தேனி மாவட்டம் போடி மேலசொக்கநாதபுரம் மனப்பட்டியைச் சேர்ந்தவர் ராகுல் ஜேக்கப். அவரின் மனைவி ராஜி மேத்யூ(45). துபாயில் உள்ள ஹெலிகாப்டர் தயாரிப்பு நிறுவனத்தில் நிதி மேலாளராக பணியாற்றி வருகிறார். கடந்த 2012-ல் போடி மெட்டில் வீடு கட்ட முடிவு செய்ததாக சொல்லப்படுகிறது. இதையறிந்த பெரியகுளம் வடகரை பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் முகமது என்பவர் ராஜி மேத்யூவை தொடர்பு கொண்டு, சிறந்த முறையில் வீடு கட்டி தருவாக வாக்குறுதி அளித்துள்ளார்.
இதை நம்பிய ராஜி மேத்யூ, முகமது கேட்டுகொண்டதின் அடிப்படையில் அவரது வங்கிக் கணக்கில் 45 லட்ச ரூபாயைச் செலுத்தியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட முகமது வீட்டை கட்டிக்கொடுக்காமல் காலதாமதம் செய்து ஏமாற்றி வந்துள்ளார். ஒரு கட்டத்தில் தனது வீடு கட்டி கொடுக்க வேண்டாம் தனது பணத்தை திரும்ப கொடுங்கள் என ராஜி மேத்யூ கேட்டுள்ளார்.
பல கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு முகமது பணத்திற்கு பதிலாக பெரியகுளம் எண்டப்புளியில் உள்ள தனது நிலத்தை க்ரையம் செய்து கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்துள்ளார். மேலும் அதற்கான ஆவணச் செலவுக்காக 8 லட்ச ரூபாய் தேவைப்படுகிறது. அதை கொடுத்தால் உடனடியாக பத்திரப்பதிவு செய்துவிடலாம் எனவும் கூறியுள்ளார்.
அந்தப் பணத்தையும் பெற்றுக்கொண்டு காலதாமதம் செய்துவந்த முகமது, 2013-இல் அவருடைய நிலத்தை பத்திரப்பதிவு செய்து கொடுத்துள்ளார். அதை நம்பி பெற்றுக்கொண்ட ராஜி மேத்யூவுக்கு அது பஞ்சமி நிலம் என்பது சில மாதங்களுக்கு பிறகு தெரியவந்துள்ளது. அதன்பிறகு முகமதுவை தொடர்பு கொண்டபோது, பிரபாகரன், மரக்காமலை ஆகியோருடன் சேர்ந்து மீண்டும் செக் போட்டு கொடுத்து ராஜி மேத்யூவை ஏமாற்றியுள்ளாா். அதில் ஆத்திரமடைந்த ராஜி மேத்யூ தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் அளித்தார். அதனடிப்படையில், முகமது, பிரபாகரன், மர்காமலை ஆகியோர் மீது மோசடி வழக்கு பதிவு செய்து மூவரையும் கைது செய்தனர்.
source https://www.vikatan.com/crime/how-did-3-people-get-caught-scamming-a-woman-for-building-a-house
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக