக்கச் சொன்ன போது "ஷிவானியா?” என்று தாழ்ந்த குரலில் கேட்டார் ஆஜித். பாலாவும் இளிப்புடன் அதை வழிமொழிந்த மாதிரிதான் இருந்தது. “நீ என் தங்கச்சி மாதிரி" என்று பாலா சொன்னதை கேப்ரியல்லாவால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. “அப்படிச் சொல்லாதே" என்று சிணுங்கிக் கொண்டிருந்தார். (இந்தப் பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியல!)

மக்கள் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது ஒரு முக்கியமான அறிவிப்பை தெரிவித்தார் பாலா. இனிமேல் அவரை ‘அவன்.. இவன்...’ என்று யாரும் அழைக்கக்கூடாதாம். ‘வா பாலா... போ பாலா’ என்றுதான் சொல்ல வேண்டுமாம். ஆனால் பாலா சொன்னதை பலர் தவறாகப் புரிந்து கொண்டார்கள், அல்லது மற்றவர்களுக்கு தெளிவாகப் புரிவது போல் பாலா சொல்லவில்லை. அவர் சொன்னதின் உள்ளடக்கம் என்னவென்பது கமல் விசாரணையின் போது துல்லியமாக வெளியே வந்தது.

“தான் மரியாதையாக ‘வாங்க... போங்க’ என்று அழைக்கப்பட வேண்டும் என்பது பாலாவின் பிரதான நோக்கமல்ல. ‘பாவம்ப்பா. சின்னப்பையன்...’ என்று ஆஜித்தை ஓரங்கட்டுவது போல் இந்த வீட்டில் சின்னப்பையனாக நினைத்து தன்னையும் ஓரங்கட்டி விடுவார்களோ என்று அச்சப்படுகிறார். தன் கருத்துக்கள் சீரியஸாக எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்.

‘பெரியவர்களின் உலகில் சீக்கிரம் நுழைய வேண்டும். அவர்களுக்குச் சமமான மரியாதை தனக்கும் தரப்பட வேண்டும்’ என்று எதிர்பார்ப்பதுதான் விடலைகளின், இளைஞர்களின் குணம். அவர்களின் ஈகோவும் ஆளுமையும் வளர்ந்து வரும் தருணம் அது.

ஆஜித்திடமும் இந்தத் தத்தளிப்பு இருப்பதைக் கவனிக்கலாம். “ஏன் என்னை சின்னப்பையன்-னு சொல்றீங்க. கருணை காட்டறீங்க... ஒரு சக போட்டியாளர் என்கிற அங்கீகாரத்தை கொடுங்கள்" என்பதைத்தான் ஆஜித் பல சமயங்களில் தயக்கத்துடன் வார்த்தைகளில் அல்லாமல் உடல்மொழியால் வெளிப்படுத்துகிறார்.

பிக்பாஸ் - நாள் 20

இன்னொன்று... ரியோவிற்கு அர்ச்சனா முன்னுரிமை தருவது கூட பாலாவிற்கு எரிச்சலை வரவழைத்து இவ்வாறு பேச வைத்திருக்கலாம்.

“ஆள் தண்டியா இருக்கான். அடிச்சுருவானோ... இனிமே ஜாக்கிரதையா இருப்போம்" என்பது மாதிரி பாலா குறித்து வேல்முருகனும் நிஷாவும் ‘கிராமத்து வெள்ளந்தித்தனத்துடன்‘ பேசிக் கொண்டதைப் பார்க்க ஒரு பக்கம் நகைச்சுவையாகவும் இன்னொரு பக்கம் பரிதாபமாகவும் இருந்தது.

இதன் இன்னொரு பக்கத்தில், அர்ச்சனா அந்த வீட்டில் ஆதிக்கம் செய்ய முயல்வது வெளிப்படையாகத் தெரிந்தாலும் பாலாவை ‘குழந்தை’ என்று அர்ச்சனா குறிப்பது பாலாவை ஓரங்கட்டும் முயற்சியாகத் தோன்றவில்லை. அர்ச்சனாவே சொல்லியபடி அவருக்குள் இருக்கும் தாய்மையின் வெளிப்பாடாக இருக்கலாம்.

அகம் டிவி வழியாக உள்ளே வந்த கமல் “எப்படி போயிட்டிருக்கு?” என்று கடந்த வாரத்தின் நிலவரத்தைப் பற்றி ஒவ்வொருவரையும் தனித்தனியாக சொல்லச் சொன்னார். டாஸ்க்கிற்காக ரியோ மீசையை தியாகம் செய்தது குறித்து ‘ஒருநாள் கூத்திற்கு மீசையை எடுத்தது போல’ என்னும் பழமொழியை சரியான இடத்தில் அவர் மேற்கோள் காட்டியது சிறப்பு.

"Perfection என்கிற வார்த்தையில் தனக்கு நம்பிக்கையில்லை. Excellence-தான் அவசியம்!" என்று கமல் சொன்னது சரியான விஷயம். ‘ஒரு விஷயத்தை முழுமையாக செய்து விட்டோம்’ என்கிற திருப்தி உங்களுக்குள் வந்து விட்டால் உங்கள் மனது ஓய்ந்து விட்டது என்றே அர்த்தம். அதன் பிறகு நீங்கள் செயல்பட மாட்டீர்கள். தங்களின் துறை சார்ந்த தேடல்களை இறுதி வரைக்கும் தேடிக் கொண்டேயிருப்பவர்கள்தான் மேலும் வளர்வார்கள்.
பிக்பாஸ் - நாள் 20

"நான் ரொம்ப நல்லவனா இருக்கறது.. பிரச்னையா இருக்கு. வல்லவனா இருக்கணும் போல. நாடா... காடா... டாஸ்க்ல என்னை இம்சை பண்ணிட்டாங்க” என்றார் ஆரி. “நீங்க உங்க கேமை சரியா விளையாடிட்டே வாங்க. நேர்மையா விளையாடறது ஒரு தனி குணம். மக்கள் கவனிச்சிட்டுதான் இருப்பாங்க” என்று கமல் சொன்னது முக்கியமான விஷயம்.

“அட்வைஸ் ஆரி’ன்னு நீங்க ஆரம்பிச்சு வெச்சீங்க... மக்கள் அதைப் பிடிச்சுக்கிட்டு டார்ச்சர் பண்றாங்க. நீங்களே அதை முடிச்சு வெச்சுடுங்க…”என்று அழாத குறையாக சொன்னார் ஆரி. (யாராவது இவருக்கு கொஞ்சம் அட்வைஸ் பண்ணுங்களேம்ப்பா...)

“இந்த வாரம்தான் பிக்பாஸ் வீட்டுக்குள்ள என்ட்டர் ஆனமாதிரி இருக்கு... அவ்ள பரபரப்பா இந்த வாரம் இருந்தது" என்றார் ரமேஷ். (பின்னே... நெறய பேர் உங்களை மாதிரியே கேம் விளையாடாமா சும்மா இருந்தா அப்படித்தான் தெரியும்!).

“ஒரே நபரை ஒரே சமயத்தில் உயர்த்தியும் தாழ்த்தியும் மதிப்பிடுவது விசித்திரமாக இருக்கிறது” என்கிற சரியான பாயிண்ட்டை பிடித்தார் சம்யுக்தா. ‘டாஸ்க்கில் சிறப்பாக செயல்பட்டவர், சலிப்பாக இருந்தவர்’ ஆகிய இரு பிரிவுகளிலும் ஆரியின் பெயர் அடிபட்டதில் இருந்த முரணை சம்யுக்தா சுட்டிக் காட்டினார். ஒரு போட்டியாளரை பிக்பாஸ் வீட்டு மக்கள் சார்பின்றி துல்லியமாக மதிப்பிடுவதில்லையோ என்கிற சந்தேகத்தை சம்யுக்தாவின் கருத்து வலுவாக எழுப்புகிறது.

‘சமயங்கள்ல மக்கள் டிப்ளமஸியா இருக்காங்க’ என்று அனிதா ஆரம்பித்த போது "அந்த வார்த்தையைச் சொல்லாதீங்க... அது கெட்ட வார்த்தை மாதிரி ஆகிப் போச்சு... இல்லையா வேல்முருகன்?” என்று நைசாக ஜாலி ஊசியை செருகினார் கமல்.

“ஆக்சுவலி... தேவசேனா கேரக்ட்டரை நான்தான் பண்ணியிருக்கணும்… என் கெரகம்.. அரக்கர் வேஷத்திற்கு எங்களுக்கு மேக்கப்பே தேவையில்லை... அப்படியே வந்துட்டோம்" என்று நிஷா அநாயசமாக தூக்கி எறிந்த நகைச்சுவை வெடிகள் அபாரம். (இந்த நிஷாவைத்தான் அதிகம் பார்க்க முடிவதில்லை).

பிக்பாஸ் - நாள் 20
அர்ச்சனா பேசும் போது, ‘பட்டிமன்ற நடுவர் மாதிரியே பேசறீங்க’ என்று கமல் ஜாலியாக சொன்னாலும் அது அவருக்கு அடிக்க ஆரம்பிக்கப்பட்ட ரிவீட்டின் முதல் அடையாளம் என்று தோன்றியது.

“காலைல லெட்டர்லாம் வரும். அந்த டாஸ்க் நல்லாயிருக்கும்” என்றார் ஷிவானி. (இந்தச் சம்பவம்லாம் எந்த நடந்தது?!) “இந்த வாரம் இனிப்பாகவும் மசாலாவாகவும் இருந்தது... ஒரு விஷயத்துல தப்பு செஞ்சுட்டேன்...” என்று சனம் ஆரம்பிக்க 'இரும்மா... இப்படியே முடிச்சுடுவீங்க போல... இன்னமும் அதை நல்லா இழுக்கணும்ல...’ என்று யோசித்த கமல் “இருங்க.. இதைப் பற்றி தனியா விசாரிக்கலாம்" என்று தள்ளி வைத்தார்.

‘என்னை சின்னக்குழந்தைன்னு சொல்லிட்டாங்க’ என்கிற பல்லவியை நூறாவது முறையாக பாடினார் பாலாஜி. அனிதாவிடம் உள்ள அதே பிரச்னைதான் இது. தன்னைப் பற்றி ஒருமுறை சொல்லப்பட்ட விமர்சனத்தை, தானே பலமுறை கூறி பெரிதாக்கி மக்களின் மனதில் பதிய வைக்கும் அபத்தம்.

சனம் x சுரேஷ் பிரச்சினைக்குள் அடுத்து வந்த கமல் ‘யார் பக்கம் நியாயம் இருக்குன்னு நெனக்கறீங்க. கையத் தூக்குங்க’ என்ற போது வாக்குகள் ஏறத்தாழ சமமாக விழுந்தன.

இந்த விவகாரத்தை சற்று விரிவாக அலசுவோம்.

இதுவரை காட்டப்பட்ட காட்சிகளின் படி சனத்திற்கும் சுரேஷிற்கும் பெரிதாக சண்டை ஏதுமில்லை. பாலாவிற்கும் சனத்திற்கும்தான் மோதல் அடிக்கடி நிகழ்ந்தது. ஆனால் சனத்தின் மீது சுரேஷ் ஏன் மிகையாக கோபப்பட்டார் என்று தெரியவில்லை. ‘துணி அலசல்’ விவகாரத்தின் போது சுரேஷிற்கு உதவ முன் வந்து மூக்கு உடைபட்டார் சனம். அப்போது சுரேஷின் கோபமும் உதிர்த்த வார்த்தைகளும் கடுமையாக இருந்தன.

பிக்பாஸ் - நாள் 20

சனம் அதற்கு ஈடான கோபத்தை அப்போது சவெளிக்காட்டாமல் அமைதியாக இருந்து விட்டாலும் அந்தக் கோபத்தின் சூடு அவருடைய மனதில் அப்படியே இருந்து கொண்டிருந்தது. ‘நாடா காடா’ டாஸ்க்கில் நிஷாவையும் ரம்யாவையும் அடித்து சுரேஷ் ஓவராக செயல்பட்டுக் கொண்டிருந்த போது சனத்தின் மனதில் இருந்த கோபம் இன்னமும் பெருகியிருக்க வேண்டும்.

‘என் கிட்ட இதே மாதிரி நடந்துக்கட்டும்.. வெச்சுக்கறேன்’ என்று மனதில் பொருமியிருக்க வேண்டும். ‘மைண்ட் வாய்ஸ்னு நெனச்சு சத்தமா பேசிட்டேன்’ன்ற கதையாக இதை வேல்முருகனிடமும் வாய்விட்டு அவர் சொல்லியிருக்க வேண்டும்.

சனம் எதிர்பார்த்தபடியே அந்தச் சம்பவம் நிகழ்ந்து விட, பற்ற வைத்த வெடிகுண்டாக மாறிவிட்டார். அவர் மனதில் அடக்கி வைத்திருந்த அத்தனை கோபமும் கடுமையான வார்த்தைகளாக வெளியே வந்து விழுந்தன. ஒருவர் தவறு இழைப்பதை விடவும் அவரை தவறு செய்யத் தூண்டுகிறவரே அதிக ஆபத்தானவர். அவர்தான் பிரதான குற்றவாளி.

இதை சுரேஷூம் மனதார உணர்ந்து கொண்டது போல்தான் தெரிகிறது. எனவேதான் அதிக முறை அர்ச்சனா மன்னிப்பு கேட்கச் சொன்ன போதும் அவர் அதைப் பொருட்படுத்தவில்லை. மாறாக இன்றும் கூட அதிக முறை மன்னிப்பு கேட்கும் மனநிலையில் இருக்கிறார். ‘படுத்தே விட்டானய்யா...’ என்பது போல முழுக்க சரணாகதி அடையும் ஏகாந்த நிலைக்கு வந்து விட்டார் சுரேஷ்.

இதை அவர் முழு மனதுடன் ஏற்றுக் கொள்கிறாரா அல்லது மக்களின் கோபத்தை சம்பாதித்துக் கொள்ளக்கூடாது என்று அவர் ஆடும் ஆட்டத்தின் உத்தியா என்று தெரியவில்லை. "இனிமேலும் சண்டை போடுவேன். அது வேற விஷயம். ஆனா இந்த டாஸ்க்ல செஞ்சது என்னோட தப்பு" என்று சுரேஷ் சொன்னது சுவாரஸ்யம். ஆக மனிதர் இன்னமும் ஸ்போர்ட்டிவ்வாகத்தான் இருக்கிறார்.
பிக்பாஸ் - நாள் 20

இந்த விவகாரத்தில் நமக்கும் ஒரு படிப்பினை உள்ளது. நாம் யாரையாவது ஒருவரை கடுமையாக பேசிவிட்டால் அது அங்கேயே முடிந்து விடுவதில்லை. அப்படியாக நாம் நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அது வேறு எங்காவது திரும்பி, மீண்டும் நம்மையே வந்து தாக்கும். ‘Every Action has an Equal and Opposite Reaction’ என்பது இதிலுள்ள நீதி.

ஆனால், சனம் பேசிய கடுமையான வார்த்தைகளை கூட புரிந்து கொள்ளும் சுரேஷால் பாலாவின் கடுமையான விமர்சனத்தை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ‘தன் நண்பனே தன்னை கத்தியால் குத்தும் போது ஏற்படும் வலி இது. புரிந்தவர்களால்தான் இதைச் சரியாக உணர முடியும். வாக்குமூல அறைக்குள் சுரேஷ் குமுறி அழுததற்கு காரணம் பாலாஜியின் கடுமையும் என்பது இப்போது புரிகிறது.

ஆனால் தனியறையில் கதறி அழுததை சுரேஷ் ஒளித்து வைக்கவில்லை. வெளியே வந்தவுடன் மற்றவர்களிடம் பகிர்ந்திருக்கிறார். ‘இது பிரமோவில் வரும். கமல் விசாரணையிலும் வரும்’ என்கிற பிரக்ஞை அவருக்குள் இருக்கிறது. சுரேஷ் மிக புத்திசாலியான போட்டியாளர் என்பது இன்னமும் அழுத்தமாக உறுதியாகிறது.

பாலாஜி குறித்த சுரேஷின் வருத்தத்தில் நியாயம் இருந்தாலும் "அந்தச் சமயத்துல அவர் சொன்னதை நான் தப்பா புரிஞ்சுக்கிட்டேன்... சனத்தைதான் ‘பேய்’ன்னு சொல்றாரு –ன்னு நெனச்சிட்டேன். எனக்கு நிறைய அட்வைஸ் பண்றவரே இப்படிப் பண்ணிட்டாரேன்னு கோபம் வந்துச்சு" என்று இந்தப் பிரச்னையின் இன்னொரு பக்க பரிமாணத்தை முன்வைத்தார் பாலா. “ஏன் தாத்தா இப்படிச் செஞ்சீங்க?” என்று பாலா சற்று நிதானமாக விசாரித்திருந்தால் சுரேஷ் சரியாக விளக்கியிருப்பார். முன்கோபமும் அவசரமும் நட்பிற்குள் ஆழமான விரிசல்களை உருவாக்கி விடும் என்பதற்கான உதாரணம் இது.

பிக்பாஸ் - நாள் 20

“வெளியில் பெண்கள் மீது ஆண்கள் செலுத்தும் வன்முறை அதிகம் இருக்கு... குறைந்தபட்சம் தொலைக்காட்சியிலாவது அது வெளிப்படாமல் இருக்கட்டும்" என்று கமல் சொன்னது சரியான விஷயம். "அந்தச் செங்கோலை எடுத்துப் பார்த்தேன்... பார்க்கறதுக்கு மெட்டல் மாதிரி இருந்தாலும் சினிமா propதான் அது” என்று சொல்வதின் மூலம் ‘இதுக்காம்மா இத்தனை சீன் போட்டீங்க’ என்று சனத்திற்கு மெல்ல ஊசி ஏற்றியது கமலின் சாதுர்யம். அதே சமயத்தில் நிகழ்ந்த வன்முறையை நியாயப்படுத்தி விடாமலும் ஒரு நுட்பமான சர்க்கஸ் விளையாட்டை திறமையுடன் ஆடிக்காட்டினார் கமல்.

“'கத்தியால் செருகிடுவேன்’றதை விடவும் 'செருப்பால அடிப்பேன்’றதுதான் மக்களுக்கு மிகுந்த கோபத்தை வர வைக்கிற விஷயம். செருப்பால அடிச்சு யாரும் சாவ மாட்டாங்க" என்று சொன்னதெல்லாம் கமலின் அட்டகாசமான, subtle கிண்டல். ஆனால் யோசித்துப் பார்த்தால் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது.

“வேல்முருகனிடம் நீங்கள் முதலிலேயே ஒத்திகை பார்த்து விட்டீர்கள்" என்று சனத்தை கமல் பொதுவில் போட்டுக் கொடுத்த போது ‘ஆஹா.. அப்படியா விஷயம்?!’ என்கிற திகைப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார் சுரேஷ். எனில் சனம் இதை திட்டமிட்டு செய்தார் என்பதுபோல் ஆகி விடுகிறது. இதை மறுப்பதற்காக பிறகு மிகவும் மெனக்கெட்டார் சனம்.

சுரேஷை மன்னிப்பு கேட்க வைத்த விஷயத்தில் யாரைப் பற்றியும் நேராக குறிப்பிடாமல் "என்னன்னு விசாரிக்காமலேயே மன்னிப்பு கேளுன்னு அவசரப்படுத்திட்டீங்க” என்று கமல் குறிப்பிட்ட போது அது தன்னைத்தான் என்பதை அர்ச்சனா உணர்ந்து கொண்டார். அவர் தானே முன்வந்து வாக்குமூலம் தரும் நெருக்கடியை மிக நுட்பமாக கமல் உருவாக்கியது சிறப்பான விஷயம்.
பிக்பாஸ் - நாள் 20

“'விருமாண்டி’ பட சூட்டிங்ல முதல் நாள் என் கேரக்ட்டர் வரவேயில்லை. அப்புறம் பார்த்தா... நான் ஹேராம் கேரக்ட்டர்லயே நின்னுட்டேன்-றதை பிறகு கண்டுபிடிச்சேன்” என்று மேற்கோள் காட்டியதின் மூலம் “நிகழ்ச்சி தொகுப்பாளர் வேலையை நிறைய செஞ்சிப் பழகி இந்த நிகழ்ச்சிக்கும் உங்களை ஆங்க்கரா நினைச்சுக்கறீங்களோன்னு தோணுது" என்று அற்புதமாக அர்ச்சனாவை கமல் டார்கெட் செய்தது இன்றைய நாளின் சிறப்புகளுள் ஒன்று.

உண்மையில் ‘டிப்ளமஸி’ என்கிற வார்த்தை கமலின் விசாரணைக்குத்தான் பொருந்தும். அத்தனை ஜாக்கிரதையாகவும் சாதுர்யமாகவும் ராஜதந்திரத்துடனும் வார்த்தைகளைப் பயன்படுத்துகிறார். "இது நான் சொல்ற அறிவுரை இல்லைங்க... Tip. Observation" என்றெல்லாம் மிக கவனமாக தன்னை விலக்கிக் கொள்கிறார்.

“அந்த இடத்துல சுரேஷ் இல்லாம வேற யாராவது அடிச்சிருந்தா நான் கோபப்பட்டிருக்க மாட்டேன்” என்று சனம் வெளிப்படையாகச் சொன்னது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

பிக்பாஸ் வீட்டில் ஆர்வமாகவும் ஈடுபாட்டுடனும் செயல்படாத நால்வரின் பெயர்களை (ரமேஷ், ஆஜித், சோம், சம்யுக்தா) கமல் சொன்னது சரியான விஷயம்தான். ஆனால் இந்த வரிசையில் முதலில் உள்ள ஷிவானியின் பெயர் இதில் விடுபட்டது ஆச்சர்யமாக இருக்கிறது. ஷிவானியோடு ஒப்பிடும் போது சம்யுக்தாவும் சோமும் சற்று தேவலை.

“பிக்பாஸ் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு பார்வையாளரும் அந்த வீட்டின் உள்ளே இருக்கிறார்" என்று ஷிவானியின் செயலின்மையை கிண்டலடிக்கும் ஒரு கமெண்ட்டை சமூகவலைத்தளத்தில் பார்த்தேன். மிக உண்மையான கிண்டல் இது. அந்த அளவிற்கு ஒரு பார்வையாளராக மட்டுமே ஷிவானி இருக்கிறார். எனில் ‘செயல்படாதவர்களின் பட்டியலில்’ ஷிவானியின் பெயர் விடுபட்டிருப்பது முறையானதல்ல.

பிக்பாஸ் - நாள் 20

பிறகு நடந்த ஒரு டாஸ்க்கில் வாக்களிக்க ஷிவானி எழுந்து வந்த போது ‘இருக்கீங்களா..?’ என்கிற மெல்லிய கிண்டலோடு கமல் நிறுத்திக் கொண்டார். அல்லது ‘இந்தப் பொண்ணுக்கு எத்தனை முறைதான் சொல்றது. அதுக்கா தெரிஞ்சா சரி. இல்லைன்னா.. எப்படியாவது போகட்டும்’ என்று விட்டு விட்டாரோ என்று தெரியவில்லை.

அடுத்து நிகழ்ந்தது... ஒரு வில்லங்கமான டாஸ்க். எவிக்ஷன் பட்டியலில் இருப்பவர்களின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருக்கும். அவர்களில் ‘யார் இருக்க வேண்டும்... யார் வெளியேற வேண்டும்’ என்பதை எவிக்ஷன் பட்டியலில் அல்லாத மற்றவர்கள் தேர்வு செய்ய வேண்டும்.

இதில் சுரேஷிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது சற்று ஆச்சர்யம்தான். சில பலவீனங்களைத் தவிர சுவாரஸ்யமான, தவிர்க்க முடியாத போட்டியாளராக சுரேஷ் அந்த வீட்டிற்குள் இருக்கிறார் என்பது நிரூபணமாகிறது.

அதிக எண்ணிக்கையிலான எதிர் வாக்குகள் ஆஜித்திற்கு கிடைத்தது. “அவன் கிட்ட எவிக்ஷன் ஃப்ரீ பாஸ் இருக்கு. எப்படியும் தப்பிச்சுடுவான்" என்கிற காரணத்தைச் சொல்லி ரமேஷ் ஆரம்பித்து வைத்ததை மற்றவர்களும் தொடர்ந்தார்கள்.

"அமைதியா இருக்கறது ஆஜித்தோட குணம்... அதை மாத்தச் சொல்றது சரியாப்படல" என்கிற நியாயமான காரணத்தைச் சொல்லி ஆஜித்திற்கு ஆதரவாக வாக்களித்தார் நிஷா. ".‘வாடா போடா’ன்னு சொல்லக்கூடாதுன்னு பாலாஜி சொல்றான்.. அதுக்காகவே அவனுக்கு எதிரா குத்துவேன். அப்படித்தாண்டா.. சொல்லுவேன்” என்று ‘அக்கா’த்தனத்தோடு சிணுங்கியபடி நிஷா வந்தது அத்தனை அழகான காட்சி.

‘அதிகம் உணர்ச்சிவசப்படுகிறார்... நாமினேஷன் வரிசையில் வந்துவிட்டால் நிறைய வருத்தப்பட்டு தனிமையில் யோசிக்கிறார்’ என்கிற காரணங்களோடு அனிதாவிற்கு சில எதிர்வாக்குகள் வந்தன. அனிதாவிற்கு ஆதரவான வாக்கை சோம் அளிக்கும் சமயத்தில், “அப்படிச் செய்யலைன்னா... அனிதா உங்க கூட சண்டை போடுவாங்கள்ல" என்று டைமிங்காக கமல் குத்திக் காட்டியது சுவாரஸ்யமான நகைச்சுவை.

பிக்பாஸ் - நாள் 20

எவிக்ஷன் வரிசையில் இருந்த ஆரிக்கு ஆதரவாகவும் சரி. எதிராகவும் சரி... எந்த வாக்கும் விழவில்லை. இது ஏதோ அவருடைய பலம் என்பது போல் தோன்றும். ஆனால் இது பலவீனமான விஷயம். எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாமல் ஒருவர் இருந்தால் அது அவருக்கு பின்னடைவைத்தான் ஏற்படுத்தும்.

‘யாரையாவது ஒருவரை காப்பாற்றலாம்!' என்கிற விளையாட்டில் தனது வழக்கமான குறும்புகளைச் செய்த கமல், ‘பாலாஜி காப்பாற்றப்பட்டார்’ என்பதை அறிவித்த போது வீட்டிலேயே அதிக மகிழ்ச்சி அடைந்தவர் ‘கேப்ரியல்லா’தான். சுரேஷ் அமைதியாக கடந்து சென்று விட, மற்றவர்கள் தங்களின் வாழ்த்துக்களை பாலாஜிக்கு தெரிவித்தனர்.

Also Read: "இந்த `டிப்ளமஸி'ன்னா என்னங்கய்யா?" ரியோவை முன்னிறுத்துகிறாரா அர்ச்சனா? பிக்பாஸ் - நாள் 19

பிக்பாஸ் - நாள் 20

‘ஆஜித், பாலாஜி’ ஆகிய இருவரையும் எழுந்து அமரச் சொன்னதால் ‘இருவரும் காப்பாற்றப்பட்டார்கள்’ என்று சோம் சொன்னது தவறான புரிதலாகத் தோன்றுகிறது.

இந்த வாரம் வெளியேற்றப்பட்டவர் யார் என்பது அடுத்த நாளின் பஞ்சாயத்தில் தெரிந்து விடும். ‘அவரின் பெயர் மூன்று எழுத்தில் இருக்கும்’ என்கிற ஒரு தகவல் நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து கிடைத்திருக்கிறது.

அவர் வெளியேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டாலும் அவர் வீட்டிலிருந்து வெளியேறவில்லையாம். இதிலேயே ‘யார்’ என்கிற க்ளூ இருக்கிறது. சரியாக யூகிக்கிறவர்கள்... கமெண்ட் பாக்ஸில் சொல்லுங்கள்.


source https://cinema.vikatan.com/bigg-boss-tamil/kamal-targets-archana-bala-gets-saved-bigg-boss-tamil-season-4-day-20-highlights

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக