Ad

செவ்வாய், 27 அக்டோபர், 2020

`ரெய்டில் சிக்கிய 12 லட்ச ரூபாயைக் கொள்ளையடித்த பா.ஜ.க தொண்டர்கள்?’- தெலங்கானா தேர்தல் சர்ச்சை

தெலங்கானா மாநிலம், துப்பக் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் நவம்பர் 3-ம் தேதி நடைபெறவிருக்கிறது. இதில், ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சிக்கும், பா.ஜ.க-வுக்கும் பலத்த போட்டி நிலவுகிறது. பா.ஜ.க சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் எம்.ரகுநந்தன் ராவ், வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதாகப் புகார் எழுந்தது.

பா.ஜ.க வேட்பாளர் ரகுநந்தன்

இந்தப் புகாரின் அடிப்படையில் சித்திப்பேட் பகுதியிலுள்ள ரகுநந்தனின் உறவினர்கள் வீடுகளில் போலீஸார், வருவாய்த் துறையினர் இணைந்து நேற்று மாலை சோதனையில் ஈடுபட்டனர். மூன்று இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் சுரபி அஞ்சன் ராவ் என்பவரது வீட்டிலிருந்து ரூ.18.67 லட்சம் பணம் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால், பா.ஜ.க தொண்டர்கள் போலீஸாருடன் கைகலப்பில் ஈடுபட்டதுடன், கைப்பற்றப்பட்ட பணத்தில் ரூ.12.80 லட்சத்தைப் பறித்துச் சென்றதாக போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது. சித்திபேட் நகராட்சி சேர்மன் ராஜா நர்சு வீட்டிலும் போலீஸார் சோதனை நடத்தினர். ஆனால், அவரது வீட்டில் எதுவும் கைப்பற்றப்படவில்லை.

இது குறித்து சித்திபேட் கமிஷனர் ஜேயல் டேவிஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், `போலீஸார் கைப்பற்றிய ரூ.18.67 லட்சத்தில் பா.ஜ.க தொண்டர்கள் ரூ.12.80 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். சம்பவம் குறித்த வீடியோ எங்களிடம் இருக்கிறது. இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் விரைவில் கைதுசெய்யப்படுவார்கள். அவர்கள் மீது கிரிமினல் வழக்கும் பதிவு செய்யப்படவிருக்கிறது. அதேபோல், தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்கும் பதியப்படும்’ என்றார்.

சோதனையில் பணம் கைப்பற்றப்பட்டபோது, சம்பவ இடத்துக்கு ஆதரவாளர்கள் 200 பேருடன் ரகுநந்தன் வந்ததாகவும், அவர்களில் 20-க்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் அதிகாரிகளிடமிருந்து பணத்தைப் பறித்துச் சென்றதாகவும் போலீஸார் கூறுகிறார்கள். இதில், சித்திபேட் தாசில்தார் விஜய் சாகர் உள்ளிட்ட அதிகாரிகள் லேசான காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து சித்திபேட் நகரக் காவல்நிலையத்தில் தாசில்தார் விஜய் சாகர் அளித்த புகாரின் பேரில் பா.ஜ.க-வினர் மீது வழக்கு பதியப்பட்டிருக்கிறது.

Also Read: `தைரியமிருந்தால் ஆட்சியைக் கலைத்துப் பாருங்கள்!’ - பா.ஜ.க-வுக்குச் சவால்விட்ட உத்தவ் தாக்கரே

இந்தநிலையில், சித்திபேட் செல்ல முயன்ற மத்திய உள்துறை இணையமைச்சரும், செகந்திரபாத் பா.ஜ.க எம்.பியுமான ஜி.கிஷன் ரெட்டி, பா.ஜ.க மாநிலத் தலைவரும், கரீம்நகர் எம்.பி-யுமான பாண்டி சஞ்சய் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதேநேரம், ரகுநந்தனின் உறவினர் வீட்டில் போலீஸாரே பணத்தைவைத்து, அதை எடுக்க முயன்றதாக பா.ஜ.க தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. சித்திபேட் காவல்நிலையத் தலைமைக் காவலர் பலராஜு என்பவர், ரகுநந்தன் வீட்டுக்குள் பணம் அடங்கிய பை ஒன்றுடன் செல்ல முயன்றதாகவும், அதைத் தாங்கள் தடுத்து நிறுத்தியதாகவும் பா.ஜ.க தரப்பில் சொல்லப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டுகளை போலீஸார் மறுத்திருக்கிறார்கள்.

பா.ஜ.க தொண்டர்கள்

ஆளும் டி.ஆர்.எஸ் கட்சி அராஜத்தில் ஈடுபடுவதாக பா.ஜ.க வேட்பாளர் ரகுநந்தன் குற்றம்சாட்டியிருக்கிறார். வீட்டில் சோதனை நடத்தவந்த போலீஸார் மாஸ்க்கூட அணியாமல், தங்கள் முகங்களில் துணியைக் கட்டிக்கொண்டு வந்து அத்துமீறியதாக ரகுநந்தனின் மனைவி மஞ்சுளா புகார் கூறுகிறார்.

இது குறித்துப் பேசிய ஆளும்கட்சியைச் சேர்ந்த அமைச்சர் டி.ஹரீஷ் ராவ், `இடைத்தேர்தலில் வெல்வதற்கு பா.ஜ.க பணபலத்தைப் பயன்படுத்தப் பார்க்கிறது. பா.ஜ.க வேட்பாளர் வீட்டிலிருந்து பணம் கைப்பற்றப்பட்டிருக்கிறது. போலீஸாருக்கு ஒத்துழைப்பதை விடுத்து, அவர்களுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை அந்தக் கட்சி முன்வைக்கிறது. இது போன்ற நாடகங்கள் மூலம் பா.ஜ.க ஆதாயம் தேட முயல்கிறது’ என்று கூறியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/politics/bjp-cadres-robs-12-lakh-rupees-seized-from-siddipet-says-telangana-police

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக