நாமக்கல் நகர காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருபவர் பூபதி. இவர், கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை ராசிபுரம் காவல் நிலையத்தில் பணிபுரிந்தபோது, ராசிபுரம் பச்சுடையாம்பாளையத்தைச் சேர்ந்த நிதி நிறுவன உரிமையாளர் ஜெயராஜன் என்பவர் மோசடி புகார் ஒன்று அளித்தார். அந்த புகாரில், 'ராசிபுரத்தை சேர்ந்த ஆல்ட்ரின் போஸ்கோ என்கிற ஜெயக்குமார் என்பவர் தனது இரு மகன்களுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.20 லட்சத்தை வாங்கிக்கொண்டு தலைமறைவாகிவிட்டார். மேலும் அவர் வெவ்வெறு காரணங்களுக்காக எனது நிதி நிறுவனத்தில் ரூ.13 லட்சம் கடன் பெற்று செலுத்தவில்லை' என தெரிவித்திருந்தார். இந்த புகார் தொடர்பாக, உதவி ஆய்வாளர் பூபதி விசாரணை நடத்தினார்.
அப்போது, வழக்கு தொடர்பாக நடவடிக்கை எடுக்க ஜெயராஜனிடம் இரு தவணைகளில் ரூ.5 லட்சம் வரை லஞ்சம் பெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும், அவர் மோசடி புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. அதேபோல், கஞ்சா வியாபாரிகளிடமும் பல லட்சம் ரூபாயை லஞ்சமாக பெற்று, அவர்களுக்கு அடைக்கலம் தந்ததாகவும் இவர்மீது அதிரடி குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. இப்படி, நாமக்கல் மாவட்டத்தில் இவர் பணிபுரிந்த இடங்களில் எல்லாம் இவர்மீது, தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இந்நிலையில், இதுதொடர்பாக நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு வந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை நடத்தினர். அதோடு, உதவி ஆய்வாளர் பூபதி மீது வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து, நாமக்கல் திருநகரில் உள்ள பூபதியின் வீடு, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள தங்கும் விடுதி மற்றும் திருச்செங்கோடு அருகே இருக்கும் மல்லசமுத்திரத்தில் உள்ள பூபதியின் பெற்றோர் வீடு, சவுரிபாளையத்தில் உள்ள பூபதியின் மாமனார் வீடு உள்ளிட்ட 4 இடங்களில் ஒரே நேரத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் தனித்தனி குழுவாக சோதனையில் ஈடுபட்டனர். காலை முதல் மாலை வரை நடைபெற்ற இந்த சோதனையில், பூபதி வீட்டில் இருந்த கணக்கில் வராத ரொக்கம் மற்றும் வழக்கு தொடர்புடைய ஆவணங்கள் சிக்கியதாகச் சொல்லப்படுகிறது.
இதுபற்றி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், துறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதோடு, அவரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கணக்கில் வராத பணம் குறித்து போலீஸார் வழக்கு பதிவு செய்து, பூபதியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். நாமக்கல் மாவட்டத்தில் பணியில் இருக்கும் ஒரு உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்துவதும், நடவடிக்கை எடுப்பதும் இதுவே முதல்முறை என்று சொல்லப்படுகிறது. உதவி ஆய்வாளர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தியிருப்பது, நாமக்கல் மாவட்ட காவல்துறையினர் மத்தியில் பேசுபொருளாகியிருக்கிறது.
source https://www.vikatan.com/crime/vigilance-raid-in-sub-inspector-related-places-in-namakkal
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக