Ad

வியாழன், 1 அக்டோபர், 2020

``விஜய் அரசியலுக்கு வர இவ்ளோ டிராமா பண்ணணுமா?!'' - பார்த்திபன் தொடர் - 18

''Dear Parthiban Sir,

The comedy scenes in 'Unnaruge Naan Irundhal' movie were very good... Then why don't you collaborate more with Vivek Sir?''

- Padmakumar, Kerala

விவேக்

"மிஸ்டர் விவேக் மிகச்சிறந்த நடிகர். நல்ல பண்பாளர். இப்ப அவரோட பயணம் மரம் நடுறது மாதிரியான நல்ல விஷயங்கள்ல தொடருது. அவர் நல்ல விஷயங்கள் செய்யும்போது அவரோடபோய் நான் இணையுறதும், நான் செய்யும்போது அவர் என்னோட இணையுறதும்ன்ற மாதிரி நிறைய விஷயங்கள்ல கலந்துக்குறோம். ஆனா, சினிமால சேர்ந்து நடிக்கிறதுக்கு அந்தக் கதைக்குள்ள அப்படி ஒரு வாய்ப்பு, ஒரு ஸ்கோப் உருவாகி வரணும். 'உன்னருகே நானிருந்தால்' ஸ்கிரிப்டில் அப்படி ஸ்கோப்பைவிட கேப் நிறைய இருந்தது. ஒரு லெவலுக்கு மேல அந்தக் கதை நகரவே நகராது. அதுல ஃபில் பண்ற மாதிரியான விஷயங்கள் பண்ணோம். 'ஓகே, இன்னைக்கு விவேக் நடிக்க வர்றார்... அவரோட சேர்ந்து என்ன காமெடி பண்ணலாம். வடிவேல் வர்றாரு... அவரோட என்ன காமெடி பண்ணலாம்'னு பண்ணதுதான் எல்லாமே. ஸ்கிரிப்ட்ல அப்படி எதுவும் இல்ல. 'உன்னருகே நானிருந்தால்' மாதிரி இன்னொரு வாய்ப்பு கிடைக்கும். கிடைக்கும்போது இணைந்து பணிபுரிவோம். அவரோட இணைந்து பணிபுரியறது எனக்கும் மகிழ்ச்சியான விஷயம்.''

''தமிழ் சினிமால மறக்கமுடியாத ஹீரோயின் சில்க் ஸ்மிதா... உங்களுக்கு அவங்களைப் பிடிக்குமா, அவங்களை உங்கப்படத்துல நடிக்கவைக்க முயற்சி பண்ணியிருக்கீங்களா, அவங்களோடு ஏதும் ஸ்வீட் மெமரீஸ் இருந்தா ஷேர் பண்ணுங்க?''

- திருமாறன், பாண்டிச்சேரி

''கால் நூற்றாண்டுக்குப் பின்னாடியும் ஒரு கவர்ச்சி நடிகையைப் பற்றி ஒரு கேள்வி. இதில் இருந்து என்ன தெரியுதுன்னா அவங்க வெறும் கவர்ச்சி நடிகை மட்டும் இல்லைன்னு எனக்குப் புலப்படுது. ஸ்மிதாவுக்கு, அவங்களுக்கு உள்ள என்ன இருந்ததுன்னு யாருக்கும் தெரியாது. ஆனா, வெளில இருந்த கவர்ச்சியை நாம எல்லோரும் பார்த்து ரசிச்சிட்டு இருந்தோம். அதைமீறி அவங்களுக்கு உள்ள ஒரு அருமையான காதல் இருந்ததுன்னு கேள்விப்பட்டிருக்கேன். 'உள்ளே வெளியே'ன்னு நான் அடிக்கடி சொல்லும்போதே உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும் அவங்க என்னோட 'உள்ளே வெளியே' படத்துல நடிச்சிருக்காங்க. 'கண்டுபிடி நீதான்... கூடு கட்டிவெச்ச தேன்தான்' ஒரு பாட்டுல மட்டும் வருவாங்க. அந்தப் படத்துல நடிக்கவைக்கிறதுக்காக அவங்க வீட்டுக்குப்போயிருக்கும்போது, ஸ்டெப்ஸ்ல சின்னதா ஒரு ஷார்ட்ஸ் போட்டுட்டு அவங்க பேசின ஸ்டைல் ரொம்பப் பிடிச்சது. வீட்டு வேலை செஞ்சிட்டு இருந்தவங்க சினிமாக்குள்ள வந்தாங்கண்ணு வினு சக்ரவர்த்தி சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். எங்க இருந்து எங்க மாறியிருக்காங்க, எப்படி தன்னைத்தானே ஷேப் பண்ணிக்கிட்டாங்கன்னு அவங்களைப் பார்க்கும்போது ஆச்சர்யமா இருக்கும். கிளாஸியா வாழ்ந்தாங்க. சிலபேருக்கு பணம் இருக்கும், வசதி இருக்கும். ஆனா, ரசனையோட வாழத்தெரியாது. ஆனா, நான் ஸ்மிதாகிட்ட ரசிச்சது அந்த ரசனையைத்தான்.

சில்க் ஸ்மிதா

"ஹாலிவுட்ல பொறந்து வளர்ந்த மாதிரியான ஒரு பிஹேவியர் அவங்ககிட்ட இருக்கும். அவங்க அப்படியே இருந்திருக்கலாம். அந்த ரசிப்பு, ரசனை அப்படியே இருந்திருக்கலாம். அவங்க அதுல இருந்து தடுமாறி சூசைட் பண்ணது பெரிய அதிர்ச்சி. அப்பதான் ஒவ்வொரு மனிதருக்குள்ளும், ஒவ்வொரு மனதுக்குள்ளும் ஏதோ வேற ஒரு பிரச்னை இருக்கும்னு புரிஞ்சது. அவங்க போஸ்ட்மார்ட்டம் நடந்தப்போ கேள்விப்பட்ட விஷயம்தான் இது. எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது. அவங்க உடலைப் பார்க்குறதுக்காக சில நூறு ரூபாய்களைக் கொடுத்து சிலபேர் உள்ளபோய் பார்த்துட்டு வந்ததா சொல்லுவாங்க. அவங்க சாவுலகூட யாரோ காசு பார்த்திருக்காங்க. அகோரி மாதிரியான மனநிலை. அகோரிகள் மனிதர்களையே சாப்பிடுவாங்கன்றது வேற. ஆனா, சாதாரணமா நம்மோடு பேன்ட், சட்டை போட்டு சராசரி மனிதர்கள் மாதிரி நடமாடுற மனிதர்களுக்கு உள்ள இருக்கிற விகாரம் அதிர்ச்சியா இருந்தது. அவங்க காதல் விஷயத்தால தற்கொலை பண்ணிக்கிட்டாங்கன்னு சொன்னாங்க. காதலுக்கு அவ்ளோ பெரிய முக்கியத்துவம் கொடுக்கணுமான்னு எனக்குத் தெரியல. காதல் சந்தோஷத்தைக் கொடுத்தது. இப்பவும் கொடுக்குது. ஆனா, அதை கொஞ்சம் தூரத்துல வெச்சிக்கணும். மனசுக்குள்ள காதல் இருக்கணும். ஆனா, காதலுக்குள்ள மனசு போயிடுச்சுன்னா கஷ்டம். தவறான எண்ணத்தோட மட்டும்போய் சில்க் ஸ்மிதாகிட்ட பழகிடமுடியாதுன்னு நிறைய ஹீரோஸ்லாம் என்கிட்ட சொல்லியிருக்காங்க. எல்லாத்துக்கும் ஒரு பெரிய வரையறை வெச்சிருப்பாங்க. அவங்க காதலிக்கிற ஒருத்தரோடத்தான் நெருக்கம்னு சொல்லியிருக்காங்க. மிகப்பெரிய காதலுக்குரிய நடிகை. அவ்ளோ அவசரப்பட்டு தற்கொலை முடிவுக்குப் போயிருக்கவேணாம். இந்த பதிலின் மூலமா ரொம்ப அழுத்தம் திருத்தமா மீண்டும் நான் சொல்றது, வாழ்க்கைன்றது நாம வாழ்ந்து பார்க்குறதுக்கானது. அதை நாமளே முடிச்சிடக்கூடாது. இந்த நேரத்துல தற்கொலை பற்றி நான் எழுதின ஒரு கவிதையை உங்களோட பகிர்ந்துக்கிறேன்.

"வாழ்ந்து என்ன செய்யப்போகிறோம் செத்து தொலையலாமே... செத்துதான் என்ன செய்யப்போகிறோம் வாழ்ந்து தொலைக்கலாமே!"

''கமல் அரசியலுக்கு வந்துட்டார், ரஜினி வரப்போறேன்னு சொல்லுறார். விஜய், விஷால்னு எல்லாருக்குமே அரசியல் ஆசை இருக்கு. உங்களுக்கும் இருக்கா, எந்த கட்சில சேருவீங்க, இல்லை தனி கட்சியா?''

- ஆதி, மதுராந்தகம்

ரஜினி - கமல்

"ஆதியில இருந்தே இந்தக் கேள்வி என்கிட்ட கேட்கப்படுது. மதுராந்தகத்துக்குப் போறதுக்குப் பல வழிகள் இருக்கு. ஆனா, எல்லோரும் நடந்துபோன பாதையில் பயணிப்பதில் என்ன சுவாரஸ்யம் இருக்கிறது? அதனாலதான் நான் 'புதிய பாதை' போட்டவன். அப்பலாம் ஒரு படம் இப்படித்தான் இருக்கணும்னு ஒரு ஃபார்முலா இருக்கும். அதை நிறையபேர் உடைச்சிருக்காங்க. அதேபோல நானும் அதை சின்னதா உடைச்சிருக்கேன். எனக்குன்னு வேற ஒரு ஸ்டைல் உருவாக்கிக்கணும்னு ஆசைப்பட்டேன். அது முடிஞ்சது. ஆனா, சினிமா மாதிரி அரசியல் அவ்ளோ சாதாரணமானதில்லை.

சமீபத்தில் எஸ்.பி.பி சாரின் வருத்தமான நிகழ்வுக்கு விஜய் போயிருக்கார். அங்க ஒரு செருப்பு விழுந்துகிடந்திருக்கு. அந்த ஒத்த செருப்பை எடுத்து கொடுக்கிறார். உடனே அதைவெச்சி மீம்ஸ்லாம் வருது. 'விஜய் நாளைக்கு அரசியலுக்கு வர்றதுக்குகாகத்தான் இந்த வருத்தமான நிகழ்வுக்கே போனார்'னு ஒரு விமர்சகர் வீடியோல பேசுறார். இதெல்லாம் கேட்கவே அதிர்ச்சியா இருந்தது. என்னைக்கோ சிஎம் ஆகுறதுக்காக இன்னைக்கு வருத்தமான நிகழ்வுக்கு யாராவது போயிட்டு வருவாங்களா? அப்படி அது ரொம்ப அவசியமா, அரசியலுக்காக இவ்ளோ டிராமா பண்ணணுமா, இதுனால லாபம் கிடைக்குமான்னு எனக்குத் தோணும்.

விஜய்

இப்ப ஆளுங்கட்சியிலயே எதிர்கட்சி ஒண்ணு இருக்கு. ரெண்டு பேருக்குள்ள அடுத்து யார் முதல்வர் வேட்பாளர்னு பிரச்னை ஓடிட்டிருக்கு. மூடிய அறைக்குள்ள நடக்கிற விஷயங்கள் வெளில நிறைய யூகங்களா வருது. விவாதம் பண்றதுக்கான களமா மட்டும் அரசியல் இருக்கு. இதுக்கு நடுவுல மக்களோட பிரச்னையை யார் பேசுவாங்க, எப்போ பேசுவாங்க, எப்படி பேசுவாங்கன்றதுதான் எனக்குத் தேவையா இருக்கு. இதுல யார் முதல்வர் ஆனா என்ன, இரண்டாமானவர் ஆனா என்ன? ஏழை மக்களுக்கு யார் மாற்றத்தை ஏற்படுத்தப்போறாங்கன்னுதான் பார்க்கணும். யார்மேலயாவது எனக்கு ரொம்ப ஸ்ட்ராங்கா நம்பிக்கை வந்ததுன்னா அவங்களைப் பின்தொடருவேன். இல்லைன்னா அதுக்காக வேற ஒரு பாதை அமைச்சிக்கணும்கிறதுதான் என்னோட விருப்பம். இதெல்லாம் பெரிய கனவு. ஓட்டுப்போடுற மனநிலையில இருந்து நான் பேசுறேன். நல்லது நடக்கணும்... கூடவே நானும் நடக்கணும். இல்லைன்னா நான் தனியா நடக்கணும்."

''மறுமணம் பற்றி என்ன நினைக்கிறீர்கள், உங்களுக்கு மீண்டும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்கிற எண்ணமே ஏற்படலையா?''

- சுதா மெல்வின், நாகர்கோவில்

"திருமணம் என்பதே ரொம்ப குழப்பமான விஷயம்தான். மனம் புரிதல்னு சொல்றாங்க. மனம்னா இன்னொருத்தரோட மனம் இல்ல, நம்முடைய மனசையே நாம புரிஞ்சிக்கிறது. எனக்குத் திருமணம் ரொம்ப சொர்க்கமா இருந்திருக்கு, சந்தோஷமா இருந்திருக்கு. அதன்மூலமா மூன்று குழந்தைகள். என்னுடைய வாழ்க்கையோட அர்த்தம் அந்த மூன்று குழந்தைகள்கிட்ட பிரிஞ்சிபோயிருக்கு. ஒண்ணா சேர்த்தோம்னா என்னோட வாழ்க்கையோட அர்த்தம் கிடைச்சிடும். ஆனா, இன்னொரு திருமணம் பண்றதைப்பற்றி எனக்கு எந்த அபிப்ராயமும் இல்லை. அதுக்கு காரணம் எனக்கு ஒரு வப்பாட்டி இருக்கா. அவதான் இதையெல்லாம் நிப்பாட்டி வெச்சிருக்கா. அந்த வப்பாட்டியோட பேரு சினிமா.

பெண்களுக்கு அறிவை ரொம்பப் பிடிச்சிருக்கு. அதுக்கு அப்புறம்தான் எல்லாம். ஏன் தனியாவே இருக்கீங்க, ஒரு கம்பேனியன்ஷிப் வேண்டாமான்னு என்கிட்ட நிறைய பேர் கேட்டிருக்காங்க. சமீபத்துல டாக்டர் ஒருத்தங்க, '30-40 வயசுக்குள்ள இருக்கிற தம்பதிகள்லாம் ரொம்ப ஜாக்கிரதையா உங்க ரிலேஷன்ஷிப்பை நல்லா மெயின்டெய்ன் பண்ணிக்கோங்க. இல்லைன்னா 60 வயசுல உங்களுக்கு இப்படிப்பட்ட வாழ்க்கை அமையாது, கிடைக்காது. அப்ப உங்களுக்கு வாழ்க்கைக்கு உறுதுணையா ஒரு ஆள்வேண்டும்'னு சொன்னாங்க. எனக்கு 60 வயசாகும்போது பார்த்துக்கலாம், அதுக்கு இன்னும் நிறைய நாள்கள் இருக்கு(!!!)ன்னு மனசை சமாதானப்படுத்திக்கிறேன்.

பார்த்திபன்

ஆனா, ஒரு பெண் இல்லாத வீடு ரொம்ப கேவலமாகூட இருக்கு. ஒரு வீடு, ஒரு பெண் இருந்து நடக்குறதும், ஒரு பெண் இல்லாமல் நடக்குறதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. குறிப்பா செலவுகள். பொருள்கள் எல்லாம் வீணாப்போகும். நான் ஒருத்தன் தனியா இருக்கேன். ஆனா, நான் ஒருத்தன் சாப்பிட ஆகுற செலவுல ஒரு வீட்ல பத்து பேர் சாப்பிட்டிடலாம். ஆனா, இதுக்கெல்லாம் காரணம் ஒரு பெண். அது இல்லைன்னா, மாரல் சப்போர்ட் இல்லை. இப்ப எனக்கு ஏதாவதுன்னா என் பசங்க வீட்டுக்கு ஓடிப்போயிடுவேன். சினிமா வப்பாட்டி என்ன சொல்றான்னா, வேற எங்கேயாவது போய், ஏதாவது ரிலேசன்ஷிப்ல இறங்கிட்டா இந்த சினிமா மேல இருக்கிற கவனம் போய்டும்னு சொல்றா. ஹாலிவுட் வரைக்கும் போய் படம் பண்ணணும்னு ஆசை. இந்தில நவாசுதின் சித்திக்கி வெச்சி படம் பண்ணணும்னு நினைக்கிறேன். அதனால இதையெல்லாம் கடந்து நடந்துபோகணும்னு நினைக்கிறேன். இதெல்லாம் முழுமையா புரிஞ்சி ஒரு வாழ்க்கை அமையணுமா, இல்லை இந்த வாழ்க்கையை அப்படியே கன்டின்யூ பண்ணலாமான்னு தெரியல. முன்னாடி டிரிங்ஸ் சாப்பிடுற பழக்கம் எனக்கு இருந்தது. ஆனா, இப்ப சாப்பிடுறதில்லை. இப்ப எனக்குத் தேவை ஆரோக்கியம். அந்தந்தந்த நேரத்துக்கு தேவைப்படுற சந்தோஷமா, இல்லைன்னா நீண்டநாள் வாழ்க்கைக்குத் தேவையான ஆரோக்கியமான்றது முக்கியம். இப்ப சினிமாலதான் என்னோட முழு கவனமும் இருக்கு. நாளைக்கு வேற என்னவேணாலும் நடக்கலாம்."

''உண்மையில் பார்த்திபனின் கனவு என்ன... நீங்கள் அழுத நிமிடங்கள் பற்றி?''

- Srinivasan, Avadi

"அழுத நிமிடங்களைவிட அழுத வருடங்கள் அதிகம். சினிமாவுக்கு வருவதற்கு முன்னாடி எல்லாமே அழுத வருடங்கள்தான். சினிமாவுக்கு வந்ததுக்குப்பிறகு சில அழுத நிமிடங்கள் இருக்கு. பார்த்திபனின் கனவு... கனவுக்கும் மரணத்துக்கும் ஒரு சின்ன இடைவெளிதான் இருக்குணு தோணுது. கண்மூடி வந்தால் அது கனவு. கண்மூடி வராவிட்டால் அது மரணம். சமீபத்துல ஒரு மரணம் என்னை டிஸ்டர்ப் பண்ணதுனா அது எஸ்.பி.பி அவர்களோட மரணம்தான். அவருக்காக நடந்த அஞ்சலி நிகழ்வுல பேசமுடியாம தழுதழுத்துப்போனேன். பேசமுடியாத உணர்வுகளை டிரான்ஸ்லேட் பண்ணா அது சரியான வார்த்தைகளை சொல்லும். ஆனா, நான் வார்த்தைகளா சொல்லும்போது ரொம்ப டிஸ்டர்பிங்கா இருந்தது.

எஸ்.பி.பி

அந்த மனிதருடைய மரணத்துக்குப்பின்னாடி பேசுன எல்லாரும் சொன்னது அவரோட பண்பு. அந்த பண்பை நான் காத்துக்கணும்னு நினைக்கிறேன். நாம நம்மை அறியாமலேயே சிலரை காயப்படுத்திடுவோம். ஆனா, எஸ்.பி.பி சார் எல்லோருக்கும் ஒரு பாசிட்டிவிட்டியை உருவாக்கியிருக்கார். அப்படி நானும் ஏற்படுத்தணும்னு ஆசைப்படுறேன். மரணத்துக்கு அப்புறம் ஒரு கலைஞன் எப்படி மதிக்கப்படுறார்னு நான் கே.பாலசந்தர் சார் மரணத்துல பார்த்தேன். அதற்கு அடுத்து எஸ்.பி.பி சார். இந்த பேண்டமிக் சூழல்ல கூட அவ்ளோ பேர் அவருக்காகக் கலந்துக்கிட்டது பெரிய விஷயம். இப்போதைக்கு என்னோட கனவு நீண்ட ஆயுளுடன், நிறைந்த ஆரோக்கியத்துடன், அதைவிட நிறைந்த நட்பை வளர்க்கிற, பண்பை வளர்க்கிற, மனிதர்களுடைய நட்பை நேசிக்கிற பூக்களைப்போல மனிதர்களையும், அவர்களின் மனங்களையும் நேசிக்கிற ஒரு நல்ல மனிதரா இருக்கணும்கிறதுதான். இதுதான் பார்த்திபனுடைய இப்போதைய கனவு.''

பார்த்திபனிடம் நீங்கள் கேட்க நினைக்கும் கேள்விகளைப் பதிவுசெய்ய கீழிருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யவும்.

Also Read: குண்டக்க மண்டக்க கேள்வி டு சீரியஸ் சினிமா டவுட்ஸ்... பார்த்திபன் ரெடி, நீங்க ரெடியா? #AskParthiban

ஆண்Line பெண்Line Thought காம் தொடரின் வீடியோ பதிவை சினிமா விகடன் சேனலில் விரைவில் காணலாம். தொடர்ந்து விகடனின் வீடியோ பதிவுகளைக் காண சினிமா விகடன் சேனலை சப்ஸ்கிரைப் செய்யவும்.



source https://cinema.vikatan.com/tamil-cinema/actor-director-parthiban-talks-about-actors-political-entry-and-spb

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக