Ad

சனி, 3 அக்டோபர், 2020

சென்னை: `ரூ.2,000-தான் டார்க்கெட்; `Sale' வாட்ஸ்அப் குரூப்!' - அதிரவைத்த ஆன்லைன் மோசடி

சென்னை ஓட்டேரி ஏகாந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் இந்திரா பிரகாஷ். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு புளியந்தோப்பு துணை கமிஷனர் ராஜேஷ்கண்ணாவிடம் புகார் மனு ஒன்றைக் கொடுத்தார். அதன்பேரில் துணைக் கமிஷனர் ராஜேஷ்கண்ணா, சைபர் க்ரைம் போலீஸாரை விசாரிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து சைபர் க்ரைம் போலீஸாரே வாடிக்கையாளர் போலக் களமிறங்கினர். சம்பந்தப்பட்ட ராஜேந்திரனின் செல்போன் நம்பரில் தொடர்பு கொண்ட பெண் போலீஸ் ஒருவர், சுடிதார் வேண்டும் எனக் கூறினார்.

சேலை

அப்போது ராஜேந்திரன், வழக்கம்போல உங்களுக்கு எந்த டிரஸ் பிடித்துள்ளதோ அதை செலக்ட் செய்து வாட்ஸப்பில் போட்டோவை எனக்கு அனுப்புங்கள். பின்னர், அதற்குரிய பணத்தை ஆன்லைனில் செலுத்துங்கள் என்று வங்கி விவரங்களைப் பகிர்ந்தார். அப்போது போலீஸார், எங்களுக்கு அவசரமாகத் தேவைப்படுகிறது. அதனால், நேரில் வந்து வாங்கிக் கொள்கிறோம் என்று கூறினர். உடனே ராஜேந்திரன், தாம்பரத்துக்கு வாருங்கள் என்று தெரிவித்தார். அதன்படி போலீஸார் மப்டியில் தாம்பரம் சென்றனர். அங்கு வந்த ராஜேந்திரனிடம் டிரஸ் எங்கே என்று போலீஸார் கேட்டனர். அதற்கு அவரும் பணம் ரெடியா என்று கேட்டுள்ளார். ராஜேந்திரன் டிரஸ்ஸைக் கொடுக்காமல் பணத்தை வாங்குவதில் ஆர்வமாக இருந்துள்ளார். இதையடுத்து ராஜேந்திரனைப் பிடித்த போலீஸார் அவரை ஒட்டேரி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் வள்ளி தலைமையிலான போலீஸார் ராஜேந்திரனிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``மேற்கு தாம்பரம், கல்யாண்புரம், 3-வது தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (42). இவர் எம்.ஏ படித்துவிட்டு சில ஆண்டுகள் கால் சென்டரில் வேலைபார்த்து வந்துள்ளார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. இவரின் தந்தை பார்த்தசாரதிக்கு 74 வயதாகிறது. அவருடன் வசித்து வரும் ராஜேந்திரன், கொரோனா ஊரடங்கால் வேலை இல்லாமல் தவித்து வந்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன் ராஜேந்திரன், ஆன்லைனில் பணத்தை செலுத்தி ஏமாந்துள்ளார். அதனால், ராஜேந்திரனும் ஆன்லைனில் சீட்டிங் செய்யலாம் என முடிவுக்கு வந்துள்ளார். பெரும்பாலும் டிரஸ் மற்றும் காஸ்மெட்டிக் பொருள்கள் மீது பெண்களுக்கு ஆசை அதிகம் என்பதால் பெண்களை ஏமாற்ற ராஜேந்திரன் திட்டமிட்டுள்ளார்.

FRAUD

அதற்காக சுடிதார், சேலை போன்ற புத்தம் புதிய டிசைன் டிரஸ்களின் போட்டோக்களை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்த ராஜேந்திரன், அதன் ஓரிஜினல் விலையை விடப் பாதி விலைக்குக் கொடுப்பதாக ஃபேஸ்புக்கில் முதலில் பதிவு செய்வார். அப்போது, அந்தப் பதிவைப் பார்த்து ராஜேந்திரனை தொடர்பு கொள்பவர்களின் செல்போன் நம்பர்களை 'sale' என்ற பெயரில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் சேர்த்துவிடுவார். அந்த குரூப்பில் ஏராளமான டிரஸ்கள், காஸ்மெட்டிக் போட்டோஸ்களை பதிவு செய்யும் ராஜேந்திரன், விலையையும் குறைவாகக் குறிப்பிடுவார். வெளியில் ஒரு சுடிதாரின் விலை 500 ரூபாய் என்றால் ராஜேந்திரனிடம் அதே சுடிதார் 250 ரூபாய்தான்.

விலை குறைவு என்பதால் ராஜேந்திரனுக்கு ஆர்டர்கள் குவிந்தன. டிரஸ்களை செலக்ட் செய்து அதற்குரிய பணத்தை ராஜேந்திரனின் வங்கிக் கணக்குக்கு ஏராளமான பெண்கள் அனுப்பி வைத்துவிட்டு, டிரஸ்கள் வீடு தேடி வரும் என ஆவலுடன் காத்திருந்துள்ளனர். ஆனால் ராஜேந்திரன், பணம் அனுப்பிய பெண்களின் செல்போன் நம்பரை வாட்ஸப் குரூப்பிலிருந்து முதலில் நீக்குவார். பிறகு அந்த நம்பரை ப்ளாக் செய்துவிடுவார். அதனால், ராஜேந்திரனை அந்தப் பெண்களால் தொடர்பு கொள்ள முடியாது. ஒரு பெண்ணிடம் அதிகபட்சமாக ராஜேந்திரன் 2,000 ரூபாய்க்கு மேல் ஏமாற்றமாட்டார். அதனால் 2 ஆயிரம் ரூபாய்தானே என்று பெண்களும் போனால் போகிறது என்று விட்டுவிடுவார்கள். அதனால் தொடர்ந்து ராஜேந்திரன், இதுபோல மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

fraud

Also Read: சென்னை: வாட்ஸ்அப்பில் அந்தரங்க புகைப்படம்... பெண்ணை மிரட்டிய ஆன்லைன் 'லோன் ஆப்' கும்பல்!

இந்தச் சமயத்தில்தான் இந்திரா என்பவர் அளித்த புகாரின் பேரில் விசாரித்தபோதுதான் ராஜேந்திரனின் மோசடி வேலைகள் வெளியில் தெரியவந்துள்ளன. அவரைக் கைது செய்து ராஜேந்திரனிடமிருந்து ஒரு செல்போன், 6 சிம் கார்டுகள், ஒரு மெமரி கார்டு ஆகியவற்றைப் பறிமுதல் செய்துள்ளோம். ராஜேந்திரனிடம் எத்தனைப் பெண்கள் ஏமாந்தார்கள் என்ற விவரம் தெரியவில்லை. அவரின் செல்போனில் உள்ள வாட்ஸ்அப் குரூப்பில் மட்டும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளனர்" என்றனர்.

ஒரு ஸ்மார்ட் போனை வைத்துக் கொண்டு பெண்களின் ஆசையைத் தூண்டி லட்சக்கணக்கில் பணத்தை ஏமாற்றி வந்துள்ளார் ராஜேந்திரன். ஆன் லைனில் பொருள்களை வாங்கும் போது பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கின்றனர் பைசர் க்ரைம் போலீஸார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrested-mba-graduate-over-online-fraud-complaint

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக