Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2020

திண்டுக்கல்: `180 நாள்கள் தண்ணீர் திறக்க வேண்டும்!’ - திடீர் சாலைமறியல்; ஸ்தம்பித்த நெடுஞ்சாலை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் உருவாகும் குடகனாறு, திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தாலுகா மல்லையபுரம், வீரக்கல், அனுமந்தராயன்கோட்டை, மயிலாப்பூர், பாராட்டி உட்பட பல கிராமங்கள் வழியாக சுமார் 110 கி.மீ பயணித்து இறுதியாக கரூர் மாவட்டத்திற்குள் சென்று காவிரியில் கலக்கிறது. வழிநெடுகிலும் உள்ள கிராமங்களுக்கு குடகனாறுதான் பாசன மற்றும் குடிநீர் ஆதாரம்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்

இந்நிலையில், கடந்த 8 வருடங்களுக்கு முன்னர், ஆத்தூர் தாலுகா ராஜவாய்க்கால் என்ற இடத்தில் ஆற்றில் தடுப்பணை கட்டப்பட்டு, அதனை ஒட்டியுள்ள விவசாய நிலங்கள் பலனடைந்தன. இதனால், குடகனாற்றினை மட்டுமே நம்பி இருந்த கிராமங்களில் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவானது. தொடர்ந்து, குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிடக் கோரி, கிராம மக்கள் பலகட்டப் போராட்டங்களை நடத்திவருகின்றனர்.

இந்நிலையில், இன்று காலை, தேனி - திண்டுக்கல் நெடுஞ்சாலையில் பித்தளைப்பட்டி பிரிவு எனும் இடத்தில் சுமார் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒரே நேரத்தில் திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பேச்சுவாரத்தை நடத்தியும், மக்கள் கலைந்து செல்ல மறுத்துவிட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராம மக்கள் கூறும்போது, ``குடகனாற்று தண்ணீரில் பாரபட்சம் பார்க்கின்றனர். இந்த பிரச்னை தொடர்பாக மாவட்ட நிர்வாகம் அமைத்த நிபுணர் குழு தற்போது இங்கே வரவேண்டும். எங்கள் தரப்பு நியாயத்தை கேட்க வேண்டும்.

Also Read: திண்டுக்கல்: `ஆளும்கட்சியினர் என்னைத் தரக்குறைவாகப் பேசுகின்றனர்!’ - கொதிக்கும் ஜோதிமணி எம்.பி

உடனே, குடகனாற்றில் தண்ணீர் திறந்துவிட வேண்டும். எங்களுக்கு 180 நாள்கள் தண்ணீர் வேண்டும். எங்கள் கோரிக்கையை ஏற்கும் வரை எங்கள் போராட்டத்தை கைவிடப்போவதில்லை” என்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண்கள்

Also Read: பாலியல் கொலைகளில் பொது சமூகத்தின் பாரபட்ச கண்ணீர்... திண்டுக்கல் சிறுமி கொலை உணர்த்துவது என்ன?

குழந்தைகள், பெண்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர், கையில் கருப்பு கொடியுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போலீஸார் குவிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.



source https://www.vikatan.com/social-affairs/protest/people-staged-protest-near-dindigul-over-water-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக