Ad

ஞாயிறு, 4 ஜூன், 2023

Doctor Vikatan: டீன் ஏஜ் பெண்கள் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பது சரியா?

Doctor Vikatan: என் மகளுக்கு 17 வயதாகிறது. அவள் பீரியட்ஸின் போது மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிக்க வேண்டும் என்கிறாள். டீன் ஏஜ் பெண்கள் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பதை அறிவுறுத்துவீர்களா... அதேபோல 47 வயதாகும் எனக்கு திடீர் திடீரென சிறுநீர்க் கசிவு ஏற்படுகிறது. அதைக் கட்டுப்படுத்த என்ன செய்யவேண்டும்?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மருத்துவரும் அழகியல் அறுவை சிகிச்சை மருத்துவருமான சந்தியா வாசன்.

மகப்பேறு & அழகியல் அறுவை சிகிச்சை மருத்துவர் சந்தியா வாசன் | சென்னை

அந்தரங்க உறுப்புப் பகுதி தளர்வடைந்துவிட்டதாகவும் அதற்கான ஹைமனோபிளாஸ்டி அறுவை சிகிச்சை செய்யக் கோரியும் நிறைய இளம்பெண்கள் இன்று எங்களிடம் சிகிச்சைக்கு வருவதைப் பார்க்கிறோம்.

முன்பெல்லாம் தாம்பத்திய உறவின் மூலம்தான் ஹைமன் எனப்படும் அந்தரங்க உறுப்புப் பகுதி தளரும். ஆனால் இன்று தாம்பத்திய உறவு அனுபவமே இல்லாத இளம் பெண்களுக்கும் அந்த பாதிப்பு வருகிறது. அதற்கான முக்கிய காரணங்களில் ஒன்று மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பது என தெரிகிறது.

அதே நேரம் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிப்பது வெஜைனா பகுதியை பாதிக்குமா என்பது அறிவியல்பூர்வமாக இன்னும் நிரூபிக்கப்படவில்லை. ஆனால் என் மருத்துவ அனுபவத்தில் பார்த்தவகையில் 13, 14 வயதிலேயே இன்று நிறைய இளம் பெண்கள் மென்ஸ்ட்டுரல் கப் உபயோகிக்கத் தொடங்குகிறார்கள்.

மென்ஸ்ட்டுரல் கப் அறிமுகமாகியே சில வருடங்கள்தான் ஆகின்றன என்ற நிலையில், அதன் சாதக, பாதகங்கள் குறித்த தகவல்கள் நமக்கு இன்னும் நிரூபிக்கப்படவில்லை.

Menstrual Cup

இன்னும் நான்கைந்து வருடங்கள் போன பிறகுதான், இது குறித்த தெளிவு நமக்குக் கிடைக்கும். ஒரு மருத்துவராக நான் இதை மிக இள வயதுப் பெண்கள் உபயோகிக்க வேண்டாம் என்றே அறிவுறுத்துவேன்.

பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்க் கசிவானது வயதாவதன் அறிகுறியால் இருக்கலாம். கர்ப்பம் மற்றும் பிரசவம் காரணமாகவும் இருக்கலாம். ஸ்ட்ரெஸ் இன்கான்டினென்ஸ் எனப்படும் பிரச்னை அல்லது சிறுநீர்ப்பை கீழே இறங்கியிருப்பது என இதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கும்.

ஸ்ட்ரெஸ் இன்கான்டினென்ஸ் என்பது தசைகள் தளர்வடைவதால் ஏற்படுவது. இந்தப் பிரச்னை வராமலிருக்க பிரசவமான எல்லாப் பெண்களுக்கும் கீகெல் பயிற்சிகள் கற்றுத்தரப்படும் ஆனால் 90 சதவிகிதப் பெண்கள் அதைச் செய்வதில்லை

காஸ்மெட்டிக் கைனகாலஜி எனப்படும் மகப்பேறு அழகியல் சிகிச்சையில் இதே பயிற்சிகள் மெஷின் மூலம் செய்யவைக்கப்படுகின்றன. நாற்காலி போன்ற அமைப்பில் உட்கார்ந்துகொண்டால் இந்த மெஷினே இந்தப் பயிற்சிகளைச் செய்யும்.

பீரியட்ஸ்

அதனால் சிறுநீர்க் கசிவை ஏற்படுத்தும் தசைகள் இறுக்கமடைந்து, இந்தப் பிரச்னையின் தீவிரம் குறையும். உங்களுக்கு இருக்கும் பிரச்னைக்கான காரணம் என்ன, அதன் தீவிரம் போன்றவற்றைப் பார்த்து மருத்துவர் அதற்கான தீர்வைப் பரிந்துரைப்பார். எனவே இது குறித்து உங்கள் மகப்பேறு மருத்துவரை கலந்தாலோசியுங்கள்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-is-it-okay-for-teenage-girls-to-use-menstrual-cups

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக